Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
ஒருமணிப் பொழுது
கல்யாண மண்டபம்
- எல்லே சுவாமிநாதன்|டிசம்பர் 2008|
Share:
Click Here Enlarge'ரேகாவுக்கு சென்னையில நீங்க சொல்ற அந்த ஹோட்டல் பிடிக்கலையாம்"

"ஏனாம்?"

"லொகேஷன் சரியில்லயாம். முகப்பு சரியில்லயாம்... டெக்கரேஷன் அவ எதிர்பார்க்கற மாதிரி இல்லயாம்"

"விஷயத்தைப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாளே. இங்க அமெரிக்காவிலேயே அழகா கல்யாணம் பண்ணிடலாம். ஆயிரம் இடம் இருக்கு. சென்னையில பண்ணுன்னு பிள்ளை வீட்ல கேட்கிறதாலதானே அங்க போயி இடம் தேடறோம். ஒரு நாள்தானே. அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொல்லு. முன்ன பின்ன இருந்தா பரவாயில்ல. வரப்போறது நம்ம மனுசங்கதானே. மொத்தமாப் பாத்தா நூறு பேரு தேறாது."

"எனக்கு புரியுது. உங்க பெண்ணு பிடிவாதம் பிடிச்சா நான் என்ன பண்றது?"

"என்ன பொண்ணு வளர்த்திருக்கே நீ?"

"ஆமா, இதில உங்களுக்கு சம்பந்தமே இல்லியா? செல்லம் கொடுத்துக் கெடுத்தது நீங்க. என் பேச்சுக்கு துளிக்கூட மதிப்பில்லாம போச்சு."

கிணிங் என்ற சப்தத்துடன் ஈமெயில் கம்ப்யூட்டரில் இறங்கியது. பார்வதி கண்ணாடியைப் போட்டுக்கொண்டு படித்து, "குட் நியூஸ் அண்ட் பேட் நியூஸ்" என்றாள்.

"என்ன குட் நியூஸ்?" என்றார் சிவா.

உங்க தெரு டாக்டர் வரதாச்சாரியோட பிரிஸ்கிருப்ஷனை அனுப்பாதே. என் கசினுக்கு அவர்தான் மருந்து எழுதிக்கொடுத்து, அவர் கையெழுத்துப் புரியாம மருந்துக் கடையில தப்பா படிச்சிட்டு வயித்து வலி மருந்துக்கு பதிலா பெரிய பாட்டில்ல பூச்சி மருந்தைக் கொடுத்திட்டானாம்
ரமேஷ் ஈமெயில் போட்டிருக்கான். சென்னையில இருக்கிற அத்தனை கல்யாண மண்டபம், சத்திரம் எல்லாத்துக்கும் அட்ரஸ், போன் நம்பர், போட்டோ போட்டிருக்கான். இதான் குட் நியூஸ்."

"சரி பேட் நியூஸ் சொல்லு?"

"ஒண்ணுலயும் டிசம்பர் 7ம் தேதிக்கு இடம் இல்லையாம். ஏற்கனவே ரிசர்வ் பண்ணியாச்சாம்."

"இப்ப என்னதான் பண்றது?"

"உங்க அத்தை பிள்ளை ரகு ரிசர்வ் பேங்கில இருக்காரே, அவரைக் கேட்டு கல்யாணத்துக்கு ஏதாவது பிரைவேட் பங்களா, ஹால் கிடைக்குமான்னு கேட்டுப் பாருங்களேன்."

"சரி போனை எடு" என்றார் சிவா.

"பெண்ணைப் படிக்க வெச்சது, வளர்த்தது, மாப்பிள்ளை தேடினது எல்லாம் பெரிசா இல்லை. ஒரு நாள் கல்யாணத்துக்குச் சென்னையில கல்யாண மண்டபம் பிடிக்கறது பெரிய விசயமா ஆயிடுச்சு" என்று அலுத்தவாறே எண்களை அழுத்தினார்.

