Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சிறுகதை
பிதாமகன்
மனோதத்துவம்
- எல்லே சுவாமிநாதன்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeசிவா தன் மகன் ரகுவுடன் மாடிப்படியில் ஏறி இரண்டாவது தளத்துக்குப் போனார். "ரூம் 223 எங்கனு பாருடா" என்று சொல்லி வரிசையாக இருந்த அறைகளின் கதவில் ஒட்டியிருந்த எண்களைப் பார்த்தார்.

ரகு கொஞ்சம் வேகமாக ஓடி அந்த அறையைக் கண்டுபிடித்த மகிழ்வில் "இங்க இருக்குப்பா" என்று கூவினான்.

அறையின் கதவில் 'டாக்டர் ஆனந்தன், மனோதத்துவ நிபுணர்' என்ற பலகை இருந்தது.

உள்ளே போனதும் ஆனந்தன் இவர்களை வரவேற்று அமரச் சொன்னார். ரகு உட்காராமல் அங்கும் இங்கும் தன் பார்வையை அலைய விட்டான்.

"தம்பி, அந்த மூலையில் காமிக்ஸ், கதைப்புத்தகம் இருக்கு. வேணும்னா எடுத்துப் படி" என்று சொன்னவுடன், ரகு ஓடிப்போய் அந்தப் புத்தகங்களைப் புரட்டத் தொடங்கினான்.

டாக்டர் சிவாவிடம், "என்ன காரியமா வந்தீங்க? நான் உங்களுக்கு என்ன செய்யணும்?" என்று கேட்டார்.

எல்லாரும்தான் எழுதக் கத்துக்கிறோம். ஆனா ஒருத்தர் கையெழுத்து இன்னொருத்தர் கையெழுத்து போல இல்ல. ஏன்? எழுத்தை எழுதுவது கை. கையை இயக்குவது தசை. தசையை இயக்குவது எலும்பு. எலும்பை இயக்குவது மனம்.
"என் மகன் ரகுக்கு பத்து வயசாவுது. அஞ்சாம் வகுப்பில இருக்கான். படிப்புல சுமார்தான். ஒரு சராசரி மாணவன்தான். முனைஞ்சா வகுப்பில முதலா இருக்கலாம். முயற்சி இல்ல. அடிக்கடி வம்பில மாட்டிக்கிறான். பள்ளிக்கூட சுவத்தில் கிறுக்கிட்டான்னு வாத்தியார் என்னைக் கூப்பிட்டுத் திட்டறாரு. பாடப்புத்தகத்தில பேனாவால கோடு போடறானாம். என் சினேகிதர் ஒருத்தர் உங்ககிட்டப் போனா அவனை சோதித்துச் சொல்லுவீங்கன்னு சொன்னாரு. அதான் இப்ப உங்ககிட்ட வந்தோம்" என்றார் சிவா.

"நீங்க சரியான இடத்துக்குதான் வந்திருக்கிங்க" என்றார் டாக்டர்.

"டாக்டர், நிஜமாவே அவன் மனசில என்ன இருக்குனு சொல்ல முடியுமா?"

"முடியும். இப்ப ஒண்ணு செய்யலாம். இந்தாங்க பேப்பர். இதில உங்க மனசுக்குத் தோணினத எழுதுங்க. என்ன வேணா எப்படி வேணா எழுதுங்க" என்றார்.

சிவா சற்றுத் தயக்கத்துக்குப் பிறகு சில வரிகள் எழுதி டாக்டரிடம் கொடுத்தார்.

டாக்டர் அதைப் பார்த்துவிட்டு, "உங்களுக்கு தெய்வ நம்பிக்கை உண்டு. உங்கள் மகன் முன்னுக்கு வரதில ஆர்வம் இருக்கு. எல்லாரும் புகழற மாதிரி அவன் வரணும்னு விரும்பறீங்க. உங்கள் முன்னோர்களை மிகவும் மதிக்கிறீங்க. வாழ்க்கையில முன்னேறணும் என்ற துடிப்பு உங்களுக்கு இருக்கு. சிக்கனமா இருக்கறதுல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு. நல்ல விசயத்துல நாட்டம் இருக்கு. என்ன நான் சொன்னது சரியா?" என்றார்.

"சரிதான் டாக்டர். நான் எழுதினதை வைத்து எப்படி சொல்றீங்க" என்று வியந்தார் சிவா.

