Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
டாக்டர் வெங்கடா பாலநேத்திரம், விஜி பாலநேத்திரம்
தென்கச்சி கோ. சுவாமிநாதன்
- அரவிந்த் சுவாமிநாதன்|மே 2009||(1 Comment)
Share:
Click Here Enlarge
நமது வேண்டுகோளுக்கிணங்கித் தென்றல் வாசகர்களுக்கென்று 'இன்று ஒரு தகவல்' ஒன்றை வழங்கியுள்ளார் தென்கச்சியார். அதைக் கேட்க:தென்றல் வாசகர்களுக்காக ஒரு குட்டிக்கதையை தென்கச்சியாரின் குரலிலேயே கேட்க

Flash Player is required. Click here to download flash player


ஒரு கிராமத்து டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு உலக விஷயங்களை அவசரமில்லாமல் பேசுவது போன்ற பரிச்சயமான குரல்; ஆடம்பரமில்லாத மொழி; எளிய கதைகள்; புரிவதற்காகவே பேசப்படும் தத்துவங்கள் - எல்லாமே வாழ்க்கையில் பயன்படுத்தத் தக்கவை - இதுதான் ‘இன்று ஒரு தகவல்'. இந்தக் குரலைத் தமிழகத்தின் பள்ளிச் சிறுவன் முதல் பாட்டி வரை, திரைப்படத் தயாரிப்பாளர் முதல் கல்லுடைக்கும் தொழிலாளி வரை அடையாளம் காண்பார்கள். தன் வீட்டுப் பெரியவர் போல அன்போடு நினைப்பார்கள். மிடுக்கான குரலும் அடுக்கு மொழியும் பவனி வந்த காலத்தில் அன்றாடப் பேச்சை ரசிக்கத் தக்கதாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. அவர்தான் தென்கச்சி கோ. சுவாமிநாதன். தான் சிரிக்காமல் மற்றவர்களைச் சிரிக்க வைப்பதில் சமர்த்தர். தமிழக அரசின் 'கலைமாமணி', காஞ்சி மடத்தின் 'பல்கலை மாமணி' மற்றும் ‘நடமாடும் தகவல் களஞ்சியம்', ஊடகத்தமிழுக்காக பாரதியார் பல்கலைக் கழகத்தின் ‘மகாகவி பாரதி விருது', ‘பாரதிதாசன் விருது' என்று எண்ணற்ற விருதுகள் பெற்றிருக்கும் தென்கச்சியாரை ஒரு காலை வேளையில் அவரது இல்லத்தில் தென்றலுக்காகச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து....

கே: தென்கச்சி சுவாமிநாதன் என்ற பெயர் வந்தது எப்படி?

ப: தென் காஞ்சிபுரம்ங்கறது எங்க ஊர் பேரு. இப்போ அரியலூர் மாவட்டத்துல இருக்கு. கொள்ளிடக்கரை ஓரத்துல ஒரு சின்ன கிராமம் அது. காஞ்சிங்கறது கச்சின்னு ஆகும். கச்சி ஏகம்பனேன்னு சொல்றோம் இல்லையா? காஞ்சிபுரத்துல பல்லவர்கள் இருந்து ஆட்சி பண்ணிட்டிருந்தப்போ அங்கே படை வீரர்களா இருந்தவங்க கொஞ்ச பேரு, கொள்ளிடக் கரை பக்கமா வந்து ஒரு குடியிருப்பை ஏற்படுத்தினாங்க. காஞ்சிபுரத்துலேர்ந்து வந்ததுனால தென் காஞ்சிபுரம்னு அதுக்குப் பேர் வச்சு அங்கே வாழ்ந்ததா வரலாறு. அதுக்கு அடையாளமா இப்ப எங்க ஊர்ல, அவங்க உபயோகப்படுத்தின கத்தி, கேடயம்லாம் இருக்கு. வெள்ளைக்காரன் காலத்துலயே நிறைய அதை மியூசியத்துக்கு வாங்கிட்டு வந்துட்டாங்க. அதுபோக மிச்சம் சிலதை கொஞ்ச பேரு வச்சிருக்காங்க, அதை ஆயுத பூஜை அன்னிக்கி எடுத்து சுத்தமா விளக்கி வச்சி, தொட்டுக் கும்பிடச் சொல்வாங்க. நான்லாம் தொட்டுக் கும்பிட்டிருக்கேன். சண்டையெல்லாம் போட்டதில்ல. தென் காஞ்சிபுரம் தென்கச்சி ஆனது இப்படித்தான்.

சுவாமிமலை எங்க ஊருக்குப் பக்கத்துல இருந்ததுனால பிறக்குற ஆம்பளைப் பிள்ளைங்களுக்கெல்லாம் சுவாமிநாதன்னு தான் பேர் வப்பாங்க. அதுமாதிரி எங்க பள்ளிக் கூடத்துல என் வகுப்பில நிறைய சுவாமிநாதன் இருந்தாங்க. ஒரே இனிஷயல்ல கூட நிறையப் பேரு இருந்தாங்க. அதுனால வாத்தியாரு என்ன பண்ணாருன்னா ஒரு அடையாளத்துக்காக அவங்கவங்க ஊர் பேரையும் சேத்தே கூப்பிட ஆரம்பிச்சார். நீ ஆடுதுறை சுவாமிநாதன், நீ கஞ்சனூர் சுவாமிநாதன், நீ தென்கச்சி சுவாமிநாதன் அப்படீன்னு. அப்படித்தான் நான் தென்கச்சி சுவாமிநாதன் ஆனேன். அது நானா வச்சிக்கிட்ட பேரு இல்ல. வாத்தியார் வச்ச பேரு.

கே: உங்க இளமைப்பருவ நினைவுகள் என்ன?

ப: விவசாயக் குடும்பம்தான். சின்ன வயசுலேர்ந்து நான் பார்த்தது விவசாய வேலைகள் தான். படிச்சா விவசாயத்துல ஈடுபட மாட்டேன்னு சொல்லி மேல படிக்கவக்க வேண்டாங்கற முடிவுக்கு வந்துட்டாங்க. சொந்த பந்தங்க எல்லாம், இந்தக் காலத்துல மேல படிக்காம இருந்தா நல்லா இருக்காதுன்னு சொல்லி, பிடிவாதமா எடுத்துச் சொன்னாங்க. அதுக்கப்புறம் எங்க அப்பா, சரி அப்படியே படிச்சாலும் விவசாயப் படிப்பப் படிக்கட்டும் அப்படின்னு, என்னை கோயமுத்தூர் விவசாயக் கல்லூரில சேர்த்து விட்டாங்க. பி.எஸ்ஸி. அக்ரிகல்சர் அங்க படிச்சேன்.

கே: படிச்சது விவசாயம், அதை வச்சு என்ன செஞ்சீங்க?

ப: விவசாயப் படிப்பை முடிச்சிட்டு ஒரு மூணு வருஷம் விவசாய வளர்ச்சி அதிகாரியா வேலை பார்த்தேன். பாளையங்கோட்டைல ஒரு வருஷம். அப்புறம் பாரதியார் பொண்ணு கட்டுன கடையத்துல ஒரு வருஷம். அப்புறம் பேராவூரணில ஒரு வருஷம். அப்போ எங்க வீட்லேர்ந்து வந்து, வேலைய ராஜினாமாப் பண்ணச் சொல்லி வீட்டுக்கே அழைச்சிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்படிப் போயி ஒரு பத்து, பதினஞ்சி வருஷம் ஊர்லயே சொந்த விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தேன். டிராக்டர் எல்லாம் நல்லா ஓட்டுவேன். அப்புறம் பஞ்சாயத்து போர்டு எலக்‌ஷன்ல நின்னு பிரசிடெண்டா வந்தேன். 1970லேர்ந்து 77 வரைக்கும் தென்கச்சி ஊராட்சி மன்றத் தலைவரா இருந்தேன்.

ஆன்மீக விஷயங்களை அதிகம் சொல்லவும், கேக்குறவங்க ரொம்பப் பேரு மனசுல நானும் ஒரு மகான்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களாவே அப்படி ஒரு கற்பனை பண்ணிக்கிட்டாங்க.சில பேரு என்னை யாரோ ஒரு பெரிய சாமியார்னு நினைச்சிக்கிட்டு ஆசிர்வாதம் வாங்க வந்திடுவாங்க.
கே: வானொலியில நுழைஞ்சது எப்படி?

ப: ஒரு சமயம் திருநெல்வேலி வானொலில விவசாய ஒலிபரப்புக்கு ஆள் தேவைன்னு கேட்டிருந்தாங்க. விவசாயம் படிச்சவரா, விவசாயத்துல அனுபவம் உள்ளவரா இருக்கணும், வயசு 35க்குள்ள இருக்கணும் அப்படின்னெல்லாம் கேட்டிருந்தாங்க. எனக்கு அப்போ முப்பத்து நாலரை வயசுதான் நடந்துக்கிட்டிருந்துச்சி. இன்னும் ஆறுமாசம் இருக்கே அப்படின்னுட்டு நான் உடனே ரேடியோக்கு எழுதிப் போட்டேன். திருநெல்வேலிக்கு இண்டர்வியூக்குக் கூப்பிட்டாங்க. எந்த சிபாரிசும் இல்லாம, யாரும் தெரிஞ்சவங்களும் இல்லாம உடனே வேலை கிடைச்சிடுச்சி. ஏன்னா, அப்போ பி.எஸ்ஸி அக்ரி படிச்சிட்டு வேலையில்லாம யாரும் இல்ல. அதுனால போட்டிக்கு யாரும் வல்ல. அப்படி வந்தவுங்களுக்கும் அந்த வேலை பிடிக்கல. அதுனால சுலபமா எனக்கு அந்த வேலை கிடைச்சிடுச்சி. 'ஸ்க்ரிப்ட் ரைட்டர்' வேலை.

அரசு உத்யோகத்துக்குப் போனா ஆபிஸர், அக்ரிகல்சர் ஆபிஸர்ங்கறது பெரிசாத் தெரியும். இதுல ஸ்கிர்ப்ட் ரைட்டர்னு எழுத்து வேலைதான். அதுனால ஆபிஸர்ங்கற பெரிய தோரணையிலேர்ந்து எழுத்தாளர்ங்குற தோரணைக்கு வர யாருக்கும் விருப்பம் இல்ல. அதுனால 1977ல திருநெல்வேலி வானொலி நிலைய விவசாய ஒலிபரப்புப் பிரிவுல வேலைக்குச் சேர்ந்தேன்.

ஏழு வருஷத்துப் பிறகு சென்னை வானொலில ஒரு இடம் காலியாச்சு. எழுத்தாளர் அகிலன் தமிழ் இலக்கியத் துறைல தயாரிப்பாளரா இருந்தார். அவர் ரிடயர் ஆனதுனால அந்த இடம் காலியாச்சு. அப்போ என்னை அங்கே போக விருப்பம் இருக்கான்னு கேட்டாங்க. நான் ஆமான்னு சொன்னேன். அதுனால திருநெல்வேலிலேர்ந்து சென்னை வானொலி தமிழ்ப்பிரிவுக்கு என்னை மாத்தினாங்க. எடிட்டர் போஸ்டுக்கு இங்க வந்தேன். அதுக்குப்பிறகு அசிஸ்டன்ட் ஸ்டேஷன் டைரக்டர்னு ஒரு பதவி உயர்வு கிடைச்சுது. சென்னை வானொலி நிலையத்தின் உதவி இயக்குனரா 2002ல் ரிடயர் ஆனேன்.

கே: இன்று ஒரு தகவலுக்கான செய்திகளை நீங்க எங்கேருந்து திரட்டினீங்க? எப்படித் தொய்வில்லாம அதை நடத்த முடிஞ்சிச்சு?

ப: ஆரம்பத்துல நானே புத்தகங்கள் எல்லாம் படிச்சு, நூல் நிலையங்களுக்கெல்லாம் போய் தகவல் சேகரிச்சேன். ஆனா நிகழ்ச்சி கொஞ்சம் பாப்புலர் ஆன உடனே அதக் கேக்கறவங்க எல்லாம் தகவல்களை அனுப்ப ஆரம்பிச்சாங்க. பிரபலமானவங்க, வயசான பெரியவங்க, ஓய்வு பெற்ற அதிகாரிங்க, தமிழறிஞர்கள்னு எல்லோரும் அவங்க அவங்களுக்குத் தெரிஞ்ச தகவல்களை அனுப்ப ஆரம்பிச்சாங்க. உதாரணத்துக்கு ஏவி.எம். சரவணன் நிறைய தகவல்கள் அனுப்பி வச்சார். அவருக்குப் பிடிச்ச நிகழ்ச்சின்னு இன்று ஒரு தகவல் பத்தி தினத்தந்தில சொன்னதால அது இன்னும் பாப்புலர் ஆச்சு. அது போல நிறைய பிரபலங்கள் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ஆர்.எம். வீரப்பன் அவரோட புத்தகங்களெல்லாம் அனுப்பி வச்சார். நடிகர் வி. வி.கோபாலகிருஷ்ணன் அவர் வீட்ல இருந்த பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகங்களை எல்லாம் எங்க வீட்ல வந்து கொடுத்துட்டுப் போயிட்டார். இப்படி நிறைய பேர் தகவல்களை அனுப்ப ஆரம்பிச்சாங்க. பார்வையில்லாதவங்க, பார்வையற்றோர் சங்கம் போன்ற அமைப்புகள் எல்லாம் நிகழ்ச்சியப் பாராட்டினாங்க. எங்களால நிறையப் புத்தகங்களைப் படிக்க முடியலை. ஆனா உங்க நிகழ்ச்சி மூலமா நிறைய விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சிக்க முடியுது. தொடர்ந்து சொல்லிட்டு வாங்க. இதை நிறுத்திடாதீங்கன்னு பாராட்டினாங்க.

கே: வானொலில வேலை பார்க்கும் போது நடந்த சுவையான சம்பவங்கள் ஏதாவது சொல்லுங்கள்.

ப: இன்று ஒரு தகவல் ஆரம்பிச்சதிலேர்ந்து கடைசி வரைக்கும் அதை யார் சொல்றாங்கன்னு பேர் சொன்னதே இல்லை. 14 வருஷமும் அப்படித்தான். யாராக இருக்கும்னு அதுகூட ஒருவிதத்துல பாப்புலாரிட்டிக்குக் காரணமா இருந்திச்சி. அப்போ நிறையப் பேரு தேடி வர ஆரம்பிச்சாங்க. கடிதங்களும் வர ஆரம்பிச்சது. ஆன்மீக விஷயங்களை அதிகம் சொல்லவும், கேக்குறவங்க ரொம்பப் பேரு மனசுல நானும் ஒரு மகான்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களாவே அப்படி ஒரு கற்பனை பண்ணிக்கிட்டாங்க.

சில பேரு என்னை யாரோ ஒரு பெரிய சாமியார்னு நினைச்சிக்கிட்டு ஆசிர்வாதம் வாங்க வந்திடுவாங்க. ஒரு தடவை வேலூர் பக்கத்துல இருந்து ஒரு அம்மா அவங்க பொண்ண அழைச்சிக்கிட்டு வந்திருந்தாங்க. அப்போ என் நண்பரும் நானும் காசினோல ஒரு சினிமாவுக்கு அவரசமா கிளம்பிட்டிருந்தோம். அந்த அம்மா எங்கிட்ட இன்று ஒரு தகவல் சொல்றது யார் சார்னாங்க. நாந்தம்மான்னேன். உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்திருக்கோம்னாங்க. அம்மா, நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க. நான் பெரிய மகான்லாம் கிடையாது. அவங்க சொன்னதை ரேடியோல தொகுத்துச் சொல்றேன். அவ்ளோதான். இப்ப பாருங்க சினிமாக்குக் கிளம்பிட்டிருக்கோம் அப்படின்னு உண்மையச் சொன்னேன். ஆனா அந்த அம்மா ஒத்துக்கலை. உங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியாது சார். எங்களுக்குத்தான் தெரியும்னு பிடிவாதமாச் சொல்லிக்கிட்டிருந்தாங்க. சரிம்மா, இப்போ நான் என்ன பண்ணனும் கேட்டேன். இந்தப் பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு உங்க கையால விபூதி பூசி விடுங்கன்னாங்க. இத பாருங்கம்மா நானே விபூதி பூசிக்கல. இங்க விபூதியெல்லாம் வேற கிடைக்காதுன்னேன். நானே கையோட கொண்டு வந்திருக்கேன்னாங்க அந்த அம்மா. அந்தப் பொண்ணு பயபக்தியா கால்ல விழுந்திச்சி. சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு சொல்லி விபூதி பூசி விட்டேன்.

ஒரு பதினஞ்சிநாள் போயிருக்கும். திடீர்னு ஒருநா அந்த அம்மா என்கிட்ட வந்து, ‘சார் உங்க ஆசிர்வாதத்துனால கல்யாணம் நிச்சயமாயிருச்சி அப்படின்னாங்க சந்தோஷமா. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாயிடுச்சி. ஒருவேளை நமக்கு ஏதோ பெரிய அருள் எல்லாம் இருக்கோன்னு நினைக்க ஆரம்பிச்சேன். நிலையத்துக்கு வந்திருந்த டாக்டர் மாத்ருபூதத்தை ஒருநா யதேச்சையாச் சந்திச்சப்போ இதைப் பத்திக் கேட்டேன். அவரு, 'கல்யாணம் ஆகுற வரைக்கும் ஏதாவது சந்தேகம் இருந்தா நீ தீத்துவை. அதுக்கப்புறம் ஏதாவது இருந்தா எங்கிட்ட அனுப்பி வை அப்படின்னார்' வேடிக்கையா. இல்ல சார் இது, நிஜமாவே நடந்தது, இது எப்படி சாத்தியம்னு கேட்டேன். அவர் சொன்னார், இதுக்கு சைக்காலஜில டாமினோ எஃபெக்ட்னு பேரு. பத்து பொண்ணுங்களுக்கு விபூதி பூசி விட்டா, ஏழெட்டு பொண்ணுங்களுக்கு நீ பூசினாலும், பூசாட்டாலும் கல்யாணம் ஆகிடும். எல்லாம் எண்ணங்களோட ஆற்றல் தான் காரணம்னார். கல்யாண வயசுல உள்ள பொண்ணத் தானே கூட்டிக்கிட்டு வர்றாங்க. குழந்தையக் கூட்டிக்கிட்டு வரலயே! ஏற்கனவே கல்யாண முயற்சிகள்ல அவங்க இருப்பாங்க. நம்மகிட்ட ஒரு ஆறுதலுக்காக வராங்க. விபூதி பூசி விட்டதும் அந்த டாமினோ எஃபெக்ட்னால கல்யாணம் ஆயிடும். இதையெல்லாம் உண்மைனு நினைச்சிக்கிட்டு நீ அருள்வாக்கெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிடாத அப்படின்னாரு அவர் வேடிக்கையா.
Click Here Enlargeகே: வானொலிக்காக நீங்க பலரை நேர்காணல் செஞ்சிருக்கீங்க. அந்த அனுபவம் குறிச்சுச் சொல்லுங்களேன்!

ப: முதல் நேர்காணல்னா சினிமா நடிகர் டணால் தங்கவேலுவை நேர்காணல் செஞ்சதுதான். நான் அப்போதான் திருநெல்வேலி வானொலி நிலையத்துல வேலையில சேர்ந்திருந்தேன். தங்கவேலுவும், அவர் மனைவி எம். சரோஜாவும் திருநெல்வேலில நாடகம் நடத்தறதுக்காக வந்திருந்தாங்க. நான் வேலைல சேர்ந்த புதுசு. எங்க டைரக்டர் கிட்ட, சார் நான் புதுசு. நேர்காணல் செய்த அனுபவம்லாம் ஏதும் இல்ல அப்படின்னேன். அப்புறம் எப்படி நீ எல்லாத்தையும் கத்துக்கறது. நீயே போய் பண்ணிட்டு வான்னார். நானும் கொஞ்சம் பயந்துகிட்டேதான் போனேன். தங்கவேலு, 'பயப்படாம கேள்வி கேளுப்பா பதில் சொல்றேன்'னார். நான் கொஞ்சம் தைரியத்தை வரவழச்சிக்கிட்டு முதல் தடவை நீங்க எப்ப சார் மேடை ஏறினீங்க, அந்த அனுபவத்தைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்னேன்.

அதுக்கு அவர், “அத ஏன் கேக்கறீங்க தம்பி, எனக்கு அனுமார் வேஷத்தைப் போட்டுட்டு மேடையில ஏத்திட்டாங்க. பேசறதுக்கு வசனமே கொடுக்கலே. என்னை ஸ்டூல்ல ஒரு மூலையில பேசாம உட்கார வச்சிட்டாங்க. இதுதான் நான் முதல்ல போட்ட வேஷம்” அப்படின்னார். “ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருப்பீங்க போல சார்” அப்படின்னேன். “அதுல என்ன தம்பி கஷ்டம். வசனமே இல்ல. சும்மா தானே உட்கார்ந்திட்டிருக்கணும்” அப்படின்னார். “அனுமார் வேஷம் போட்டுட்டு சும்மா உட்கார்ந்திட்டிருக்கறது கஷ்டம் இல்லையா?” அப்படின்னேன். உடனே ஹாஹான்னு சிரிச்சார். “பரவாயில்லயே என்னமாதிரியே பேசுறியே நீ” அப்படின்னார். அப்புறம் எனக்கும் நல்ல தைரியம் வந்து, நிறைய கேள்விகளக் கேட்டு அந்த நேர்காணலை முடிச்சேன். என்ன மாதிரியே பேசுறியே நீன்னு அன்னிக்கு அவர் சொன்னார். பிற்காலத்துல அவர் கடைசியா நடிச்ச படம் ஒண்ணுக்கு அவர் மறைவுக்குப் பின்னாடி நான் டப்பிங் பேச வேண்டி வந்துது.

கே: உங்க திரை உலக அனுபவத்தைப் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்களேன்!

நல்ல செய்திகளைப் படிச்சிட்டு ஜனங்களுக்குச் சொல்றதுதான் என்னோட வேலை. அது வந்து ஒரு பிரதிபலிப்பு மாதிரித்தான். நான் வந்து திருக்குறளை உங்ககிட்ட கொடுக்குறேன். திருக்குறளைக் கொடுக்குறது என் வேலை. உடனே என்னையே நீங்க திருவள்ளுவரா நினைச்சிரக் கூடாது.
ப: பெரியமருதுன்னு ஒரு படத்துல அவர் நடிச்சிருந்தார். ஆனா அந்தப் படம் டப்பிங் பேசறதுக்குள்ள அவர் காலமாயிட்டார். அப்புறம் நடிகர் வி. கோபாலகிருஷ்ணன் தான் என்னை அந்தப் படத்துக்கு டப்பிங் பேசற்துக்காக ஏவி.எம்முக்கு அழைச்சிக்கிட்டுப் போனார். எனக்கு ஸ்டூடியோல பேசித்தான் பழக்கம். சினிமா அனுபவம்லாம் ஏதும் கிடையாதுன்னேன். அவர், நா சொல்லித்தரேன் வான்னு அழைச்சிக்கிட்டுப் போயி, எப்படி டப்பிங் பேசறதுன்லாம் சொல்லிக் கொடுத்து, தங்கவேலு வாயசைக்கும் போதெல்லாம் வாய் அசைச்சு, அவர் பேசின மாறியே பேசி அந்த டப்பிங்க முடிச்சோம். என்ன மாதிரியே பேசுறியே நீன்னு 15, 20 வருஷத்துக்கு முன்னாடி அவர் சொன்னார். பின்னாடி அவர் சொன்னமாதிரி அவருக்காக அவர் மாதிரியே பேச வேண்டிய சூழ்நிலை வந்திட்டதேன்னு அப்போ நான் நினைச்சுப் பாத்தேன்.

அதுமாதிரி எனக்கு நடிப்பு அனுபவம்லாம் ஏதும் இல்ல. எனக்கு எழுத்து தான் வருமே தவிர நடிப்பு வராது. ரேடியோ நாடகத்துல கூட திடீர்னு யாராவது வரலைன்னா அவங்களுக்காக நடிச்சதுண்டு. சினிமா நடிப்பைப் பத்தி எனக்குச் சுத்தமா ஒண்ணும் தெரியாது. அப்போதான் தங்கர் பச்சான் ஒரு படத்துல நடிக்கக் கூப்பிட்டார். அவர்ட்ட சொன்னேன், 'எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது. முகத்துல எந்த உணர்ச்சியும் காட்டத்தெரியாது. சிரிக்கவும் தெரியாது. அழவும் தெரியாது' அப்படின்னு. அவர், 'அந்த மாதிரி உணர்ச்சியே காட்டத் தேவையில்லாத கேரக்டருக்குத்தான் உங்களைக் கூப்பிடறோம்' அப்படின்னார். அப்படி என்ன வேஷம்னு பார்த்தா அது நீதிபதி வேஷம். 'எனக்கு வசனம்லாம் வேற மனப்பாடம் பண்ணி பேசத் தெரியாது. ரேடியோ ஸ்டேஷன்ல பாத்துப் பாத்து படிச்சுத்தான் பழக்கம். அப்புறம் எதிர்த்த மாறி ஆளு இருந்தா எனக்கு பேச்சு வராது. ஸ்டூடியோவுல யாரும் இல்லாமத்தான் பேசிப் பழக்கம்'னேன். 'அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்ல. நான் ஆட்கள் யாரும் உங்க முன்னாடி இல்லாம பாத்துக்கறேன். நீங்க நாங்க சொல்றபடி மட்டும் செய்யுங்க போதும். எல்லாத்தையும் நாங்க பாத்துக்கறோம்'னாரு. சரின்னு போனேன். பார்த்தா அது அந்தப் படத்தோட கடைசி சீன். கோர்ட் சீன். சுத்தி ஒரே கூட்டம். எப்படியோ சமாளிச்சிக்கிட்டு ரேடியோ அனுபவத்துல பேசினேன். அவங்களும் துண்டு துண்டா எடுத்து எடிட் பண்ணி, அது படத்துல நல்லாவே வந்திருந்ததா எல்லாரும் சொன்னாங்க.

அப்புறம் இப்போ இலக்கணம்னு ஒரு படம். வெளிநாடுகள்ல எல்லாம் ஓடிக்கிட்டிருக்கு. இங்க இன்னும் ரிலீஸ் ஆகலன்னு நினைக்குறேன். தொழில்முறை நடிகர்களும் நடிச்சிருக்காங்க. அதுக்கு சம்பந்தமில்லாதவங்களையும் பயன்படுத்தியிருக்காங்க. அதுல பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், காடுவெட்டி குரு இவங்களோட என்னையும் பயன்படுத்தி சில காட்சிகள் எடுத்திருக்காங்க. அவ்ளோ தான். மத்தபடி சுத்தமா எனக்கு நடிக்கத் தெரியாது. யாராவது கூப்டா சும்மா தலையக் காட்டறது அவ்ளோதான்.

கே: உங்க பேச்சில இயல்பாவே ஒரு நகைச்சுவை உணர்ச்சி இருக்கு. உங்க கிராமியப் பின்புலமும் இதுக்கு ஒரு காரணம்னு சொல்லலாமா?

ப: கிராமத்துல சின்ன வயசுல ஒருத்தரை ஒருத்தர் கிண்டலும் கேலியுமா பேசிக் கொள்றது வழக்கம்தான். ஆனா பின்னாடி அது மறைஞ்ச்சிட்டுது. கோயமுத்தூர் காலேஜ்ல படிக்கும் போது அக்ரிகல்சர் ஸ்டாடிஸ்டிக்ஸ்னு ஒரு பாடம். ரொம்ப போரடிக்கும். பசங்க யாருமே அந்த க்ளாசுக்கு போக விரும்ப மாட்டாங்க. ஆசிரியர் வராதவங்களைப் பத்திக் கவலைப்படமாட்டார். அவர் பாட்டுக்குப் பாடம் நடத்துவார். இப்படியே போச்சு அது. அப்புறமா என்ன பண்ண ஆரம்பிச்சார்னா, அரைமணி நேரம் பாடம் நடத்துவார், அப்புறம் ரெண்டு மூணு ஜோக் சொல்வார். வெளிநாட்டு பத்திரிகைகள்லாம் படிச்சுட்டு வந்து மாணவர்களுக்குப் பிடிச்ச மாதிரி ஜோக் சொல்ல ஆரம்பிச்சார். அது என்ன ஆச்சுன்னா, அவர் வகுப்பு வேண்டாம்னு போன பசங்க எல்லாம் அந்த ஜோக்கைக் கேக்கணும்னே வர ஆரம்பிச்சாங்க. அதோட பாதிப்பு தான், நான் ரேடியோல சேர்ந்தப்புறம் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சில சில தகவல்களைச் சொல்லி, பின்னாடி ஒரு நகைச்சுவையச் சொல்றதுன்னு வந்தது. ஆனா இப்பல்லாம் அது ஒரு ட்ரெண்ட் மாறி ஆயிட்டுது, எது சொன்னாலும் கடைசியில ஜோக் ஒண்ணு சொல்றதுன்னு.

கே: தற்போது பல விழாக்கள்ல, பேச்சரங்குகள்ல கலந்துக்கறீங்க. அந்த அனுபவம் பத்திச் சொல்லுங்களேன்!

ப: அது எப்படின்னா, ஆன்மீகத்துல எனக்கு பெரிய அனுபவமோ, ஈடுபாடோ எதுவும் இல்லைன்னாலும் கூட, நான் நிறைய ஆன்மீகத் தகவல்களை ரேடியோவுல சொன்னதுனால நிறைய ஆன்மீகக் கூட்டங்களுக்கெல்லாம் கூப்பிட ஆரம்பிச்சாங்க. திருமூலரைப் பத்தியோ, மகான்களைப் பத்தியோ நான் சொன்னது எல்லாம் ரேடியோவுல சொல்லணுமேங்கறதுக்காகப் படிச்சிட்டு சொன்னது தான். அது என்ன ஆச்சுன்னா என்னப் பத்தி ஒரு பொய்யான இமேஜ உண்டு பண்ணிட்டுது. நா ஒரு பெரிய ஆன்மீகவாதிங்குற மாதிரி. ஏன்னா சொல்ற விஷயங்கள் அப்படி இருந்ததுனால. புராணக் கதையை ஏன் அதிகம் சொன்னேன்னா அதை ஞாபகம் வச்சிக்கிட்டு சொல்றது ஈஸி. கதைதாங்கறதுனால ரொம்ப எதுவும் அதுல தப்பு வந்திராது. ஆனா அறிவியல் செய்திகளைச் சொல்றதுன்னா ரொம்ப நுணுக்கமாச் சொல்லணும். கஷ்டமும் கூட.

எல்லோரும் கூப்பிட ஆரம்பிக்கும் போது, மறுக்க முடியாம பல நிகழ்ச்சிக்கள்ல கலந்துக்கிட்டேன். அவுங்க கொடுக்குற தலைப்புக்கேத்த மாதிரி நல்லா படிச்சு, குறிப்பெடுத்துக்கிட்டுப் போய் பேசுவேன். இப்ப இராமாயணத்தைப் பத்திப் பேச கம்பன் விழாவுக்குக் கூப்பிடுறாங்கன்னு வைங்க. நான் கம்பனப் பத்தி பள்ளிக்கூடத்துல படிச்சதுதான். என்னை நம்பிக் கூப்பிட்டுர்றாங்க. அதுனால அந்த தலைப்புக்குத் தகுந்த மாதிரி நல்லா கம்பனப் படிச்சிட்டு, நல்லா தயார் பண்ணிக்கிட்டு அப்புறம் போய்ப் பேசறதுண்டு. இப்படித்தான் இராமகிருஷ்ணமடம், ஆழியார் அறிவுத் திருக்கோயில், பிரம்மகுமாரிகள்னு இப்படி எல்லா ஆன்மீக அமைப்புகளிலிருந்தும் இப்போ கூப்பிடுறாங்க. அதுக்காக படிச்சிக்கிட்டுப் போறதுதான். அதுதவிர எனக்கு ஒரு ஆத்மார்த்தமான பெரிய ஈடுபாடுன்னு உலகத்துல எதிலுமே இல்லை. நான் வந்து ரேடியோவுல சொல்ற ஆள்தானே! நல்ல செய்திகளைப் படிச்சிட்டு ஜனங்களுக்குச் சொல்றதுதான் என்னோட வேலை. அது வந்து ஒரு பிரதிபலிப்பு மாதிரித்தான். நான் வந்து திருக்குறளை உங்ககிட்ட கொடுக்குறேன். திருக்குறளைக் கொடுக்குறது என் வேலை. உடனே என்னையே நீங்க திருவள்ளுவரா நினைச்சிரக் கூடாது. ஆனா ஜனங்க அப்படி நினைச்சிடுறாங்க.

கே: அப்போ ஆன்மீகத்தைப் பத்தி உங்க கருத்து என்ன?

ப: ஆன்மீகம் என்பதே ஆண்டவனை நினைத்துக் கொண்டு சக மனிதனுக்கு உதவி செய்வதுதான். அதுக்கு பல வழிமுறைகளை பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க. ஆண்டவனுக்கு எதுவும் தேவையில்லை உங்ககிட்டயிருந்து. பசிச்சவன் சாப்புடறதும், பகவான் சாப்புடறதும் ஒண்ணுதான் அப்படின்னு ராமகிருஷ்ணர் மொழிகள்ல வரும். அப்படின்னா என்ன அர்த்தம், பகவானுக்குப் படைக்கறதை விட பசிச்சவனுக்குச் சோறு போடுங்கறது கருத்து. இப்படி, கூட்டிக் கழிச்சுப் பார்த்தோம்னா சகமனிதனுக்கு உதவியா இருங்க. அவங்களுக்கு ஏற்படுகிற துன்பத்தைப் போக்குறதுக்கு உங்களால முடிஞ்சதைச் செய்ங்க. இப்படிச் செஞ்சாதான் ஆண்டவனுக்குப் பிடிக்கும் அப்படிங்கறது மாதிரி சொல்லி வச்சிருக்காங்க நமக்கு. ஆண்டவனுக்குப் பிடிக்கும்னு சொன்னாதான நாம உதவி பண்ணுவோம்.

சொல்லப் போனா ஆத்திகம், நாத்திகம் இதுக்கிடையில ஒண்ணும் அதிக வித்தியாசம் இல்ல. ஆன்மீகவாதிகள் என்ன சொல்லுறாங்க, நம்புங்கள் நடக்கும்ங்கறாங்க. நாத்திகவாதிகள், நடக்கட்டும் நம்புகிறேங்கறாங்க. அவ்ளோதான். அதுபோல பகுத்தறிவுங்கறதும் கூட ஆன்மீகத்துக்கு எதிரான விஷயமில்லை. அது மூடநம்பிக்கைக்கு எதிரான விஷயம். ஆன்மீகம்ங்கற பேர்ல மூடநம்பிக்கைக்கள் அதிகமா வளர்ந்து போச்சி. அதுனால பகுத்தறிவு ஆன்மீகத்தையே எதிர்க்க ஆரம்பிச்சிடுச்சி. உண்மையான பகுத்தறிவு ஆன்மீகத்துக்கு எதிரானதல்ல, மூட நம்பிக்கைக்கு எதிரானது என்பதுதான் என்னோட கருத்து.

கே: வெளிநாட்டு அனுபவங்கள் குறிச்சுச் சொல்லுங்களேன்!

ப: நான் ரிடயர் ஆகற வரைக்கும், அதாவது 2002 வரைக்கும் பாஸ்போர்ட்டே எடுக்கலை. ஏன்னா, ஒரு அரசு ஊழியனா இருந்துகிட்டு வெளிநாடு போகறதுங்கறது சங்கடம். அதன் பிறகு வெளிநாடுகளில் உள்ள பல தமிழ் அமைப்புகள் என்னைக் கூப்பிட்டாங்க. சிங்கப்பூருக்கு இரண்டு முறை போயிருக்கிறேன். அங்கு சுதந்திர தின விழாக்காகவும், நூல் வெளியீட்டு விழாக்காகவும் போயிருக்கேன். அந்தமான் திருவள்ளுவர் சங்கம் கூப்பிட்டதுனால போயிருக்கேன். அப்புறம் லண்டன் தமிழ்ச்சங்கத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் அமைப்பு ஒரு விழாவுக்குக் கூப்பிட்டிருந்தாங்க. போயிட்டு வந்தேன். அப்புறம் குவைத் பொறியாளர்கள் சங்கம் அழைப்பின் பேரில போயிருக்கேன். அங்க ஃப்ரண்ட் லைனர்ங்குற அமைப்பு நடத்துற எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் கூட வந்து அவர் பத்திரிக்கைக்காக பேட்டி எடுத்துட்டுப் போனார். சொந்த முறையில் சுற்றுலாவாக பாங்காக், தாய்லாந்து போயிருக்கேன். அவ்ளோதான்.

கே: நீங்களே ஒரு எழுத்தாளர். உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் யார்?

ப: எனக்கு துப்பறியும் புத்தகங்கள், க்ரைம் நாவல்கள் ரொம்பப் பிடிக்கும். தமிழ்வாணன் புஸ்தகமெல்லாம் அப்போ படிக்கறதுண்டு. அப்புறம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், அகதா கிறிஸ்டி படிப்பேன். உலகப் பிரச்சனைகளைப் பத்தி தமிழ்ல எழுதற பா. ராகவன் நூல்களைப் படிக்கறதுண்டு. நம்ம இந்திய சுதந்திர வரலாறு பத்தி 'நள்ளிரவில் சுதந்திரம்'னு ஒரு மொழிபெயர்ப்பு நூல் வந்திருக்கு. அதை விரும்பிப் படிச்சதுண்டு. அலைகள் பதிப்பகம் அதை வெளியிட்டிருக்கு. அதுபோக கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்காக ஆன்மீகப் புத்தகங்களை அதிகம் படிக்கறதுண்டு.

கே: நீங்க நிறைய சமுதாயப் பணியெல்லாம் செஞ்சிருக்கீங்க இல்லையா?

ப: ஆமாம். நா பஞ்சாயத்துத் தலைவரா இருக்கும் போது சரியான சாலைப் போக்குவரத்து வசதி எல்லாம் எங்க ஊருக்கு இல்லாம இருந்துச்சு. சுத்தி எல்லாம் ஒரே வயல்தான். ஒரு பக்கம் கொள்ளிடம் ஆறு. ஊருக்கு எங்கயாவது போறதுண்ணா பரிசல்லதான் போகணும். இல்லண்ணா வயலை எல்லாம் சுத்திக்கிட்டு நடந்துதான் போகணும். ஒரு லிங்க் ரோடு ஒண்ணு தேவைப்பட்டிச்சு. அதுனால வயலைச் சீர் பண்ணி ரோடு போட்டோம். அது மாதிரி சரியான மின்சார விளக்கு வசதி இல்லாம இருந்தது. அதைக் கொண்டு வந்தோம். தெரு விளக்குகள் அமைச்சோம். அப்புறம் சாலையோரங்கள்ல மரங்கள் நடறதுன்னு பலதைச் செஞ்சிருக்கோம். சொந்த முறையில ஊர்ல கஷ்டப்படறவங்களுக்கு, வசதி இல்லாதவங்களுக்கு பல உதவிகள் செய்யறதுண்டு. அவங்க திருமணத்துக்கு உதவறதுண்டு. அது மாதிரி ஊர்லேர்ந்து இங்க யாராவது வந்தா எங்க வீட்லயே தங்க இடவசதி செஞ்சு வச்சிருக்கேன். இதெல்லாம் எல்லாரும் செய்யற ஒண்ணுதான், பெரிசா ஒண்ணுமில்ல.

கே: உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள்னு யாரைச் சொல்வீங்க?

ப: என்னுடைய வளர்ச்சின்னா அது இயல்பா நிகழ்ந்ததுதான். வாழ்க்கைல நமக்கு வரக்கூடிய வாய்ப்புகளை நாம ரொம்பச் சரியா பயன்படுத்திக்கணும்ங்கறது ரொம்ப முக்கியம். வளர்ச்சிங்கறது இயற்கையா நடக்கக் கூடியதுதான். நான் நன்றியோட நினைச்சுப் பாக்கணும்னா வானொலி, அப்புறம் எனக்கு ஏற்பட்ட சந்தப்பங்கள், இதெல்லாம்தான் முக்கிய காரணம்னு சொல்லலாம். பெரியவங்க சொல்வாங்க, எதைச் சந்திக்கிறீர்களோ அது விதி. எப்படிச் சந்திக்கிறீர்களோ அது மதின்னு. வளர்ச்சிங்கறதும் அப்படித்தான்.

கே: தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ப: புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் பூரா இருக்காங்க. அவங்க படற பல துயரங்களுக்கெல்லாம் காரணம் எதையும் அறிவு பூர்வமா சிந்திக்கறதை விட உணர்ச்சி பூர்வமா சிந்திக்கறதுதான். அப்படி உணர்ச்சி பூர்வமா சிந்திக்கறதுனால பல கஷ்டங்களை அவங்க சந்திக்க வேண்டி இருக்கு. அதுனால அந்த நிலைமை மாறி, எதையும் அறிவுபூர்வமா சிந்திக்கறதா உலகத்தமிழர்கள் மாறணும்கறது தான் என்னோட விருப்பம். அப்படி மாறினால் இப்ப இருக்கற பல பிரச்சனைகளை வேற மாதிரியா தீர்த்துக்க முடியும்ங்கறது என்னோட அபிப்பிராயம்.

பொதுவா ஒருத்தருக்கு எப்பவுமே வழிகாட்டறது அடுத்தவங்களோட புத்திமதியில்ல. அவங்க அவங்களோட அனுபவம் தான் எப்பவுமே சரியான வழியக் காட்ட முடியும். அனுபவங்கள் சொல்றபடி நடந்துக்குங்கங்கறது தான் சரியான அறிவுரையா இருக்கும். இதுதான் நான் எல்லோருக்கும் சொல்ல விரும்பறது.

தென்றல் வாசகர்களுக்கு தெவிட்டாத விருந்து தந்ததற்காக, மனைவி மஹாலக்ஷ்மியுடனும், பேரன் நவீனுடனும் சென்னை மடிப்பாக்கத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் தென்கச்சியாருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

***
பெட்டிச் செய்தி

இன்று ஒரு தகவலின் கதை

கே: உங்களை உலகம் அறிந்தது 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியால தான். அது நிகழ்ந்தது எப்படி?

ப: அது தற்செயலாக ஏற்பட்ட ஒரு விஷயம்தான். அப்போ விவசாய ஒலிபரப்பு, நாடகத் துறை, தமிழ் இலக்கியத்துறை இந்த மாதிரி வேறு சில நிகழ்ச்சிகளை நான் பாத்துக் கிட்டிருந்தேன். ஒருநாள் வேடிக்கையா கேண்டீன்ல சக ஊழியர்களோடு உட்காந்து பேசிக்கிட்டிருந்தேன். அவங்கள்லாம் அந்த வேலை இருக்கு, இந்த வேலை இருக்கு போய் செய்யணும்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. நா உடனே “டி.வி வந்திட்டுது. இனிமே யாரும் ரேடியோ கேக்க மாட்டாங்க. அதுனால யாரும் ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ண வேண்டாம்” அப்படீன்னு வேடிக்கையாச் சொன்னேன். எங்க அதிகாரிகிட்ட போய், இந்த ஆளு இப்படிச் சொல்றாருன்னு அவங்களும் வேடிக்கையாச் சொல்லிட்டுப் போய்ட்டாங்க. அப்போ ஸ்டேஷன் டைரக்டர் கோ. செல்வம். அவர் என்னை அறைக்குக் கூப்பிட்டார். என்ன இப்படிப் பேசினியாமேன்லாம் அவர் என்னைக் கேக்கல. நாளைலேர்ந்து ஒரு புது ப்ரோகிராம் ஒண்ணு ஆரம்பிக்கப் போறோம். காலைல தினம் அஞ்சு நிமிஷம் நீதான் மக்களுக்கு உபயோகமான விஷயங்களைச் சொல்லணும் அப்படின்னார்.

திடீர்னு ஏன் எங்கிட்ட அந்தப் பொறுப்பைக் கொடுக்கிறார்ங்கறது எனக்குப் புரியலை. சார், மத்த வேலைகளையும் செஞ்சிட்டு, தினம் இதையும் செய்றதுன்னா ரொம்ப கஷ்டமாச்சே, அதுனால வாரம் ஒருமுறை வச்சுக்கலாம்ன்னு சொன்னேன். இல்ல இல்ல, நீயே முழுசா பண்ண வேண்டாம். நீ ஒருமாசம் மட்டும் பண்ணினாப் போதும். மத்தவங்க கிட்டயும் ஆளுக்கு ஒரு மாசமா பொறுப்பைக் கொடுத்துப் பண்ணச் சொல்லலாம்னார். நானும் சரின்னேன்.

1988 ஜூலை மாசம் 1ம் தேதி ஆரம்பிச்சோம். அதுக்கு ‘இன்று ஒரு தகவல்'னு பேர் வச்சதும் டைரக்டர் கோ. செல்வம் தான். ஒரு மாசம் தானே, அதுக்கப்புறம் நம்ம கடமை தீர்ந்ததுன்னு சொல்லி நான் எப்படியோ 30 விஷயங்களைத் தயார் பண்ணி சொல்லி முடிச்சிட்டேன். 30 நாள் முடிஞ்சவுடனே டைரக்டர் கிட்ட போய் சார் என் வேலை முடிஞ்சது. அடுத்து யார், என்னன்னு பார்த்து உடனடியா நீங்க ஒரு ஆபிஸ் ஆர்டர் போடணும் அப்படின்னேன். அதுக்கு அவர், நீ என்ன திடீர்னு இப்ப வந்து சொல்ற. ஒரு வாரத்துக்கு முன்னாடியாவது சொல்லியிருக்க வேண்டாமா? இந்த மாசமும் நீயே சொல்லிட்டு வா, ஆகஸ்டுக்கப்புறம் மாத்திக்குவோம் அப்படின்னார். நானும் சரின்னு அந்த மாசம் சொல்லிக்கிட்டு வந்தேன். ஆனா முன்னாடியே சொல்லணும்னு சொன்னாரில்ல, அதுனால அடுத்த மாசம் ஆகஸ்ட் 15லேருந்தே செப்டம்பர்க்கு யாருங்கறத முடிவு பண்ணுங்க சார் அப்படின்னு தினம் அவர்ட்ட சொல்லிட்டிருந்தேன்.

திடீர்னு ஒருநாள் டைரக்டர் உங்களை அவசரமாக் கூப்பிடறாருன்னு சொன்னாங்க. அவர் ரூமுக்குப் போனேன். அங்க காபி, டிபன் எல்லாம் ரெடியாயிருந்தது. சரிதான், யாரோ வி.ஐ.பி. வராங்க போலன்னு நினைச்சிக்கிட்டேன். அங்கே வேலை செய்யவறங்களுக்கு அப்படி வாங்கிக் கொடுக்குற வழக்கமில்ல. நான் நின்னுக்கிட்டே பேசிக்கிட்டிருந்தேன். “உனக்குத்தான் இதெல்லாம் உக்காந்து சாப்பிடு” அப்படின்னார் டைரக்டர். கிண்டல் பண்றாரோன்னு நினைச்சிக்கிட்டே உக்காந்து சாப்பிட்டேன். அப்புறம் சொன்னார். வெளில இந்தப் புரொகிராமுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். எல்லாரும் ரொம்ப நல்லாருக்குன்னு சொல்றாங்க. அதுனால நீயே கொஞ்ச நாளுக்கு கண்டினியூ பண்ணாப் பரவாயில்லன்னார். அதுக்காகத் தான் இந்த டிபனா சார்னேன். ஆமா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குன்னார்.

இப்படி ஒரே ஆள் தொடர்ந்து நிகழ்ச்சி பண்ணிக்கிட்டிருக்கறது ரொம்பச் சிரமா இருக்குமேன்னேன். உன்னால எப்ப முடியலையோ அப்ப நிறுத்திடு. நீ முடியலன்னு சொல்றப்போ வேற ஆளப் போட்டுக்கலாம் அப்படின்னார். ஆனா, நான் முடியல்லன்னு சொல்றதுக்குள்ள அவர் ரிடயர் ஆகிட்டார். இன்று ஒரு தகவல் பத்தி பத்திரிகைகள்லலாம் வேற எழுத ஆரம்பிச்சிட்டாங்க. ரேடியோவுக்கு புத்துயிர் வந்துட்டதுங்கற மாதிரி மணியன் எழுதியிருந்தார். தினத்தந்தி, அசைட் அப்படின்னு எல்லா பத்திரிகைகளிலுமே இது பத்தி எழுதினாங்க. அதுபத்தி பேட்டிகள் எல்லாம் வேற வர ஆரம்பிச்சது. அதுனால நிகழ்ச்சியைத் தொடர்ந்து நீயே கண்டினியூ பண்ணு அப்படின்னு என்கிட்ட சொல்லிட்டாங்க. அதன் விளைவு என்னாச்சுன்னா ரிடயர் ஆகுற மட்டும் நானே அதப் பண்ண வேண்டியதாப் போச்சு. 14 வருஷம், நான் ஓய்வு பெர்ற வரைக்கும், தினமும் அதை நானேதான் சொல்ல வேண்டியிருந்திச்சு.

நிகழ்ச்சிக்கு முன்னாடி பின்னாடி ஒலிபரப்பான விளம்பரங்களால வருஷத்துக்கு 1 கோடி ரூபாய் வரை வருமானம் வந்துச்சு. அஞ்சு நிமிஷமா இருந்த என் நேரம் அதுனால மூணரை நிமிஷமாக் குறைஞ்சிட்டுது. அரசுக்கு நல்ல வருமானம் வந்ததுனால என்னை எந்தத் தொந்தரவும் பண்ணல. அதாவது டிரான்ஸ்ஃபர் ஏதும் பண்ணல. இல்லன்னா மூணு வருஷத்துக்கு ஒரு தடவை எங்கியாவது டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டு இருப்பாங்க. ஆனா என்னை 14 வருஷம், 2002ல ரிடையர் ஆகுற வரைக்கும் அங்கேயே வச்சிக்கிடாங்க. இன்று ஒரு தகவலால எனக்குக் கிடைத்த ஒரே ஆதாயம் என்னன்னா எங்கேயும் டிரான்ஸ்பர் ஆகாம ஒரே இடத்துல இருந்ததுதான்.

***
உங்கள் காது என்னிடம்...

கும்பகோணத்துல இருந்து எங்க டைரக்டருக்கு ஒரு கடிதம் வந்தது:

'உங்க வானொலில இன்று ஒரு தகவலை தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு வயது 85. நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியன். அந்த நிகழ்ச்சில யாரோ ஒரு பெரிய மகான் தினமும் பெரிய பெரிய கருத்தெல்லாம் சொல்றார். அவரை நான் தரிசிக்கணும்னு ஆசைப்படறேன்' அப்படின்னு எழுதியிருந்தார் ஒருத்தர். டைரக்டர் அதைப் படிச்சிட்டு உடனே என்னைக் கூப்பிட்டனுப்பி கடிதத்தைக் கொடுத்தார். யாருன்னு வாங்கிப் பார்த்தா அது எங்க வாத்தியார். கே.ஜி. கிருஷ்ணமூர்த்தின்னு பேரு. நான் அவருக்கு பதில் கடிதம் எழுதினேன். சார், நான் உங்ககிட்ட படிச்ச ஸ்டூடண்ட் தான். இப்போ ரேடியோவுல வேலை பாக்குறேன். ஒண்ணும் பெரிய மகான்லாம் இல்லன்னு பதில் எழுதினேன். அவர் உடனே சிரஞ்சீவி சுவாமிநாதனுக்கு ஆசிர்வாதம்ன்னு சொல்லி பதில் கடிதம் எழுதியிருந்தார். அதுல, நான் தினம் உன் வார்த்தைய காது கொடுத்துக் கேட்டுக்கிட்டிருக்கேன் அப்படின்னு எழுதியிருந்தார். நான் அதுக்கு பதில் எழுதினேன்: சார் நா படிக்குற காலத்துல என் காது உங்ககிட்ட இருந்தது. இப்போ உங்க காது என்கிட்ட இருக்குதுன்னு எழுதினேன். இன்னும் உனக்கு அந்தக் குறும்புத்தனம் போகவில்லைன்னு பதில் எழுதினார் அவர்.

- தென்கச்சி சுவாமிநாதன்

***
தென்றல் வாசகர்களுக்காக ஒரு குட்டிக் கதை

ஒருத்தனுக்கு திடீர்னு ரொம்பத் தலைவலி. என்ன காரணம்னு தெரியலை. ஆஸ்பத்திரிக்குப் போனான். டாக்டரைப் பார்த்தான். டாக்டர், அப்பா, உனக்கு மூளைல கொஞ்சம் கோளாறு இருக்கு. அதை சரி பண்ணனும். அதுனால தலையத் திறந்து, மூளைய எடுத்து, அதை ரிப்பேர் பண்ணிட்டு, அப்புறம் திரும்ப தலைல வைக்கணும். அதுனால நீ இங்க கொஞ்சம் படுன்னு சொல்லிப் படுக்க வக்கிறார். தலையத் திறக்கறார். மூளைய மட்டும் தனியா எடுத்துட்டு லேபரட்டரிக்குப் போயிர்றார். அதை சரிபண்ணிக் கொண்டு வந்து மறுபடியும் பொருத்தறதுக்கு. போய் சரி பண்ணிட்டார். அந்த மூளையச் சரி பண்ணிட்டு திரும்பப் பொருத்தறதுக்காக வந்து பாத்தா அவன ஆளக் காணோம். மூளையில்லாத வெறும் தலையோட அவன் எங்கயோ ஓடிப்பூட்டான். டாக்டர் பதறிட்டார். எல்லாரும் அங்க இங்கன்னு தேடிப் பாத்தாங்க. அவன ஆளயே காணோம். சரி எப்பவாவது திரும்ப வந்தான்னா அவனுக்கு பொருத்தி விட்டிருவோம் அப்படின்னு அந்த மூளைய பிரிஜ்ஜில வச்சிட்டார். ஒரு 14 வருஷம் கழிச்சு அவன எங்கயோ தேடிப் பிடிச்சிக் கண்டுபிடிச்சி, இதோ இருக்கான்னு டாக்டர் கிட்ட கொண்டு வந்தாங்க. ‘ஏண்டா 14 வருஷமா எங்கடா போயிட்ட நீ. உன் மூளை வேற இங்க இருக்கு. நீ என்னடா பண்ணிக்கிட்டிருந்த'ன்னார் டாக்டர். ‘நான் ரேடியோல இன்று ஒரு தகவல் சொல்லிக்கிட்டிருந்தேன் சார்!' அப்படின்னானாம் அவன்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
மேலும் படங்களுக்கு
More

டாக்டர் வெங்கடா பாலநேத்திரம், விஜி பாலநேத்திரம்
Share: 
© Copyright 2020 Tamilonline