Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
முன்னோடி
வெ.சாமிநாதசர்மா
- மதுசூதனன் தெ.|ஜனவரி 2009|
Share:
Click Here Enlargeஇருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழியல் வரலாற்றிலும் மாற்றமுறும் சிந்தனைக் கையளிப்பிலும் ஒரு முன்னோடிச் செயற்பாட்டாளராக விளங்கியவர் வெ. சாமிநாத சர்மா. இவர் எழுதிய தேசிய, சர்வதேசத் தலைவர்கள், அரசியல் தத்துவங்கள் பற்றிய அறிமுக நூல்கள் தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்குப் புது வெளிச்சம் பாய்ச்சின. புதிய அரசியல் கலாசார அணி திரட்டலுக்கு வலுச்சேர்த்தன. இதன் கருத்துப் பரப்பாளராகவும் புதிய சிந்தனை வளங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்ப்பவராகவும் வெ. சாமிநாதசர்மா விளங்கியுள்ளார்.

"சிறிது குள்ளமாக இருப்பார். இராஜ கோபாலாச்சாரியாரைப் போல் மொட்டைத் தலை; சிவந்த மேனி. கதர் வேஷ்டியும், கதர் ஜிப்பாவும் இவருடைய உடை. சில சமயங்களில் நேருஜியைப் போல் அரைக் கோட் (waist coat) போட்டுக் கொண்டிப்பார். இவரது எளிய வாழ்க்கைக்கு மகாத்மாஜியின் எளிய வாழ்க்கையைத்தான் உபமானமாகக் கூற முடியும். அன்பென்ற மலர் இதழ் விரித்துப் பூத்தது போன்ற தெய்வீகச் சிறப்பு. சாந்தி பொலியும் முகம். அன்பு சுரக்கும் இனிய சொற்கள். இதுதான் அறிஞர் சர்மாவின் சித்திரம்.” இவ்வாறு வெ.சாமிநாத சர்மாவைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுத்தாளர் கு.அழகிரிசாமி வர்ணித்துள்ளார்.

வெங்களத்தூர் சாமிநாதசர்மா (1895-1978) 83 ஆண்டு காலம் வாழ்ந்து தனது சிந்தனையாலும் செயலாலும் ஆளுமை மிக்க மனிதராக விளங்கியுள்ளார். இவர் எமக்குச் சுமார் 80 நூல்கள் வரை விட்டுச் சென்றுள்ளார். இதன் மூலம் தமிழ்ச் சிந்தனை, இலக்கிய, இதழியல் மரபுகளில் ஒரு முன்னோடிச் செயற்பாட்டாளராகவும் விளங்கியுள்ளமை நோக்கத் தக்கது.

சாமிநாதசர்மா 17 ஜூலை 1895ல் வெங்களத்தூர் என்னும் ஊரில் பிறந்தார். அந்த ஊர் இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், அன்றைய வட ஆற்காடு மாவட்டம் - செய்யாறு வட்டத்தில் பாலாற்றங்கரையில் உள்ளது.

இவரது பாட்டனார். தந்தையார் யாவரும் தமிழ், தெலுங்கு சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றவர்கள். சாமிநாதசர்மா ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.
இவரது பெற்றோர்கள் முத்துசாமி அய்யர், பார்வதி அம்மாள். இவரது உடன் பிறப்புக்களான தங்கை தம்பிகள் இளமையிலேயே இறந்துவிட்டனர். இதனால் இவரே குடும்பத்துக்கு ஒரே வாரிசு ஆனார். இவருக்கு மூன்று பெயர்கள் இருந்தன. எனினும் இவர் வெ. சாமிநாதசர்மா என்றே கையெழுத்திட்டார். 1912இல் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் என்னும் பொருளில் இவர் பேசவிருந்ததை அக்காலத் தமிழ் நாளேடு ஒன்றில் 'சாமிநாதய்யர், ‘தமிழ்' என்னும் பொருளில் பேசுவார் என்று விளம்பரப் படுத்தப்பட்டது. சாமிநாதய்யர் என்றால் அது மகோபாத்தியாய உ.வே. சாமிநாதய்யர் என்று எண்ணி சொற்பொழிவைக் கேட்க கிறித்துவக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகியவைகளின் தமிழறிஞர்கள் சிலர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வந்தனர். ஆனால் எதிர்பார்த்த சொற்பொழிவாளருக்குப் பதிலாக வேறொருவர் பேசியதைக் கேட்டு தமிழறிஞர்கள் பெயர்க் குழப்பத்தை மறந்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சாமிநாதசர்மா என்றே தம் பெயரை அமைத்துக் கொண்டார்.

