Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
முன்னோடி
'நாடக வேந்தர்' எஸ்.ஜி. கிட்டப்பா
- பா.சு. ரமணன்|அக்டோபர் 2009|
Share:
Click Here Enlargeஅது விடுதலைப் போராட்ட காலம். இந்திய தேசிய உணர்வு மக்களிடையே மெல்லமெல்ல அதிகரித்துக் கொண்டிருந்த நேரம். அடிமை உணர்வில் ஊறிக் கிடந்தவர்களை கலைஞர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் தங்கள் பாடல்களாலும், நாடக வசனங்களாலும் தூண்டிக் கொண்டிருந்த வேளை. இந்த வேளையில்தான் அந்த 'வெண்கலக் குரலோன்' நாடக மேடையில் பிரவேசித்தார். அவர்தான் செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா எனும் எஸ்.ஜி. கிட்டப்பா.

"நூறு ரூபாய் கொடுத்து குழந்தைகளுக்கு சங்கீதம் பயிற்றுவித்தாலும் முழுசாக ஒரு கீர்த்தனையாவது உருப்படியாக அவர்களுக்குப் பாடமாவதில்லை. ஆனால் பத்து மைல் நடந்து இரண்டணா டிக்கெட் வாங்கி தரையில் உட்கார்ந்து கிட்டப்பாவின் நாடகம் பார்த்த மாட்டுக்காரப் பையன்கள் அழகாகப் பாடத் துவங்கிய விந்தையைக் கண்டு நான் ஆனந்தப்பட்டிருக்கிறேன்" என்கிறார் வ.ரா. தனது ‘கலையும் கலை வளர்ச்சியும்' நூலில்.

இத்தகைய பெருமைக்குரிய கிட்டப்பா, 1906-ம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி செங்கோட்டையில் பிறந்தார். தந்தை கங்காதரய்யர். தாய் மீனாட்சி அம்மாள். வறுமையான குடும்பம்தான். வறுமையைப் போக்க உடன்பிறந்த சகோதரர்கள் இருவரும் சங்கரதாஸ் சுவாமிகள் நடத்திவந்த நாடகக் குழுவில் சேர்ந்து நடித்தனர். அந்தக் குழு மதுரைக்கு விஜயம் செய்தபோது, அதில் ஆறே வயதான கிட்டப்பாவும் இருந்தார். முதன்முதலாக மேடையேறி சபை வணக்கம் பாடினார். அதுமுதல் சிறு சிறு பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தன. எல்லாமே 'பாலபார்ட்' வேடங்கள்தான். தொடர்ந்து வேறு சில வேடங்களும் ஏற்று நடிக்கத் தொடங்கினார். அவரது குரல் வளமும், தெளிவான வசன உச்சரிப்பும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. பின், சகோதரர்களுடன், மற்றொரு புகழ்பெற்ற நாடகக் குழுவான 'கன்னையா நாடகக் கம்பெனி'யில் கிட்டப்பா சேர்ந்தபோது அவருக்கு வயது 13.

கிட்டப்பா-சுந்தராம்பாள் கணவன்-மனைவியாக இருந்தாலும், மேடை ஏறிவிட்டால் நீயா, நானா போட்டிதான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பாடல்களாலும், வசனங்களாலும் கேள்விக்கணைகளைத் தொடுப்பர்.
கன்னையா குழுவினர் நடத்திய நாடகங்களில் மிகவும் புகழ் பெற்றது 'தசாவதாரம்'. அதில் மோகினியாகவும், ராமாவதாரத்தில் பரதனாகவும் நடித்து, தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார் கிட்டப்பா. ஆண், பெண் என இருவேடங்களிலும் மாறிமாறி அவர் நடித்தது மக்களைக் கவர்ந்தது. தொடர்ந்து வள்ளி திருமணம், பவளக்கொடி என்று வரிசையாகப் பல நாடகங்கள் அவர் பேர் சொல்லுமாறு அமைந்தன. மிகச் சிறந்த நாடகக்கலைஞராகப் பரிணமிக்கத் தொடங்கினார்.

