அதிருஷ்டம் விடியல்
|
|
|
|
வாசுகிக்குத் திருமணமாகி இரண்டு மாதமாகிறது. புதுமணப் பெண்ணின் பொலிவு இன்னும் அகலவில்லை. யார் சொன்னது ஆசை அறுபது நாள் என்று? அறுபது ஆண்டுகள் ஆனாலும் தணியாது போலிருக்கிறதே இவரது ஆசை. நாணத்துடன் ஜெயராமனை நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக்கொண்டாள்.
"நான் உன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்வேன் வாசு. நமக்குள் ஒளிவு மறைவு எதுவும் கூடாது, வாசு." வாசு என்றும், டேய் வாஸ் என்றும் ஒரே கொஞ்சல். "எனக்கு வரும் லெட்டரோ, ஈமெயிலோ எதுவாக இருந்தாலும் நீ படிக்கலாம். ஏன்னா, இனிமே நீதானே எல்லா டெஸிஷனும் எடுக்கணும்." அன்பு, நம்பிக்கை, ஊக்கம், ஒளிவின்மை என்று பல கோணங்களில் அவள் தன் கணவனை ரசித்தாள். தான் அதிஷ்டக்காரிதான் எனப் பெருமிதமடைந்தாள்.
ஜெயராமனின் வார்த்தைகள் ஞாபகம் வரவே ஈமெயில் பார்ப்பதற்காகக் கம்ப்யூட்டர் அருகே அமர்ந்து அதை இயக்கினாள். அவளது கல்லூரி சினேகிதிகள் மாது, ஹரி, கிருஷ்ணா, ராஜேஷ் ஆகிய அனைவரிடம் இருந்தும் ஈமெயில் வந்திருந்தன. மாதுரி, ஹரிணி, கிருஷ்ணவேணி, ராஜேஸ்வரி இவர்களுக்கு வாசு என்ற வாசுகி பதிலெழுதினாள்.
| ஆவணியில் வைத்திருந்த அவர்களது முஹுர்த்தம் ஏன் அவசரமாக ஆனியிலேயே நடைபெற்றது? எதையோ மறைக்கத்தான் இந்த அவசரமா? | |
அடுத்து ஜெயராமனின் ஈமெயில்களைத் திறந்தாள். இதென்ன பயங்கரமான அதிர்ச்சி! இப்படி ஒரு பிரச்னை வருமென்று வாசுகி கனவிலும் நினைக்கவில்லை. இது உண்மையா?
ஆவணியில் வைத்திருந்த அவர்களது முஹுர்த்தம் ஏன் அவசரமாக ஆனியிலேயே நடைபெற்றது? எதையோ மறைக்கத்தான் இந்த அவசரம் போலும். அன்று தோன்றாத சந்தேகம் இப்போது தலையெடுக்கிறது. ஜெயராமனின் தாத்தா சாகும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லித் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. இதில் வேறொரு சந்தேகமும் அன்று தோன்றவில்லை. ஆனால் அந்தத் தாத்தா இன்றுவரை நன்றாகவே இருக்கிறார். இன்று அவள் படித்த ஈமெயில்கள் அவளை மிகவும் குழப்பின. "ஹாய் ஜே என்னிடம் சொல்லாமல் எப்படிக் கல்யாணம் செயதுகொண்டாய்? எனக்கு ரொம்பக் கோபம்." சுதா.
அந்த ஈமெயிலை மூடிவிட்டு அடுத்ததைத் திறந்தாள். "என்னடா ஜே, நாம் எத்தனை வருஷமாகப் பழகினோம். என்னை ஒதுக்கிட்டியே. உன் வைஃப் தடை போட்டாளா?" - ஜானகி.
அடுத்தது, "நாம போட்ட பிளான் என்ன, பேசின பேச்சு என்ன, எப்படி எவ்வளவு சீக்கிரம் கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டாய்?" - இப்படிக்கு ராதா. |
|
இன்னும் ஒண்ணே ஒண்ணு, கடைசியாக. அதையும் மனக்கொதிப்போடு படிக்க ஆரம்பித்தாள். "டேய் ஜெயா, (அப்படி என்ன கொஞ்சலோ, டேய் ஒரு கேடு) நீ இப்படி துரோகம் செய்வாய் என்று நான் நினைக்கலை. நாம் ஒருவருக்கொருவர் கொடுத்த வாக்கை மறந்தாயா? நான் இப்போ சென்னை வந்திருக்கிறேன். இன்று மாலை ராதா, சுதா, ஜானகி இவர்களுடன் நான் உன்னைப் பார்க்க வருகிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து நல்ல பாஷ் ரெஸ்டாரெண்ட் ஒன்று போய் ஜாலியாகப் பொழுதுபோக்கலாம். உன் மனைவியையும் ரெடியாக இருக்கச்சொல்." - இப்படிக்கு மல்லிகா.
இதென்ன வெட்கங்கெட்ட ஜன்மங்கள், கேவலமாயிருக்கிறது. இந்த லக்ஷணத்தில் இந்த மினுக்கிகளோடு நான் போய் உட்கார்ந்து சாப்பிடணுமா? நினத்தாலே குமட்டுகிறது. வாசுகிக்கு எரிச்சலும் வெறுப்பும் பொங்கி வந்தன. ஜெயராமனைக் கூப்பிட நினைத்துத் தொலைபேசியை நெருங்கினாள். கோபம் அதிகம் வர, "வரட்டும் அந்த ஆள், நேரே பார்த்துக்கொள்ளலாம்" என்று கருவிக்கொண்டே விட்டுவிட்டாள்.
மாலையாயிற்று. இன்று என்னமோ இன்னும் அவனைக்காணோம். என்ன காரணமோ? ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகம் போல் அவளுக்குத் தோன்றியது.
வாசலில் கதவு திறக்கும் ஓசை கேட்டது, அத்துடன் பல ஆண் குரல்கள். சரி, இவர்கள் போனபின் சண்டையை ஆரம்பிக்கலாம் என மனதுக்குள் தயார் செய்துகொண்டாள். ஜெயராமனுடன் வேறு நான்கு ஆண்கள் நுழைந்தனர்.
"வாசுகி, ஹை வாஸ்", ஜெயராமன் அழைத்தான். வேண்டா வெறுப்போடு வாசுகி வந்தாள். "இதெல்லாம் என் பிரெண்ட்ஸ். நம்ம கல்யாணம் நடந்த அவசரத்தில இவங்க யாரும் வரமுடியலை. இது ராதாக்ருஷ்ணன், இது சுதாகர், ஜானகிராமன், மல்லிகார்ஜுன். நாங்க பிளஸ் டூ விலேருந்து ரொம்பக் க்ளோஸ். நாம டின்னருக்கு..." ஜெயராமன் தன் மனைவியைப் பார்த்தான்.
"நல்ல ஹை கிளாஸ் ரெஸ்டாரன்ட் போகலாமே" வாசுவின் குரல் மகிழ்ச்சியாக ஒலித்தது குதூகலத்துடன்.
கோமதி சுவாமிநாதன், இல்லினாய்ஸ், சிகாகோ |
|
|
More
அதிருஷ்டம் விடியல்
|
|
|
|
|
|
|