"ரகு, சிவா பேசறேன். எப்டி இருக்கே? டயாபிடீசா! கவலப்படாதே. மெடிசன் வேணுமா. சைக்ளோஹெக்சிடீனா? சரியா புரியல. டீடெய்லா ஸ்பெல்லிங் எழுது. உங்க தெரு டாக்டர் வரதாச்சாரியோட பிரிஸ்கிருப்ஷனை அனுப்பாதே. என் கசினுக்கு அவர்தான் மருந்து எழுதிக்கொடுத்து, அவர் கையெழுத்துப் புரியாம மருந்துக் கடையில தப்பா படிச்சிட்டு வயித்து வலி மருந்துக்கு பதிலா பெரிய பாட்டில்ல பூச்சி மருந்தைக் கொடுத்திட்டானாம். என் கசின் சந்தேகப்பட்டு டாக்டரைக் கூப்பிட்டு 'என்ன டாக்டர் மூணு நாளில குடிக்கணுங்கிறீங்க, முக்கி முக்கிக் குடிச்சாலும் மூணுமாசம் ஆகும் போல இருக்கு குடிச்சு முடிக்க'னு கேட்கப் போயித்தான் விசயம் புரிஞ்சிதுதாம். ஈமெயில் போடு, கொண்டு வரேன். எதுக்குக் கூப்பிட்டேன்னா, எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும். என் பெண் ரேகாவுக்கு டிசம்பர் 7ம் தேதி மெட்ராஸ்ல கல்யாணம் வெச்சிக்கலாம்னு திட்டம். பையனோட அப்பா அம்மா கல்யாணத்தை சென்னையில பண்ணணும்கிறா. முகூர்த்தம் வெச்சாச்சு. இப்ப பார்த்து ஒரு மண்டபமும் காலி இல்லங்கிறான். நீ பார்த்து ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா?

"ஓ.. ஓ.. அடடே. அப்படியா... புதிசா கட்டியிருக்கானா? புக் பண்ணிடு... ரெண்டு லட்சம் ஓகே... வேணாம். பேரம் பேசாதே. பணம் பிரச்னையே இல்ல. உனக்குப் போன் போட்டது நல்லதாப் போச்சு. குப்பு ஒரு இடம் இருக்குன்னு சொன்னானா?"

"என்னடா வெச்சிடவா. வெச்சிடுவான்னு அறுக்கற. போன்ல பேச பயப்படறே. எனக்கு ஒரு நிமிஷத்துக்கு அஞ்சு செண்டுதான். தாராளமா பேசு. இட் ஈஸ் நத்திங் ஃபார் மி.

"என்னது உன்னோட 88 டாட்ஜுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சா? விண்ட் ஷீல்டு கிளாஸ் போடணுமா! அதெல்லாம் காலாவதியாயிடுச்சு. வாங்கறது, கொண்டு வரது கஷ்டம். மெட்ராஸ்ல இப்ப டயோட்டா, ஹோண்டா, ஃபோர்டுன்னு புதுசா வந்தாச்சே! ஏன் அரதப் பழசைக் காரைக் கட்டிகிட்டு மாரடிக்கற.

"இப்ப டீசலே ஆனை வெலை விக்குது. பேசாம வண்டி முன்னால் ஒரு மாட்டை வாங்கிக் கட்டு. ஒரு வைக்கோல் கட்டுக்கு இருவது மைல் ஈசியாப் போகும். விடியோ செல்போன் வேணுமா? இங்க எங்களுக்கு அதெல்லாம் இன்னம் வரலை. நீங்க எங்கியோ போயிட்டீங்க. சென்னையில எல்லாரும் அட்வான்ஸ்டு செல்போன் வெச்சிருக்கான். போன வருசம் வடபழனிக் கோயில்லேருந்து வீட்டுக்குப் போக ஒரு பிச்சைக்காரன்தான் ப்ளூபெரி செல்போன்ல கால்டாக்சி கூப்பிட்டுக் கொடுத்தான்.

"ஓகே முதல்ல அந்த மண்டபத்தை முடி. செக் அனுப்பறேன்."

மகிழ்ச்சியுடன் பார்வதியைப் பார்த்தார் சிவா.

"பார்வதி. வேலை முடிஞ்சுது. அமைச்சரோட பினாமி ஒருத்தன் புத்தம் புதிசா ஒரு மண்டபம் கட்டியிருக்கானாம். இன்னம் யாருக்கும் தெரியாதாம், புக் பண்ண ரகுகிட்ட சொல்லியாச்சு."

"அது உங்க பெண்ணுக்குப் புடிக்கணுமே. நானும் அவளும் புடவை நகை வாங்க ஒரு வாரம் சென்னைக்குப் போறோம்.

அப்பக் கொண்டுபோய்க் காட்டவா?"

"இத பாரு. என்னால முடிஞ்சதைப் பண்ணிட்டேன். இதுவும் புடிக்கலன்னு நொட்டை சொன்னால் அப்பறம் கல்யாணத்தை மெரினா பீச்சிலயோ, ரங்கநாதன் தெருவிலேயோதான் செஞ்சிர வேண்டி வரும்."