"நம்ம கையெழுத்து, படங்கள், கிறுக்கல்கள் எல்லாம் நம்மைப் படம் பிடித்து காட்டுகின்றன. எல்லாரும்தான் எழுதக் கத்துக்கிறோம். ஆனா ஒருத்தர் கையெழுத்து இன்னொருத்தர் கையெழுத்து போல இல்ல. ஏன்? எழுத்தை எழுதுவது கை. கையை இயக்குவது தசை. தசையை இயக்குவது எலும்பு. எலும்பை இயக்குவது மனம். மனத்தை உள்மன நிகழ்வுகள், அனுபவங்கள் பாதிக்கின்றன. அதெல்லாம் கையெழுத்தில் வெளிப்படுகின்றன. இங்க பாருங்க. உங்க கையழுத்தைப் போட்டிருக்கீங்க. அதில இனிஷியல் பெரிசா இருக்கு. இது உங்க தகப்பனாரை உயர்வாகக் கருதுவதைச் சொல்கிறது. உங்க கையெழுத்து கிறுக்கலா இல்லாம தெளிவா இருக்கு. உங்கள் பெயரை, உங்களை நேசிப்பவர் நீங்கள். கையெழுத்து இடதிலிருந்து வலதுக்கு சரிவாய் கீழிலிருந்து மேலே போகிறது. இது வாழ்வில் உயர்வை நாடுகிற குணத்தைக் காட்டுகிறது.

பாருங்க, முதல்ல பிள்ளையார் சுழி போட்டு வேலும் மயிலும் துணைன்னு எழுதியிருக்கீங்க. இது தெய்வ நம்பிக்கையைக் குறிக்கிறது. இங்க ஒரு குறள் எழுதியிருக்கீங்க.

தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

உங்க மகனை முன்னேற்ற விரும்பறீங்க. அடுத்த வரியில கொக்கொக்க என்று எழுதி அடித்து விட்டீர்கள். அந்த குறள் உங்களுக்குத் சரியாத் தெரியாததால கூட இருக்கலாம். இல்லாட்டி கொக்கு மாதிரி காரியத்துல கண்ணா இருந்து வாய்க்கிற தகுந்த நேரத்தில செயல்படணும்னு ஆசை இருந்தும் செய்ய முடியலை என்ற குற்ற உணர்வையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

"அசந்து போயிட்டேன் டாக்டர். ஆமா நல்ல விசயத்துல நாட்டம்... சிக்கன புத்தினு சொன்னது எப்படி?"

"ஒழுங்கா ஒரு திருக்குறள் எழுதினதே நல்ல விசயத்துல நாட்டம்னு காட்டுது. இவ்ளோ பெரிய பேப்பர்ல ஒரு சின்ன மூலையில இவ்ளவும் எழுதியிருக்கீங்க. இது சிக்கனம் தானே. உங்க சின்ன வயசில சினிமா நோட்டீசு பின்னாலயே சிறப்புத் தமிழ் வீட்டுப் பாடம் எழுதியிருந்தா நான் அதிசயப்பட மாட்டேன்."
ரகு காரின் சக்கரத்தின் அருகே ஒரு நாயின் படத்தை வரைந்தான். ஒரு காலைத் தூக்கி அந்த நாய் கார்மீது சிறுநீர் கழிப்பது போல கோடு போட்டான்.
"ஆமா டாக்டர். பேப்பரை வீண் செய்ய எனக்கு மனசு வராது. என் மகனை எப்படி சோதிக்கப் போறீங்க? அவன் என்னை மாதிரி ஏதாச்சும் எழுதுவான்னு எனக்கு நம்பிக்கை இல்ல."

"அந்தக் கவலை உங்களுக்கு எதுக்கு? யாரை எப்படி சோதிக்கணுங்கிறது என் வேலை. அவனை வரச் சொல்லுங்க. தம்பி இங்க வாப்பா" என்று அழைத்தார்.

ரகு அரை மனதுடன் கையில் ஒரு புத்தகத்தோடு வந்தான்.

"தம்பி அந்தப் புத்தகம் அப்புறம் படிச்சிக்கலாம். பக்கத்து ரூம்ல உன்னை உட்கார்த்தி வைக்கப் போறேன். இந்தா பேப்பர் பென்சில். என்ன வேணா எழுதிக்க" என்று சொல்லித் தன் உதவியாளரை அழைத்தார். அவர் ரகுவை அடுத்த அறைக்கு அழைத்துப் போனார்.

"இங்க வந்து உட்காருங்க" என்று டாக்டர் சிவாவை ஒரு பெரிய டிவிமுன் அமர வைத்தார். இப்ப உங்க பையன் எழுதறதை அவனுக்குத் தெரியாம நாம பார்க்கலாம். அவனுக்குப் பின்னால ஒரு காமிரா அவன் எழுதரதை நமக்கு படம் எடுத்துக் காட்டும் என்று சொல்லி பட்டனை அழுத்த, திரையில் ரகு அமர்ந்து எழுதும் காட்சி தெரிந்தது.

அவன் சிறிது நேரம் எதுவும் எழுதாமல் இருந்தான். பிறகு மெதுவாக ஒரு கோடு இழுத்தான். அது மெல்ல ஒரு காராக வரைந்தான். "பாருங்கள் அவன் வாழ்க்கையில வசதிக்கு ஆசைப்படுகிறான் அதுதான் கார் படம்... உங்களிடம் கார் இருக்கிறதா?"

"இல்லை. எனக்கு ஒரு சைக்கிள்தான் கார்"

காரின் முகப்பில் ஒரு வட்டம் போட்டான். அதில் மூன்று கோடுகளை இழுத்தான்.

