Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சிறுகதை
நிலாவுடன் நான்
இரக்கம்
இடப் பெயர்ச்சி
- பானுரவி|ஜூலை 2009||(5 Comments)
Share:
Click Here Enlargeமழை விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது. சீதம்மாவுக்குக் குளிரில் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. கம்பளியால் போர்த்திக் கொண்டாள்.

முற்றத்தில் காய வைத்திருந்த அரிசி வடகத்தை அவசர அவசரமாகக் கூடையில் அள்ளிப் போட்டுக்கொண்டு முத்துமணி வருவது தெரிந்தது. சன்னமாக ஆரம்பித்த தூறல் சடசடவென்று வலுத்ததில் முத்துமணி ஏகத்துக்கும் நனைந்து போயிருந்தாள். “சே... என்ன மழையோ இது! இப்படி நேரங்கெட்ட நேரத்தில் பெய்து உசிரை வாங்கிறது. இன்னும் சமைச்ச பாடில்லை; வாசுப்பயலுக்கு ஸ்கூல்விட்டு வரும்போதே அகோரப் பசி எடுக்கும்... 'அம்மா...சாதம்' என்று எட்டு ஊருக்குக் கேட்கும்படி அலறிக் கொண்டு வருவான்”. முத்துமணி வடகத்தைக் காற்றாட வைத்துவிட்டுச் சமையற்கட்டுக்கு விரைந்தாள். அவள் கவலை அவளுக்கு!

“முத்து... ஏகத்துக்கும் நனைஞ்சுட்டியேம்மா. போயி வேற பொடவை கட்டிண்டு வா. ஈரத்தோட இருக்காதே. ஒடம்புக்கு ஆகாது”--சீதம்மாவின் குரலில் வாஞ்சையும் கரிசனமும் எட்டிப் பார்த்தது.

‘உக்கும்... மொடமொடனு பொடவயக் கட்டிண்டு வந்துட்டாலும் போய் அப்படியே சோபால உட்கார்ந்துடப் போறேனாக்கும்... திருப்பியும் சமையற்கட்டு சாம்ராஜ்யம்னு தான் எழுதி வச்சிருக்கே' தனக்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டவள் குக்கரை அடுப்பில் ஏற்றினாள்.

எல்லா வேலைகளையும் தானே செய்து கொள்ளும் முத்துமணியைப் பார்க்கும் பொழுது சீதம்மாவுக்குப் பாவமாக இருக்கும். உட்கார்ந்தபடியே காய் நறுக்கித் தந்து, துவைத்த துணிகளை மடித்துக் கொடுத்து என்று தன்னால் ஆனதைச் செய்வாள் சீதம்மா. ஆனாலும்... ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும்.

லட்சுமிநரசிம்மப் பெருமாள் கோவிலை ஒட்டிய இரட்டைத் தெருவில் இருந்தது அவர்கள் வீடு. பதின்மூன்று வயதில் மகாதேவனுக்கு வாழ்க்கைப்பட்டு, கிட்டத்தட்ட அறுபது வருஷங்களாக சீதம்மா வாழ்ந்துவரும் வீடு அது. முத்துமணி அந்த வீட்டு மருமகளாக வந்த பிறகு - கடந்த இருபது வருஷங்களாக - சீதம்மாவுக்கு நல்ல ஓய்வுதான்.

சீனுவாசனுக்குப் பஞ்சுமில்லில் வேலை. தினமும் சைக்கிளில் போய்வருவார். காப்பியாகட்டும், சாப்பாடாகட்டும் அதது சரியான டயத்தில் வந்தாகணும். தினமும் கொல்லையைப் பெருக்கி, வாசல் தெளித்து, கோவில் வாசலில் கோலம் போட்டு, துளசியைத் தொடுத்து விடியும் முன்பாக ஈயக்கொண்டான் வாய்க்காலில் ஸ்நானம் செய்து--முத்துமணி அலாதி சுறுசுறுப்புத்தான்! இடையில் மீனுக்குட்டியும், வாசுப் பயலும் வந்தபிறகு வேலைப்பளு இரட்டிப்பானது நிதர்சனமாகத் தெரிந்தும், தன்னால் உடல்ரீதியாக எதுவும் செய்து ஒத்தாசையாக இருக்க முடியாததில் சீதம்மாவுக்கு நிறைய ஆதங்கம் உண்டு.

குறிப்பறிந்து தன் மனம் கோணாமல் நடந்து கொள்ளும் பிள்ளைக்கும் அவன் குடும்பத்துக்கும் பெரிய உபகாரம் செய்ய மனம் விழையும். தனது முதுமை எதற்கும் இடம் தராமலிருப்பது சீதம்மாவுக்கு மனத்தை உறுத்திக் கொண்டேதான் இருந்தது.

இந்த ஊரைவிட்டுப் போவதா? என் கணவர் மகாதேவன் கடைசி மூச்சுவரையில் வாழ்ந்த இந்த வீட்டையும், ஊரையும் விட்டுப் போவதா? என்னுடைய கடைசி மூச்சும் இந்த வீட்டில், இந்த கிராமத்தில் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்?
மழை சற்று விட்டாற்போல் இருந்தது. தெருவெல்லாம் நன்றாக அலம்பி விட்டது மாதிரி பளிச்சென்று இருந்தது. மழையால் கிளம்பிய மண்வாசனையும், பவழமல்லிப்பூ வாசனையும் சேர்ந்து, அந்த மங்கலான மாலைப்பொழுது ஒருவித மயக்கத்தைத் தந்து கொண்டிருந்தது. உதிர்ந்த பூக்களைத் திரட்டி முத்துமணி தொடுத்துக் கொண்டிருந்தாள். சீதம்மா திண்ணையில் இருந்த சோபாவில் அமர்ந்து ராமஜபம் செய்யத் தொடங்கி இருந்தாள். பேரன் வாசுவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்... தினமும் அவனைப் பள்ளிக்கு வழியனுப்பும் போதும் பள்ளி முடிந்து வரும்போதும் சீதம்மா காட்டும் உற்சாகம் எல்லையற்றது!

“ஹை பாட்டி!” வாசுப்பயல் வந்தாயிற்று.

“பாட்டி, மழைத் தண்ணீல கப்பல் விட்டேன் பாட்டி. என்னோடதுதான் முதல்ல போச்சு... அதனால வரதுக்கு எம்மேல மகாக் கோபம் பாட்டி.”

“நீ யாருனு நினச்சே? கெட்டிக்கார மகாதேவத் தாத்தாவோட பேரன் இல்லயா? அதான் ஜெயிச்சிண்டு வந்துருக்கே... சமத்தாப் போய் கைகால் அலம்பிண்டு சாப்பிடு. வீட்டுப் பாடமெல்லாம் சுருக்க முடிச்சிட்டு வா.”

“சரி பாட்டி. நீ நல்ல கதையா யோசனை பண்ணி வச்சுக்கோ.”

அதென்னவோ பாட்டிக்கும் பேரனுக்கும் பசை போட்டு ஒட்டினதுபோல் அப்படி ஒரு ஒட்டுதல். சீதம்மாவுக்குக் கைகால் பிடித்து விடுவதும், முதுகு அமுக்கி விடுவதும்--அவ்வளவு ஏன்--சீதம்மா கொஞ்சம் அசதியாக இருந்தால்கூட “பாட்டிக்கு உடம்பு சரியாப் பண்ணு சாமி” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு வேண்டுவதும் மிகவும் அற்புதமாக இருக்கும். மூச்சுக்கு முந்நூறு தடவை ‘பாட்டி...பாட்டி'தான்.

மீனுக்குட்டியும் “பாட்டி, பாட்டி” என்று ஆசையாக வளைய வந்தவள்தான்! நாளாவட்டத்தில், மீனுவின் வளர்த்தி நிரம்பவே சீதம்மாவைப் பயமுறுத்த... கண்டிப்பு காட்டத் தொடங்கினாள். “தலையை விரிச்சுக்காதே, பெரீசா சிரிக்காதே, கத்திப் பேசாதே, சங்கிலியை உள்ளே போட்டுக்கோ, குதி ஆட்டம் போடாதே” இந்த ரீதியில் சீதம்மாவின் கட்டளைகள் ஆரம்பிக்கவே பதிலுக்கு மீனுவும் கத்த ஆரம்பித்தாள். பாட்டிக்கும் பேத்திக்கும் நடக்கும் நிழல் யுத்தத்தில் முத்துமணியோ, சீனுவாசனோ நடுவே புகுந்ததில்லை. எதுவும் ஒருநாள் முடிவுக்கு வரும், அப்போது அவர்களே தெரிந்து கொண்டு சமாதானமாகட்டும் என்பது அவர்கள் எண்ணம்.

இந்த வருஷத்தோடு மீனுவுக்குப் பள்ளிப்படிப்பு முடிந்து விட்டது. “அம்மா, நான் பெண்கள் கல்லூரிலேதான் படிப்பேன். அப்பாகிட்டயும் சொல்லியாச்சு; மேலத்தெரு அகிலாவும் அப்படித்தான் சொல்றா”. முத்துமணிக்குப் பெண்ணின் ஆசை நியாயமாகப் பட்டது. ஆனால் அதற்கு எப்படி வழி பிறக்கும் என்பது மட்டும் இன்றுவரை புரிபடவில்லை. அந்தப் பெருமாள்தான் கருணை செய்யணும். மனத்தில் எப்போதும் இதே பிரார்த்தனைதான்...

“காராபூந்தி கல்கண்டு ஜீனி
கண்ணன் செய்த மிட்டாய்
நல்ல மிட்டாய் நாக்கில்
தேன்சிந்தும் வண்ண மிட்டாய்
நல்லவர் வாங்கும் மிட்டாய்...”
சீதம்மா வாசுவுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தாயிற்று. “பாட்டி..நீ தினமும் இப்படிச் சொல்றே. ஆனா மிட்டாய்க்காரன் எங்கே வரான்?” வாசுவின் தொணதொணப்பு தொடங்கியது. “நம்ப ஊரு சின்ன ஊரு இல்லயா? இங்கே ரொம்பப் பேரு இல்லனு அந்த மிட்டாய்க்காரன் டவுன்பக்கம் போய் கணகணன்னு மணி அடிச்சுண்டு வண்டில வருவான்” சீதம்மா சொல்லி முடிப்பதற்குள் வாசு முத்துமணியிடம் ஓடி வந்து விடுவான். “அம்மா, நம்மளும் டவுனுக்குப் போகலாம்மா...” என்று நமுட்டி எடுத்துக் கொண்டிருந்தான்.

இடப்பெயர்ச்சியால் மனிதர்களும், ஏன், குழந்தைகளும் கூட மாறி விடுவார்களா என்ன?
மணி எட்டரை. சீனுவாசன் வந்தாயிற்று. “முத்து, இன்னிக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கு. ஆர்டர் குடுத்தவர் திருச்சிலே பெரிய பாக்டரி வச்சிருக்காராம். அவருக்கு என்னோட அணுகுமுறையும், அனுபவமும் பிடிச்சுப்போயி அவர் பாக்டரியில் வேலை தருவதாச் சொல்றார். நல்ல சம்பளம். அத்தோட வீட்டுவாடகை, மருத்துவச் செலவு எல்லாம் தரதாச் சொல்றார். பக்கத்துலயே நம்ப மீனு படிக்கறதுக்குப் பெண்கள் காலேஜ் இருக்குங்கிறதுதான். நமக்கு அனுகூலமான விஷயம். அவரிடம் இன்னும் ரெண்டு நாட்களில் சொல்றதாச் சொல்லியிருக்கேன். அம்மா, நீயும் கேட்டுண்டு இருக்கே இல்லயா? இதைவிட நல்ல சந்தர்ப்பம் நமக்கு அமையாது”.

முத்துமணிக்கு அப்பாடி என்றிருந்தது. பிரார்த்தனைக்கு தெய்வம் செவி சாய்த்து விட்டதோ? மீனுக்குட்டியின் மேல்படிப்புக்கு இப்படி ஒரு வழியா? நிஜமாகவே தனது கிராமத்து வாழ்கையிலிருந்து கூடியசீக்கிரம் விடுதலை கிடைக்கப் போறதா? அவள் கண்முன்னே மலைக்கோட்டையும், கொள்ளிடமும் படக்காட்சிகளாக விரிந்தன. மீனுவுக்குக் கால் தரையில் பாவவில்லை. “அப்பா, கட்டாயம் அந்த வேலையை ஒப்புத்துக்கோப்பா. நான் இப்பவே அந்தக் காலேஜுக்கு விண்ணப்பிக்கிறேன்”.

“ரொம்ப நல்ல சந்தர்ப்பம்தான் சீனு” என்று சீதம்மா சொன்னாலும் தொண்டையை அடைத்தது. ”இந்த ஊரைவிட்டுப் போவதா? என் கணவர் மகாதேவன் கடைசி மூச்சுவரையில் வாழ்ந்த இந்த வீட்டையும், ஊரையும் விட்டுப் போவதா? என்னுடைய கடைசி மூச்சும் இந்த வீட்டில், இந்த கிராமத்தில் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்?” சீதம்மாவைக் கேட்காமலே கண்ணீர் கசிந்தது.

சீதம்மாவுக்கு எண்ண அலைகள் புரண்டு புரண்டு வந்தன. வாழ்க்கையைக் கடினமாகக் கடந்ததால், கனத்துப் போயிருந்த கடந்த கால நினைவுகளும், நிகழ்வுகளும் சங்கிலியாகக் கோர்த்துக் கொண்டு அவளைப் பாடாய்ப் படுத்தின. நகமும் சதையுமாக வாழ்ந்த வாழ்க்கையும். தனது சுகதுக்கத்தில் பங்கேற்று, வாழ்ந்து முடிந்த மகாதேவனின் நினைவுகளும் சீதம்மாவைத் தூங்க விடாமல் துரத்தின. டபக்கென்று எப்படி இந்த வீட்டையும், ஊரையும் அறுத்துக் கொண்டு போகமுடியும்? மனது ஊமையாக அழுதது.

“பாட்டி... பாட்டி”

“அட, யாரது மீனுக்குட்டியா?”

“ஆமாம் பாட்டி. எனக்கென்னமோ உன்னைக் கட்டிக்கணும் போல இருக்கு பாட்டி. ரொம்ப சந்தோஷமா இருக்கு பாட்டி. நான் இஷ்டப்பட்ட மாதிரியே பெண்கள் காலேஜுக்குப் போகப்போறேன். எனக்கு டாக்டராகணும் பாட்டி. திருச்சி ரொம்ப நல்ல ஊரு தெரியுமா? உனக்கும் ரொம்பப் புடிக்கும் பாட்டி.”

இரும்புக் குண்டாகக் கனத்த சீதம்மாவின் இதயம் மீனுவின் வருகையால் பனிப்பாறையாகிப் போனது. பேத்தியை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். “மீனுக்குட்டி. மொதல் ஆளா நாந்தான் கிளம்புவேன். பொட்டில எல்லாம் மளமளனு எடுத்து வச்சுக்கோ”.

சீதம்மாவுக்கு திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது போலிருந்தது. மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருப்பதே, தான் சீனுவசனுக்குச் செய்யும் பெரிய உபகாரம் என்று தோன்றியது. குடும்ப முன்னேற்றமும், குழந்தைகள் முன்னேற்றமும் கிடைக்கும் என்றால் அதற்குத் தான் எந்தவிதத்திலும் முட்டுக்கட்டையாகி விடக்கூடாது என்று தன்னை மனரீதியில் தயார்படுத்திக் கொண்டாள்.

