Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சிறுகதை
அன்பாகக் கொடுத்த புடவை
தவிப்பு
விமரிசனம்
- எல்லே சுவாமிநாதன்|மார்ச் 2010|
Share:
தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன். "உங்களை ஒண்ணு கேட்கப் போறேன். முடியாதுன்னு சொல்லக் கூடாது" என்று சொல்லியபடியே என் மனைவி வந்தவுடனேயே எனக்குப் பயம் வந்துவிட்டது.

"என்ன விஷயம்னு தெரியாம எப்படி செய்வேன்னு சொல்ல முடியும்? முதல்ல என்னன்னு சொல்லு. நான் என்ன செய்ய மாட்டேன்னு இப்பவே சொல்லிடறேன். கிரைண்டர்ல இட்லிக்கு அரைக்க மாட்டேன். இப்ப கடைக்கு போய் பால், மோர்னு எதுவும் வாங்கிவர மாட்டேன்" என்றேன் தற்காப்பாக.

"அதெல்லாம் ஒண்ணும் செய்ய வேண்டாம். ஒரு விமரிசனம் எழுதணும்"

"புத்தக விமரிசனமா? நீ புத்தகம் எழுதியிருக்கியா?"

"இல்ல. ஒரு நடன அரங்கேற்றத்தை விமரிசிச்சு பத்திரிகைக்கு அனுப்பணும்"

"யாரோட அரங்கேற்றம்?"

"என் சினேகிதி லலிதா பெண் லதாவோட அரங்கேற்றம்"

"அந்தப் பொண்ணு அரங்கேற்றம் பண்ற அளவுக்கு வந்துடுத்தா? எப்பவோ பிறந்த நாள் விழாவில பார்த்தது. இன்னும் ஜூனியர் ஹைஸ்கூல்லதானே இருக்கு?

"இது ஃபாஸ்ட் ட்ராக். நளினின்னு புதிசா ஒரு டான்ஸ் டீச்சர் வந்திருக்கா. மூணே வருசத்தில அரங்கேற்றமாம். ஆனா செலவாகும். கையில காசு வாயில தோசை மாதிரி..."

" மூணு வருசத்தில ஒரு பெண் பாட்டைப் புரிஞ்சிண்டு அபிநயம் பிடிச்சு ஆடறது சுலபம் இல்லையே"

"உங்களுக்கு அதெல்லாம் ஏன்? நாலு வரி நல்ல வார்த்தையா எழுதிப்போட்டா என்ன குறைஞ்சிடும்? கம்ப்யூட்டர்ல வரிஞ்சு வரிஞ்சு கவிதை, கட்டுரைன்னு எழுதறீங்களேன்னு கேட்டேன். செய்ய முடியுமா முடியாதா... பாவம் லலிதாக்கு நான் வாக்குக் குடுத்தாச்சு.."

மூன்று மணி டான்ஸ் விடியோவை முப்பத்தி சொச்ச நிமிஷத்தில் பார்த்து முடித்தேன். ஃபாஸ்ட் ஃபார்வேர்டைக் கண்டு பிடித்தவன் கெட்டிக்காரன்தான்.
"சரி..சரி.. என்னிக்கு அரங்கேற்றம்?"

"போன சனிக்கிழமை. பாஸடீனா கென்னடி ஹால்ல நடந்துது.."

"என்னது? போன வாரமே முடிஞ்சாச்சா. அதை இப்ப வந்து சொல்ற. எனக்கு சொல்லவேயில்லயே."

"லலிதாகிட்ட ரெண்டு பேர் வருவோம்னு சொல்லியிருந்தேன்..நீங்களும் நானும் போலாம்னுதான் இருந்தேன். உங்க பெண்ணு அதிசயமா நான் வரேம்மான்னா. அவளை அழைச்சிண்டு போயிட்டேன்"

"அப்ப நான் எங்க போயிருந்தேன்?"

"இங்கதான். நீங்க கம்ப்யூட்டர்ல முழுகி இருந்தப்ப சொல்லிட்டுப் போனேன். ராத்திரிக்கு அடை வார்த்து மூடி வெச்சிருக்கேன், நாங்க வெளிய போறோம்னு சொன்னது நெனைவில்லயா?"

அடை தின்னது மட்டும் ஞாபகம் இருந்தது. ஏதோ அம்மாவும் பொண்ணும் வழக்கம் போல மாலுக்குப் போய் அசட்டு பிசட்டுத் துணிமணி வாங்கப் போயிருக்கிறார்கள் என்ற நினைப்பு. அவர்கள் திரும்புமுன் தூங்கப் போய்விட்டேன்.

"என்ன பேத்தலா இருக்கு..டான்ஸ் போன வாரமே முடிஞ்சுட்டுது. பார்க்காத டான்ஸை நான் எப்படி விமரிசிக்கிறது?"

"கவலையே வேண்டாம்..லலிதா டான்ஸ் விடியோ குடுத்திருக்கா. பார்த்துட்டு எழுதினாப் போறும். தோசை வார்த்து வெச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு எழுதலாம்."

எனக்கு மனசில் ஒரு நெருடல். நேரில பார்க்காம விமரிசனம் எழுதலாமா என்ற தயக்கம். சினிமாவை விடியோல பார்த்து விமரிசனம் செய்யறது போல என்று சமாதானம்செய்து கொண்டேன். வழக்கமான ஐட்டங்கள்தான். மூன்று மணி டான்ஸ் விடியோவை முப்பத்தி சொச்ச நிமிஷத்தில் பார்த்து முடித்தேன். ஃபாஸ்ட் ஃபார்வேர்டைக் கண்டு பிடித்தவன் கெட்டிக்காரன்தான்.

இரவில் கம்ப்யூட்டர் எதிரில் அமர்ந்ததும் மனைவி சொன்னாள், "சும்மா சம்பிரதாயமா பாட்டு, ஆட்டம், பக்கோடா எல்லாம் நன்னா இருந்துதுன்னு எழுதிட வேண்டாம். ஷொட்டும் வைக்கணும், குட்டும் வைக்கணும். அப்படியே லலிதாவைப் புகழ்ந்து ரெண்டு வார்த்தை போடுங்கோ. அவ நீலப் புடவையும் பிளவுசும் மேட்ச்சா இருந்துது. நெக்லஸ்தான் முறுக்கிண்டு வைரமே தெரியாம இருந்துது. பத்திரிக்கைக்கு அனுப்பறதுக்கு முன்னால ஒரு பிரிண்ட் போட்டுக் குடுங்கோ. லலிதாக்குக் காட்டணும்." இவளுக்கு லதா டான்ஸ் முக்கியமா, லலிதா அலங்காரம் முக்கியமா? இரவிலேயே எழுதி முடித்து விட்டேன். ஷொட்டும் வைத்தேன். தாராளமாய்க் குட்டும் வைத்தேன். இதுக்கு என்ன காசா, பணமா?

எழுதியதை படித்துப் பார்த்தேன்.
"லதா சிவராமனின் நடன அரங்கேற்றம் சிறப்பாக இருந்தது. ஒரு சின்னப்பெண் எப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு கற்றுக் கொண்டாள் என்பது வியப்புக்குரியது. நடன ஆசிரியை நளினி பாராட்டுக்குரியவர். தாயார் லலிதா சிவராமனின் உழைப்பு, ஊக்கம், ஈடுபாடு எல்லாம் பெண்ணின் நடனத்தில் தெரிந்தன. பாட்டு, நட்டுவாங்கம், தேர்ந்தெடுத்திருந்த பாடல்கள், நடன உடைகள் , அரங்க நிர்வாகம் எல்லாம் அருமையாக இருந்தன. ஆனால், சில குறைகளையும் சொல்லித்தான் ஆக வேண்டும். நடன அரங்கில் விளக்கு அணைந்து திரை மேலே போனதும் டான்ஸ் தொடங்கும் என்று பார்த்தால் பாடகர் விலாவரியாய் ஆலாபனம் செய்து டான்ஸுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு முழுப்பாட்டைப் பாடுகிறார். வயலின்காரரும் விடாமல் 'எனக்கும் அறுக்கத் தெரியுண்டா'ங்கிறது போல விலாவரியா ஆலாபனை பண்ணுகிறார். எல்லோருக்கும் தவறுதலா பாட்டுக் கச்சேரிக்கு வந்திருக்கிறோமோ என்று தோன்றியது. பாடகருக்கு ல, ள வித்தியாசம் தெரியாது போனது வருத்தமாய் இருக்கிறது. தீராத விலையாட்டுப் பில்லை, கண்ணன் தெருவிலே பெண்கலுக்கு ஓயாத தொள்ளை என்று பாடுகிறார். லதாவின் பள்ளி சினேகிதர்கள் தேவையில்லாமல் அடிக்கடி ஆய் ஊய் என்று கத்தினார்கள்.