உயர்நிலைப் பள்ளியோடு சர்மாவின் கல்விநிலை நின்றது. இருந்த போதிலும் இவர் பள்ளிக்கூடத்தை விட்ட பிறகுதான் இவரது கல்வி ஆரம்பமாயிற்று. இதனை சர்மாவே ஒருமுறை கூறியுள்ளார். இவருடைய குடும்பப் பாரம்பரியச் சொத்தாக இவருக்கு பன்மொழிப்புலமை வாய்த்தது. இவரது பாட்டனார். தந்தையார் யாவரும் தமிழ், தெலுங்கு சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றவர்கள். சாமிநாதசர்மா ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். இவரது பன்மொழிப் புலமை இவரது ஆளுமை விகசிப்பின் மேற்கிளம்புகைக்குக் காரணமாயிற்று.

இவரது வீட்டில் இருந்த கலை ஆர்வம், இசை ஆர்வம் சாமிநாதசர்மாவுக்கு இளமையிலேயே கலை இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியது. மேலும் ஒரு எழுத்தாளராக உருவாவதற்கான தகுதிப்பாட்டையும் வழங்கியது. தொடர்ந்து அக்கால சமூக, அரசியல், தேசிய எழுச்சியும் சுதந்திர உணர்வும் சர்மாவைப் புடம் போட்டு வளர்த்தது. சமூகம் சார்ந்த சிந்தனையும் அரசியல் வேட்கையும் இவரது ஆளுமைத் திறன் மற்றும் மனப்பாங்கு விருத்திகளில் மிகுந்த செல்வாக்குச் செலுத்தின எனலாம்.

சுருக்கெழுத்து ஆசிரியர், ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலர், கூட்டுறவுத்துறை அலுவலர் போன்ற பணிகளைச் சிலகாலம் சர்மா புரிந்தார். ஆனாலும் எழுத்தார்வம் மட்டும் தனியாக மேற்கிளம்பித் துளிர்த்து வளர்ந்து வந்தது. தமது பதினேழாவது வயதில் முதன் முதலில் இவரது முதல் கட்டுரை தமிழில் வெளியானது. இந்தக் கட்டுரை அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த உயர்தர, இலக்கிய இதழான 'இந்துநேசன்' என்னும் இதழில் பிரசுரமானது. இது ஒரு விடயதானக் கட்டுரை ஆகும். அடுத்து இவர் எழுதிய கட்டுரை 'பிழைக்கும் வழி' என்ற இதழில் வெளியானது. இக்கட்டுரை மைசூர் இராஜ்யம் தோன்றிய வரலாற்றைக் கூறியது. இக்கட்டுரை பாராட்டுப் பெற்றதுடன் ஐந்து ரூபாய் சன்மானத்தையும் பெற்றுக் கொடுத்தது. 'பிழைக்கும் வழி' என்ற இதழ் சாமிநாதசர்மாவுக்குப் பிழைக்கும் வழி யொன்றையும் காட்டிவிட்டது.

கட்டுரை எழுதும் முயற்சியில் முன்னேறிய சர்மாவுக்கு நூல் எழுதவும் துணிவு பிறந்தது. ஆனால் தமது இந்தப் புதிய முயற்சியை ஆங்கிலத்தில் நாடகம் எழுதும் முயற்சியாகச் செய்தார். 'ஹேமாங்கி' என்றும் பெயரில் ஆங்கில நாடகத்தை பதிப்பாளர் ஒருவரிடம் கொடுத்தார். ஆனால் நாடகப் பிரதியை பதிப்பாளர் தொலைத்துவிட்டார். இது இவருக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.

ஆனாலும் நாடகம் எழுதும் முயற்சி தொடர்ந்தது. பிற்காலத்தில் இவர் எழுதிய 'பாணபுரத்து வீரன்' என்னும் நாடக நூல் 1923ல் வெளிவந்தது. இந்திய தேசிய விடுதலை இயக்கப் போராட்டத்துக்கு இந்த நாடகம் பெரிதும் பயன்பட்டது. இந்நாடகத்தை 'டி.கே.எஸ். பிரதர்ஸ்' என்னும் குழுவினர் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சென்றனர். சர்மா மேலும் சில நாடக நூல்களையும் எழுதி வெளியிட்டார்.

சர்மாவின் முதல் நூல் 'கௌரிமணி' ஆகும். இந்நூல் 1914ல் இவருடைய சொந்தச் செலவில், இவர் நிறுவிய 'செந்தமிழ்ச்சங்கம்' என்னும் அமைப்பின் சார்பில் வெளியிடப் பட்டது. திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ள கௌரிமணியின் கதைதான் இந்நூல். 48 பக்கங்கள் கொண்டது.

சாமிநாதசர்மாவின் எழுத்துலக வாழ்க்கை யில் ஒரு திருப்பம் 1919இல் ஏற்பட்டது. 'தேசபக்தன்' என்னும் அக்காலத்தின் தலைசிறந்த நாளிதழில் சர்மா துணை ஆசிரியராகச் சேர்ந்தார். அப்பொழுது தேசபக்தனின் ஆசிரியராக இருந்தவர் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரம். இவருடன் இணைந்து பணிபுரிந்தமையால் சர்மாவின் சிந்தனையில் புத்தாக்கம் பிறந்தது. இவரது தமிழ் நடையிலும் தேசிய நோக்கில் சமூக அரசியல் கண்ணோட்டங்களில் புதிய பரிமாணங்கள் விருத்தியுற்றன.
சமூக அரசியல் மாற்றங்களையும் வரலாற்று அனுபவங்களையும் சாதாரணமாக அறிவு வேட்கைத் தேடல் உள்ளவர்கள் யாவரும் கற்றுக் கொள்வதற்காகக் கையளிக்கும் பெரும் பணியில் சர்மா ஈடுபட்டிருந்தார்
திரு.வி.க. தேசபக்தனின் ஆசிரியப் பொறுப்பில் இருந்து விலகி 'நவசக்தி' என்னும் தமிழ் தேசிய வார இதழை 1920களில் தொடங்கினார். இந்த இதழிலும் சர்மா துணையாசிரியராகப் பணிபுரிந்தார். இதைவிட நவசக்தி தொடங்கப்படுவதற்கு முன்னர் வ.வே.சு. ஐயர் தேசபக்தனின் ஆசிரியராக இருந்த பொழுது அவருடனும் சர்மா துணையாசிரியராகப் பணிபுரிந்தார். தேசபக்தன் நவசக்திக்குப் பிறகு ‘ஆந்திர கேசரி' டி. பிரகாசம் நடத்திய 'ஸ்வராஜ்யா' நாளிதழில் துணையாசிரியராக சர்மா 1924-1926 வரை பணி புரிந்தார்.

தமிழ் இதழியல் துறையில் சமூக அரசியல் நடப்புகளை, அரசியல் கருத்துக்களைத் திட்ப நுட்பம் செறிந்த இனிய தெளிந்த நடையில் வெளியிடக்கூடிய திறன்களை ஆளுமைகளைப் படிப்படியாக சர்மா வளர்த்துக் கொண்டார். சர்மா இதழியல் துறையில் இருந்து விலகி 1926-27 ஆண்டுகளில் மைசூரில் வேலை பார்த்தார். அங்கிருந்து திரும்பி வந்து சிறிது காலத்துக்குப் பிறகு 1930-31ல் அடையாறு பிரம்மஞான சபை நூல் வெளியீட்டுத் துறையில் பணியாற்றினார். இந்தக்கால கட்டத்தில் 'விவேக போதினி' என்னும் இதழில் தமது பெயரைப் போட்டுக் கொள்ளாமல் ஆறு மாத காலம் ஆசிரியப் பணியை ஆற்றினார்.

சர்மா இக்காலத்தில் மியான்மார் என்றழைக்கப்படும் அக்கால பர்மாவில் 1932 நடுப்பகுதியில் இருந்து தனது மனைவியுடன் வசித்துவந்தார். அங்கே 'பாரத்பண்டார்' என்னும் பெயரில் ஒரு கடையை நடத்தி வந்தார். இங்கு சுதேசியப் பொருட்கள், கதர், தரமான தமிழ் நூல்கள் முதலானவை விற்பனையாயின. இதைவிட, பணி தொடர வாய்ப்பு ஏற்பட்டது. ரங்கூனில் செல்வாக்குடன் வாழ்ந்து வந்த செட்டிநாட்டு சமூகத்தார் நடத்தி வந்த ‘தனவணிகன்' இதழிலும் இவர் பணியாற்றினார்.

1936ல் அரு. சொக்கலிங்கம் செட்டியார் சர்மாவின் நூல்களை மட்டும் வெளியிடுவதற்காக பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் என்னும் பெயரில் ஒரு பதிப்பகத்தை நிறுவினார். இத்துடன் கண. முத்தையா என்பவர் நடத்தி வந்த புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகமும் சர்மாவின் சில நூல்களை வெளியிட்டது. இதைவிட மின்னொளி பிரசுரங்கள், அறிவுச்சுடர் என்னும் பதிப்பகங்கள் சார்பிலும் சர்மாவின் சில நூல்கள் ரங்கூனில் வெளியிடப்பட்டன. மேலும் ரங்கூனில் இருந்து சாமிநாதசர்மாவை ஆசிரியராகக் கொண்டு 'ஜோதி' என்னும் தமிழ் மாத இதழ் வெளிவந்தது. 1927 ஆகஸ்ட் முதல் 1942 பிப்ரவரி வரையில், இவரது பன்முகச் சிறப்புகளை ஆளுமையை அடையாளம் காட்டிய இதழாக, ஜோதி வெளிவந்தது.

இரண்டாம் உலகப் போரின் விளைவுகளில் ஒன்றாக பர்மாவை பிரிட்டிஷாரிடம் இருந்து கைப்பற்ற ஜப்பான் போர் தொடுத்தது. இதனால் பர்மாவாழ் இந்தியர்களில் பலர் இந்தியா திரும்ப வேண்டியதாயிற்று. இவர்களுடன் சர்மாவும் அவருடைய மனைவியும் இணைந்து கொண்டனர். பிப்ரவரி 21, 1942ல் ரங்கூனில் இருந்து சர்மா நடைப் பயணத்தை மேற்கொண்டு ஏப்ரல் 24, 1942ல் கல்கத்தா வந்தடைந்தார். இந்த அனுபவங்கள் பின்னர் ‘பர்மாவழி நடைப் பயணம் (1980)' என்னும் நூலாக வெளி வந்தது. இந்நூல் புலம்பெயர் வாழ்வனுபவத்தை எடுத்துரைக்கும் நூலாகும்.

சர்மா சென்னை திரும்பியதும் சக்தி வை. கோவிந்தன் நடத்தி வந்த ‘சக்தி'யில் பணி தொடர்ந்தார். மேலும் ஏ.கே. செட்டியாரின் ‘குமரிமலர்' மாத இதழின் ஆசிரியராகவும் 1945-1946 வரை பணி தொடர்ந்தது. 1953ல் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட ‘பாரதி'யிலும் ஆசிரியப் பணி புரிந்தார். 1956ல் இச் சங்கத்தின் தலைவராகவும் சர்மா பொறுப்பேற்றார்.

சர்மாவின் வாழ்க்கை வரலாற்றுப் பின்புலத்தை நுணுக்கமாக ஆராய வேண்டும். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழியல் வரலாற்றில் சர்மாவின் பங்களிப்பு கனதியாகவே உள்ளது. வெவ்வேறுபட்ட ஆளுமைகளுடன் ஊடாடித் தனக்கென்று தனித்துவமான பண்புகளுடன் பண்பட்ட மனிதராக விளங்கியுள்ளார்.

இத்தகைய பெருமைக்குரியவர் நவம்பர் 07, 1978ல் மறைந்தார். இவரது 83 ஆண்டு கால வாழ்க்கையில் இலக்கிய வாழ்வு 64 ஆண்டுகள் ஆகும். ஆனால் இவர் எழுதிய சுமார் 80 நூல்கள் இவர் யாரென்பதை நமக்குத் தெளிவாக அடையாளம் காட்டுகின்றன. கதைகள், நாடகங்கள், மணி மொழிகள், அரசியல், வரலாறுகள், கட்டுரை இலக்கியம் வாழ்க்கை வரலாறுகள், கடிதங்கள், பயண இலக்கியம் மொழிபெயர்ப்பு நூல், ஆங்கில நூல் என்று சர்மாவின் நூல்களை வகைப்படுத்திக் கொள்ள முடியும்.

தான் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்டு வந்த சிந்தனை மாற்றங்களையும் சமூக அரசியல் மாற்றங்களையும் வரலாற்று அனுபவங்களையும் சாதாரணமாக அறிவு வேட்கைத் தேடல் உள்ளவர்கள் யாவரும் கற்றுக் கொள்வதற்காகக் கையளிக்கும் பெரும் பணியில் சர்மா ஈடுபட்டிருந்தார் என்பது தெரியவருகிறது. புத்தாக்க, முற்போக்குச் சிந்தனைகள் சமுதாயத்துக்கு வேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து செயற்பட்டுள்ளார். குறிப்பாக தேசிய சிந்தனையும் அரசியல் தெளிவும் வரலாற்று உணர்வும் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்து செயற்பட்டுள்ளார். இதற்கு கட்டுரை இலக்கியம் சரியான தொடர்புறு தன்மையைப் பேணிவர வேண்டுமென்பதிலும் கவனம் குவித்துச் செயற்பட்டுள்ளார்.

’நான் எழுதுவதற்காக வாழ்கிறேன், வாழ்வதற்காக எழுதவில்லை’ என்பதே சர்மாவின் இலட்சியம். இதன்படியே இவர் தனது எழுத்துக்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தெ.மதுசூதனன்
Share: 
© Copyright 2020 Tamilonline