"ஆஹா" என்றார் டாக்டர். "இது பென்ஸ் காரின் அடையாளச் சின்னம். அவன் ஆடம்பரத்துக்கு ஆசைப்படுகிறான். காருக்கு ஆசைப்பட்டா வசதிக்கு ஆசைன்னு அர்த்தம். பென்ஸ் காருக்கு ஆசைப்பட்டா ஆடம்பரத்துக்குனு பொருள்."

ரகு காரின் லைசென்ஸ் பிளேட்டை வரைந்தான். "லைசன்ஸ் பிளேட்டே ஒருவரைக் காட்டிக் கொடுக்கும்."

“அப்படியா?" என்றார் சிவா.

“யெஸ். SUE4YOU... அதாவது நான் ஒரு வக்கீல்... PIPEDOC... பைப் டாக்டர்... அதாவது குழாய் ரிப்பேர் செய்யும் பிளம்பர்.. HEMNSEW தையல்காரர். இப்படி லைசன்ஸ் பிளேட்ட வெச்சிட்டே அவங்க யாருன்னு தெரிஞ்சிக் கலாம்" என்றார் டாக்டர்.

ரகு தான் வரைந்த காரின் லைசென்ஸ் பிளேட்டில் 666 என்ற எண்களைப் போட்டான்.

டாக்டர் புருவத்தை நெறித்தார். "சிவா, திஸ் ஈஸ் கிரேட்... 666 என்றால் என்ன தெரியுமா?"

சிவா உதட்டைப் பிதுக்கினார்.

"அந்த எண் சைத்தானை குறிக்கும் எண்... இந்த காருக்கு சைத்தான்தான் சொந்தக்காரன். அதாவது சைத்தானின் தூண்டலால்தான் இந்த ஆடம்பரத்துக்கு மனிதன் ஆசைப்படுகிறான். உங்க பையன் பெரிய தத்துவத்தை எப்படி சிம்பிளா சொல்லிட்டான் பாருங்க"

ரகு காரின் சக்கரத்தின் அருகே ஒரு நாயின் படத்தை வரைந்தான். ஒரு காலைத் தூக்கி அந்த நாய் கார்மீது சிறுநீர் கழிப்பது போல கோடு போட்டான்.

இதற்கு என்ன பொருள் என்பது போல சிவா டாக்டரை பார்த்தார்.

"அவனோட உள்மனது இந்த ஆடம்பரத்தை வெறுத்து ஒதுக்கச் சொல்கிறது. அடடடா இந்தச் சின்ன வயசில எவ்வளவு பெரிய தத்துவம்! வாங்க அவனைப் பார்க்கலாம்" என்று சிவாவை ரகு இருந்த இடத்துக்கு அழைத்துப் போனார்.

ரகுவைத் தட்டிக்கொடுத்தார்.

"ரகு வெரி குட். இந்தப் படம் போட உனக்கு வாழ்க்கையில நிகழ்ந்த ஒரு சம்பவம் காரணமா இருக்கணும். அது என்னனு நான் தெரிஞ்சிக்கலாமா?"

ரகு கலவரத்தொடு பதில் சொன்னான், "நீங்க என்ன கேக்கறீங்கனு தெரியல.. அதோ வெளிய தெரியுதே காரு. அதைத் தான் வரைஞ்சேன்" என்றான்.

டாக்டர் வெளியே பார்த்தார். கீழே XYZ 7666 என்ற லைசன்ஸ் பிளேட்டுடன் நின்றிருந்த டாக்டரின் பென்ஸ் காரின் மேல் நாய் இன்னமும் அசிங்கம் செய்து கொண்டிருந்தது.

மிகுந்த கோபத்துடன் டாக்டர் காவல்காரரிடம் கத்தினார். "என்னய்யா பண்றீங்க அங்க.. நாய் காரை நாசம் பண்ணிட்டு இருக்கு. காலையிலதான் காரை வாஷ் பண்ணினேன். விரட்டுங்கய்யா அந்த நாயை“

சிவா சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றார்.

அவரைப் பார்த்த டாக்டருக்குச் சற்று சங்கடமாய் இருந்தது.

இருந்தாலும் சமாளித்துக் கொண்டார்.

"சிவா... உங்க பையன் நல்லாப் படம் போடறான்... பார்த்ததை வரையற திறமை இருக்கு. மத்த பெற்றோர்கள் மாதிரி, மெடிசின், எஞ்சினீயரிங், அக்கவுண்டிங்னு உங்களுக்குப் பிடிச்சதைப் படிக்கச் சொல்லி அடிச்சு லாடம் கட்டாம, ஓவியத்துல விடுங்க. ஒரு ஓவியர்கிட்ட சேத்துடுங்க. அவன் பெரிய ஓவியனா வருவான்னு எனக்குத் தோணுது"

எல்லே சுவாமிநாதன்
More

பிதாமகன்
Share: