Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
Tamil Unicode / English Search
நூல் அறிமுகம்
கே. ரவியின் இரண்டு நூல்கள்
- மதுரபாரதி|மே 2010|
Share:
சொற்களுக்குள் ஏறிக்கொள்

ஒரு வழக்கறிஞரின் வாதத் திறமை அவர் சொற்களைப் பயன்படுத்தும் நேர்த்தியில் உள்ளது. என் 'சொற்களுக்குள் ஏறிக்கொள்' என்று அழைப்பு விடுக்கும் கே. ரவி தொழிலால் வழக்கறிஞர். ஆனால் இதயத்தால் கவிஞர், இலக்கியவாதி. சிறந்த சொற்பொழிவாளர். பாரதி கலைக்கழகத்தின் தலைவராக இருந்தவர். பாரதிக்கு ஜதிபல்லக்கு எடுக்கச் செய்தவர் என்று இந்த இதழின் 'ஹரிமொழி'யில் குறிப்பிடப்படுகிறவர்.

பாரதி தனது எட்டயபுரம் ஜமீந்தார் வெங்கடேச ரெட்டப்ப பூபதிக்கு எழுதிய சீட்டுக் கவியில்:

"........................................................நான்பாட
நீகேட்டு நன்கு போற்றி
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
பொற்பைகள், ஜதிபல் லக்கு,
வயப்பரிவா ரங்கள்முதல் பரிசளித்துப்
பல்ஊழி வாழ்க நீயே!"


என்று கேட்டான். ஜமீந்தார் என்ன செய்தாரோ தெரியாது ரவி அந்த ஆசையை நிறைவேற்றிவிட்டார். அவ்வளவு பாரதிப் பற்று அவருக்கு.

'சொற்களுக்குள் ஏறிக்கொள்' என்ற கவித்துவமான தலைப்புக் கொண்ட இந்த நூல் அவர் பல அரங்கங்களில் வழங்கிய சொற்பொழிவுகளின் சீரமைத்த தொகுப்பு. கட்டுரைகள் விரிவானவை, ஆழமானவை, வலுவான ஆதாரங்களோடு தரப்பட்டவை. தான் பேசும் கட்சிக்காக பகுதிப் பொய்யும், மிகுதி ஊகமும் கொண்டு நிரப்பிய வார்த்தை ஜாலங்களல்ல. ஆங்காங்கே மின்னல் தெறிப்பின் தடயங்களைக் கொண்டவை. 229 பக்கங்களில் தரப்பட்டுள்ள 12 கட்டுரைகளும் படித்து, சவைத்து, சுவைக்கத் தக்கவை.

முதல் கட்டுரையே பாரதி பற்றியதாகத்தான் இருக்கும் என்பதைச் சொல்ல நாடி ஜோதிடம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. 'பாரதியின் மனோதர்மம்' என்கிற இந்தக் கட்டுரை 'புகை நடுவினில் தீயிருப்பதை பூமியில் கண்ட' அந்தப் புலவன் பகைவருக்கிடையே இருக்கும் உயர்வைக் கூறத் தயங்காதவன் என்பதை சான்றுகளோடு விளக்குகிறது. பதத்துக்கு ஒரு பருக்கை:

எந்த நல்ல படைப்பும் சுவையான ஒன்றைத் தருவதோடு நிற்பதில்லை, வாசகனிடமும் மானசீகப் பங்களிப்பை எதிர்நோக்குகிறது. அந்த இருவழிப் பரிமாறல் ஏற்படும்போது மட்டுமே வாழ்க்கை அனுபவம் வாசிப்பனுபவமாகிறது.
"லார்ட் கர்ஸன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு அடக்குமுறை ஆட்சி புரிந்து வந்ததையும், இந்தியர்களை மிகவும் கேவலமாக நடத்தி வந்ததையும் வன்மையாகக் கண்டித்து எழுதியவன் பாரதி. லார்ட் கர்ஸனின் மனைவி இறந்தபோது அமிர்த பஜார் என்ற பத்திரிகை அதை லார்ட் கர்ஸனுக்கு இறைவன் தந்த தண்டனை என்று எழுதியதை ஒப்புக்கொள்ள மறுத்த பாரதி அமிர்த பஜார் பத்திரிகையைக் கண்டித்து எழுதத் தயங்கவில்லை."

"லேடி கர்ஸன் சென்ற வாரம் இறந்து போய்விட்டதைப் பற்றி இப்பத்திரிகை (அமிருத பஜார் பத்திரிகை) எழுதி வரும்போது இந்தியர்களை லார்டு கர்ஸன் கஷ்டப்படுத்தியதன் பொருட்டாக அவருக்கு இவ்வளவு பாலியத்தில் இவ்வளவு சிறந்த மனைவி இறந்து போய்விட்டது சரியான தெய்வ தண்டனையென்று கூறுகிறது."

"இது சிறிதேனும் கவுரவமற்ற மனிதர்கள் பேசும் மாதிரியாக இருக்கின்றதல்லவா? நமது பரம சத்துருவாக இருந்த போதிலும் அவனுக்கு மனைவி இறத்தல் போன்ற கஷ்டம் நேரிடும்போது நாம் அவன் செய்த
தீமைகளை எடுத்துக் காட்டிச் சந்தோஷமடைவது பேடித்தனமான செய்கை."

இந்த பாரதியைச் சாதாரண வாசகன் அறியமாட்டான். காரணம், பாரதியின் கவிதைகள் அறியப்பட்ட அளவு அவனது உரைநடைப் படைப்புகள் அறியப்படவில்லை. ரவியைப் போன்றவர்கள் ஆழ்ந்து படித்து வெளிக்காட்டினால்தான் பாரதியின் எல்லாப் பரிமாணங்களும் வெளிச்சத்துக்கு வரும்.

"வள்ளுவன் எல்லாக் காலத்துக்கும் ஏற்ற கருத்துக்களைச் சொன்னவன்", "வள்ளுவன் ஓர் ஆணாதிக்கவாதி", "வள்ளுவன் விதியின் உயர்வைப் பேசுகிறவன்", "சமநீதி சொன்னவன்", "மக்களுக்குள்ளே உயர்வு தாழ்வு பேசியவன்" என்று தத்தம் புலப்பாட்டுக்கு ஏற்பப் பலர் பலவிதமாகப் பேசியுள்ளனர். சொல்பவர்கள் எல்லோரும் அறிஞர்கள்தாம். எல்லோருமே வாதத்திறனோடு வலுவாகக் கூறியவர்கள்தாம். இதில் உண்மை எது?

2000 ஆண்டுகள் கடந்த பின்னும் ஒரு புலவனின், நீதியறிஞனின் சொற்களில் பெரும்பாலும் இன்னமும் புரிகின்றன, சமுதாயத்துக்குப் பொருத்தமாக உள்ளன என்பதே இமாலய வியப்பு. அதில் ஒவ்வொரு சொல்லுமே இன்றைய சிந்தனைக்குச் சரியாகப் பொருந்தி வரவேண்டும் என்று எண்ணுவது கேட்பவனின் மடைமையே தவிர, வள்ளுவனின் தவறு அல்ல. விவாதிக்க நூலாசிரியர் எடுத்துக்கொண்ட குறள்:

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

ரவி கூறுகிறார், "எப்படிப் பார்த்தாலும் பிறக்கும் போது எல்லாரும் சமமானவர்களாகவே பிறக்கின்றார்கள் என்ற கூற்று நடைமுறை மெய்மைக்கு முரணானது என்பதுடன் திருக்குறளில் உள்ள வேறு பல குறட்கருத்துகளுக்கும் முரணானதாகவே தோன்றுகிறது"

சரி, அப்படியானால் குறளை எப்படிச் சரியாகப் புரிந்துகொள்வது? இந்த முயற்சிக்கு வரும்போது நூலாசிரியரின் குறிப்பு ஒன்று மிகப் பொருளுள்ளதாகத் தெரிகிறது. அவர் சொல்கிறார்: "படிப்பவரின் அறிவு, மனப்பக்குவத்துக்கு ஏற்ப மென்மேலும் நுட்பமான, உயர்வான, சிறப்பான கருத்தை ஒவ்வொரு குறளும் தருவதாலேயே அந்த நூலை மறைநூல் என்று கொண்டாடுகிறோம். நிலைக்கு ஏற்பப் பொருளேற்றம் கொள்வது சரி. ஆனால், தம் கருத்துக்கு ஏற்ப ஓர் உரையாசிரியர் வலிந்து பொருள் திரிபு செய்வது சரியில்லை. பொருளேற்றம் சரி; பொருள் திரிபு சரியில்லை." எப்படிப் பொருள் காணலாம் என்று வரையறுத்தபின் மேலே செல்கிறார்:

"பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தொடரை, எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்ற முற்றுப் பெற்ற வாக்கியமாகக் கொள்வதால்தான் மேற்சொன்ன சிக்கல்களும் முரண்பாடுகளும் எழுகின்றன. அந்தத் தொடரைக் குறட்பாவில் உள்ளவாறே படித்துப் பார்க்கலாமே: பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா. அதாவது, பிறப்பிலே சமமாக இருப்போர்க்குக் கூட சமச் சிறப்புக் கிடைப்பதில்லை. இது நடைமுறையில் சரிதானே?"

"பிறப்பிலே சமமாகப் பிறப்போர்க்குக் கூடச் சிறப்பு வேறுபட என்ன காரணம்? 'செய்தொழில் வேற்றுமை' என்று குறள் விடை தருகிறது." இவ்வாறு முதலில் வலுவான அடித்தளத்தை அமைத்த பின்னர் ரவி மேலே வள்ளுவர் 'தொழில்' என்ற சொல்லின் மூலம் எதனைக் குறிப்பிடுகிறார் என்பது போன்றவற்றை விளக்கிவிட்டு, தான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கிறார்.

தொழிலுக்காகச் சட்டம் என்று தொடங்கி ஆர்வத்தால் மானுடவியல், அறிவியல் என்று கையில் அகப்பட்டதையெல்லாம் படித்துத் தலையில் சேகரித்திருக்கிறார் இவர். அதன் காரணமாக எதை எடுத்தாலும் வெவ்வேறு இயல்களிலும் தளங்களிலும் இருந்து ஒப்புமைகளைக் காட்டி விவரிக்க முடிகிறது இவருக்கு. ரவி "உள்நோக்கம் இல்லாதவர். உள்ளொளி மிக்கவர். இந்தப் புத்தகம் அதற்கொரு சாட்சி. சொற்களுக்குள் ஏறிக்கொள் மூலம் நெஞ்சுக்குள் அல்லவா ஏறிக்கொண்டார்!" என்று நூலுக்கு அணிந்துரை தந்துள்ள சுகி. சிவம் சொல்வதற்கு ஆமாம் போடுவதில்லை நமக்குத் தயக்கமில்லை.
உன்னோடு நான்

............ ..... ........ என்
சொற்களுக்குள் ஏறிக்கொள்
சொர்க்கத்தைக் காட்டுகிறேன் - என்
கற்பனைப் புரவியை உன்
கண்களில் பூட்டுகிறேன்


என்கிறார் இந்தக் கவிமாமணி. கவிஞன் தன் கற்பனைப் புரவியை வாசகனின் கண்களில் பூட்டுவது எப்படி? தான் பூட்டிக்கொண்டு போய்வந்த மாய உலகங்களுக்கு வாசகனையும் அழைத்துச் செல்லும் வித்தையில் அவன் தேர்ந்தால்தான் அவனுக்குக் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி வசப்படுவாள். இல்லையென்றால் அவன் சொல் முடைந்து சோர்வடைவான்.

நல்ல வாசிப்பனுபவம் என்பது "ஆஹா!" என்று கூக்குரலிடுவது மட்டுமல்ல. "அடடா, இந்த வரி எனக்குத் தோன்றாமல் போயிற்றே" என்றோ, "எனக்கும் தோன்றியது, அலட்சியப்படுத்திவிட்டேன்" என்றோ கழிவிரக்கப்பட வைப்பதும்தான். எந்த நல்ல படைப்பும் சுவையான ஒன்றைத் தருவதோடு நிற்பதில்லை, வாசகனிடமும் மானசீகப் பங்களிப்பை எதிர்நோக்குகிறது. அந்தக் கொண்டுகொடுப்பு, இருவழிப் பரிமாறல் ஏற்படும்போது மட்டுமே வாழ்க்கை அனுபவம் வாசிப்பனுபவமாகப் புனர்ஜன்மம் எடுக்கிறது. வாசிப்பவன் வயதிலும், வாசகப் பரப்பிலும், ஊடாட்டத்திலும், உள்ளுணர்விலும் வளரும்போது, அவனது வளர்ச்சிக்கேற்ப புதிய கொண்டுகொடுத்தலைச் செய்தவண்ணம் இருக்கிறது. நல்ல நூல்கள் நம்மோடு வளர்கின்றன. நல்ல கவிதைகளும்தான்.

யாரோ ஒருவர் சிந்திப்பார்அதை
யாரோ ஒருவர் சந்திப்பார்எது
யாரோடென்று கணிக்கப்படுமோ
வேறாகியவர் விடைசொல்வீரே


என்று முதலில் புதிராகவும், சற்று நேரத்தில் தத்துவப் பிதற்றலாகவும் தோன்றும் இந்த வரிகள், உள்ளே ஊற ஊற அனுபவச் சாறாக, வாழ்வில் எதிர்பாராமல் நிகழ்வதன் சாரமாக மாற்றுரு எடுத்து வாதிக்கின்றன.

இத்தகைய அனுபவப் பகிர்வை ரவியின் கவிதைகளில் நிரம்பக் காணமுடிகிறது. ஒரு கவிஞன் யார் என்பதைப் பேசவந்து, தன்னையே அறிமுகப்படுத்திக் கொள்கிறார் இப்படி:

மழையும் வெயிலும் காற்றும் கனலும் காலமும் தாக்கினாலும் நிறமிழக்காத கவிதைகளைத் தருவது ஒரு வரம். வரம் கிடைப்பது தவத்தாலே. அப்படிப்பட்ட தவமுடையாராகக் காணப்படுகிறார் கே. ரவி
பெருவியப்பை ஒருசொல்லின் கூர்முனையில் வைத்துப்
பேரொளியை அதற்குள்ளே போட்டடைத்து வைத்து
மறுசொல்லுக் கிடையிலொரு மௌனத்தை வைத்து
மந்திரமாய்ச் சொல்லுகிற மானிடனும் யாரு
கடவுளையே நேர்கண்டவன் - ஒரு
கவிஞனெனப் பேர்கொண்டவன்.


இதை எத்தனை முறை படித்தாலும் திகட்டுவதில்லை. நிறமிழப்பதில்லை. மழையும் வெயிலும் காற்றும் கனலும் காலமும் தாக்கினாலும் நிறமிழக்காத கவிதைகளைத் தருவது ஒரு வரம். வரம் கிடைப்பது தவத்தாலே. அப்படிப்பட்ட தவமுடையாராகக் காணப்படுகிறார் கே. ரவி இந்தத் தொகுதியில்.

'சொற்களுக்குள் ஏறிக்கொள்' (கட்டுரைகள்)
'உன்னோடு நான்' (கவிதைகள்)
ஆக்கியோன்: கே. ரவி
திரிசக்தி பதிப்பகம், கிரிகுஜா என்க்ளேவ், 56/21, முதல் அவென்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை 900020.
இணையத்தில் வாங்க

மதுரபாரதி
Share: 
© Copyright 2020 Tamilonline