"விழாவுக்கு வெளியூரிலிருந்து வந்திருந்த அத்தனை உறவினர்களையும் மேடையில வந்து நிற்கச் சொல்லி அவர்கள் வசிக்கிற நாடு, ஊர், செய்கிற வேலை, உறவு முறை எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொல்லியிருக்க வேண்டிய தேவையில்லை. டான்ஸ் பார்க்க வந்தவர்களுக்கு எடிஸன் நியூஜெர்சியிலிருந்து வந்த சுந்தரராமன் தூத்துக்குடி கணேச சித்தப்பாவின் மச்சினனா, அல்லது பம்பாய் அத்தை சியாமளாவின் மருமகனா என்று தெரிந்து என்ன ஆகப் போகிறது? நடன ஆசிரியை , பாட்டு கோஷ்டி, உதவிய நண்பர்கள், அரங்கத்தின் பணியாளர்கள் எல்லாருக்கும் பொக்கே, சன்மானம் வழங்கி வணக்கம் சொல்வதில் அதிக நேரம் போய்விட்டது. பொக்கே கொஞ்சம் கூடுதலாக வாங்கியிருக்கலாம். மூன்று பொக்கேகளையே எல்லோருக்கும் சுழற்சி முறையில் கொடுத்ததைத் தவிர்த்திருக்கலாம். அதனால் கடைசி ஐட்டமான தில்லானா சுருக்கமாய் போய்விட்டது. தில்லானாதான் டான்சில முக்கிய அம்சம். துரித பாத அசைவுகள், அபிநயம், வெவ்வேறு பாவங்கள்னு அமர்க்களமாக இருக்க வேண்டியது. இந்த டான்சில பாவம் லதா மேடைய ரெண்டு சுத்து சுத்தி வந்து "அவ்வளவுதாண்டா, ஆளை விடுங்கடா"ன்னு வணக்கம் சொல்லிட்டா. அதிலயே ஒரு இடத்தில் கால் சறுக்கிக் கீழே உட்கார, அதுவே பெரிய டான்ஸ் மூவ்மெண்டாக்கும் என்று நினைத்து அவள் பள்ளி நண்பர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தது பெரிய வேதனை. மேடைக்கு அழைத்து வரப்பட்ட லதாவின் பாட்டி ஆசீர்வாதம் செய்வார் என்று எதிர்பார்த்தபோது, கையில் மைக்கை வாங்கி "ஏகப்பட்ட செலவு பண்ணி இந்த டான்ஸ் அரங்கேற்றம் பண்ணினதுக்கு ஊர்ல பத்து ஏழைப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கலாம்" என்று சொன்னது அரங்கில் பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. மொத்தத்தில் நடன நிகழ்ச்சி நன்றாகவே இருந்தது."

டான்ஸ் பார்க்க வந்தவர்களுக்கு எடிஸன் நியூஜெர்சியிலிருந்து வந்த சுந்தரராமன் தூத்துக்குடி கணேச சித்தப்பாவின் மச்சினனா, அல்லது பம்பாய் அத்தை சியாமளாவின் மருமகனா என்று தெரிந்து என்ன ஆகப் போகிறது?
திருப்தியுடன் பிரிண்ட் போடலாம் என்று பார்த்தால் பிரிண்டரில் இங்க் இல்லை என்று காட்டியது.காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று படுக்கப் போய்விட்டேன். காலையில் காப்பி சாப்பிடும்போது மனைவி லலிதாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"இவர் லதா அரங்கேற்றத்துக்கு விமரிசனம் எழுதியிருக்கார். பிரிண்ட் போட்டுத் தரேன்" என்று சொல்வது காதில் விழுந்தது. நான் எழுதியதை லலிதா படித்தாள் சந்தோஷப்படுவாளா? அவள் புடவையைப் பத்தி ஒரு வரி சேர்த்துடலாமா?

"அப்படியா..ம்..ம். இவர் ராத்திரி முழுக்க எழுதினார்.." என்று சொல்லி அவள் ஃபோனை வைத்தபின், "நான் கடைக்குப் போய் பிரிண்டருக்கு இங்க் கார்ட்ரிட்ஜ் வாங்கிட்டு வந்து பிரிண்ட் பண்ணித் தரேன். அப்புறமா பத்திரிக்கைக்கு ஈமெயில்ல அனுப்பறேன்" என்றேன். "வேண்டாம். அதைத் தூக்கிப் போட்டுடுங்கோ. டான்ஸ் டீச்சர் நளினியோட ஃபிரண்ட் ஒருத்தர் நன்னா எழுதிக் கொடுத்துட்டாராம். அடுத்த வாரம் பத்திரிக்கையில வரப்போறதாம்"

"இருக்கட்டுமே..இது இன்னொரு கோணத்தில எழுதினதா இருந்துட்டுப் போகட்டுமே. நானும் அதே பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கிறேன். லலிதாக்கும் காட்டு. படிக்கட்டும்"

"வேண்டாம்னு சொன்னா உங்களுக்கு புரியல. நேத்திக்கு நீங்க பார்த்த அந்த விடியோ லதா டான்ஸ் இல்லயாம். லலிதாவோட தங்கை மாலாவோட பெண் கவிதா டான்சாம். போன வருசம் அயோவால நடந்த அரங்கேற்றமாம். அவசரத்தில லலிதா தப்பான விடியோவை என்கிட்ட குடுத்துட்டாளாம்"

"விடியோல பார்த்த மாமி பார்க்கறதுக்கு லலிதா மாதிரியே இருந்தாளே"

"அக்கா தங்கைக்குள்ள உடல் ஒத்துமை இருக்காதா? நல்ல வேளை இன்னும் நீங்க பத்திரிக்கைக்கு அனுப்பல"

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. "இவள் இனிமேல் ஒரு தடவை விமரிசனம், பாராட்டுன்னு கேட்டு எங்கிட்ட வரட்டும்..நடக்கிறதே வேற" என்று மனசுக்குள் கறுவிக்கொண்டு நகர்ந்தேன்.

எல்லே சுவாமிநாதன்
More

அன்பாகக் கொடுத்த புடவை
தவிப்பு
Share: 
© Copyright 2020 Tamilonline