Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
நலம்வாழ
வெயில் காயலாம் வாங்க
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|ஜூலை 2009|
Share:
Click Here Enlargeதற்போது அமெரிக்க ஊடகங்களில் பரவலாகப் பேசப்படும் நோய் வைடமின் D குறைபாடு. அந்தக் காலத்தில் சத்துள்ள உணவுகள் கிடைக்காத சிறுவர் சிறுமியர்களுக்கு 'ரிக்கெட்ஸ்' என்று சொல்லப்படும் எலும்புவளைவுக் குறைபாடு ஏற்பட்டு வந்தது. கால்கள் வளைந்து அவதியுண்டாக்கும் அந்த நோய் முற்றிலும் இல்லாமல் போனதாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் வைடமின் D குறைபாட்டினால் ஏற்படும் பல விளைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கருவில் இருக்கும் குழந்தை முதல் பாட்டிமார் வரைக்கும் எலும்பு முறிவும், வளர்ச்சிக் குறைவும் ஏற்படுவதற்குப் போதிய வைடமின் D இல்லாமையே காரணமாகிறது.

வைடமின் D எப்படிக் கிடைக்கும்
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கப் பெறும் வைடமின் D தோலில் D3 ஆக மாறுகிறது. பல உணவு வகைகள் வைடமின் D2 அல்லது D3 ஆகியவை கலந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. கடைகளில் கிடைக்கும் வைடமின் மாத்திரைகளில் இரண்டுமே கிடைக்கிறது. இந்த வைடமின் D3 ஈரலில் D(25-OH) ஆக மாறிப் பின்னர் சிறுநீரகத்தில் வைடமின் D1(25-OH) ஆக உருமாறுகிறது. இந்த வைடமின் D1(25-OH) உடலில் பல அணுக்களில் புகுந்து தன் வேலையைத் தொடங்குகிறது. இந்த மாற்றங்களுக்கு, உடலில் இருக்கும் கால்சியம், பாஸ்ஃபரம் அளவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த அளவுகளைப் பராமரிக்க கழுத்துப் பகுதியில் இருக்கும் 'பாராதைராயிடு' என்ற நாளமில்லாச் சுரப்பி உதவுகிறது. ஆக ஊர்கூடித் தேர் இழுப்பது போல் உடலில் பல்வேறு உறுப்புகள் சேர்ந்து இந்த வைடமின் செயல்பாட்டைப் பராமரிக்கின்றன.

நல்ல வெயில் கை, கால்களில் படும்படி அமர்வதன் மூலம் இந்த வைடமினைப் பெறலாம். குறிப்பாக, காலை 10 முதல் மதியம் 3 மணி வரையிலான வெயில் இதற்கு உகந்தது. குளிர்ப் பிரதேசங்களில் இருப்போர், இதனை வெயில் காலங்களில் வாரத்துக்கு இரணடு முறை செய்தால் தேவையான வைடமின் D தோலில் சேர்ந்துவிடும்.
வைடமின் அளவும் குறைபாடும்
உடலில் இந்த வைடமினின் அளவு வைடமின் D(25-OH) ஆக இரத்தப் பரிசோதனையில் அளக்கப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் எல்லாப் பரிசோதனைக் கூடங்களும் இப்போது இதனையே பயன்படுத்துகின்றன. இது 20 ng/ml-க்குக் குறைவாக இருக்குமேயானல் வைடமின் D குறைபாடு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்படுபவர் யார்
உலகில் சுமார் ஒரு பில்லியன் மக்களுக்கு வைடமின் D குறைபாடு இருப்பதாக ஒரு கணக்கெடுப்புச் சொல்கிறது. அமெரிக்காவில் சுமார் 40-100 சதவீத மக்கள் இந்த குறைபாட்டுடன், ஆனால் அதனை உணராமல் வாழ்வதாகச் சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது. முக்கியமாக குழந்தைகளும், பதின்ம வயதினரும், மாதவிடாய் நின்ற பெண்களும் முதியோரும் இந்தக் குறைபாட்டுக்கு ஆட்படுகிறார்கள். சூரிய வெளிச்சம் குறைவான குளிர்ப் பிரதேசங்களில் இது அதிகம். சூரிய ஒளி அதிகம் உடைய பகுதிகளில் தோலைக் காப்பதற்கு ‘சன் ஸ்க்ரீன்' தடவிக் கொள்பவர்களுக்கும் இது ஏற்படலாம். ஈரல் மற்றும் சிறுநீரக நோய்கள் உடையவர்களுக்கு வைடமின் D குறைபாடு அதிகம் ஏற்படலாம். கருவுற்ற பெண்களுக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இந்த வைடமின் கூடுதலாகத் தேவை.
Click Here Enlargeவைடமின் D குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள்
- எலும்பு முறிவும், குறைபடுதலும் (ஆஸ்டியோபோரோஸிஸ்)
- தசைகள் வலுவிழத்தல் (Muscle weakness)
- எதிர்ப்புச் சக்தி குறைதல் (immune deficiency)
- புற்றுநோய்த் தொடர்பு - குறிப்பாக லிம்ஃபோமா என்று சொல்லப்படும் ரத்தப் புற்றுநோய் தவிர சுக்கியன் (prostate), பெருங்குடல், மார்பக, சினைப்பை (ovarian) புற்றுநோய்களுக்கு இந்தக் குறைபாட்டுடன் தொடர்பு இருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
- நீரிழிவு நோய் மற்றும் பல தன்னெதிரி (autoimmune diseases) நோய்கள் ஏற்படலாம்.
- இருதய நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் அதிகரிக்கும் வாய்ப்பும் இந்தக் குறைபாடு உள்ளவர்களிடத்தில் அதிகம்.
- மன அழுத்தும் மற்றும் மனப்பிளவு (Schizophrenia) ஏற்படலாம்.
- ஆஸ்துமா இருப்பவர்களிடமும் இந்த வைடமின் குறைவாகக் காணப்படுகிறது.

ஆக உடலில் பல்வேறு உறுப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட இந்த வைடமின் தேவைப்படுகிறது.

வைடமின் D குறைபாடு தீர்ப்பு முறைகளும் தவிர்க்கும் முறைகளும்
இந்த வைடமின் 400 IU முதல் 800 IU வரை ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது, ஆனால் குறைபாடு உள்ளவர்கள் இதனை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை 50,000 IU எட்டு வாரங்களுக்கு தேவைப்படலாம். அதன் பின்னர் படிப்படியாக அளவைக் குறைக்க வேண்டும். இந்த அதிகப்படி அளவு எடுத்துக் கொள்ள மருத்துவரின் சீட்டும், ரத்தப் பரிசோதனையும் அவசியம்.

தவிர்ப்பு முறைகள்
சூரிய வெளிச்சம் தேவையான அளவு தோலின்மீது பட வேண்டும். 5-30 நிமிடங்கள் வரை நல்ல வெயில் கை, கால்களில் படும்படி அமர்வதன் மூலம் இந்த வைடமினைப் பெறலாம். குறிப்பாக, காலை 10 முதல் மதியம் 3 மணி வரையிலான வெயில் இதற்கு உகந்தது. குளிர்ப் பிரதேசங்களில் இருப்போர், இதனை வெயில் காலங்களில் வாரத்துக்கு இரணடு முறை செய்தால் தேவையான வைடமின் D தோலில் சேர்ந்துவிடும். வைடமின் D அதிகம் பெறுவது மிகமிகக் கடினம். இதனால் வைடமின் D மிகையாகும் பயம் தேவையற்றது.

இதைத் தவிர வைடமின் D சேர்க்கப்பட்ட பால், தானிய வகைகள், மீன் மூலமாகவும் இதனைப் பெறலாம். கால்சியம் சாப்பிடும் போது அவசியம் அதனுடன் வைடமின் D எடுத்துக் கொள்ள வேண்டும். சத்துள்ள உணவு பெறும் வசதியில்லாத காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கால் வளைவு நோய், இக்காலத்தில் வசதியுள்ள குழந்தைகளுக்கு ஏற்படாமல் தவிர்க்க முயற்சிப்போம். நல்ல உணவுப் பொருட்களை உட்கொண்டு, இயற்கையின் மூலம் கிடைக்கும் வைடமினைப் பெற்று வளமுடன் வாழ்வோம். வெயிலைக் குறை கூறாமல் அனுபவிப்போம்.

மேலும் விவரங்களுக்கு மருத்தவ தளத்தை அணுகவும். சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட்டில் வெளிவந்த செய்திக் கட்டுரையைப் பார்க்கவும்

வரலட்சுமி நிரஞ்சன்.
Share: 




© Copyright 2020 Tamilonline