|
|
|
ஞானக்கிறுக்கன் ஒரு நாள் துக்கம் நடந்த வாசல் ஒன்றிற்கு வந்திருந்தான்.
அது ஒரு பெரிய சாவு. இறந்து போன காளியப்பக் கவுண்டருக்கு வயது 72.
இந்தப் பெரிய சாவுகளில் ஒரு முரண்பாடு. இதில் அநேகமாக எந்தத் துக்கமும் இருக்காது. ஆனால் துக்கம் கேட்க யாரும் தவறக்கூடாது. 'பெரிய சாவுடா, போயிட்டு வந்துடு.'
வீடு வழிந்து, வாசல் வழிந்து, கூட்டம் ஜே ஜே என்று இருந்தது.
ஆண்களிடம் ஒரு social gatheringகிற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பெண்கள் உள்ளே, ஒப்பாரிப் போட்டியில் கலந்து கொண்டிருப்பவர்களைப் போல ஆவேசம் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள்.
ஞானக்கிறுக்கன் வயிற்றில் ஏதோ புளிப்பும் கரிப்பும் நுரைப்பது மாதிரி இருந்தது.
இவ்வளவிற்கும் அவன் துக்கம் கேட்க வந்திருக்கவில்லை. காளியப்பக் கவுண்டரின் விடுதலையைக் கொண்டாடவே அவன் வந்திருந்தான். அவரை அவனுக்கும் அவனை அவருக்கும் கொஞ்சம் அதிகமாகவே தெரிந்திருந்தது, இரண்டு தலைமுறை இடைவெளி இருந்த போதும்.
"கருப்பசாமி, நீ கொஞ்சம் ஊரு உலகத்த அனுசரிச்சு நடப்பா."
"தாத்தையா, நீங்க எழுபத்துரெண்டு வருஷம் அனுசரிச்சு நடந்திங்களே, என்னா நடந்திருக்கு?"
"எழுபது வருஷம் அனுசரிச்சு நடந்த என் கதையே இப்படியிருக்குன்னா, இன்னும் நாப்பது வருஷம் இருக்கப்போற உன் கதை என்னாகுறது?"
இவன் வாய்விட்டுச் சிரிப்பான். அப்புறம் சொல்வான்: "குறைந்தது ஒரு மனுஷன் எழுபது வருஷமாக தான் எதை சரியென்று நினைத்தானோ அதையே வாழ்ந்து செத்தவன் ஆவான் இல்லையா?"
காளிபப்பக் கவுண்டர் பேசமாட்டார். ஆனால் போகும்போது 'அப்படித்தான் இரேன்' என்பதுபோல தோளில் மெல்ல தட்டிக்கொடுத்துவிட்டுப் போவார்.
யாரோ இரண்டு பெண்கள் புதிதாக உள்ளே வர, மீண்டும் ஒப்பாரிச் சத்தம் உச்சத்தை அடைந்தது.
மீண்டும் இவன் வயிற்றில் அந்தப் புளிப்பும் கரிப்பும்.
அழுகை என்பது மிகப்பெரிய விஷயம். அதற்கும் துன்ப துயரத்திற்கும் பாலியல் உறவே இருக்க வேண்டும்.
ஆனால் இவர்களால் எப்படி சும்மா அழ முடிகிறது? அதுவும் ஒருவனது மரணத்தை கௌரவம் செய்ய வந்து கூடிய இடத்தில்?
| அழுகை என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் இவர்களால் எப்படி சும்மா அழ முடிகிறது? அதுவும் ஒருவனது மரணத்தை கௌரவம் செய்ய வந்து கூடிய இடத்தில்? | |
கற்பித சோகம்? அப்புறம் அதன் மேல் கற்பித சந்தோஷமா?
அழுவதே - அழுதுக்கொண்டே ஒரு சந்தோஷமா?
சொல்லிச் சொல்லி அழுகிறார்கள்.
பார்த்துப் பார்த்து அழுகிறார்கள்.
மாரடித்துப் புரண்டு அழுகிறார்கள்.
ஒப்பாரி வைத்துக்கொண்டு, கவிதையையும் ராகத்தையும் பக்கவாத்தியங்களாக வைத்துக்கொண்டு அழுகிறார்கள்.
கவுண்டர் சொல்வார்: "மனுஷன் ஒண்ணு வாழணும், இல்ல சாகணும். செத்துட்டும் அப்பறம் வாழ்றேனு இருக்கக்கூடாது"
இவனுக்குப் புரியும். இது லோல்படும் ஒரு முதிய மனிதன் தன் நிலையைப் போட்டுக் காட்டும் படம்.
"ஏன்? என்ன நடந்தது தாத்தையா?"
அவர் அவ்வப்போது 'நடந்தவைகளை' விவரிப்பார்.
மகளுடைய பிள்ளை பொன்னுராசு. அவன் குடித்து அழிகிறான் என்று இவர் சத்தம் போட்டபோது, அவன் எழுந்து நின்று 'போடா கெழட்டுப் பயலே' என்று இவர் பிடரியில் மிதித்துவிட்டான். தூக்கிவிட வந்த மகள் 'ஏண்டா நாயே' என்று மகனைக் கேட்காமல், 'என்னப்பா நீயும் அவன்கிட்ட சரிக்கு சரியா பேசிக்கிட்டு' என்று இருவரையும் சரி நிலையில் வைத்துத்தான் பேசினாள்.
ஒரு மூன்று மாதம் முன்புகூட இவரிடம் வந்து 'பொன்னுராசு பொழப்புக்கு ஒரு வழி செய்யிப்பா' என்று கேட்டாள். அவரைப் பிடரியில் மிதித்தது சாராயம்தானாம். எதோ சாராய பாட்டில் தானாக இறக்கை கட்டிக்கொண்டு மிதித்ததுபோல அவ்வளவு சாதாரணமாகச் சொன்னாள்.
இவர் மறுத்த போது, அவர் இன்னும் வைப்பாட்டிகள் வைத்திருப்பதாகவும், அந்த வைப்பாட்டிகள் நாசமாகப் போவார்கள் என்றும் மண்ணை வாரித் தூற்றிவிட்டுப் போனாள்.
வாசலில் கொட்டுச் சத்தம் அதிகமாகக் கேட்டது.
அந்த மகள்தான் நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடி வந்தாள், பின்னால் அந்தப் பேரன்.
இவன் வயிற்றில் அந்தப் புளிப்பும் கரிப்பும் மும்மடங்காயின.
காளியப்பக் கவுண்டரைக் குளிப்பாட்ட 'தண்ணீருக்குப்' புறப்பட்டார்கள்.
யாரோ ஒருவர் கேட்டார் : "கவுண்டருக்கு எத்தினி பையங்க?"
"நாலு"
கவுண்டன் சொல்லுவார்: "என்னோட நாலு பையன்களையும் சும்மாச் சொல்லக்கூடாது. பீஷ்மாச்சாரியார் மாதிரி. மகான்கள். ரொம்பவும் நடுநிலையான ஆட்கள். என் மருமகள்கள் ஒண்ணுக்கு நாலு துச்சாதனனா நின்று என்னைத் துகில் உரியிறப்ப, இவனுக அது சரின்னும் சொல்றதில்ல, தப்புன்னும் சொல்றதில்ல. ஒம்பாடு அவளுகபாடுன்னு போயிடுவானுக. அவனுக பாடும் அப்பிடி, ஏதாவது நஷ்டம் வர்ற கட்சியில் சேந்துடுவோமோனு அவனுங்களுக்கு சதா பயம்"
"உங்க குடும்பத்துல யாரும் கிருஷ்ண பரமாத்மா கிடையாதா?"
"இல்ல. கிருஷ்ண பரமாத்மா கேரக்டரே கிருஷ்ண பரமாத்மாவுக்காக எழுதப்பட்டது தான? நிஜத்துல எப்படியிருக்க முடியும்?"
"மருமகள்களுக்கு உங்களிடம் என்ன குறை?" |
|
"ஒரே ஒரு குறைதான். அதே குறைதான். நான் செத்த பிறகும் உயிரோட இருக்கறதுதான். சோறு திங்கிற பொணமா இருக்கறதுதான். ஆனா கருப்பசாமி, எங்கிட்டயும் ஒரு குறை இல்லாம இல்லை. பசிய வேண்ணா என்னால தடுக்க முடியாம இருக்கலாம். ஆனா ரோஷத்தத் தடுத்துக்கலாம் இல்லியா? அதத் தடுக்கவும் என்னால முடியல. இது திமிறுதான?"
அப்படிப்பட்ட ரோஷத்தில் ஒரு நாள் அவர் 'எனக்கு சோறு வேணாம்' என்று சொல்லிவிட்டார். பலன்: அந்தச் சோறும் இவர் வயிறும் அந்தத் திண்ணையிலேயே இரவு பத்து மணிவரை சீந்துவாரற்றுக் காய்ந்தன.
இரவு பத்து மணிக்கு அவர் வந்து சொன்னபோது இவன் பதறிப்போய் சட்டையைக்கூடப் போடாமல் ஓடி, டீயும் பன்னும் வாங்கி வந்தான்.
பொறுக்க மாட்டாமல் இவன் 'இனிமே நீங்க இங்கேயே இருங்க' என்று சொல்ல, அவரும் சம்மதிக்க, இரண்டாம் நாளே மக்கள் வந்து 'ஊரு காரித் துப்பும்' என்ற உண்மையைத் தவிர வேறு எல்லாவற்றையும் சொல்லி அழைத்துப் போனார்கள்.
