Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
அனு நடராஜன்
டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன்
நாசர்
- பாகிரதி சேஷப்பன், அறிவழகன் அங்குசாமி|டிசம்பர் 2010||(1 Comment)
Share:
படம் சோடை போகலாம் ஆனால் இவரது நடிப்பு சோடை போகாது என்ற உறுதியாகக் கூற முடிந்த சில நடிகர்களில் நாசர் ஒருவர். நகைச்சுவை, வில்லத்தனம், சோகம், குணசித்திரம் என்று எதுவானாலும் தயங்காமல் எடுத்துத் தனித்துவத்தைக் காண்பிக்கத் தவறாத நடிகர் இவர். தரமான மேடை நாடக ஆர்வம் மட்டுமின்றி, இலக்கிய ஆர்வமும் இவரை ஏனைய நடிகர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. உழைப்பாலும் திறமையாலும் மட்டுமே திரையுலகில் இடம்பிடித்துத் தக்க வைத்துக் கொண்ட திரு. நாசர் அவர்களுடன் தென்றலுக்காக உரையாடியதில் இருந்து.....

***


கேள்வி: வணக்கம். தென்றல் சார்பில் உங்களோடு உரையாடுவதில் மகிழ்ச்சி. நடிப்பில் உங்களுக்கு ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்பதில் தொடங்குவோமா?
நாசர்: வணக்கம். நான் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவன். செங்கல்பட்டில் வளர்ந்தேன். தாம்பரத்தில் பியூசி படித்தேன். அப்போதுதான் சினிமாத்துறைக்கு வந்தேன். நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னைக் காட்டிலும் என் தந்தைக்கு அதிகம் இருந்தது. இது நானாகத் தேர்ந்தெடுத்த தொழில் அல்ல. ஆனால் அதற்கான முறையான பயிற்சிகள் எடுத்துக்கொண்டு நடிக்க வந்தேன்.

கே: எங்கே?
ப: சவுத் இண்டியன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில். அதற்கு முன்னால் நாடகங்களில் நடித்ததுண்டு. எனக்கு ஏற்பட்ட நாடக அனுபவங்கள்தாம் என்னை ஒரு வெற்றிகரமான நடிகனாக்கியது.

கே: நாடக அனுபவத்தைச் சொல்லுங்களேன்?
ப: நான் சிறுவயது முதலே நிறைய நாடகங்களில் நடித்து வருகிறேன். எல்லாமே தொழில்முறையான நாடகம் என்று சொல்ல இயலாது. தீபாவளி, தசரா நாட்களில் செங்கல்பட்டிலே நாடகம் போடுவார்கள். அவற்றில் நடித்திருக்கிறேன். பிறகு, பள்ளி, கல்லூரி நாடகங்களில் நடித்திருக்கிறேன். நான் நடிப்பைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்த பிறகு புரசைவாக்க நாடகக் குழுக்களுடன் தொடர்பு வந்தது. அதில் குறிப்பிடத்தக்க நாடகம், இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய 'ஒளரங்கசீப்'. அதை டைரக்ட் செய்தவர், ருத்ரன் என்கிற சைக்கியாட்ரிஸ்ட். பிறகு கூத்துப்பட்டறையுடன் தொடர்பு ஏற்பட்டது. அதிலும் பல நாடங்களில் நடித்தேன். சமீபத்தில் நடந்த மகாபாரத விழா ஒன்றில் 'சோலோ'வாக ஒரு மணிநேரம் 'கர்ணன்' என்ற நாடகம் அரங்கேற்றினேன்.

கே: நீங்கள் தெருக்கூத்து மாதிரியான தயாரிப்புகளிலும் பங்கு கொள்வதுண்டா?
ப: எனக்குத் தெருக்கூத்து பிடிக்கும். அதில் நடித்ததில்லை. புரட்சிக் கருத்துள்ளவை, பரீட்சார்த்த நாடகங்கள் போன்றவற்றில் நடிப்பதில் இப்போதைய ஆர்வம் இருக்கிறது.

கே: நடிப்பில் பலவிதம் உண்டு. குணச்சித்திர நடிப்பு என்கிறோம். அது ஒரு விதம். மேக்கப் பலமாக அணிந்து ஒரு வேடத்தைத் தத்ரூபமாக உருவாக்கி மேடைமேல் நடக்க வைப்பது இன்னொரு விதம். மிகவும் சக்தி வாய்ந்த வசனங்களைச் சரளமாகப் பேசி நாடகக் கருத்துக்களை வெளிக் கொணர்வது ஒரு விதம். இதில் எந்த வகை நடிப்பை நீங்கள் விரும்புகிறீர்கள்?
ப: நடிப்பு என்பது அது எந்த ஊடகத்திற்காகச் செய்கிறோமோ அதைப் பொருத்து மாறுபடுகிறது. உதாரணமாக, நான் 'கர்ணன்' என்ற சோலோ நாடகம் நடித்தேன் என்று சொன்னேன். அதை தெருக்கூத்தில் செய்யும் போது ஒருவிதம், நாடக மேடையில் ஒரு விதம், பரத நாட்டியத்தில் ஒருவிதம், சினிமாவுக்கு ஒருவிதம் என்று நடிப்பு மாறிவிடுகிறது. ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஓர் இலக்கணம் இருக்கிறது. சினிமாவில் நாம் இயல்பாக நடித்தாலே போதுமானது. மிகைப்படுத்தியோ அல்லது பெரிய அளவில் வசனம் பேசியோதான் காட்ட வேண்டுமென்பதில்லை.

கே: பொதுவாக நாடக நடிகர்கள் மிகையாக நடிப்பார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறதே?
ப: ஆனால் உண்மையில் அப்படி இல்லை. வடக்கில், நஸ்ருதீன் ஷா, ஓம் பூரி, ஷபானா ஆஸ்மி; தெற்கில் திலகன், நெடுமுடி வேணு, பரத்கோபி போன்ற உலகத்தரம் வாய்ந்த நடிகர்கள் நாடகப் பின்னணியோடு வந்தவர்கள்தாம். அனால் அவர்ளைக் கையாண்ட முறை வேறாக இருந்தன. ஒரு நடிகனின் திறமை வெளிப்பாடு அவரைக் கையாளும் இயக்குனரையே சார்ந்தது. மிகையான நடிப்புக்குப் பேர்போன சிவாஜி ஐயா, எப்படி தேவர்மகனில் இயற்கையாக நடித்தார்? அவருக்கு யதார்த்தமாக நடிக்க முடியாது என்பதில்லை. அவரைக் கையாண்ட இயக்குனர்கள் மிகையான நடிப்பை எதிர்பார்த்தார்கள் என்பதுதான் உண்மை.

கே: நீங்கள் இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவர். உங்கள் இலக்கியச் சிந்தனை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
ப: இன்றைய இயந்திர கதியான வாழ்க்கையில் இலக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அமெரிக்காவாக இருக்கட்டும், சிங்கப்பூராக இருக்கட்டும், தமிழ் நாட்டிலாகட்டும் எல்லோரும் காலையில் எழுந்திருந்தால் பொருளாதாரத் தேவைகளுக்காக வேலைக்குப் போகிறோம். இரவு வீடு வந்து சேர நேரமாகிவிடுகிறது. பிறகு வேலைக் களைப்பில் தூங்கிவிடுகிறோம். நம்மைச் சுற்றி எந்த மாதிரி மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய பிரச்சனைகள் என்ன? அதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள விரும்புவதே கிடையாது. அந்த வகையில் நாம் தனிமை வாசிகளாக இருக்கிறோம். அதனால் இலக்கியம் படிக்க வேண்டியது அவசியமாகிறது. அது மட்டுமில்லாமல் ஒரு நடிகனாகவும் எனக்கு இலக்கியம் தேவையாக இருக்கிறது. சினிமா யதார்த்தத்தை ஒட்டிய நடிப்பை எதிர்பார்ப்பதாலே, அது போன்ற கதாப்பாத்திரங்கள், நிகழ்ச்சிகள், அணுகுமுறைகள், பிரச்சனைகள் கதா பாத்திரங்கள் எல்லாம் தீவிர இலக்கியத்தில்தான் கிடைக்கிறது. அதனால்தான் நான் இலக்கியத்தைப் படிக்கிறேன்.

கே: நீங்கள் மலையாளப் படங்களில் நடிக்கும் போது, மலையாள இலக்கியத்தைப் படிப்பீர்களா?
ப: ஆமாம். நான் அடிப்படையில் ஒரு தமிழன். பிற மொழிகளில் நடிக்கப் போகும்போது, அந்த மொழிகளை, பண்பாட்டைக் கலாசாரத்தைத் தெரிந்து கொள்ளாமல் நடிக்கப் போனால் எனக்கே நான் ஒரு அந்நியன் என்ற உணர்வு ஏற்பட்டுவிடும். அந்த இலக்கியங்களைப் படித்து அந்த மொழி, கலாசாரத்தைக் கற்றுக் கொண்டு போனால் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும்.

கே: உங்களுக்கு எந்த மாதிரி இலக்கியம் பிடிக்கும்? பிடித்த படைப்பாளி யார்?
ப: எனக்குப் பிடித்த படைப்பாளி என்று நான் வைத்துக் கொள்வதில்லை. படைப்புக்கள்தாம் எனக்குப் பிடிக்கும். ஏனென்றால், ஒரு படைப்பாளி உருவாக்கும் எல்லாப் படைப்புக்களுமே நன்றாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. படைப்பாளியைத் தொடரும்போது, அவருடைய எல்லாப் படைப்புக்களையும் ஆதரிக்க வேண்டி வந்துவிடும். அதனால் தனி இலக்கியப் படைப்புக்களையே நான் ரசிக்கிறேன்.

கே: உங்களுக்குப் பிடித்த படைப்புக்கள் எவை?
ப: கி.ரா.வின் கோபல்ல கிராமம், சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை, ஜெயமோகன் எழுதியவை என்று பெரிய பட்டியலே இருக்கிறது. மொழிபெயர்ப்பு இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் தெலுங்கில் நவீன் எழுதிய 'அத்தை பையன்' என்று ஒரு கதை இருக்கிறது. மலையாளத்தில் தகழி, எம்.டி. வாசுதேவன் நாயர் போன்றோரின் எழுத்துக்கள்.

கே: நீங்கள் நடித்த பாத்திரங்களில் உங்களுக்குப் பிடித்த பாத்திரம், அது பற்றிய சுவாரசிமான செய்திகளைச் சொல்லுங்கள்.
ப: பிடித்த பாத்திரம், பிடிக்காத பாத்திரம் என்று தரம் பிரித்துச் செய்வதில்லை. தொழில்ரீதியாக அந்தந்தக் கதாப்பத்திரத்திற்கு என்ன தேவையோ அதை நான் செய்கிறேன். சில சமயங்களில் கதை நன்றாக அமைந்து, பாத்திரம் முழுமையாக வெளியாகிப் பலராலும் பாராட்டப்படுகிறது. அந்த வகையில் தேவர் மகன், குருதிப் புனல், சமீபத்தில் வெளிவந்த ஆவாரம்பூ, தெலுங்கில் சண்டி, மாத்ரு தேவோ பவ, மலையாளத்தில் சன்னல் இப்படிப் பல படங்கள். நான் நடித்த 350 படங்களில் இப்படிச் சில படங்களில்தான் ஒரு நடிகனுக்கான முழுமையான கலைச் சூழலும் அமைகிறது.
கே: மின்சாரக் கனவில் உங்கள் பாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. கொஞ்சம் வித்தியாசமானதாக மட்டுமில்லாமல் காமெடியாகவும் இருந்தது.
ப: ஆமாம். கண் தெரியாத ஒரு இளைஞன், அப்படியே இடிந்து போய் விடாமல், தனக்கான சந்தோஷத்தை அந்த இருட்டிலும் தேடுகிறான். நல்ல சந்தோஷமான படம். அந்தப் படம் செய்யும்போது எனக்கு ஒரு 10 வயது குறைந்துவிட்டது போல் உணர்ந்தேன். மின்சாரக் கனவு இளைஞர்களுக்காக எடுக்கப் பட்ட படம். அந்த படத்தில நீங்கள் பார்க்கிற சந்தோஷம் அந்த செட்டிலயும் இருந்தது. நாங்கள் எல்லோரும் ஜாலியா ரசிச்சு நடிச்ச படம். அது.

கே: கமல்ஹாசனுக்கு உங்கள் நடிப்பின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பது போல் தோன்றுகிறது. அவர் படங்களில் எல்லாம் நீங்கள் இருக்கிறீர்களே?
ப: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்றவனாக இருந்தால் மட்டுமே எனக்கு அந்தப் பாத்திரம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு படைப்பு என்று வரும் போது, நமக்குத் தெரிந்தவர் என்பதால் ஒருவரை அதில் போட முடியாது. அது படைப்பு ரீதியான விஷயம். அதில் நட்பு பாராட்ட முடியாது. ஆனாலும் அவருடன் பல படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புக்கள் ஏற்படுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருடைய ஒவ்வொரு படமும் ஒரு சவாலாகவே இருக்கிறது.

கே: தமிழ் நாடகத் துறையின் தற்கால நிலைமை பற்றி உங்கள் கருத்தென்ன?
ப: கொஞ்சம் பலவீனமாகத்தான் இருக்கிறது. எல்லா வளர்ச்சிகளும் சினிமாவைச் சுற்றியே இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் நாடகம் என்பது ஒரு முக்கிய கலாசார அம்சமாக இருந்தது. இப்போது சினிமா மட்டுமே கலாசாரப் பிரிவாகிவிட்டது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சிங்கப்பூர் மாதிரி கிழக்காசிய நாடுகளில் கூட இன்னும் நாடகத் துறை பலம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலே நாம் எல்லாவற்றையும் சினிமாவுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டோம். அது மிகப்பெரிய கலாசார பின்னடைவு.

கே: அதை எப்படிச் சரி செய்யலாம்?
ப: அதை சரி செய்ய முடியும். அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாடகம் போடுவதென்பது இன்று ஒரு செலவு மிகுந்த வேலை. அதை ஒரு பொழுதுபோக்காகப் பார்க்கிறோம், கலாசாரக் கூறாக அல்ல. நமது நாடகங்களை மற்ற மொழி நாடகங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. நாம் நன்றாகச் செய்வதாக நாமே நினைத்துக் கொள்கிறோம். ஒப்பிட்டுப் பார்க்கும் விமர்சனம்தான் கலைஞனையோ, கலையையோ வளர்க்கும். ஏதோ நான்கு நகைச்சுவைக் காட்சிகளைக் காண்பித்தால் போதும் என்று இன்றைக்கு நாடகம் ஆகிவிட்டது. நாடகத்தின் கலைத் தன்மையை விட்டுக் கொடுத்ததுதான் பெரிய தவறு. துணுக்குத் தோரணங்களில் மட்டுமில்ல, சீரியசான நாடகங்களில் கூட அழகியல் நுணுக்கங்களை விட்டுக் கொடுத்து விட்டோம். அதுதான் பெருங்குறை. ஆனாலும் நாங்கள் சளைக்கவில்லை. மேலும் பல நாடகங்களைப் போட்டு வருகிறோம். இந்த சீர்கேடுகளைச் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

கே: எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் புரட்சிகளின் தாக்கத்தைச் சினிமாவில் அதிகம் காண்கிறோம். அதன் தாக்கம் மேடை நாடகங்களில் எப்படி இருக்கிறது?
ப: சினிமாவைப் போலவே நாடகத் துறையும் இந்த மாற்றங்களை உள்வாங்கித்தான் வருகிறது. ஒளி அமைப்புக்கள் எல்லாம் முற்றிலும் இப்போது மாறிப் போய்விட்டன.

கே: நாடத்துறையில் தேக்கம் என்பது தமிழில் மட்டும்தானா அல்லது இந்தியா முழுவதும் இருக்கிறதா?
ப: பாம்பேயில் ஒரு நாடக நடிகர் அந்தத் தொழிலை வைத்து வாழ முடியும். டெல்லியில் நன்றாக இருக்கிறது. மராத்தியில் இன்னும் நாடகங்களுக்கு ஆதரவு இருக்கிறது. அந்தக் காலத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ்பெற்ற சினிமா நடிகராக இருந்தாலும் நாடகத்திலும் நடித்து வந்தார். இப்போது சினிமாவுக்கும் நாடகத்திற்கும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.

கே: ஐஐடி போன்றவற்றில் சினிமா எடுப்பது பற்றி ஒர்க் ஷாப் நடத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: ஒரு சினிமா என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஊடகம். அதை ரசிப்பது பற்றிய அறிவை மேலை நாடுகளில் ஒரு பாடத்திட்டமாகவே வைத்து விடுகிறார்கள். அதைப் பற்றிய ஒரு தெளிவான அறிவு இருப்பது நல்லதுதான். நான் படித்த காலத்தில் பிலிம் கிளப் என்று இருந்தது. அதில் மேலை நாட்டுப் படங்களைப் போட்டுக்காட்டி விமர்சிப்பார்கள். அதுதான் ஒரு தெளிந்த அறிவைத் தரும். நடிப்பு என்பது ஏதோ கடவுள் தரும் வரம் என்று புரிந்து கொள்ளாமல் புறந்தள்ளக் கூடாது. சித்திரமும் கைப்பழக்கம். எதையுமே கற்றுத்தான் தெளிய வேண்டும்.

கே: இந்தியாவில் நிறைய பிலிம் இன்ஸ்டிடியூட்கள் உள்ளனவே.
ப: இங்குள்ள மக்கள் தொகைக்கு அது மிகவும் குறைவு தான். காரணம் இந்த நடிப்பு என்பது லக், கடவுள் தந்த வரம் என்பது போன்ற நம்பிக்கைகள் தாம்.

கே: இப்போதெல்லாம் பல வெற்றிப் படங்களில் புதுமுகங்களாக இருக்கிறார்களே...
ப: ஃபார்முலா இல்லாமல், புதுமையாக இருப்பதால் மக்களுக்கு புதுமுகங்களின் படங்கள் கொஞ்சம் ஆர்வம் தருவதாகத் தெரிகிறது. ஹிந்தியில் பார்த்தால் நடிகர்கள் ஒரு படத்தில் ஏற்படுத்திய இலக்கணத்தை அடுத்த படத்தில் உடைப்பார்கள். அமீர்கான், ஷாருக்கான் எல்லாம் எந்த இமேஜும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. தமிழில் ஒரு பத்து பேரை அடித்துப் போடுபவன் தான் ஹீரோ என்பது போன்ற படங்களை எடுக்கிறோம். ஆனால் அமீர்கான் படங்களில் சண்டைக் காட்சிகள் கிடையாது. 'லகான்', இப்போது வந்த 'த்ரீ இடியட்ஸ்' போன்ற படங்களில் சண்டைக் காட்சிகள் கிடையாது.

கே: திரைப் படத்துறையில் நுழைவது கஷ்டம் என்று சொல்கிறார்களே
ப: ஒரு இஞ்சினியர் ஆக வேண்டும் என்றாலோ, டாக்டர் ஆக வேண்டுமென்றாலோ அந்தத் துறை அதற்கான தகுதிகளை நிர்ணயிக்கிறது. ஆனால் சினிமாத்துறையில் இது போன்ற நிபந்தனைகள் இல்லாததால் அநேகம் பேர் உள்ளே வரப் பார்க்கிறார்கள். அதில் போராடி, தன்னை நிரூபித்து முன்னுக்கு வருவது மிகவும் கடினமாக இருக்கிறது.

கே: மேடை நாடகத்திலும், சினிமாவிலும் நீங்கள் ஆர்வம் செலுத்துகிறீர்கள். சின்னத் திரையில் அவ்வளவாக இல்லை போலத் தோன்றுகிறதே?
ப: சின்னத் திரையிலும் வந்து விட்டேன். தென்பாண்டிச் சிங்கம் என்ற கலைஞரின் தொடரில் நடித்தேன்.

கே: நீங்கள் நடிப்புக்காக விருதுகள் வாங்கியிருக்கிறீர்கள் அல்லவா?
ப: தமிழ் நாடு அரசு வழங்கிய சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசு ஆவரம்பூவில் வாங்கினேன். சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது 'அவதாரம்' படத்திற்கு. 'சண்டி' என்ற படத்தில் மிகச்சிறந்த பாத்திரத்தில் நடித்தற்காக ஆந்திர அரசின் விருது. கலைமாமணி, கலைச் செல்வன் பரிசுகள் வாங்கி இருக்கிறேன். பொதுவாக எனக்கு விருதுகளில் நாட்டமோ, நம்பிக்கையோ கிடையாது. எனக்கு இடப்பட்ட பணியை நிறைவாகச் செய்ய முயற்சிக்கிறேன். அது விருதுக்குரியதா, அல்லது விருதுக்காகத் தனி அணுகுமுறையுடன் செய்யப்பட வேண்டுமா என்ற குழப்பத்திலிருந்து தள்ளி நிற்கவே விரும்புகிறேன்.

கே: ஏன் என்று சற்றுப் புரியும்படிச் சொல்லுங்களேன்...
ப: எனக்குப் புரியாத விஷயத்தை உங்களுக்குப் புரியும்படி எப்படிச் சொல்வது? உதாரணத்திற்கு 'அவதாரம்' படம் வெளிவந்த போது பலரும், 'என்ன சார், அவார்ட் படமா?' என்று அனுதாபத்தோடு கேட்பார்கள். ஆனால் அந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்தபடம் விருது 'அருணாசல'த்துக்குக் கிடைத்தது. அப்படியானால் அவார்ட் என்பதின் பொருள் என்ன? அதற்குரிய ரசனை அளவுகோல்தான் என்ன? நான் 'தேவதை' படத்தை இயக்கியபோது, அதற்கு 'கலை இயக்குனர் விருது' கிடைக்குமென்றே நம்பினேன். நானும் ட்ராட்ஸ்கி மருதுவும் பல ஆராய்ச்சிகளை அந்தப் படத்துக்காக மேற்கொண்டோம். அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத உடை மற்றும் அரங்க அமைப்புக்களை திரையில் கொண்டு வந்தோம். விருது 'படையப்பா'வுக்குக் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் விருதுக்காகப் படம் எடுப்பது அல்லது நடிப்பது எப்படி?

தோழர் விவேக்கிற்கு இந்திய அரசின் கௌரவமிகு 'பத்மஸ்ரீ' பட்டம் கொடுக்கப்பட்டது. அதை நான் 'சந்திரபாபு போன்றவர்களுக்குக் கிடைக்காத விருது' எப்படி விவேக்கிற்குக் கிடைத்தது என்றெல்லாம் விமர்சிக்கவில்லை. 'நான் மக்களுக்குத் தேவையான கருத்துக்களைக் காமெடி கலந்து கொடுப்பதனாலோ என்னவோ எனக்கு இந்தப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள்' என்று தோழர் விளக்கினார். நான் என்தொழிலைச் செய்கிறேன். அங்கீகாரம் கிடைக்கும்போது கிடைக்கட்டும். விருது கிடைக்கும் என்பதற்காக மழை பொழிவதில்லை. மலரும் பூப்பதில்லை.

கே: முன்பெல்லாம் பெண்கள் கூட்டம் வந்தாலே படம் வெற்றி என்பார்கள். இப்போது பெண்கள் கவனம் சின்னத் திரைக்குத் திரும்பி விட்டதா?
ப: அது ஒரு மாயையான எண்ணம். சின்னத் திரையை மீறியும் படங்களுக்குக் கூட்டம் வரத்தான் செய்கிறது. உதாரணமாக, எந்திரன். 200 கோடி ரூபாய் முதலீட்டுக்கு லாபம் வர வேண்டும் என்றால் எவ்வளவு மக்கள் படம் பார்க்க வேண்டும் என்று சிந்தியுங்கள். த்ரீ இடியட்ஸ் வெளிவந்த 15 நாட்களில் 240 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கிறது. நல்லபடம் எடுத்தால் ஓடத்தான் செய்கிறது.

கே: என்மகன் படத்தில் ஒரு கண்டிப்பான தந்தையாக இருந்தீர்கள். நிஜ வாழ்க்கையில் எப்படி?
ப: நான் சிறுவனாக இருந்த காலத்தில் அப்பா என்ன ஆசைப்படுகிறாரோ அதைத்தான் மகன் செய்ய வேண்டும். அது படிப்போ, வேலையோ எதுவானாலும் பெற்றோர் விருப்பப்படி நடந்தது. இன்று காலம் மாறி விட்டது. நாம் குழந்தைகளுக்கு அறிவுரை கூடக் கொடுக்க முடியாது. வழிகாட்டலாம். அதுதான் நியாயமும் கூட. குழந்தைகளுக்கும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிற பொறுப்பு வந்து விட்டது. அவர்களுக்கு முன்னுரிமை தருவதுதான் சரி என்று நினைக்கிறேன்.

கே: நீங்கள் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று என்ன வகையான பயிற்சிகள் தருகிறீர்கள்?
ப: நான் அங்குள்ள நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், தனது பர்சனாலிடி டெவலப்மெண்ட்க்காக வருபவர்களுக்கும் பயிற்சிகள் தருகிறோம்.

நமக்காக நேரம் ஒதுக்கிய திரு. நாசர் அவர்களுக்கு தென்றல் வாசகர்கள் சார்பில் நன்றி கூறி உரையாடலை முடித்தோம்.

உரையாடல்: பாகீரதி சேஷப்பன், அறிவழகன் அங்குசாமி
More

அனு நடராஜன்
டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன்
Share: 




© Copyright 2020 Tamilonline