சென்னைக்குப் போன ரேகாவையும் பார்வதியையும் சிவாவின் நண்பர் ரகு வரவேற்றார். அவர் என்ன சொல்லியும் கேட்காமல் ரேகா அவர் வீட்டில் தங்க மறுத்து ஓட்டலில் தங்க முடிவுசெய்தாள். மறுநாள் ரகுவுடன் போய் புதிய கல்யாண மண்டபத்தைப் பார்வையிட்டாள். காமிராவில் படம் பிடித்துக் கொண்டாள். கையில் இருந்த டயரியில் ஏதோ குறித்துக் கொண்டாள்.

"என்னம்மா இடம் பிடிச்சிருக்கா? அட்வான்ஸ் கொடுக்கலாமா? அடுத்த வாரம் பெயிண்ட் அடிச்சு முடிச்சதும் உனக்கு போட்டோ அனுப்பவா? உனக்கு ஏதாவது தெரிஞ்சிக்கணுமா? இது ஓக்கேதானே?"

"லெட் மீ திங்க், அங்கிள்" என்று மட்டும் சொன்னாள்.

"ஆ, சொல்ல மறந்திட்டனே. குப்புசாமின்னு இன்னொரு சினேகிதர் உங்கப்பாவுக்கு. அவர் ஒரு இடம் இருக்கு நங்கநல்லூர் பக்கம்னு சொன்னார். அதையும் போய்ப் பார்த்திடறயா. அவரை உன் ஓட்டலுக்கு வரச்சொல்றேன்."

"வரட்டுமே. அதையும் பாத்துடலாம்" என்றாள் பார்வதி.

குப்புசாமி ஓட்டலுக்கு வந்தார்.
ஒரு வேளை சாப்பாட்டுக்கு மத்தவங்க போடற எச்சில் இலைய எதிர்பார்த்து வாழ வேண்டிய துர்ப்பாக்கியசாலிகளும் இங்க உண்டுன்னு இப்பப் புரியுது...கல்யாணத்தன்னிக்கு இந்த ஏழைக் குடும்பத்தோட நம்மால முடிஞ்ச அளவுக்கு இன்னும் பல ஏழைகளுக்கு எச்சில் இலையப் போடாம, ஒழுங்கா இலை போட்டு முழுச் சாப்பாடு பரிமாறணும்.
"நீதான் ரேகாவா. உனக்குதான் கல்யாணமா. சந்தோஷம். உங்கப்பா என் பால்ய சினேகிதன். எனக்கும் சேத்து பஸ்ல டிக்கட் வாங்கி ஸ்கூலுக்கு அழச்சிண்டு போவன். ஓட்டலுக்கு, சினிமாக்குனு அவனோட போயிருக்கேன். அவன் காலேஜ், அமெரிக்கானு போனப்பறம் அதிகமா டச் இல்லாம போயிடுத்து. நீதான் ரேகாவா? ரகு உன் கல்யாணத்துக்கு ஒரு பெரிய மண்டபம் பார்த்திருக்கான். ரெண்டு லட்சத்துக்கு மேல வாடகையாம். எனக்கு தெரிஞ்ச இடம் ஒண்ணு இருக்கு. ஒரு கல்யாணத்துக்கு புக் ஆகி இப்ப கான்சலாயிடும் போல இருக்கு. அது நமக்கு கிடைக்கும். ஐம்பதாயிரத்துக்குள்ள முடிஞ்சிடும். போகலாமா? 52L பஸ்ல போயிடலாம். தெருமுனையில எறக்கிடுவான். டிக்கட் பத்து ரூபாய்க்கு மேல ஆகாது."

"கார்லயே போகலாம், ஏறுங்க அங்கிள். வாம்மா ஏறிக்கோ" என்றாள் ரேகா.

கார் போய் சற்றுச் சிதிலமான கட்டிடம் முன் நின்றது. கோதைநாயகி கல்யாணச் சத்திரம் என்ற எழுத்துகள் மங்கலாய்க் காட்சி அளித்தன. ரேகா முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. பார்வதிக்கும் பிடித்தமாகத் தெரியவில்லை.

"அடடா, சொல்லியிருக்கேன் வருவேன்னு, பூட்டியிருக்கான், பக்கத்திலதான் மானேஜர் வீடு, நான் போய் அழச்சிட்டு வரேன்" என்று குப்புசாமி கிளம்பினார்.

"ரேகா இந்த இடம் சரியா வரும்னு தோணல. எனக்கே புடிக்கல. ஆனா அதை முகத்தில அடிச்சாப்பல இங்கயே சொல்லாதே. குப்புசாமி சார் எதிர்க்க எதுவும் பேசவேண்டாம்" என்றாள் பார்வதி.

கட்டிடத்தின் அருகே நடைபாதையில் ஒரு சிறுமி தட்டில் பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தாள்.

ரேகாவைப் பார்த்ததும் அவள் அருகே மாலையுடன் ஓடி வந்தாள். "யக்கா, மணி மாலை வாங்கிக்க. இருவது ரூவாதான், போட்டுப்பாரு, உன் கலருக்கு இது நல்லாருக்கும்" என்று மாலையைக் காட்டினாள்.

"சேசே! அந்தாண்டை போ, எங்களுக்கு இதெல்லாம் வேணாம்" என்று எரிந்து விழுந்தாள் பார்வதி.

"எனக்கு ஒரு மாலை குடும்மா" என்றாள் ரேகா.

"உனக்குப் பைத்தியம் புடிச்சிருக்கா. பொன்னும், வைரமுமா கொட்டிக்கிடக்கு. இந்தப் ப்ளாஸ்டிக் பீத்தல் வேணுமா? இது மாதிரி ஒரு கல்யாணச்சீர் இல்லன்னு யாரு அழறா? தொட்டாலே அழுக்கு ஒட்டிக்கும் போல இருக்கு."

"மாம், டோண்ட் பி மீன்" என்று முறைத்தாள் ரேகா.

அந்த மாலையை வாங்கிக் கழுத்தில் போட்டுக் கொண்டாள். பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அந்தச் சிறுமியிடம் கொடுத்தாள்.

"அய்யோ, நூறு ரூவாடி அது!" பதறினாள் பார்வதி.

"கூல் டவுன் மாம், ஐ நோ இட் ஈஸ் ஹன்ட்ரெட் ருபீஸ்" என்றாள் ரேகா.

"சில்ற இல்லக்கா. நீதான் முதல் போணி"

"பாக்கி வேண்டாம்"

"அப்ப இன்னம் நாலு மாலை கொடுத்திடவா அக்கா?"

"வேணாம். இது போதும். பாக்கி பணத்தை நீயே வெச்சிக்க"

"ரொம்ப நன்றி அக்கா. இங்க கல்யாணம் பண்ணப் போறீங்களாம்மா?"

"இங்க போயி யாரு பண்ணுவா. பெரிய்ய ஓட்டல்லதான் ஏற்பாடு செய்வோம்" என்றாள் ரேகாவின் தாய்.

"யக்கா யக்கா தயவு செஞ்சி இங்கயே பண்ணுக்கா" என்று கெஞ்சினாள் அந்தப்பெண்.

"எங்க பண்ணினா உனக்கு என்ன? இங்க எதுக்கு பண்ணணும்? உனக்கு இதில கமிஷன் வருதா?"

"இல்லம்மா. இங்க கல்யாணம் நடந்தா கல்யாணச் சாப்பாட்டு எச்சில் இலையைத் தெருல கொட்டுவாங்க. நாங்க எங்க குடும்பத்தோட அதை எடுத்து இருக்கிற மிச்சம் மீதியைச் சாப்பிடுவோம். பெரிய ஓட்டல்ல போயிக் கல்யாணம் பண்ணினா சாப்பாட்டு இலைய லாரில ஏத்தி கண் காணாத எடத்தில குப்பையில போட்ருவாங்க. இங்கயே போட்டா உங்களால எங்களப் போல ஏழைங்களுக்கு ஒரு நாளைக்காவது வயிறு நிறையுமில்ல..."

சுருக்கென்றது ரேகாவுக்கு.

தாயைப் பார்த்தாள்.

"கஷ்டமே தெரியாம வளர்ந்திட்டேன். இப்படி ஒரு வேளை சாப்பாட்டுக்கு மத்தவங்க போடற எச்சில் இலைய எதிர்பார்த்து வாழ வேண்டிய துர்ப்பாக்கியசாலிகளும் இங்க உண்டுன்னு இப்பப் புரியுது. பெரிய ஓட்டல் தடபுடல் எல்லாம் எனக்கு வேண்டாம். என் கல்யாணத்தை அதிக ஆடம்பரம் இல்லாம நடத்தலாம். ஆனா ஒண்ணு. என் கல்யாணத்தன்னிக்கு இந்த ஏழைக் குடும்பத்தோட நம்மால முடிஞ்ச அளவுக்கு இன்னும் பல ஏழைகளுக்கு எச்சில் இலையப் போடாம, ஒழுங்கா இலை போட்டு முழுச் சாப்பாடு பரிமாறணும். ஓ.கே.?"

எல்லே சுவாமிநாதன்
More

ஒருமணிப் பொழுது
Share: 
© Copyright 2020 Tamilonline