|
ஜெயமோகன் (பகுதி -1) |
|
- மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன், ச. திருமலை ராஜன்|ஜூலை 2009||(2 Comments) |
|
|
|
|
தமிழ் எழுத்துலகில் மிக முக்கிய கவனம் பெறும் படைப்பாளி ஜெயமோகன். இலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் மிகுந்த வீச்சுடன் இயங்கி வருகிறார். கதா, சம்ஸ்கிருதி சம்மான், அகிலன் நினைவு விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருகிறார். தமிழகத்தின் குறிப்பிடத் தகுந்த இலக்கிய இதழாக விளங்கிய ‘சொல் புதிது' சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறார். இவருடைய ‘ரப்பர்', ‘விஷ்ணுபுரம்', ‘காடு', ‘பின் தொடரும் நிழலின் குரல்', ‘ஏழாம் உலகம்', ‘கொற்றவை', ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்', ‘கன்னியாகுமரி' போன்ற படைப்புகள் மிக முக்கியமானவை. மனைவி அருண்மொழி நங்கை, மகன் அஜிதன், மகள் சைதன்யாவுடன் நாகர்கோயிலில் வசித்து வரும் ஜெயமோகன், தொலைபேசித் துறையில் பணியாற்றி வருகிறார். ‘கஸ்தூரிமான்', 'நான் கடவுள்', ‘அங்காடித் தெரு' எனத் திரைப்படத் துறையிலும் கால் பதித்துள்ளார். இவரது வலைதளம் (www.jeymohan.in) வாசகர்களால் மிக அதிகம் வாசிக்கப்படும் பல்துறை வலைமனைகளுள் ஒன்று. ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு வரவிருக்கிறார் என்ற நிலையில் ஜெயமோகனைச் சந்தித்து உரையாடினோம். அவருக்கே உரிய துணிச்சலுடன் ஆணித்தரமாகப் பல கருத்துகளைக் கூறினார். உரையாடலின் முதல் பகுதி இதோ....
கே: உங்களை எழுதத் தூண்டியது எது?
ப: என்னுடைய எழுத்துக்கு முதல் தூண்டுதல் என் அம்மா விசாலாட்சிதான். பெரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது இரண்டாவது அண்ணா கேரளத்தின் முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவர். பெயர் கேசவ பிள்ளை. குமரி மாவட்டத்தில் கம்யூனிஸத்தைக் கொண்டு வந்து பரப்பிய ஆரம்பகட்டத் தலைவர்களுள் ஒருவர். அவருக்கு ஆங்கிலம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளும் தெரியும். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட நூலகம் வைத்திருந்தார். தன் அண்ணனின் நிழலில் வாழ்ந்த என் அம்மாவும் நிறையப் புத்தகங்கள் படிப்பார். எழுத்தாளர் ஆக வேண்டும் என்பது அம்மாவின் கனவு. அவர் கலைமகளில் ஒரு கதையும் மலையாளத்தில் ‘மங்களோதயம்' இதழில் இரண்டு கதைகளும் எழுதியிருக்கிறார்.
கே: புனைவிலக்கியம் படைப்பவர்கள் தாம் எழுத்தாளர்கள் என்றிருந்த நிலை மாறி இன்று கட்டுரையாளர்கள் எழுத்தாளர்களாக அதிகம் அறியப்படுகிறார்கள். இதுபற்றிய உங்கள் கருத்து...?
ப: மனிதன் வாழ்க்கையை அல்லது பிரபஞ்சத்தை அறிவதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று உள்ளுணர்வு அல்லது தியானம். இன்னொன்று தர்க்கம். மூன்றாவது கற்பனை. அறிவியல், தத்துவம் எல்லாமே தர்க்கத்திற்குள் வருகிறது. உள்ளுணர்வு சார்ந்த முறை எல்லோருக்கும் உரியதல்ல. அடுத்த முக்கியமான, பிரபலமான அறிதல் முறை என்றால் அது கற்பனைதான். ஓர் உண்மையை அறிவதற்கு அந்த உண்மையை நிகழ்வது போலக் கற்பனையால் அறியும் முறை இது. அந்த வழிமுறையைக் கடைப்பிடிக்கக் கூடியவைதாம் கலைகள். எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை கற்பனை. கற்பனை மிக அதிகமாகச் செயல்படக் கூடிய மொழித்தளம் புனைகதை. ஆக, புனைகதை, கவிதைதான் இலக்கியத்தினுடைய மிக முக்கியமான பகுதியாக என்றும் இருக்க முடியும்.
புனைகதையாளர்கள் கட்டுரை எழுதுவதென்பது ஆரம்பம் முதலே இருக்கும் ஒன்றுதான். செஸ்டர்டன், ஸ்டீவன் லீ-காக் போன்றவர்களின் குறுங்கட்டுரைகள் மிகவும் புனைவுத்தன்மை கொண்டு இருக்கும். இப்போது குறுங்கட்டுரைகள் அதிகம் வெளிவரத் தேவை இருக்கிறது. ஆனால் கட்டுரைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பவர்கள் எழுத்தாளர்களாகக் கருதப்படுவதில்லை. நாஞ்சில்நாடனுடைய கட்டுரைகளை நீங்கள் வாசிக்கின்றீர்கள் என்றால், அடிப்படையில் அவர் ஒரு முக்கியமான புனைகதை எழுத்தாளர் என்பதால்தான். கட்டுரைகளை மட்டுமே அவர் எழுதியிருந்தால் அவரை ஓர் எழுத்தாளராக அறிவிக்க மாட்டீர்கள். ஆக, புனைவெழுத்து என்பதுதான் ஓர் எழுத்தாளனுடைய அடிப்படையான மெய்காணும் முறையாக இருக்க வேண்டும்.
கே: உங்களுடைய முதல் படைப்பு வெளிவந்த போது உங்கள் மனநிலை என்ன? எப்போது உங்களைப் பற்றி பரவலாக இலக்கிய உலகில் தெரிய ஆரம்பித்தது?
| நம்மைக் கட்டுப்படுத்துவதற்கு மேலே ஒருத்தன் இருக்க வேண்டும் என்ற நிலைமையில்தான் நாம் இருக்கிறோம். இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் மேலே வருவதற்கு அதற்கான கல்வி தேவை. அடிப்படைப் பொருளாதார வளர்ச்சி தேவை. | |
ப: எனது முதல் படைப்பு நான் எட்டாவது படிக்கும் போது ‘ரத்னபாலா' இதழில் பத்திரிகை ஆசிரியரின் சிறு குறிப்புடன் பிரசுரமாகி இருந்தது. எனக்கு ஏழு ரூபாய் சன்மானம் கிடைத்தது. அது, நான் ஒரு பெரிய எழுத்தாளராகி விட்ட கர்வத்தையும், பெருமிதத்தையும் எனக்குத் தந்தது. அந்தக் கதையை எடுத்துக் கொண்டு நான் என் கிராமம் முழுதும் சுற்றி, தெரிந்தவர்களிடமெல்லாம் கொடுத்து படிக்கச் சொல்லி பரவசமடைந்திருக்கிறேன். ஏழு ரூபாய் என்பது அப்போது பெரிய தொகை. அந்தப் பணத்தில் பின்னலில் வைத்துக் கட்டும் குஞ்சலம் ஒன்றை வாங்கி எனது தங்கைக்குக் கொடுத்தேன்.
பரவலாக அறியப்பட்ட என்னுடைய முதல் படைப்பு, பல வருடங்கள் ஏட்டிலக்கியத்தை நிறுத்தி, அங்கும் இங்கும் அலைந்து, மீண்டும் எழுத ஆரம்பித்துப் பின் வெளியான ‘படுகை' என்ற கதைதான். பேச்சிப்பாறை அணை கட்டுவதைப் பற்றிய கதை அது. அது வெளியான காலத்தில் புதுமையாக இருந்ததுடன் பரபரப்பாகவும் பேசப்பட்டது. காரணம், ஃபேன்டஸியைப் பயன்படுத்தி எழுதியிருந்தது தான். கோவை ஞாநியின் ‘நிகழ்' பத்திரிகையில் அந்தக் கதை வெளியானது. சமகால எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டது. இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா போன்ற பலர் அக்கதையைப் பற்றி அப்போதே குறிப்பிட்டுப் பேசினார்கள். ஓர் எழுத்தாளனாக என்னுடைய நுழைவு அதன் மூலம் வலுவாக நிகழ்ந்துவிட்டது.
கே: தற்போது சிறுவர்களிடம் படிக்கும் ஆர்வம் குறைந்து விட்டதாகக் கருத்து நிலவுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: தமிழ்நாட்டில் புத்தகக் கண்காட்சிகளில் 50 சதவீதத்துக்கு மேல் விற்கும் புத்தகங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்கள் தான். ஆனால், அவை ஆங்கிலப் புத்தகங்கள்! புத்தகங்களை நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கத்தினர் தாம் வாங்குகிறார்கள். அவர்கள் குடும்பத்துக் குழந்தைகள் எல்லாம் ஆங்கிலவழிக் கல்வியில் படிப்பதால் தமிழார்வம் கிடையாது. தம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே பேசி, படித்து வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது. அதனால் வணிக ரீதியாகத் தமிழ்ப் புத்தகங்களைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க முடிவதில்லை. மேலும், எப்படியாவது அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காகப் பெற்றோர், குழந்தைகள் ஒரு செய்தித் தாளைப் படிப்பதைக் கூட விரும்புவதில்லை. |
|
கே: ஆதிச்சநல்லூர் போன்றவற்றைத் ‘தொன்மைக் கலாசாரம்' என்றும் தஞ்சைப் பெரியகோயில், கம்பராமாயணம் போன்றவற்றைச் ‘செவ்வியல் கலாசாரம்' என்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். தற்போதைய ‘நவீன கலாசார'த்தில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்றும் கூறுகிறீர்கள். எப்படி என்பதை விளக்கிக் கூற முடியுமா?
ப: ‘குடிமைப் பண்பாடு' (civic sense) என்பதே நமக்குக் கிடையாது. சில நாட்களுக்கு முன்னால் நான் பாங்காக் செல்வதற்காக சென்னை விமானநிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். பயணிகளில் பெரும்பாலானோர் தமிழகம், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் செக்-இன் அறிவிப்பு செய்தவுடனே, அனைவரும் தாம் கொண்டு வந்திருந்த பெட்டிகளுடன் முட்டி மோதிக்கொண்டு வழியை அடைத்துக் கொண்டு நின்றனர். ஒரு விமானம் ரிசர்வ் செய்த ஆட்களை விட்டுவிட்டுப் போய்விடப் போவதில்லை. ஆனால் இங்கோ இடம் பிடிப்பதற்குக் கூடுவது போல் கூட்டம். பைகள் கீழே விழுகின்றன. ஒருவரையொருவர் கடுமையாகத் திட்டிக் கொள்கிறார்கள். அத்தனையும் படித்தவர்கள். கணிசமான நபர்கள் வெளிநாடுகளில் வேலைக்குப் போனவர்கள். ஏழெட்டு வெள்ளையர்கள், இரண்டு சீனர்கள், நான்கைந்து இந்தியர்கள் மட்டும்தான் இந்த கும்பல் போகட்டும் என்று பொறுமையாக உட்கார்ந்து இருந்தார்கள். இதுதான் இந்தியா.
சென்னையில் வந்து நீங்கள் இறங்கி விட்டால் போதும், எந்த ஒரு சந்திலும் இதுபோன்ற அராஜகங்களைப் பார்க்கலாம். ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது நாகரிகம் என்றால் என்ன, பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய அறம் என்ன என்று யாருக்கும் தெரியாது. இதை யாரும் நமக்கு சரியாகச் சொல்லிக் கொடுக்கவுமில்லை. குப்பையைத் தெருவில் போடுகிறோம். தெருவில் அசிங்கம் செய்கிறோம். போட்டி போட்டுக் கொண்டு ஒழுங்கீனமாக நடக்கிறோம். பொது ஒழுங்கைப் பேண முடியாமல் இருக்கிறோம். இந்தக் குறை ஏன் வந்தது?
சிந்துச் சமவெளி நாகரிகமாகட்டும், அதற்கு முந்தையதாகச் சொல்லப்படும் ஆதிச்சநல்லூர் நாகரிகமாகட்டும் நமக்கென்று ஒரு மிகப் பெரிய பண்பாடு இருக்கிறது. இந்தப் பண்பாட்டை நாம் நம்முடைய நாட்டார் பண்பாடு என்று சொல்கிறோம். இந்தப் பண்பாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து அதன் உச்சத்தை அடைந்திருக்கிறது. ஒரு கிராமத்திற்குச் சென்று வயதான பாட்டியிடம் பேசினால் கூட அவர்களது அன்பு, நாகரிகம், உபசரிப்பு இவற்றின் மூலம் அவர்களது தொன்மையான பண்பாட்டைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஒரு வெள்ளையரை விட அந்தப் பாட்டியிடம் பண்பாட்டின் உச்சம் அதிகம் இருப்பதை நாம் காண முடியும். அப்படிப்பட்ட பலரை நான் சந்தித்திருக்கிறேன். என்னுடைய படைப்புகளில், அப்படிப் படிக்காத ஆனால் பண்பில் உயர்ந்த நான் சந்தித்த பலரைப் பாத்திரமாக்கியிருக்கிறேன். இந்தப் பண்பு ஆயிரக்கணக்கான வருடங்களாக கூர்தீட்டப்பட்டு இவர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. இதைப் பழங்குடிப் பண்பாடு என்று சொல்லலாம்.
உலகத்திலேயே மிகச் சிறந்த சிற்பங்கள், மிக முக்கியமான கட்டடங்கள், மிகச் சிறந்த இசை, ஈடிணையற்ற இலக்கியச் செல்வம் எல்லாம் இருக்குமிடம் தமிழ்நாடுதான். நமது தத்துவங்களின் கூர்மையும், அகலமும் உலகத்திலேயே மிகக் குறைவான தத்துவ மதங்களிடம் தான் இருக்கிறது. அவ்வளவு செவ்வியல் வெற்றியை அடைந்தும் நமக்குக் குடிமைப் பண்பு மட்டும் ஏன் சரியாக அமையவில்லை?
கே: இதற்குக் காரணம் என்ன?
என்னுடைய யூகம் என்னவென்றால், நம்முடைய காலகட்டம் செவ்வியல் கலாசாரம் சிதைவடையும் காலமாக ஆகி விட்டது. இந்தியாவில் உள்ள பெரிய அரசுகள் எல்லாமே போரினால் அழிந்து விட்டன. இந்தியா முழுக்கச் சிறுசிறு கொள்ளைக்காரர்களால் ஆட்சிசெய்யப்படும் நாடாக மாறியது. எதிர்காலத்தைப் பற்றிய பயம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது. ஒரு சின்ன க்யூவில் எல்லோரும் முண்டி அடிக்கின்றனர், நமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம்! 50 பேர் இருந்தால் 5 பேருக்குத் தான் கிடைக்கும். 45 பேருக்குக் கிடைக்காது என்பது நம் மனதில் ஊறிப்போய் விட்டது. அந்த அளவுக்குப் பாதுகாப்பற்ற சமூகமாக நம் சமூகம் மாறி விட்டது.
இரண்டாவதாக, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், பல்வேறு சுரண்டல்களுக்கிடையே இரண்டு மாபெரும் பஞ்சங்கள் வந்து நாம் அலைக்கழிக்கப்பட்டோம். ‘தாது வருஷப் பஞ்சம்' என்று அதைச் சொல்வார்கள். லட்சக்கணக்கான மக்கள் அதனால் பாதிக்கப்பட்டார்கள். இதன் விளைவு பாதுகாப்பற்ற உணர்வு. ஒருவரையொருவர் பார்த்ததும் முதல் கேள்வி ‘சாப்டாச்சா?' என்று கேட்கும் ஒரே இனம் இந்திய இனம்தான். இரண்டு வெள்ளையர் சந்தித்துக் கொண்டால் ‘தட்பவெப்பம் நன்றாக இருக்கிறது' என்றுதான் சொல்வார்கள்.
குடிமைப் பண்பாடு என்பது மேலை நாட்டிலும் தொழிற்புரட்சி வந்த பிறகுதான் உருவாயிற்று. ஆனால் இவை நம்மிடம் பரவி ஐம்பது ஆண்டுகள்தான் ஆகின்றன. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அதற்கு குடிமைப் பண்பை மையமாகக் கொண்ட கல்விமுறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
புத்தாண்டு அன்று தெருக்களில் சத்தம் போட்டுக் கொண்டு செல்லும் பையன்கள் எல்லோருமே படித்தவர்கள்தாம். குற்றாலத்திலோ, ஊட்டியிலோ படித்த பயணிகள்தான் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். ஓவென்று சத்தம் போடுவார்கள். ஒயின் பாட்டில்களைத் தூக்கிப் பாறைமீது எறிவார்கள். பெண்களைக் கிண்டல் செய்வார்கள். ஜட்டியோடு அலைவார்கள். சினிமா தியேட்டர் க்யூவில் பாருங்கள். ஒரு கான்ஸ்டபிள் இருந்தால் போதும். 5000 பேர் இருந்தாலும் வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். அந்தக் கான்ஸ்டபிள் மட்டும் லத்தியோடு அங்கே இல்லை என்றால் அத்தனை பேரும் முண்டியடிப்பார்கள். நம்மைக் கட்டுப்படுத்துவதற்கு மேலே ஒருத்தன் இருக்க வேண்டும் என்ற நிலைமையில்தான் நாம் இருக்கிறோம். இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் மேலே வருவதற்கு அதற்கான கல்வி தேவை. அடிப்படைப் பொருளாதார வளர்ச்சி தேவை.
இன்னுமொரு முக்கியமான விஷயம், இங்கே பெற்றோர்களின் வாழ்க்கை இலட்சியமே பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டு வருவதுதான். இது உலகத்தில் எங்கேயுமே கிடையாது என்றுதான் நினைக்கிறேன். ஒரு வெளிநாட்டவரிடம் போய்க் கேட்டால் அவருக்கென்று வாழ்க்கை நோக்கம் இருக்கும், அவர் செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமே பிள்ளைகளுக்குச் செய்வார். நாம் நல்ல பொருளாதார வளர்ச்சியை அடையும்போது, நம் பிள்ளைகளை நாம் தான் கரையேற்ற வேண்டும் என்ற நிலை இல்லாதாகும் போது இந்தப் பாதுகாப்பற்ற உணர்வு குறையும். அப்போது வலுவான குடிமையுணர்வு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு வரும் என்று நான் நினைக்கிறேன்.
கே: ஸ்டீவன் லீகாக் குறித்துச் சொன்னீர்கள். தமிழிலும் கல்கி, நாடோடி என்று நல்ல நகைச்சுவை எழுத்தாளர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது நகைச்சுவை அருகிப் போய் விட்டது. நகைச்சுவை எழுத அச்சம் இருக்கிறதா அல்லது தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து போய்விட்டதா?
ப: பொதுவாகவே தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு மிகமிகமிகக் குறைவு. இரண்டு மலையாளிகள் சந்தித்தால் ஒருத்தரையொருத்தர் கடவுளைப் பற்றி, ஜாதியைப் பற்றி, மதத்தைப் பற்றி, சாப்பாட்டைப் பற்றி எதைப்பற்றி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். அது வெறும் கிண்டல் என்பதால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.
சமூக முரண்பாடுகளைத் தாண்டிச் செல்வதற்கான அறிவார்ந்த முயற்சிகளை எடுக்கும் போது, தன்னைப் பார்த்தே சிரிக்கும் போது, தன்னைக் கிண்டல் செய்து கொள்ளும் போது நகைச்சுவை உருவாகிறது. இந்த மனநிலை தமிழனிடம் மிகமிகக் குறைவு. தமிழ்நாட்டில் நிறைய விஷயங்களைப் பற்றி சிறிய அளவிலேகூட நகைச்சுவையாகப் பேச முடியாது. இந்த மனநிலையில் இருக்கும் போது நட்பார்ந்த கிண்டலைக் கூட விமர்சனமாகத்தான் புரிந்து கொள்வார்கள். நான் தமாஷாக ஒரு கட்டுரை எழுதியிருந்தால், ‘நீங்கள் அதை விமர்சனம் செய்திருக்கிறீர்களே' என்று கடிதம் வரும். திட்டு வேறு; கிண்டல் வேறு என்பதே பலருக்கு இங்கு புரியவில்லை.
| ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது நாகரிகம் என்றால் என்ன, பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய அறம் என்ன என்று யாருக்கும் தெரியாது. இதை யாரும் நமக்கு சரியாகச் சொல்லிக் கொடுக்கவுமில்லை. | |
கே: தமிழில் இலக்கிய விமர்சனம் எப்படி இருக்கிறது?
ப: பொதுவாக, தமிழில் முழுமூச்சான இலக்கிய விமர்சகர்கள் என்பது வெகு குறைவு. வெங்கட் சாமிநாதன் ஒருவர்தான் இலக்கிய விமர்சகர். மற்றவர்கள் எல்லாம் கலைஞர்கள், இலக்கிய விமர்சனமும் செய்பவர்களாக இருக்கிறார்கள். இலக்கிய விமர்சனத்தில் பல துறைகள், முறைகள் உள்ளன. ஒன்று கல்வித்துறை சார்ந்த இலக்கிய விமர்சனம். ஒரு படைப்பை அடையாளப்படுத்தி, வகைப்படுத்தி, ஓர் அட்டவணைக்குள் கொண்டு வருவது. மற்றொன்று, அழகியல் முறை. இது ஏற்கனவே வந்த முக்கியமான படைப்புகளையும், அதன் அனுபவத்தையும், வடிவத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிற படைப்புகளை மதிப்பிடுவது. சுந்தர ராமசாமி, க.நா. சுப்ரமண்யன், வெங்கட்சாமிநாதன் போன்றோரை அழகியல் விமர்சகர்கள் என்று சொல்லலாம். மூன்றாவது, கோட்பாட்டு விமர்சன முறை. உதாரணமாக, மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் எப்படி இலக்கியத்தை விமர்சிப்பது என்பதை நா. வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் செய்திருக்கிறார்கள். மொழியியலை அடிப்படையாக வைத்து நாகார்ஜுனன், தமிழவன் போன்றோர் செய்திருக்கிறார்கள்.
கே: படைப்பை விடுத்து படைப்பாளியை விமர்சிக்கலாமா?
ப: உண்மையில் விமர்சனம் என்பது படைப்பின்மேல் பல கோணங்களினாலான கூர்ந்த வாசிப்புதான். பல்வேறு அறிவுத்துறைகளோடு அது சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த அறிவுத்துறையிலுள்ள பல்வேறு விதமான உபகரணங்களையும் பயன்படுத்தித்தான் படைப்பின் உண்மையான மதிப்பை அளவிட முடியும். படிக்கும் போது கண்டு கொள்ளாத பல தளங்களை அந்த விமர்சனம் உங்களுக்குத் தருமானால் அது நல்ல விமர்சனம். சொல்லித் தரவில்லை என்றால் அது மோசமான விமர்சனம்.
அதேசமயம் படைப்பாளியை விமர்சனம் செய்யக் கூடாது என்றில்லை. படைப்பையும், படைப்பாளியையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அயன் ராண்ட் என்ற எழுத்தாளர் ஓர் அறிவுமைய வாதத்தை முன்வைத்தார். அறிவாளிகள்தான் இந்த உலகத்தைத் தாங்குகிறார்கள், மற்றவர்கள் முக்கியம் இல்லை என்ற கோட்பாட்டை முன்வைத்தார். கடைசியில் அவர் மனநிலை பிறழ்ந்து, அயல்நாட்டில் இறந்து போனார் என்ற உண்மை இருக்கிறது. இதில், அவர் அயல்நாட்டில் இறந்தார் என்பதை மட்டும் நாம் பார்க்க இயலாது. அவர் என்னவாக ஆனார், எப்படி இறந்தார் என்பதும் முக்கியம். அந்த உண்மையை விட்டுவிட்டு எழுத முடியாது.
எழுத்தாளன் என்பவன் விமர்சனத்துக்கு உட்பட்ட ஒரு தனிமனிதன். அவன் சமுதாயத்தின் முன் எதை வைக்கிறான், எப்படி முன்வைக்கிறான் என்பதைப் பார்க்கவும், விமர்சிக்கவும் சமுதாயத்திற்கு உரிமை இருக்கிறது.
கே: சாதாரணமாக எழுத்தாளர்கள் தாங்கள் வந்த தடத்தை உள்ளது உள்ளபடிச் சொல்வதில்லை. ஆனால் நீங்கள் உங்கள் இணைய தளத்தில் எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள். எப்படிச் சாத்தியமானது?
ப: வணிக ரீதியான எழுத்தாளர், அரசியல் எழுத்தாளர் தம்முடைய வாழ்க்கையை முன்வைக்க அவசியமில்லை. ஆனால் என்னுடைய எழுத்து எனது தேடல்களையும், தவிப்புகளையும், நான் பெற்ற வெற்றிகளையும், தோல்விகளையும் சொல்லக்கூடியது. அதில் என்னுடைய பயங்கள், அச்சங்கள், தேடல்கள், வலிகள் என எல்லாவற்றையும் நான் சொல்கிறேன். என்னுடைய எழுத்துக்களைப் புரிந்து கொள்வதற்கு என்னுடைய வாழ்க்கை முக்கியமானதாகிறது. மற்ற எழுத்தாளர்கள் சொல்லாத ஒரு வரியை நான் சொல்கிறேன் - 'என்னுடைய வாழ்க்கையைப் பார்' என்கிறேன். இங்கு ஏதாவது சமரசங்கள் செய்து கொண்டிருக்கின்றேனா என்று பார்க்கலாம். இந்த வெளிப்படைத் தன்மை எழுத்தாளனுக்கு அபாரமான ஆன்ம வல்லமையைக் கொடுக்கும். அதுதான் அவன் எழுத்தில் உண்மையை உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன்.
கே: அப்படியானால் நீங்கள் ‘பொலிடிகலி கரெக்ட்' ஆக இருக்க முயற்சிப்பதில்லை, என்று சொல்லலாமா?
ப: ‘Political correctness' என்கிற ஒரு விஷயம் 1970க்கு முன்பாகக் கிடையாது, வார்த்தையும் சரி, அந்தக் கருத்துருவும் சரி. அது எப்படி உருவானதென்றால், வியட்நாம் போர் விஷயம் அமெரிக்காவில் வெடித்தபோது அந்தப் போருக்கு எதிராகப் பேசுவது Political correctness ஆக இருந்தது. கொஞ்சம் ‘முற்போக்கு' என்றால் அவர் கண்டிப்பாக வியட்நாம் போருக்கு எதிராக ஏதாவது பேசுவார், பேச வேண்டும் என்ற உணர்வு அமெரிக்காவில் முகிழ்த்திருந்தது. ஆரம்பத்தில் இது பெர்ட்ரண்ட் ரஸல் போன்றோர் ஒன்றிணைந்து நடத்திய முற்போக்கான விஷயமாக இருந்தது. ஒரு ஐந்து வருடம் கடந்து, அந்த விஷயம் வெற்றிகரமாக முடிந்த பிறகு, தன்னை முற்போக்கு என்று காட்டிக்கொள்ள ஆசைப்பட்ட அனைவருமே ஒரே குரலில் வியட்நாம் போரை எதிர்த்துப் பேச ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அதிலிருக்கும் போலித்தனம் சிலருடைய கண்களுக்குப் பட்டது. எல்லோருமே ஒட்டுமொத்தமாக ‘இதுதான் முற்போக்கு, இதுதான் சரி, இப்படித்தான் இருக்க வேண்டும். வேறு மாதிரி சிந்தனை இருக்கவே கூடாது, வேறு மாதிரி யார் சிந்தித்தாலும் அதெல்லாம் பிற்போக்கு' என்ற கண்மூடித்தனமான எண்ணம் வலுப்பட்டபோது, அதற்கு எதிராக எழுந்த குரல்தான் ‘பொலிடிகலி கரெக்ட்' என்ற கருத்தும் சிந்தனையும்.
அரசாங்கம் அல்லது ஆதிக்கம் ஒரு கருத்தை உருவாக்குகிறது. நீண்டகால மரபியலில் வந்த அந்த ஆதிக்கக் கருத்தியல் இதுதான் சரி என்று சொல்லும்போது, அதற்கு எதிராக முன்னணி அறிவுஜீவிகள் சில கருத்துக்களை உருவாக்கினார்கள். அது மற்றதுக்கு எதிரானது. இதுவும் வந்து ஒருவகையான அதிகார மார்க்கம். அதை ஒப்புக் கொண்டால்தான் நீ முற்போக்கு. இரண்டில் ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். இரண்டும் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. இதுதான் சரி, இதுதான் முற்போக்கு என்று ஒரு தரப்பு எடுக்கப்பட்டு, அது மிக வலுவாகப் பிரசாரம் செய்யப்பட்டு, எல்லா மீடியாவிலும் அதைத் தவிர வேறு ஏதும் சொல்லப்படாத நிலையில், ஒரு வகையில் சமூகம் அந்தச் சிந்தனையில் மிகப்பெரிய அளவில் மயங்கிப் போய் விடுகிறது.
இந்த முற்போக்கு என்பதற்குள்ளே இருக்கும் சிக்கல்களையோ, ஓட்டைகளையோ எவருமே சொல்ல முடியாமல் போய்விடுகிறது. ஒரு தேர்ந்த சிந்தனையாளன் ஆதிக்கக் கருத்துகளுக்கு எந்த அளவிற்கு எதிராக இருப்பானோ, அதே அளவுக்கு அதற்கு எதிரான political correctness கொண்ட விஷயங்களுக்கும் கொஞ்சம் எதிராகத்தான் இருப்பான்.
இந்த நவீனத்துவம், சார்த்ர், காம்யூ யுகத்தில் political correctness ஒரு பெரிய ஹைப் (hype) ஆனது. இவர்கள் எல்லோருமே politically correct தரப்பை எடுத்தவர்கள் தாம். உலகின் எந்த இடத்தில் புரட்சி நடந்தாலும் அதற்கு உடனடியாக சார்த்ர் தன் ஆதரவைத் தெரிவித்தார். அந்தப் புரட்சி சரியா, தவறா என்றெல்லாம் யோசிக்க மாட்டார். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில்தான் அவர், பல புரட்சிகள் உண்மையில் புரட்சியே கிடையாது, அவை ஏற்கனவே இருந்த அமைப்புகளைவிட மிகப் பிற்போக்கான புரட்சிகள் என்று அறிந்து கொண்டார். குறிப்பாக சோவியத் ரஷ்யாவில் பிரஷ்னேவ், குருஷ்சேவ் ஆகியோரின் வருகைக்குப் பிறகுதான் பல விஷயங்கள் அவர் மண்டைக்கு உறைத்தன. அதன் பிறகுதான் உண்மையில் politically correct என்று சொல்லப்படும் பல விஷயங்கள் கண்மூடித்தனமானவை என்ற முடிவுக்கு வந்தார். உலகம் முழுக்க ‘நீ முற்போக்குச் சிந்தனையாளன் என்றால் இந்த நிலைப்பாட்டைத்தான் எடுக்க வேண்டும்' என்ற எண்ணம் 1950, 60களில் இருந்தது. 70களில் இந்த மாயை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்து பின்நவீனத்துவம் வந்தது.
(இன்னும் வரும்...)
சந்திப்பு, படங்கள்: மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்
பெட்டிச் செய்திகள்:
"வைக்கம் முகமது பஷீர் ஆகணும்”
நான் இரண்டாவது படிக்கும் பொழுது நடந்த விஷயம் இது. வகுப்பில் ஒவ்வொரு மாணவரையும் எதிர்காலத்தில் என்ன ஆக விருப்பம் என்று ஆசிரியர் கேட்டபோது, மற்றவர்கள் டாக்டர், எஞ்சினியர், கலெக்டர் ஆகணும் என்று சொல்லும் பொழுது, நான் எழுந்து "நான் வைக்கம் முகமது பஷீர் ஆகணும்” என்று சொன்னேன். ஆசிரியர் மிகவும் ஆச்சரியப்பட்டு, "இதை யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்டபோது, "என் அம்மா சொல்லிக் கொடுத்தாங்க” என்று சொன்னேன்.
- ஜெயமோகன்
தலித் இலக்கியத்தில் மட்டும்தான் நகைச்சுவை இருக்கிறது
இன்று நகைச்சுவையைப் பார்க்கும் வாய்ப்பு தலித் இலக்கியத்தில் மட்டும்தான் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்குத் தங்களையே கிண்டல் செய்து கொள்வதில் தயக்கம் இல்லை. ராஜ் கௌதமன் நாவலில் ஒருவித மெல்லிய நகைச்சுவை எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். அதுபோன்று சோ. தருமனின் படைப்புகளிலும் இருக்கும். கல்கி, தேவன், கடுகு போன்றவர்கள் எழுதிய மாதிரியான நகைச்சுவையைச் சிறுபத்திரிகைகளில் எழுத முடியாது. சிற்றிதழ்களில் வெளிவரும் நகைச்சுவை எழுத்து ஏதோ ஒருமாதிரி நரம்புகளைத் தொடுவதாகத்தான் இருக்கும். அந்தப் ‘பஞ்ச்'சுக்கான எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். ஆகவே அந்த நகைச்சுவைக்குள் யாரும் போக விரும்புவது கிடையாது. இதுதான் இன்றைய நிலைமை.
- ஜெயமோகன்
ஏழைச் சிறுவர்களின் படிப்பார்வம்
நான் ஒருமுறை தேவகோட்டை அருகே உள்ள ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள பார்பர் ஷாப்பில் சில சிறுவர்கள் காத்திருந்து, நாளிதழின் இணைப்பான சிறுவர் இதழைப் படித்துக் கொண்டிருந்தார்கள். மிகழும் ஏழமையான சூழலில் உள்ளவர்கள். ஆர்வமாகப் படித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு, கொஞ்சம் கூடத் தரமில்லாத, பொறுப்பில்லாத குழந்தை இலக்கியத்தை, அந்தப் பத்திரிகைகளில் பணியாற்றும் இதழாளர்களே எழுதிவிடுகிறார்கள்.
- ஜெயமோகன்
ஜெயமோகனுடன் வாசகர் சந்திப்புகள்
ஊர் நாள் நேரம் இடம் தொடர்புகொள்ள பாஸ்டன் 7/12/09 6 PM Park St/RedLine Sta entrance பாலாஜி bsubra@gmail.com 978.866.3934 அல்பானி 7/17/09 6 PM விஸ்வேஷ் இல்லம் ஓப்லா விஸ்வேஷ் obla.vishvesh@gmail.com நியுயார்க் பகுதி 7/19/09 3 PM பின்னர் அறிவிக்கப்படும் துக்காராம் Thukaram@gmail.com ஃப்ளோரிடா 8/2/09 5 PM விண்ட்சர் பைன்ஸ் சிறில் அலெக்ஸ் cyril.alex@gmail.com 479.200.9900 250 NW 130th அவின்யூ ப்ரோக் பைன்ஸ், FL 33028-2205 மினசோட்டா 8/20/09 6 PM வேணு இல்லம், St Paul வேணுகோபால் venu333@yahoo.com 508.579.2384 வாஷிங்டன் டிசி 7/25/09 6 PM வேல்முருகன் இல்லம் பாலாஜி bsubra@gmail.com 978.866.3934 கலிஃபோர்னியா 08/30/09 2 PM யூனியன் சிட்டி நூலகம் ராஜன் strajan123@gmail.com 510.825.2971 கலிஃபோர்னியா 09/05/09 2 PM மில்பிட்டாஸ் நூலகம் ராஜன் strajan123@gmail.com 510.825.2971
மேற்கண்டவை தவிரப் பிற மாநிலங்களுக்கு ஜெயமோகன் அவர்களை அழைக்க விரும்புபவர்கள் strajan123@gmail.comஎன்ற முகவரியில் அல்லது 510.825.2971 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். நிகழ்ச்சி நிரல்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் ஜெயமோகன் அவர்களின் www.jeyamohan.in இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
- ச. திருமலை ராஜன் |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|
|