Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நேர்காணல்
"நான் வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிப்பது என் தந்தையின் விருப்பமல்ல": T.S.ரவி
சிக்கில் குருசரண்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜனவரி 2009|
Share:
Click Here Enlargeஇளைய தலைமுறைப் பாடகர்களில் தற்போது அதிக கவனத்தைப் பெறுபவர் குருசரண். சிக்கில் சகோதரிகள் நீலா-குஞ்சுமணியின் பேரன். இசைச்சுடர், யுவகலாபாரதி, நாத ஒளி எனப் பத்துக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். இந்த டிசம்பர் சீசனில் மிக அதிக எண்ணிக்கையில் கச்சேரிகள் இவருடையது தான். ஒரு இனிய காலைப் பொழுதில் தென்றலுக்காக அவரைச் சந்தித்தோம். அந்த நேர்காணலிலிருந்து....

கே: உங்களது இசைப் பயணம் பற்றிச் சொல்லுங்களேன்!

ப: பாரம்பரியமான இசைக்குடும்பம் எங்களுடையது. பாட்டி சிக்கில் நீலா மற்றும் குஞ்சுமணி ஆகியோர் மிகச் சிறந்த புல்லாங்குழல் வித்வான்கள். அத்தை மாலா சந்திரசேகரும் புல்லாங்குழல் மேதைதான். சிறுவயதிலேயே எனக்குக் குரல்வளம் நன்றாக இருந்ததை கவனித்த என் பாட்டி என்னை ஒரு சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞனாக ஆக்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படி குரு எனது வீட்டிற்கே வந்து சொல்லிக் கொடுத்தார். அதற்கு முன்னால் அம்மாவிடம் பாட்டு, சரளி வரிசை முதலியவற்றைக் கற்றுக் கொண்டிருந்தேன். பள்ளி நிகழ்ச்சிகளில், கோவில் விழாக்களில் எனச் சிறு சிறு நிகழ்ச்சிகளில் பாடுவதன் மூலம் மேடை அனுபவம் வாய்த்தது. பள்ளியில் படிக்கும் போதே அரங்கேற்றமும் நடந்தது.

பின்னர் விவேகானந்தா கல்லூரியில் படித்ததும் எனது இசை வளர்ச்சிக்கு மிக்க உறுதுணையாக இருந்தது. முதல்வர், பேராசிரியர்கள், சக மாணவர்கள் என அனைவரும் என்னை ஊக்குவித்தனர். அவர்களில் பலரும் இசையார்வம் மிக்கவர்கள் என்பதால் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஆர்வமூட்டினர். கச்சேரிகள் வாய்ப்பும் வந்தது. தொடர்ந்து தற்போது வெளிநாடு, வெளி மாநிலம் எனப் பல கச்சேரிகள் செய்து வருகிறேன். இன்றும் எனது குருநாதரிடம் இசை கற்றுக் கொண்டு வருகிறேன்.

கே: உங்கள் குருநாதர் பற்றி...

ப: என் குருநாதர் திரு வைகல் ஞானஸ்கந்தன் அவர்கள் செம்மங்குடி சீனிவாச அய்யர் அவர்களின் சிஷ்யர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசையரசர் எம்.எம். தண்டபாணி தேசிகரிடம் இசை நுணுக்கம் பயின்றவர். குரல் வளத்துக்கும் பாவத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். குறிப்பாகத் தமிழ்ப் பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர். தண்டபணி தேசிகர், கோபால கிருஷ்ண பாரதியார் எனப் பலரது பாடல்களை அவரிடம் கற்றுக் கொண்டேன். எனது பாட்டி, அத்தை மாலா சந்திரசேகர், இசைப் பேராசிரியையான எனது தாய் ஆகியோரிடமிருந்தும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

கே: படிப்பு, இசை இரண்டுக்கும் எப்படி நேரம் ஒதுக்க முடிந்தது?

ஒரு கச்சேரி நன்றாக இருந்ததா இல்லையா என்பது ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்து அப்போதே தெரிந்து விடும். ஆனால் கச்சேரி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தும் விமர்சனம் மோசமாக வந்திருந்தால் மனத்திற்கு வருத்தமாக இருக்கும். அவற்றை விமர்சகரின் ஒரு கருத்தாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
ப: நான் பி.காம். படிக்கும் போது இசைப்பயிற்சி செய்வதற்குத் தான் அதிக நேரம் எடுத்துக் கொண்டேனே தவிர, கச்சேரிகள் செய்ய அதிக நேரம் ஒதுக்கவில்லை. தமிழ்நாடு இயல், இசை மன்றத்தின் மூலம் சில கச்சேரிகள் செய்தேன். கோவில் விழாக்களிலும், தெரிந்தவர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிகளிலும் சில கச்சேரிகள் செய்தேன். அவ்வளவுதான்.

ஆனால் படித்து முடித்தவுடன் நிறைய கச்சேரிகள் செய்யும் வாய்ப்பு வந்தது. அதே சமயம் மேற்படிப்பைத் தொடர்ந்தால் முழுமையாகக் கச்சேரிகள் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதால், தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை நிதித்துறை மேலாண்மை (M.F.M) வகுப்பில் சேர்ந்தேன். வார இறுதியில்தான் வகுப்புகள் என்பதால் மீதி நேரங்களில் இசை கற்றுக் கொள்ள நிறைய நேரம் கிடைத்தது. நிறையப் பயிற்சி செய்ய முடிந்தது. கச்சேரி வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

கே: குரல் வளத்துக்காக என்ன செய்கிறீர்கள்?

ப: பொதுவாக கச்சேரிகளின் போது உணவு விஷயத்தில் கவனமாக இருப்பேன். மிகவும் குளிர்ச்சியானவற்றைச் சாப்பிட மாட்டேன். பேசுவதைக் குறைத்துக் கொண்டு விடுவேன். அதிர்ந்த குரலில் பேச மாட்டேன். அவ்வளவுதான்.

கே: ரேடியோ ஜாக்கியாகப் பணிபுரிந்த அனுபவம் பற்றி...

ப: வேர்ல்ட் ஸ்பேஸ் வானொலி அமைப்பினர் ‘ஸ்ருதி' என்னும் 24 மணி நேர கர்நாடக இசைச் சேனலை ஆரம்பித்திருந்தனர். நிகழ்ச்சிகள் தயாரிக்கவும், தொகுத்து வழங்கவும் என்னிடம் கேட்டனர். அது பகுதி நேர வேலை என்பதாலும், கர்நாடக இசை பற்றிய நிகழ்ச்சி என்பதாலும் விரும்பி ஒப்புக் கொண்டேன். ஆனால் அவர்கள் அலுவலகம் பெங்களூருக்கு மாற்றப்பட்டதால் என்னால் தொடர்ந்து அப்பணியில் ஈடுபட முடியவில்லை.

கே: மறக்க முடியாத கச்சேரி அனுபவம்....

ப: பல கச்சேரிகள் அப்படிப்பட்டவை தான். கச்சேரியின் முடிவில் ரசிகர்கள், பாட்டு அற்புதமாக இருந்தது, இந்த வித்வானை எனக்கு ஞாபகப்படுத்தியது என்றெல்லாம் கூறும்போது அது மறக்க முடியாததாகத் தான் இருக்கும்.

ஒருமுறை மும்பை சண்முகானந்தா சபாவில் என் கச்சேரி. நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்து ரசித்த அதன் தலைவர், ஒரு மிகப்பெரிய வெள்ளிக் குத்து விளக்கை எனக்குப் பரிசாக அளித்தார். அதை மறக்க முடியாது. ஏனென்றால், அவர் எல்லாக் கச்சேரிகளிலும் இறுதிவரை இருந்து ரசிக்க மாட்டாராம். மேலும் இசை ஜாம்பவான்களையும், வாழ்நாள் சாதனையாளர்களையும் மட்டுமே அப்போது அது போன்று மேடையில் பாராட்டிச் சிறப்புச் செய்வார்களாம். அந்த வகையில் வளரும் கலைஞனான என்னைப் பாராட்டி அவர் மேடையில் கௌரவித்ததை என்னால் மறக்க இயலாது.

கே: இசை விமர்சனம் குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: விமர்சனம் என்பது தேவையான ஒன்றுதான். ஆனால் கடுமையான விமர்சனங்கள் வரும்போது மனம் சற்று தளரத்தான் செய்யும். ஒரு கச்சேரி நன்றாக இருந்ததா இல்லையா என்பது ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்து அப்போதே தெரிந்து விடும். ஆனால் கச்சேரி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தும் விமர்சனம் மோசமாக வந்திருந்தால் மனத்திற்கு வருத்தமாக இருக்கும். அவற்றை விமர்சகரின் ஒரு கருத்தாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே தவிர, அதை வைத்துக் கொண்டு இசைக் கலைஞரின் திறமை பற்றிய ஒரு தவறான முடிவுக்கு வந்துவிடக் கூடாது. என்னைப் பொறுத்த வரை என்னை ஊக்குவிக்கும் விமரிசனங்களே இதுவரை வந்திருக்கின்றன.

கே: நிறையக் கச்சேரிகளை ஒத்துக் கொள்வதால் குரல்வளம் பாதிக்கும் அல்லவா?

ப: ஆம், பாதிக்கும். ஆனால் டிசம்பர் போன்ற மியூசிக் சீசன் மாதங்களில் தான் நிறையக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சபாக்களும் நிறைய உள்ளன. கச்சேரிகளும் நிறைய நடக்கின்றன. வேறு வழியில்லாமல் தான் பாடகர்களும் தொடர்ந்து கச்சேரிகள் செய்கின்றனர். மற்ற மாதங்களில் குறைவாகத்தான் கச்சேரிகள் நடக்கின்றன.

கே: வெளிநாட்டுக் கச்சேரி அனுபவம், அங்குள்ள மக்களின் இசை ரசனை, ஆர்வம் பற்றி...

ப: மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா எனப் பல இடங்களில் நான் கச்சேரிகள் செய்திருக்கிறேன். அங்குள்ள தமிழர்கள்தான் பெரும்பாலும் கேட்க வருவர். கர்நாடக இசைபற்றி அறிந்த வெளிநாட்டவரும் கூட வருகின்றனர். சில சமயம் இசைக் குறிப்புகள் (நோட்ஸ்) கூடக் கொடுக்கின்றனர். அவர்களுக்கு ஆராய்ச்சி அறிவு அதிகம் என்பதால், எதையும் ஆராய வேண்டும் என்ற ஆர்வத்துடன் வருகின்றனர். சமீபத்தில் அனில் ஸ்ரீனிவாஸ் என்னும் பியானோ இசைக்கலைஞருடன் அமெரிக்கா சென்றிருந்தேன். அவர் கர்நாடிக், வெஸ்டர்ன் இரண்டும் தெரிந்தவர். அன்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் முழுவதும் வெளிநாட்டவர்தான். அவர்களில் பலருக்கு கர்நாடக சங்கீதம் பற்றி அவ்வளவு அதிகம் தெரியாது. ஆனாலும் கர்நாடிக், வெஸ்டர்ன் இரண்டும் கலந்த அந்த நிகழ்ச்சி அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. நல்ல வரவேற்பளித்தனர்.

ஒருமுறை மலேசியாவிற்குச் சென்றிருந்தேன். கச்சேரி முடிந்து கேள்வி நேரத்தின் போது ஒரு பெண்மணி எழுந்து கர்நாடக சங்கீதம் என்றால் என்ன என்று ஒரு கேள்வி கேட்ட்டார். அவர் வெளிநாட்டவர். நான் அவருக்குப் பொறுமையாக பாரதப் பாரம்பரியம், நமது இசை, அதன் தொன்மை, வர்ணம், சரளிவரிசை, ராகங்கள் என்பது பற்றியெல்லாம் விரிவாக விளக்கினேன். 'எனக்கு உங்கள் மொழி புரியாது. ஆனால் இந்த இசையை நான் மிகவும் ரசிக்கிறேன்' என்றார் உணர்ச்சி பூர்வமாக. இதுதான் இசையின் வெற்றி.
Click Here Enlargeகே: கர்நாடக இசைப்பாடகர்கள் திரைப்படங்களில் பாடுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: அதில் தவறில்லை என்றுதான் நினைக்கிறேன். அதுவும் இசையின் ஒரு வடிவம் தானே! கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் பாடல்களைப் பாடலாம். இளையராஜா, ரகுமான் போன்ற மேதைகள் கர்நாடக இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நான் வித்யாசகர், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் இசையமைப்பில் பாடியிருக்கிறேன். தொலைக்காட்சிக்காக சில ஜிங்கிள்ஸ் பாடியிருக்கிறேன். இளையராஜாவின் வீட்டில் நடந்த நவராத்திரி உற்சவத்தின் போது பாடியிருக்கிறேன். அவருடைய இசையமைப்பில் பாடிய பாடல் இன்னமும் வெளியாகவில்லை. நான் ராஜாவின் ரசிகனும் கூட.

கே: திரைப்படங்களைப் போல் தற்போது இசையிலும் நம்பர் 1, நம்பர் 2 என்று செய்திகள் வருகிறது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: இசையில் அவ்வாறு வரிசைப்படுத்துவதே தவறானது. ஜி.என்.பி., மணி அய்யர் போன்ற ஜாம்பவான்கள் தான் என்றும் நம்பர் ஒன்.

கே: சக கலைஞர்களுடனான உங்களது அனுபவங்கள் குறித்து...

சிறு சிறு குழந்தைகள் கூட மிக ஆர்வமாகப் பாடும் விதம் வியக்க வைக்கிறது. அமெரிக்க சங்கீத உலகில் ஒரு புரட்சி என்று கூட இதைச் சொல்லலாம். உலகில் வேறு எங்கும் இந்த அளவிற்கு ஆர்வமாய் இசை கற்றுக் கொள்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நமது பாரம்பரியத்தை விடாமல் அவர்கள் பின்பற்றி வருவது எனக்கு மிக மகிழ்ச்சி.
ப: அந்தக் காலத்தில் கச்சேரி நடக்கும் போது மற்ற பாடகர்கள் மேடையில் முன்வரிசையில் அமர்ந்து கேட்பார்களாம். அவர்களுக்கிடையே நல்ல நட்பும், புரிதலும் இருந்தது. தற்காலத்தில் அவை சாத்தியமில்லை. காரணம், போட்டி, பொறாமை என்பதெல்லாம் இல்லை. அந்த நேரத்தில் இன்னொருவருக்கு வேறிடத்தில் கச்சேரிகள் இருக்கலாம். வேறு பணிகள் இருக்கலாம். ஆன்லைன் வகுப்புகள் போன்றவற்றால் நேரமில்லாது இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை சக கலைஞர்கள் அனைவருடனும் நான் நட்புடன் பழகி வருகிறேன். எங்களது பக்கவாத்தியக் கலைஞர்களுடன் நேரம் கிடைக்கும் போது கிரிக்கெட் ஆடுவேன். வெளியூர் டூர் போகும்போது கூட பாடல்கள் குறித்து, திரைப்படங்கள் குறித்து விவாதித்துக் கொண்டுதான் செல்வோம். எல்லோரும் ஒரு குடும்பமாகத்தான் பழகி வருகிறோம்.

கே: பண்டைய வாத்தியங்களில் ஒன்றான நாதஸ்வரம் அண்மைக் காலங்களில் கச்சேரிகளில் இடம்பெறுவதில்லை. உங்கள் கருத்து என்ன?

ப: அது தவறுதான். ஒரு வகையில் துரதிர்ஷடவசமானது கூட. நாதஸ்வரம் என்பது மங்கள வாத்தியம் மட்டுமல்ல. அது ஒரு மிகப் பழைமையான இசைக்கருவியும் கூட. அதற்கு இன்னமும் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும், நிறையக் கச்சேரிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.

கே: இசைக்கலைஞர்கள் பக்க வாத்தியக்காரர்களை ஒழுங்காக நடத்துவதில்லை, அவர்களுக்குச் சரியான ஊதியம் தருவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து....

ப: கச்சேரி என்பது ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மேடையிலும் அது சிறப்பாக அமையும். அவசியம் பக்க வாத்தியக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். எங்களைப் பொறுத்தவரை பாட்டி காலத்திலிருந்தே நாங்கள் சக கலைஞர்களை மிக கௌரவமாக எங்கள் குடும்பத்தினர் போன்று நடத்தி வருகிறோம்.

கே: உங்கள் ஒலிநாடாக்கள் குறித்து...

ப: முதலில் வெளியானது ஆண்டாள் திருப்பாவை. பிறகு திருவெம்பாவை, பஜனைப் பாடல்கள் வெளியாயின. ராஜேஷ் வைத்யாவுடன் இணைந்து நிறைய ஃப்யூஷன் செய்துள்ளேன். அதுபோகக் கர்நாடக இசைப்பாடல்கள், கச்சேரிகள் சிடியாக வெளியாகியுள்ளன. அனில் ஸ்ரீனாவாஸுடன் இணைந்து தயாரித்த ஃப்யூஷன் பாடல்கள் சிடி வெளியாகி உள்ளது. ஜெயதேவர் அஷ்டபதி, மீராபஜன், பாசுரங்கள், பாபநாசம் சிவன், வேங்கட சுப்பையர், பாரதியார் போன்றோரின் பாடல்களை, கிருதி என்பதை விட கவிதையாக, குறிப்பாக வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கவித்துவம் குறையாமல், பியானோ இசை சேர்த்து நல்ல மெலோடியாகத் தந்துள்ளோம். பல புதுமையான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

கே: அமெரிக்காவாழ் வளரும் இளம் கலைஞர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: சமீபத்தில் நான் சான்பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்குச் சென்றிருந்தேன். அங்கிருக்கும் இளம் இசைக் கலைஞர்களைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன். அவர்கள் காட்டும் ஈடுபாடு, ஆர்வம், திறமை, உழைப்பு என்னை பிரமிக்க வைத்தது. சொல்லப் போனால், எங்களை விட அவர்கள் அதிகம் கச்சேரிகளைக் கேட்கிறார்கள். கற்றுக் கொள்கிறார்கள். ஒரு வீட்டில் எப்போதும் கர்நாடக இசைப்பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தது. மற்றொரு வீட்டில் குழந்தைகள் ஹோம் வொர்க் செய்து கொண்டிருக்கும் போது கூடப் பின்னணியில் ஜி.என்.பி. பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவர்களில் பலர் ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர். தமிழில் பேசினால் சற்று வித்தியாசமாகப் பேசுகின்றனர். ஆனால் பாடும் போது வார்த்தைகளைத் தெள்ளத் தெளிவாக அவர்கள் உச்சரித்த விதம் என்னை பிரமிக்க வைத்தது. சிறு சிறு குழந்தைகள் கூட மிக ஆர்வமாகப் பாடும் விதம் வியக்க வைக்கிறது. அமெரிக்க சங்கீத உலகில் ஒரு புரட்சி என்று கூட இதைச் சொல்லலாம். உலகில் வேறு எங்கும் இந்த அளவிற்கு ஆர்வமாய் இசை கற்றுக் கொள்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நமது பாரம்பரியத்தை விடாமல் அவர்கள் பின்பற்றி வருவது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அங்கிருக்கும் கலைஞர்கள் மூலமாகவும், இங்கிருந்து செல்லும் இசைக் கலைஞர்களிடம் நேரிலும், இண்டர்நெட் மூலமாகவும், விடுமுறைக் காலங்களில் தமிழ்நாடு வந்து தங்கியும் அவர்கள் வெகு ஆர்வத்துடன் இசை பயின்று வருவது பாராட்டுக்குரியது.

கே: தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

ப: நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு ஒவ்வொரு வீட்டிலும் 'தென்றல்' இருப்பதைப் பார்த்தேன். பாரம்பரியக் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதழை வெளியிடுவது சிறப்பு. அங்குள்ள தமிழர்களைப் பற்றிப் புதுமையான பல செய்திகளைத் தந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் இதழ் வெளிவருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

26 வயதாகும் குருசரண் இசையில் இன்னும் நிறையச் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். அவரது கனவுகள் நிறைவேற வாழ்த்தி விடைபெறுகிறோம்.

தொடர்புக்கு
மின்னஞ்சல் - sikkilgurucharan@gmail.com
இணையதளம் - www.sikkilgurucharan.com/index1.html

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
மேலும் படங்களுக்கு
More

"நான் வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிப்பது என் தந்தையின் விருப்பமல்ல": T.S.ரவி
Share: 
© Copyright 2020 Tamilonline