Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
'அழகி' விஸ்வநாதன்
பாசிடிவ் அந்தோணி
- அரவிந்த்|ஜனவரி 2010|
Share:
Click Here Enlarge"வெறும் கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்" என்பது கவிஞர் தாராபாரதியின் தன்னம்பிக்கைக் கவிதை. கைகளைத் தவிர பிற உறுப்புகள் ஏதும் செயல்படாத நிலையில், அந்தக் கைகளையும், தன்னம்பிக்கையுமே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார் பாசிடிவ் அந்தோணி என்னும் அந்தோணி முத்து.

பதினோரு வயதிருக்கும் போது ஒருமுறை சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்தோணி, நீரில்லாத ஆழ்கிணற்றில் தவறி விழுந்து விட்டார். விளையாட்டு வினையாகிப் போனது. உயிர் பிழைத்ததே பெரிது. கைகளைத் தவிர மார்புக்குக் கீழே உள்ள பிற உறுப்புகள் செயலிழந்தன. முதுகுத்தண்டு முற்றிலுமாகச் செயலிழந்தது. பள்ளிப்படிப்பு முடங்கிப் போனது. எல்லாவற்றுக்கும் பிறரது உதவியை எதிர்பாக்கும் நிலை. யாராவது வயிற்றை அமுக்கினால்தான் சிறுநீர் கழிக்க முடியும். வலதுகையால் கால்களைப் பிடித்துக் கொண்டால் தான் சற்றேனும் அமர முடியும். அதனால் தனது இடது கையினாலேயே எல்லாவற்றையும் செய்யப் பழகிக் கொண்டார் அந்தோணி. வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று குமைந்து போனார். சகோதரி பௌலீனா செவிலித்தாயாக இருந்து கவனித்தார்.

ஆரம்பத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட அந்தோணி நினைத்ததுண்டு. ஆனால் அதற்கும் கூட யாராவது உதவி செய்ய வேண்டுமே! அவரது கவனம் மெல்ல மெல்ல இசையின் மீது திரும்பியது. வானொலியிலும், டேப் ரெகார்டரிலும் இளையராஜாவின் பாடல்கள் எப்போதும் ஒலிக்க ஆரம்பித்தன. இசை அந்தோணியின் மனதிற்குப் புத்துணர்ச்சியைத் தந்தது. கீபோர்டு வாசிக்க ஆரம்பித்தார்.

"அதை வாசிக்க வாசிக்க எனக்குள் தன்னம்பிக்கை வளர ஆரம்பிச்சது. கழுத்துக்குக் கீழே முடங்கிப் போன சக்தியெல்லாம் என் மூளைக்குள்ள சேர்ந்து இருக்குறதா நினைச்சேன். நிறைய வாசிச்சேன். மெட்ராஸ் யுனிவர்சிடில பி.ஏ. மியூஸிக் அஞ்சல் வழில படிச்சேன். இசையோட நுணுக்கம் எல்லாம் தெரிய ஆரம்பிச்சுது. நானே டியூன் போட்டு மியூஸிக் ஆல்பம் பண்ணினேன். ராகங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிஸ்டத்தை 90ம் வருஷம் கண்டுபிடிச்சேன்" என்கிறார் அந்தோணி.
இதுவரை எனக்குப் பிறர் உதவினார்கள். இப்போது நானும் பிறருக்கு உதவ முடியும் என்பது எனக்கு சந்தோஷம் தருகிறது
ஆனால் அதற்கான காப்புரிமை வாங்க அந்தோணியால் முடியவில்லை. அதற்கான பொருளாதாரப் பின்னணி இல்லாததால் அந்த முயற்சி அப்படியே நின்று போனது. இருந்தாலும் மனம் தளராமல் தனது கவனத்தை கணிப்பொறி மீது திருப்பினார். அத்தோடு தமிழ், ஆங்கில இலக்கியங்களின் மீதும் ஆர்வம் அதிகரித்தது. நண்பர்கள் தங்களிடமிருந்த நூல்களையெல்லாம் அந்தோணிக்கு வாசிக்கக் கொடுத்தனர். கோமதி என்ற ஆசிரியை அந்தோணிக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தார். நண்பர்கள் உதவியுடன் எம்.எஸ். ஆஃபீஸ், போட்டோ ஷாப், டேடா என்ட்ரி என்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டார். அத்தோடு மெடிகல் டிரான்ஸ்க்ரிப்ஷனிலும் பயிற்சி பெற்றார். பின் நண்பர்கள் ஒன்றிணைந்து அவருக்கு ஒரு சக்கர நாற்காலி, லேப்-டாப் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தனர். அதுமுதல் அந்தோணியின் வாழ்க்கை வேறு தளத்தில் இயங்க ஆரம்பித்தது.

'எதுவும் முடியும்' என்ற அவரது நேர்மறை எண்ணம் அவருக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் இணைய மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார் அந்தோணி முத்து. "இதுவரை எனக்குப் பிறர் உதவினார்கள். இப்போது நானும் பிறருக்கு உதவ முடியும் என்பது எனக்கு சந்தோஷம் தருகிறது" என்கிறார் பெருமிதத்துடன்.

"டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் 'எண்ணங்கள்' நூலை 16 வயதில் படித்ததுதான் எனது தன்னம்பிக்கை அதிகரிக்க முக்கியக் காரணம். இன்னும் நிறையப் படிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும். சாதனை செய்ய வேண்டும். ஸ்டீவன் ஹாக்கின்ஸ் மாதிரி பல பேருக்கு நான் முன்னுதாரணம் ஆகவேண்டும் என்பதுதான் என் ஆசை" என்று சொல்லும் அந்தோணி முத்துவின் வயது 37. தனது எண்ணங்களை ஆங்கிலத்திலும் தமிழிலுமாகக் கீழ்க்கண்ட வலைப் பதிவுகளில் எழுதி வருகிறார்:

mindpower2008.blogspot.com, positiveanthonytamil.blogspot.com, mindpower1983.blogspot.com

அந்தோணியின் தன்னம்பிக்கை நிரம்பிய வாழ்க்கை, எல்லாம் இருந்தும், இல்லைப் பாட்டு பாடியபடி வாழ்பவர்களுக்கு ஒரு பாடம்.

தொடர்புக்கு: anthonymuthu1983@gmail.com

அரவிந்த்
More

'அழகி' விஸ்வநாதன்
Share: 
© Copyright 2020 Tamilonline