உயர்ந்த மலைக்கோட்டையும், மணியோசையும், கலகலவென்ற ஆண்டார் தெருவும், ஜிலுஜிலுத்த தெப்பக்குளமும், அவர்கள் எல்லோருக்கும் புதுவித அனுபவத்தைத் தந்திருந்தன. சீனுவாசனுக்குப் புதிய வேலை என்னும் பட்சத்தில், நிறையப் பொறுப்புக்களும் பணிகளும் சேர்ந்து கொண்டது. அண்டை வீட்டார்களின் பழக்கமும், மரியாதையான பேச்சும், முத்துமணிக்கு உற்சாகத்தைத் தருவதாய் இருந்தன. மீனுக்குட்டியும் காலேஜ் போக ஆரம்பித்தாயிற்று. அதுதவிர வீணையும் வாய்ப்பாட்டும் கற்றுக்கொள்ள வாரத்தில் இரண்டு நாட்கள் போய்வந்து கொண்டிருந்தாள்.

வாசுப்பயல்?

நல்ல பள்ளிக்கூடம், உடற்பயிற்சி, விளையாட்டு என்று அவனும் மாற்றத்துக்குத் தயாராகி விட்டான். வீட்டுப்பாடமும், அடிக்கடி வரும் தேர்வுகளும் அவனது குழந்தைத் தனத்தைக் காணாமல் போக்கடித்திருந்தன. சீதம்மாவிடம் இப்போதெல்லாம் கதை கேட்க வருவதில்லை!

சீதம்மாவுக்குத் தான் தனித்து விடப்பட்டது போலிருந்தது. அந்த வித்தியாசமான தனிமை அவளுக்கு அச்சத்தைத் தருவதாக இருந்தது. இடப்பெயர்ச்சியால் மனிதர்களும், ஏன், குழந்தைகளும் கூட மாறி விடுவார்களா என்ன? சீதம்மாவின் நிஜமாகி, நினைவாகிப் போன மகாதேவன், இப்போது கனவுகளில் வரலானார். கிராமத்து வீடும் கோவிலும் திரும்பத் திரும்ப மனதில் வந்து போனது. மனம்விட்டு அழக்கூட முடியாத தன்னுடைய நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றே தோன்றியது.

'கண கண, கண கண' மணி அடித்துக் கொண்டே சென்ற மிட்டாய்க்காரன் வாசுவைப் பார்தததும் “காராபூந்தி” என்று ஆரம்பித்தான். மும்முரமாக வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்த வாசு, “பாட்டி பாட்டி... மிட்டாய்க்காரன் வந்தாச்சு பாட்டி. அப்பாடி எத்தன நாளா நீ மிட்டாய்க் கதை சொல்லுவே! இன்னிக்கு நிஜமாவே மிட்டாய் வாங்கப் போறேன் பாட்டி. உனக்கும் சேர்த்துத்தான்” ஒரே ஓட்டமாய் வாசலுக்குப் போனவன் கைநிறைய மிட்டாயோடு வந்தான்.

“பாட்டி பாட்டி. மணி எட்டு கூட ஆகல. அதுக்குள்ள தூங்கிட்டியா? மிட்டாய் எடுத்துக்கோ பாட்டி, பாட்டி” வாசுப்பயல் தனது அருமைப் பாட்டியை எழுப்பிக் கொண்டிருந்தான்.

மகாதேவனோடும் தனது கிராமத்து நினைவுகளோடும், சீதம்மா மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டது தெரியாமல் “பாட்டி...எழுந்திரு பாட்டி” என்று வாசுப்பயல் கத்துவது எனக்குக் கேட்கிறது. உங்களுக்கு?

பானுரவி,
கலிபோர்னியா
More

நிலாவுடன் நான்
இரக்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline