|
தென்னாங்கூர்: தமிழகத்தில் ஒரு பண்டரிபுரம் |
|
- அலர்மேல் ரிஷி|மே 2009| |
|
|
|
|
மஹாராஷ்டிரத்தில் உள்ள பண்டரிபுரம் பற்றியும் அங்கு எழுந்தருளியுள்ள பாண்டுரங்கன் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்குச் சென்று பாண்டுரங்கனைத் தரிசித்தும் இருப்பீர்கள். தெற்கேயும் ஒரு பண்டரிபுரமும் பாண்டுரங்கனும் இருப்பது தெரியுமா? காஞ்சீபுரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள தென்னாங்கூர் என்ற தலம்தான் தட்சிண பண்டரிபுரம். அங்கே கோயில் கொண்டிருக்கிறான் அந்தப் பாண்டுரங்கன்.
கோயிலின் தோற்றம்
திருவண்ணாமலை-திருக்கோவிலூர் பாதையில் உள்ளது ஞானானந்த தபோவனம் என்ற இடம். அதைத் தோற்றுவித்தவர் அங்கே வாழ்ந்துவந்த ஞானி ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள். அவரது சொந்த ஊர் எது, பெற்றோர் யாவர் என்ற விவரங்கள் யாருக்கும் தெரியாது. கலியுகத்தில் மக்களைச் சன்மார்க்க நெறியில் அழைத்துச் செல்வதொன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர். ஞானானந்தரைக் குருவாகக் கொண்ட சுவாமி ஹரிதாஸ்கிரி குருபக்திக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர். அவரிடம் ஞான தீட்சை பெற்றவர். ஊர் ஊராகச் சென்று நாமசங்கீர்த்தனம் செய்து வந்த ஹரிதாஸ்கிரி சுவாமிகள் எல்லோராலும் குருஜி என்றே அழைக்கப்படலானார்.
| இரவில் பண்டரிபுரக் கோயில் அர்ச்சகர் கனவில் இறைவன் தோன்றினார். மறுநாள் கோயிலுக்கு வரும் தன் பக்தனிடம் அந்தச் சிறிய பாண்டுரங்க விக்கிரகத்தை ஒப்படைக்குமாறு பணித்தார். | |
அவர் பல நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு மஹாராஷ்டிரத்தில் உள்ள மங்கள்வாடி என்ற கிராமத்தை வந்தடைந்தார். அன்றிரவு அவருடைய கனவில் ஞானானந்தர் தோன்றி மறுநாள் பண்டரிபுரம் செல்லுமாறு பணித்தார். அதே இரவில் பண்டரிபுரக் கோயில் அர்ச்சகர் கனவில் இறைவன் தோன்றினார். குழந்தைப்பேறு வேண்டிப் பண்டரிநாதனை வழிபட்டு அவ்வாறே ஒரு மகவைப்பெற்ற ஒரு தம்பதியர் கோயிலுக்குக் காணிக்கையாக ஒரு சிறிய பாணடுரங்க விக்கிரகத்தைக் கொடுத்திருந்தார்கள். தினமும் அந்த விக்கிரகத்திற்கும் பூஜை நடைபெறும். பண்டரிபுரத்தில் அர்ச்சகர் கனவில் தோன்றிய பாண்டுரங்கன் மறுநாள் கோயிலுக்கு வரும் தன் பக்தனிடம் அந்தச் சிறிய பாண்டுரங்க விக்கிரகத்தை ஒப்படைக்குமாறு பணித்தார். அதேபோல் மறுநாள் அங்கு வந்த குருஜியிடம் இறைவன் ஆணைப்படி விக்கிரகம் கொடுக்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொணட குருஜி விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து ஒரு கோயிலையும் எழுப்பத் தேர்ந்தெடுத்த ஊர்தான் தென்னாங்கூர். கோயில் அமைப்பு
கோயிலின் சிறப்பு அம்சங்களைப் பட்டியல் போட்டால் நீண்டுகொண்டே போகும் அளவுக்குத் தனித்தன்மைகள் நிறைந்த ஓர் அதிசயக் கோயில் இது. சற்றுத் தொலைவிலிருந்தே கோயிலின் மூன்று பக்கக் கோபுரங்களும் நடுவில் கர்ப்பக் கிரகத்தின் மேலுள்ள விமானமும் பளிச்சென்று கண்களில் படுகின்றன. தென்னகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் காணாத நூதன அமைப்புடையது இந்த விமானம் ஏறத்தாழ வடநாட்டிலுள்ள பூரி ஜகந்நாதர் ஆலய விமானத்தை ஒத்த வடிவத்தில் 120 அடி உயரத்தில் கம்பீரமாய்க் காட்சி அளிக்கிறது. காண்போரை வியக்க வைக்கிறது. விமானத்தின் உச்சியில் தங்கக் கலசம் தகதகவென்று மாலைக் கதிரவனின் ஒளிபட்டுப் பிரகாசிக்கின்றது. கலசத்தின் நுனியில் சுதர்சனச் சக்கரம். அதற்குமேல் காவிக்கொடி.
கோயிலின் கிழக்கு வாசல் வழி நுழைந்தால் அங்குள்ள 16 கால் மண்டபம் நம்மை வரவேற்கின்றது. நாமசங்கீர்த்தனம் பாடுவதற்காகப் பக்தர்கள் கூடும் தியானமண்டபம் சலவைக் கல்லால் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. தியானமண்டபத்தை அடுத்துக் காணப்படும் மஹாமண்டபம் ஓர் ஓவியக் கண்காட்சியைப்போல் காணப்படுகின்றது. மண்டபச் சுவர்களில் கண்ணன் அவதாரத்தில் அவன் செய்த பாலலீலைகள் ஓவியங்களாக கண்ணாடியிழை வேலைப்பாடுகளால் (fibreglass paintings) செய்யப்பட்டு நெஞ்சை அள்ளுகின்றன. இவற்றுக்கும் மேலாக விதானத்தில் காணப்படும் ராசலீலை ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன. |
|
மஹாமண்டபத்தில்தான் கோவிந்தராஜப் பெருமாளுக்கு நித்ய உத்சவம் பெயருக்கேற்ப (சனிக்கிழமை நீங்கலாக) தினந்தோறும் நடைபெறுகிறது. இந்த உத்சவம் வைதீக சம்பிரதாயப்படி நடைபெறுவதோடு அஷ்டபதி முதலான நாம சங்கீர்த்தனங்களோடு இணைந்து நடைபெறுவது இதன் சிறப்பம்சம். மஹாமண்டபத்தைத் தொடர்ந்து நல்ல வெளிச்சமும் காற்றோட்டமுமான பெரிய அகலமான நுழைவாயிலோடு அர்த்தமண்டபம் நம்மை வரவேற்கின்றது. மண்டபச் சுவர் முழுவதிலும் திருமாலின் பல்வேறு கோலங்கள் கண்ணாடியிழை வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்களாகத் தீட்டப் பட்டுள்ளன. இம்மண்டபத்தில் இறைவனை மிக அருகில் நின்று வழிபடமுடிகிறது. கர்ப்பக்கிரகத்தின் வெள்ளியினாலான வாயில் கதவுகளில் தெய்வங்கள் பலவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டு தகதகவென்று ஜொலிக்கின்றன. இவையும் கண்ணாடியிழை வேலைப்பாடுகளே. மேலே விதானத்தில் திருமாலின் தசாவதாரக் காட்சிகள் கண்கவர் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தில்தான் ரகுமாயி சமேத பாண்டுரங்கன் இரண்டு செங்கற்களின்மீது நின்றுகொண்டு இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு காட்சியளிக்கிறான். இங்குதான் பண்டரிபுரத்தில் குருஜி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறிய பண்டரிநாதர் சிலையும் வைக்கப் பட்டிருக்கிறது. வலப்புறத்தில் ருக்மிணி சத்யபாமா சமேத கோவிந்தராஜப் பெருமாளும் சக்கரத்தாழ்வாரும் வீற்றிருக்கின்றனர்.
| ஞானானந்தகிரி சுவாமிகள் நினைவாக அமைந்த ஸ்ரீமடம், உலகிலேயே மஹாஷோடஸாக்ஷரி சந்நிதி அமைந்த ஒரே இடம் என்ற பெருமையைப் பெற்றது. துர்கா ஸரஸ்வதி லக்ஷ்மி என மூவரும் ஒன்றாய் இணந்து காட்சி அளிக்கும் தெய்வம் | |
பெரும்பாலான கோயில்களில் விசேஷ நாட்களில் மட்டுமே சுவாமிக்குச் சிறப்பலங்காரம் செய்வார்கள். இங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பலங்காரம். வியாழனன்று சிறப்பு அபிஷேகமும் திருத்துழாய் மாலையுடன் எளிவந்த தோற்றத்தில் நிஜபாத தரிசனமும். வெள்ளிக்கிழமை பாண்டுரங்கனுக்கு வெள்ளிக்கவசம், சனிக்கிழமை திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரமும் ரகுமாயிக்கு அலர்மேல்மங்கை அலங்காரமும். ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநில வழக்கப்படி தலைப்பாகை, இடையில் கத்தி, காலில் பாதுகை. விழா நாட்களில் அதற்கான அலங்காரம். உதாரணத்திற்கு கோகுலாஷ்டமியன்று வெண்ணைத் தாழியுடன் ராஜகோபாலன் அலங்காரம். பெற்றோர் தங்கள் குழந்தைகளை விதவிதமாய் அலங்கரித்து ஆனந்தப்படுவதுபோல் இங்கு ஆண்டவனுக்கும் விதவிதமான அலங்காரங்கள் செய்து பார்த்து களிக்கின்றார்கள்.
ஞானானந்தகிரி சுவாமிகள் நினைவாக அமைந்த ஸ்ரீமடம், உலகிலேயே மஹாஷோடஸாக்ஷரி சந்நிதி அமைந்த ஒரே இடம் என்ற பெருமையைப் பெற்றது. துர்கா ஸரஸ்வதி லக்ஷ்மி என மூவரும் ஒன்றாய் இணந்து காட்சி அளிக்கும் தெய்வம். பிரம்மா விஷ்ணு ருத்திரன் ஈஸ்வரன் ஆகிய நால்வரைக் கட்டில் கால்களாகவும் ஸதாசிவனைக் கட்டில் பலகையாகவும் கொண்டு அதன்மீது. சொர்ணவிக்ரகமாக வீற்றிருக்கின்றாள்.
கலை உணர்வு உடையவர்கள் அங்குள்ள சித்திரங்களையும், கண்ணாடியிழை வேலைப்படுகளையும் மற்றும் சிற்பங்களையும் கண்டு களிக்கச் செல்லலாம். பக்தர்கள் நாமசங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ளும் பொருட்டுச் செல்லலாம். ஆக, என்றாவதொரு நாள் கண்டிப்பாகத் தென்னாங்கூர் சென்று அந்த அழகையும், தனித்தன்மை பல கொண்ட கோயிலையும் எல்லோரும் கண்டு மகிழவேண்டும்.
டாக்டர். அலர்மேலு ரிஷி |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|