மீண்டும் கொட்டுச் சத்தம் கேட்டது.
ஊரிலிருந்து நான்காவது மருமகள் விஜயலட்சுமி வந்து கொண்டிருந்தாள். இவள்தான் குடும்பச் சண்டையில் கோபித்துக்கொண்டு போய் மூன்று மாதமாகத் தாய்வீட்டில் இருப்பவள். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட 'நான் வந்து இந்தக் கெழவனப் பேசிக்கிறேன்' என்று சொல்லியனுப்பியவள்.
இப்போது என்ன பேசப் போகிறாள் இவள்?
ஞானக்கிறுக்கனுக்கு மேக்பத் பேசுவது ஞாபகம் வந்தது.
தான் கொலை செய்த தனது அரசன் டங்கன் பற்றியே சிறிது நாள் கழித்து மேக்பத் சொல்வான் :
| என் முதிய நண்பா, டங்கன் விரலை மட்டுமல்ல, உனது சுண்டு விரலையும் கூட இனி யாரும் தொட முடியாது. மரணம் உனக்கு சர்வ வல்லமை தந்து விட்டது. | |
டங்கன் இறந்து விட்டான் சதி வெற்றிக்கொடி நாட்டித்தான் விட்டது. ஆனால் என்ன? மனித மகன் கல்லறையில் இப்போது என்னமாய்த் துயில்கிறான், சுகமாய்!
கோப்பையில் வரும் விஷங்கள் கூப்பிய கையில் ஒளிந்திருக்கும் கத்திகள், வெளிநாட்டுப் படைகள், உள்நாட்டுச் சதிகாரர்கள் யாரும், எதுவும் இனி அவன் சுண்டு விரலைத் தொட முடியாது.
ஞானக்கிறுக்கன் சொல்லிக் கொண்டான்: "ஆம் என் முதிய நண்பா, டங்கன் விரலை மட்டுமல்ல, உனது சுண்டு விரலையும் கூட இனி யாரும் தொட முடியாது. மரணம் உனக்கு சர்வ வல்லமை தந்து விட்டது. வாழ்க."
அவன் புறப்பட எத்தனித்தபோது, அப்போதுதான் கிருஷ்ணமூர்த்தி அவன் தோளில் தட்டி, 'இரு போகலாம்' என்று சொல்லவே இவன் மீண்டும் பெஞ்சில் உட்கார்ந்தான்.
சடங்குகள் மளமளவென்று நடந்தேறின.
பிணம் வாசலுக்கு வந்தபோது கூட்டம் அலறி ஆர்ப்பரித்துக்கொண்டு வெளியே வந்தது. எட்டிப் பிடரியில் உதைத்த அந்தப் பேரனும் அவன் அம்மாவாகிய மகளும், பிள்ளைகளும், மருமகன்களும், "எங்கள் உலகம் கட்டித் தொங்கிய கயிறே, நீ அறுந்து போனாயே, இனி நாங்கள் எந்தப் பாதாளத்தில் போய் விழுவோம்" என்று கதறினார்கள்.
ஞானக்கிறுக்கனிடம் அந்தப் புளிப்பும் கரிப்பும் நுரைத்துப் பூரிதமாகி மூக்கு வழி, கண்வழி கொட்டின.
அவன் எழுந்து கொஞ்சதூரத்தில் கிடந்த மூங்கில் கழி ஒன்றை எடுத்துக்கொண்டான்.
"நாய்களே! நாய்களே! நீங்கள் நாயாய் இருங்கள், நரியாய் இருங்கள். பேயாய், பிசாசாய் இருங்கள். ஆனால் அதையாவது நிமிர்ந்து நின்று சொல்லுங்கள். ஏன் இப்படி இருப்பவர்களை மட்டுமில்லாமல் உங்களையும் ஏய்த்துக்கொள்கிறீர்கள்?"
"உங்கள் அழுகையும் ஆர்ப்பாட்டமும் கதறலும் உங்களிடமே நீங்கள் 'அது நாங்கள் இல்லையாக்கும்' என்று சொல்லிக் கொள்கிற பொய்மையல்லவா?"
சட்டென்று கிருஷ்ணமூர்த்தி இடது கையால் அவன் வாயைப் பொத்தி, வலது கரத்தால் இடுப்பைச் சுற்றி வளைத்து அவனை அந்தரமாய்த் தூக்கிக்கொண்டு தூரப்போனான்.
(நன்றி: 'நிராயுதபாணியின் ஆயுதங்கள்' - ஜெயந்தன் கதைகள் தொகுப்பு)
ஜெயந்தன் |
|
|
|
|
|
|
|