கிட்டப்பாவுக்கு 18 வயதானபோது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் கிட்டம்மாள். மனைவி வந்த நேரம் நாடக வாய்ப்புகள் அதிகரித்தன. கடல்கடந்து சென்று நடிக்கும் வாய்ப்பும் வந்தது. அண்டை நாடான இலங்கைக்கு நாடகத்தில் நடிப்பதற்காக, நாடக ஏஜெண்ட் சிங்கம் அய்யங்கார் கிட்டப்பாவை இலங்கைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்னும் கே.பி. சுந்தராம்பாளின் 'வள்ளி திருமணம்' நடந்து கொண்டிருந்தது. தனக்கு இணையாக நாடக உலகில் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் சுந்தராம்பாளைச் சந்திக்கும் ஆவல், வெகுநாளாகவே கிட்டப்பாவுக்கு இருந்தது. அது அப்போது நிறைவேறியது. சுந்தராம்பாளைக் கண்டது மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. கிட்டப்பா-சுந்தராம்பாள் முருகனாகவும், வள்ளியாகவும் இணைந்து நடித்தனர். அது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. அன்று தொடங்கிய அவர்கள் நட்பு மேலும் வளர்ந்தது. 1927-ல் காரைக்குடியில் நடந்த வள்ளி திருமணம் நாடகத்தில் மீண்டும் ராஜபார்ட்டாகவும், ஸ்த்ரீபார்ட்டாகவும் இருவரும் இணைந்து நடித்தனர். அவர்களுக்குள் ஏற்கனவே முகிழ்த்த காதல், திருமணத்தில் முடிந்தது.

திருமணத்திற்குப் பின் இருவரும் இணைந்து 'ஸ்ரீ கானசபா' என்ற நாடகக்குழுவை ஏற்படுத்தினர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நல்லதங்காள், ஞான சௌந்தரி, கண்டிராஜா போன்ற பல்வேறு நாடகங்களை நடத்தினர். நாடகத்திற்காக ரங்கூன்வரை பயணம் செய்த தம்பதியர்கள் என்ற பெருமையும் இவர்களுக்குக் கிடைத்தது. கிட்டப்பா-சுந்தராம்பாள் கணவன்-மனைவியாக இருந்தாலும், மேடை ஏறிவிட்டால் நீயா, நானா போட்டிதான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பாடல்களாலும், வசனங்களாலும் கேள்விக்கணைகளைத் தொடுப்பர். கிட்டப்பா 4 கட்டை, 5 கட்டை என தனது சுருதியை ஏற்றிக் கொண்டே போவார். சமயங்களில் சுந்தராம்பாளுக்கு ஏற்றவாறு மத்திம சுருதிக்கும் இறங்கி வருவார். நாடகங்களில் எப்போதும் கிண்டலும் கேலியும் தொடர்ந்து கொண்டிருக்கும். 'காமி சத்யபாமா', ‘எல்லோரையும் போலவே நீ எண்ணலாகுமோடீ' போன்ற பாடல்களில் இருந்த உற்சாகம் பார்ப்பவரையும் தொற்றிக் கொள்ளும்.

"ஒருவருடைய பாட்டு மற்றொருவருடைய பாட்டுக்கு கிரீடம் சூட்டுவதுபோல் இருக்கும். சாரீரங்களின் வித்யாசமே இதற்குக் காரணம் என்று சொல்லலாம். ஒருவரிடம் இல்லாத, ஆனால் முழுமை அடைவதற்குத் தேவையான தன்மை, மற்றவரிடம் இருந்தது. ஒருவர் மற்றவரைக் காந்தம் போல் இழுத்ததில் ஆச்சரியமில்லை. இதைக் கண்டு தமிழர்கள் ஆனந்தம் அடைந்ததிலும் ஆச்சரியமில்லை" என்கிறார் வ.ரா.
கிட்டப்பா தோன்றும் வரையில், பாமரனுக்கு இசையே தேவையில்லை என்பதுபோல பல வித்வான்களின் நடத்தை அமைந்திருந்தது. ஆனால் பாமரனுக்கும் ரசிகத்தன்மை உண்டு என்ற நிரந்தர உண்மையை நிலைநாட்டிய பெருமை கிட்டப்பாவையே சாரும். அவரது நாடகங்களைப் பார்ப்பதற்காக மக்கள், மாட்டு வண்டிகளில் கட்டுச்சோற்றைக் கட்டிக் கொண்டு, கூட்டம் கூட்டமாக வந்தனர். சாதாரண மக்கள் மட்டுமல்ல; அக்காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த இசை விற்பன்னர்களான அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், திருச்சி கோவிந்தசாமிப் பிள்ளை, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை எனப் பலரும் கிட்டப்பாவின் நாடகம் என்றால் முன்வரிசையில் அமர்ந்து ரசிப்பர். அந்த அளவுக்கு சக வித்வான்களிடையே அக்காலத்தில் கிட்டப்பாவிற்கு செல்வாக்கிருந்தது.

கிட்டப்பாவின் குரல் வளத்திற்கும், சங்கீதத்திறமைக்கும் கீழ்கண்ட சம்பவம் ஒரு சான்று.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். அக்காலத்தில் சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவர். அற்புதமாகப் பாடக் கூடியவர். அதனால் இசை ரசிகர்களால் அன்போடு பாகவதர் என்றழைக்கப்பட்டவர். ஒருமுறை 'எவரனி' என்ற கீர்த்தனையைப் பாடி இசைத்தட்டாக வெளியிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தன் அற்புதமான குரலால் அதனைப் பாடி முடித்திருந்தார் பாகவதர். இசைத்தட்டு வெளியிடும் நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் யதேச்சையாக சில இசைத்தட்டுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர், குறிப்பிட்ட ஓர் இசைத்தட்டைக் கேட்டதும் அப்படியே திகைத்துப் போய் அமர்ந்து விட்டார். அவர் சமீபத்தில் பாடிய அதே 'எவரனி' கீர்த்தனையை, அவரைவிட மிக அழகாக, அற்புதமாகப் பாடியிருந்தார் எஸ்.ஜி. கிட்டப்பா. உள்ளத்தை உருக்கும் அவரது குரலையும், இசையையும் கேட்டு மயங்கிய பாகவதர், தான் பாடி ஒலிப்பதிவு செய்திருந்த இசைத்தட்டை வெளிவராமல் தடுத்து, அதற்காகத் தான் பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். மேலும், அந்தக் கீர்த்தனையைத் தன்னை விட சிறப்பாகப் பாடியிருந்த கிட்டப்பாவைச் சந்தித்து, 'நல்ல வேளை! ஆண்டவன் எங்களைக் காப்பாற்றினார். நீங்கள் மட்டும் நாடகத்துறைக்குள் நுழையாமல் சங்கீதத்துறைக்கு வந்திருந்தால் நாங்கள் எல்லாம் என்றோ கடையைக் கட்டியிருப்போம்' என்றார் மலைப்புடன்.

தாம் நடிக்கும் ஒவ்வொரு நாடகத்தின் இறுதியிலும் காந்திஜி மிகவும் விரும்பிய பாடலான 'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடலைப் பாடி முடிப்பது கிட்டப்பாவின் வழக்கமாக இருந்தது.
அந்த அளவுக்குச் சக வித்வான்களால் பாராட்டப்படும் திறமைசாலியாய் விளங்கிய கிட்டப்பா, வெறும் நாடக நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த தேசபக்தராகவும் திகழ்ந்தார். தேசிய விடுதலைக்காக நிதி திரட்டி அளித்திருக்கிறார். ஒருமுறை உப்பு சத்தியாகிரகத்திற்காக அவர் தம் பேனாவை ஏலம் விட, அது அந்தக் காலத்திலேயே 50 ரூபாய்க்கு ஏலம் போனது. தாம் நடிக்கும் ஒவ்வொரு நாடகத்தின் இறுதியிலும் காந்திஜி மிகவும் விரும்பிய பாடலான 'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடலைப் பாடி முடிப்பது கிட்டப்பாவின் வழக்கமாக இருந்து வந்தது.

கிட்டப்பா-சுந்தராம்பாள் தம்பதியினர் புகழின் உச்சியில் இருந்தாலும் இடையில் ஏற்பட்ட சில பிணக்குகளால் இருவரும் பிரிந்து வாழ நேர்ந்தது. அது கிட்டப்பாவுக்கு மிகுந்த மனச்சோர்வையும் வெறுப்பையும் அளித்தது. குடிப்பழக்கத்துக்கு ஆளானார். நாளடைவில் அவரது உடல்நலமும் சீர்கெடத் தொடங்கியது. நாடக வாய்ப்புகளும் குறைந்தன.

கிட்டப்பாவின் மேதைமை குறித்து 'முன் ஜென்மத்தில் பழுத்த பழம், ஒரு தேவாம்சம், ஏதோ மீதமுள்ள கர்மாவைத் தொலைத்து விட்டுப் போக பூமிக்கு வந்திருக்கிறது. நெடுநாள் இந்த பூமியில் இருக்காது' என்று ஒரு முறை கூறியிருந்தார் திருச்சி வித்வான் கோவிந்தசாமிப் பிள்ளை. அது விரைவிலேயே பலித்து விட்டது. 1933, டிசம்பர் 2, நாடக மேடையில் வெற்றிக் கொடி நாட்டிய சிம்மக்குரலோன், தனக்கு இணை யாருமில்லை எனப் போற்றப்பட்ட நாடக ஜாம்பவான், மறைந்தார். அப்போது அவருக்கு வயது 28.

கிட்டப்பா மறைந்தாலும் அவர் பாடிய 'எவரனி' என்ற நாடகக் கீர்த்தனையும், 'கோடையிலே இளைப்பாற்றி', 'அன்றொரு நாள்' போன்ற பாடல்களும் என்றும் சாகா வரம் பெற்றவை. 'இசையுலகில் கிட்டப்பா செய்த புரட்சி, தமிழ் மொழியைச் சாகாமல் காப்பாற்ற பாரதி செய்த புரட்சியோடு ஒப்பிடத் தகுந்தது' என்று வ.ரா. கூறியிருப்பதற்குச் சான்றாக, உலகின் எங்கோ ஓர் மூலையில் இன்னமும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது அவரது 'காயாத கானகத்தே' குரல்.

பா.சு.ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline