|
ஆத்மாவின் (ATMA) ராகங்கள் |
|
- மதுரபாரதி, டாக்டர் நஸீரா தாவூத், டாக்டர் ப்ரியா ரமேஷ்|ஆகஸ்டு 2010| |
|
|
|
|
|
அமெரிக்கத் தமிழ் மருத்துவர் சங்கம் (American Tamil Medical Association-ATMA) ஒரு லாபநோக்கற்ற தொழில்முறைச் சேவை அமைப்பு. அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள, தமிழ் வம்சாவழி மருத்துவர்களை ஒருங்கிணைத்து, அதன்மூலம் உலகத் தமிழருக்கு உடல்நலம் பேண உதவும் அமைப்பு. 2005ஆம் ஆண்டில் இதை நிறுவினார் டாக்டர் ஜே. கோபால். இந்த முயற்சிக்கு உடனிருந்தவர்கள் மருத்துவர்கள் சம்பந்தன் பாஸ்கரன், வேலூர் பரிதிவேல், டி. சுப்பையா, பி. சொக்கலிங்கம், சித்தையன் நெடுஞ்செழியன், சங்கரி சிவசைலம், எம். வசந்தகுமார், திருமலைராஜ் ஜீவன், மல்லிகா உமாமகேஸ்வரன், வேணுகோபால் பிரபாகர் ஆகியோர்.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
முதலில் அமெரிக்க மருத்துவப் பட்டதாரிகள் சங்கத்துக்குத் (ATMG) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கோபால், கருத்து மாறுபாட்டின் காரணமாக ‘ஆத்மா’வைத் தொடங்கி, இன்றைக்கு இதில் சற்றேறத்தாழ 1,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். “இது பெரிதல்ல. தமிழ் நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 6,000 மருத்துவர்கள் இங்கே இருக்கிறார்கள். மருத்துவத் துறையோடு தொடர்புள்ள பிறர் - செவிலியர், ஃபார்மசிஸ்டுகள், PhD ஆய்வாளர்கள், பல்வைத்தியர்கள், ரேடியாலஜி போன்ற துறைகளில் உள்ளவர்களைச் சேர்த்தால் 20,000 பேர் ஆகிவிடுவார்கள். இதில் 2,000 பேராவது அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் ஆத்மாவில் இணையவேண்டும் என்பது எங்கள் விருப்பம்” என்கிறார் ஜே. கோபால்.
| கோயம்பத்தூர் அருகே உள்ள வாவிபாளையத்தில் உள்ள ‘மக்கள் மருத்துவ மனை’யைக் கட்ட ஆத்மா 20,000 டாலர் நிதி கொடுத்துள்ளது. அங்கே தினமும் 80 நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். | |
நலிவுற்றோர் நலப்பணித் திட்டம் ஒன்றுக்குத் தற்போது ஆத்மா $2000 முதல் $100,000 வரை நிதி ஒதுக்குகிறது. “எங்கள் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இந்த நிதியின் அளவும் மிகப் பெரிதாகும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஜே. கோபால். இந்தியாவில் மருத்துவத் துறைக்கு அதிகம் நெறிப்படுத்தப் படுவது இல்லை. அதனால் பணம் அதிகம் கொடுத்தாலும் சற்றே கவனக் குறைவான சிகிச்சையே அங்கே அளிக்கப்படுகிறது. அங்கே மருத்துவ மனைகளை அமைத்து இங்குள்ள தரத்துக்கே அங்கும் கிடைக்க முன்னுதாரணம் ஏற்படுத்துவதும் ஆத்மாவின் வருங்காலத் திட்டங்களில் ஒன்று. “மருத்துவர்களுக்குத் தொடர்ந்து துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றிக் கல்வி, பொதுமக்களுக்கு உடல்நலம் பேணுதல் குறித்த கல்வி ஆகியவற்றை அளிக்கவும் திட்டங்கள் உண்டு” என்கிறார் ஜே. கோபால். நோய்த்தடுப்பு குறித்து உள்ளூர்த் தொலைக்காட்சிகளில் தகவலை விளம்பரமாகத் தரவும் விரும்புகிறார்கள். தமிழ் நாடு அறக்கட்டளை, ரோட்டரி கிளப் போன்ற அரசுசாரா தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து ஆத்மா இதற்காகப் பணீயாற்ற விழைகிறது.
எல்லாமே எதிர்காலத்தில் அல்ல. இப்போதும் பலவற்றைச் செய்து வருகிறது ஆத்மா. கோயம்பத்தூர் அருகே உள்ள வாவிபாளையத்தில் உள்ள ‘மக்கள் மருத்துவ மனை’யைக் கட்ட ஆத்மா 20,000 டாலர் நிதி கொடுத்துள்ளது. அங்கே தினமும் 80 நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். கூடலூர் ஆதிவாசி ம்ருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டவும், அரிவாள் அணுச் சோகை சிகிச்சைத் திட்டத்துக்கும் நிதி வழங்கியுள்ளது. வேலூரிலுள்ள CMC-க்கு மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை வழங்கியுள்ளது. இப்படிப் பட்டியல் நீள்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் கேட்ரீனா சூறாவளி நிவாரணத்தில், பால்டிமோர் நகரில் வீடற்றோர் உடல்நலத்துக்கு, பூட்டானிய அகதிகளுக்கு, வாஷிங்டனிலுள்ள காப்பீடற்ற தமிழர்களுக்கு, சிகாகோவில், டாலஸில் என்று எண்ணற்ற நலத் திட்டங்களை ஆத்மா செய்துள்ளது.
5 ஆண்டுக் காலத்தில் இவற்றைச் சாதித்துள்ள ஆத்மா “இன்னமும் குழந்தைதான். இளம் மருத்துவர்களுக்கு உதவிகரமான திட்டங்களை அமல்படுத்த எங்கள் நிர்வாகம் முயன்று வருகிறது. ஆத்மா தொண்டர் (Volunteer ATMA Program-VAP) இவ்வகை முயற்சிகளில் ஒன்று. இதற்கு நிறைய விண்ணப்பங்கள் வருகின்றன” என்கிறார் மகிழ்ச்சியோடு டாக்டர். கோபால். இதைக் குறித்து மேலும் அறிய: http://atmaus.org/ATMA/youngphysician.aspx
இப்போது நிர்வாகிகளின் கவனமெல்லாம் ஆத்மாவின் ஆறாவது மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதில் குவிந்துள்ளது. (முழுவிவரம் அருகில் தனியே தரப்பட்டுள்ளது). முந்தைய 5 மாநாடுகள் வாஷிங்டன், நியூ ஜெர்ஸி, லாஸ் வேகஸ், டாலஸ், அட்லாண்டா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. புதிய உறுப்பினர்களை இணைத்தல், தொடர் மருத்துவக் கல்வி, தேவையானோருக்கு மருத்துவத்தைக் கொண்டுசெல்வது குறித்து விவாதித்தல், நிதி திரட்டுதல் என்று பல நோக்கங்களோடு செயல்படும் இந்த மாநாடு, ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யும் இந்த மருத்துவர் குழாத்தின் முயற்சியால் பெரிய வெற்றியை அடையும் என்பதில் சந்தேகமில்லை. |
|
|
ATMA-வின் ஆறாவது வருடாந்திர மாநாடு அமெரிக்கத் தமிழ் மருத்துவர் சங்கம் தனது ஆறாவது வருடாந்திர மாநாட்டை ஆகஸ்ட் 12 முதல் 15 வரை ப்ளூமிங்டேல் (இல்லினாய்ஸ்) நகரில் கொண்டாட இருக்கிறது. ஹில்டன் சிகாகோ-இந்தியன் லேக்ஸ் விடுதியில் நடக்கவிருக்கும் இந்த மாநாட்டின் மையக்கருத்து ‘தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள கிராமப் பெண்டிரின் உடல்நலத்தை மேம்படுத்தல்’ என்பதாக இருக்கும். ஆத்மாவின் தலைவர் டாக்டர் சித்தையன் நெடுஞ்செழியன், மாநாட்டின் தலைவர் டாக்டர் சேவியர் ரோஷ் இருவரும், “மருத்துவர்கள் மட்டுமல்லாமல், மருத்துவத் துறையோடு இணைந்து பணியாற்றும் தமிழ் வம்சாவளியினர் அனைவரையும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்” என்று அழைப்பு விடுக்கிறார்கள். புகழ்பெற்ற அறிவியலாளர் டாக்டர் கே.டபிள்யூ. ராம்மோஹன் (ஒஹையோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் எமரிடஸ் பேராசிரியர்) மாநாட்டில் முக்கியவுரை ஆற்றுகிறார்.
தொடர் மருத்துவக் கல்வி வகுப்புகளில் பேசப்படவிருக்கும் சில தலைப்புகள்: 'Sex differences of the brain', 'Coronary artery disease-implications of the gender', 'Fertility preservation in malignancy'. வருவோர் தோழமை வளர்க்கவும், உற்சாகமாகப் பொழுதுபோக்கவும் என்று பட்டிமன்றம் போன்ற பல நிகழ்வுகள் திட்டமிடப் பட்டுள்ளன. பட்டிமன்றத்தின் தலைப்பு ‘அமெரிக்காவில் வந்து குடியேறிய நமக்குச் சிறந்த உணவு இட்லி, தோசையா? பீட்ஸா, பாஸ்டாவா?’
இந்தச் சமயத்தில் பொதுச்சபைக் கூட்டம். தலைவர்கள் கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு போன்றவையும் நடக்கவுள்ளன. “நம்முடைய இறுதிக் குறிக்கோள், தமிழ் நாடு/பாண்டிச்சேரியிலும் அமெரிக்காவிலும் உள்ள ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் உடல்நலப் பாதுகாப்புக்கான சேவைக்கு நிதி திரட்டுவதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்கிறார் டாக்டர் நெடுஞ்செழியன். இந்த ஆண்டு நிதியின் பலனைப் பெறப் போகும் அமைப்புகள்: ஜேன் ஆடம்ஸ் ஹல் ஹவுஸ் (சிகாகோ); பேன்யன் (சென்னை); கஸ்தூர்பா காந்தி மருத்துவ மனையின் ஈன்றதாய் நல மையம்-ACT (திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராமம்); அன்னை ஆஸ்ரமம் (திருச்சி); பல்லாவரம் சிறார் மருத்துவ மையம் (சென்னை) ஆகியன.
சரி, மாநாட்டில் பங்குபெறும் மருத்துவரின் கணவன்/மனைவி/குழந்தைகள் என்ன செய்வது? அவர்களுக்கும் சில நிகழ்ச்சிகள் உள்ளன. அரோராவில் உள்ள பாலாஜி ஆலய தரிசனம்; முன்னாள் பிரபல நடிகை ராஜ சுலோசனாவோடு உரையாடல்; நடன ஆசிரியர், நர்த்தகர் கிம் ஆர்ம்ஸ்ட்ராங்கின் நிகழ்ச்சி; ஹேமா ராஜகோபாலன் (இந்த இதழில் வெளியாகியுள்ள இவரது சுவையான உரையாடலைப் படிக்கத் தவறாதீர்கள்) குழுவினர் வழங்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கான நடனம்; சிகாகோ மெல்லிசைக் குழுவினர் இசை - என்ன, போதுமா?
ஆத்மாவில் உறுப்பினராகவும், மாநாட்டில் பங்கேற்கவும்: atmachicagotristate.org இணையதளம்: www.atmaus.org மாநாட்டில் விளம்பரம் செய்யவும், நிதி ஆதரவு தரவும் மின்னஞ்சல்: atmaus@yahoo.com தொலைபேசி 404-583-7138
கட்டுரை: மதுரபாரதி தகவல்: டாக்டர் நஸீரா தாவூத், டாக்டர் ப்ரியா ரமேஷ் |
|
|
|
|
|
|
|
|