அக்ஷயா ட்ரஸ்ட் கிருஷ்ணன்
|
|
நவயுகச் சிற்பி விவேகானந்தர் |
|
- மதுரபாரதி|ஜனவரி 2010| |
|
|
|
|
"சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது, சொற்புதிது, சோதி மிக்க நவகவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை"
என்று தமிழ்க் கவிதையைப் புதுக்கித் துலக்கிய பாரதியின் புத்துலகப் பெண்மைக் கருத்தை அவருக்குத் தந்தவர் சகோதரி நிவேதிதா. பாரதி தனது சுயசரிதையில் 'தாய் நிவேதிதை' என்றே அவரைக் குறிப்பிடுகிறார். அவரோ நவபாரதத்தின் ஆன்மீகச் சிங்கமான விவேகானந்தரின் சீடர். "எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமலுணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதாதேவிக்கு இந்நூலை சமர்ப்பிக்கின்றேன்" என்று தனது ஜன்ம பூமி நூலின் சமர்ப்பணத்தில் பாரதி கூறுகிறான். விவேகானந்தரை 'பகவான்' என்று குறிப்பிடுவதை உற்று நோக்க வேண்டும். 'பாபேந்திரியஞ் செறுத்த எங்கள் விவேகானந்தப் பரமன்' என்று மிகுந்த உயர்நிலையில் வைத்து அவரைப் பேசுகிறான்.
பாரதி பாண்டிச்சேரியில் இருந்தபோது மிக நெருங்கியப் பழகியது மகான் அரவிந்தரோடு. வேத உபநிடதங்களை பாரதி கற்றதில் முக்கியமான பங்கு அரவிந்தருக்கு உண்டு. ஆனால் அரவிந்தர் மாணிக்தோலா வெடிகுண்டு வழக்கில் கைதாகி, அலிப்பூர் சிறையில் சாதாரண அரவிந்த கோஷாக அடைபட்டுக் கிடந்த காலத்தில் அங்கே தனது சூக்கும உடலில் தோன்றி 30 நாட்கள் யோகப்பயிற்சி அளித்தவர் விவேகானந்தர். அதன் பின்னரே அரவிந்தர் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் பெற்று ஆன்மிக மேநிலை எய்தியது. அரவிந்தர் விவேகானந்தரை "மனிதருள் சிங்கம்" என்று அழைப்பார்.
சோஷலிசத்தின் பெருந்தாக்கம் கொண்டிருந்த ஜவஹர்லால் நேருவும் விவேகானந்தரை வியக்காமலிருக்க முடியவில்லை. "விவேகானந்தர் எழுச்சியும் பெருமிதமும் கொண்ட எழிலான தோற்றமுடையவர்; தனது செயல்பாட்டிலும் தன்னிலும் பெரும் நம்பிக்கை கொண்டவர்; அதே சமயம் இந்தியாவை முன்னோக்கிச் செலுத்த வேண்டுமென்ற நெருப்பனைய இயக்க ஆற்றலும் ஆர்வமும் நிரம்பியவர். கீழ்மைப்பட்டு நம்பிக்கையிழந்திருந்த இந்துக்களின் மனத்துக்கு ஊட்டமருந்தாக அவர் வந்தார்; தொன்மத்தின் வேர்களையும் தற்சார்பையும் அவர் தந்தார்" என்று தனக்கேயுரிய வெள்ளப்பெருக்கான நடையில் நேரு 'டிஸ்கவரி ஆஃப் இண்டியா'வில் விவேகானந்தரைப் பற்றி எழுதியுள்ளார்.
| "இழிநிலையில் உழலும் இந்தியர்களுக்குச் சேவை செய்வதன் காரணமாக எனது முக்தி இன்னும் ஒரு நூறு பிறவிகள் தாமதமானாலும் பரவாயில்லை" என்றவர் சுவாமி விவேகானந்தர். | |
"விவேகானந்தரைப் பற்றி எழுதும் போது என்னால் பரவசப்படாமல் இருக்க முடியாது. அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் கூட அவரை அளவிடவோ அறியவோ முடியாது. அவரது ஆளுமை செழிப்பானது, ஆழமானது, சிக்கலானது. .. தியாகத்தில் அவர் வரையற்றவர், நில்லாது செயல்படுபவர், அன்பிலோ கரைகளற்றவர், ஆழமான, பல்துறை ஞானமுள்ளவர், உணர்வில் பொங்கித் ததும்புபவர், தாக்குதலில் கருணையற்றவர் என்றால் ஒரு குழந்தை போல எளியவர்--இன்றைய உலகத்தில் ஓர் அரிய மனிதர்" என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மட்டற்ற பரவசத்தோடு விவேகானந்தரை வர்ணிக்கிறார். |
|
விவேகானந்தர் ஒரு துறவி. துறவறம் மேற்கொள்வதே பிற எல்லாவற்றின் மேலும் உள்ள பற்றுக்களை நீக்கி, இறைவனை அடைவதற்கான வழிகளில் ஈடுபடுவதற்கே. "இழிநிலையில் உழலும் இந்தியர்களுக்குச் சேவை செய்ததன் காரணமாக எனது முக்தி இன்னும் ஒரு நூறு பிறவிகள் தாமதமானாலும் பரவாயில்லை" என்று கர்ஜித்தார் சுவாமி விவேகானந்தர். தனது ஆன்மீக முன்னேற்றத்தை விட, தேசம் அடிமைநிலையிலிருந்து நீங்குவதும், தாழ்ந்திருப்போர் உயர்வதுவும் அதிக முக்கியம் என்று அவர் கருதினார்.
1985-ல் இந்திய நடுவண் அரசு விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ஐ தேசீய இளைஞர் நாளாக அறிவித்துவிட்டு மறந்து போய்விட்டது. அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை எல்லோர் மீதும் பெருந்தாக்கம் செலுத்திய வீரத்துறவி விவேகானந்தரை மறந்து போனால் இந்தியாவுக்கு, ஏன், உலகுக்கே உய்வு கிடயாது. ஏனென்றால், 39 ஆண்டுகளே வாழ்ந்த போதும் உலகெங்கும் அவர் சென்ற இடமெல்லாம் அவரது வீறுகொண்ட தோற்றத்தைக் காண, மாறுபட்ட சொற்களைக் கேட்க, பொங்கிச் சீறும் கருத்துக்களை அள்ளிப் பருக மக்கள் கூட்டம் சேர்ந்தது. பத்திரிகைகள் அவரை 'The Stormy Monk from India' என்று வியந்து பேசின. தேசீயமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்பதை அவர் விடாமல் நினைவூட்டிக் கொண்டே இருந்தார்.
"நவ பாரதத்தின் சிற்பி" என்று நேதாஜி வர்ணிக்கும் அந்த மாமனிதரின் நினைவாக இந்த இதழை இளைஞர் சிறப்பிதழாகப் படைத்து அவர் நினைவுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை கொள்கிறோம். இதற்கெனப் பிரத்தியேகமாக ஓவியர் மணியம் செல்வன் அவர்கள் முன்னட்டையிலுள்ள அழகான விவேகானந்தர் ஓவியத்தைத் தந்துதவியிருக்கிறார்.
மதுரபாரதி |
|
|
More
அக்ஷயா ட்ரஸ்ட் கிருஷ்ணன்
|
|
|
|
|
|
|