Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புக்கள் என்னென்ன? பாகம்-2
- கதிரவன் எழில்மன்னன்|மார்ச் 2007|
Share:
Click Here Enlarge2005-ஆம் வருடத்திலும் 2006-லும் சில மிகப்பெரிய நிறுவன விற்பனைகளும் (acquisitions) முதற் பங்கு வெளியீடுகளும் (Initial Public Offering-IPO) நடைபெற்றதாலும், ஆரம்ப முதலீட்டார் (venture capitalists) பல வருட வறட்சிக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணப்பையைத் திறந்து சற்று தாராளமாக முதலீடு பொழிய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதாலும், புது நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான ஆர்வம் இப்போது பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீப காலத்தில், எந்தத் துறைகளில் புது நிறுவனங்களுக்கு தற்போது (2007-இல்) வாய்ப்புள்ளது என்றும்,ஆரம்ப முதலீட்டாளர் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் என்னிடம் பலர் விசாரித்துள்ளார்கள். அவர்களது கேள்விகளும் அவற்றுக்கான எனது விடைகளும் இதோ:

இக்கட்டுரையின் சென்ற பகுதியில் நான் கூறியிருந்ததாவது: பெருநிறுவன வலைச்சாதனம் (enteprise networking) மற்றும் பெருநிறுவன மென்பொருள் துறைகளில் (enterprise software) மிகக் குறுகிய வாய்ப்புக்களே உள்ளன; ஆனால் சேவை மென்பொருள் (Software as a Service-SaaS), திறவூற்று மென்பொருள் (open source), நிதி, மருத்துவம் போன்ற துறைகளுக்கான மென்பொருள் (vertical segment software such as financial, health care etc), வளரும் சந்தைகளுக்கான (emerging markets) மென்பொருட்கள் போன்ற துறைகளில் வாய்ப்புக்கள் உள்ளன என்பதே.

2007-ஆம் ஆண்டில் நிறுவனங்களை ஆரம்பித்து முதலீடு பெறும் வாய்ப்புள்ள வேறு துறைகளைப் பற்றி இப்போது காண்போம்.

பயன்பாட்டு (applications software) மற்றும் நடுமென்பொருள் (middleware) துறை வாய்ப்புக்களைப் பற்றிக் கூறினீர்கள். பிற துறைகளில் எந்த மாதிரி வாய்ப்புக்கள் உள்ளன?

ஒரு நல்ல வாய்ப்புள்ள துறை என்றால் நிறுவனத் தகவல் தேடல் (enterprise information search) என்பேன். இணையத் தேடலில் Google, Yahoo, MSN போன்ற ஜாம்பவான்களும் இன்னும் சில நிறுவனங்களும் உள்ளன. அத்துறையில் குதித்து வெற்றி பெறுவதென்பது கடினமாகி வருகிறது.

ஆனால் பெரும் நிறுவனத் தேடலில் Google, Microsoft போன்ற சக்தி வாய்ந்த நிறுவனங்கள் இருந்தாலும் கூட, அவற்றை விடச் சிறப்பாக வேண்டிய நிறுவனத் தகவல்களை திரட்டித் தர வாய்ப்புக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஏனெனில், தற்போதுள்ள தேடல் மென்பொருட்கள் HTML, text போன்ற தகவல்களைத்தான் நன்கு தேடுகின்றனவே ஒழிய, ஒரு நிறுவனத்தில் உள்ள பலவிதமான தகவல்களையும் தேடி, ஒன்று திரட்டி, அவற்றின் இடையே உள்ள உறவுகளை எடுத்துக் காட்டும் அளவுக்கு இன்னும் சரி வரவில்லை. மேலும், உடனே கிடைக்கும் சமீபத் தகவல் இடங்களில் மட்டுமல்லாமல், பழைய archive எனச் சொல்லப்படும் தகவல்களையும் தேடித் திரட்டும் அம்சமும் வாய்ப்பளிக்கலாம். மேலும் புது விதமான தகவல் வகைகளான படங்கள் (images), குரலஞ்சல்கள் (voice mail), இயங்கும்படங்கள் (video), போன்றவையும் உடனடித் செய்தியனுப்பல் (instant messaging) போன்றவற்றில் உள்ள தகவல்களை ஒருங்கிணைக்கும் சக்தி வாய்ந்த மென்பொருட்கள் இன்னும் வரவில்லை. இவை போன்ற பலமிக்க அம்சங்களைத் தரும் நிறுவனத் தேடல் மென்பொருட்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

நிறுவனங்களில் தற்போது நடக்கும் இன்னொரு பெரும் போக்கு (trend) தகவல் மைய உள்கட்டு மெய்நிகராக்கம் (data center infrastructure virtualization) என்பது. அதாவது, ஒரு தகவல் மையத்திலுள்ள மின்வலை, பணிப்பொறிகள் (servers), பயன்பாடுகள் (applications) போன்றவற்றின் உண்மை நடப்பை மறைத்து வெளிநடப்புத் தோற்றத்தை மாறி நெகிழ்வளிப்பது (provide flexibility).

நிறுவனத் தகவல் மையங்களின் (enterprise data center), ஒவ்வொரு அம்சத்திலும் மெய்நிகராக்கம் அமுல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. பணிப்பொறிகளை மெய்நிகராக்க EMC (Vmware), Microsoft, மற்றும் திறவூற்று மென்பொருள் நிறுவனமான XenSource போன்றோரும், Intel, AMD போன்றோரும் தீவிரமாக முயன்று வருகிறார்கள். தகவல் சேமிப்பக வலை (storage network-SAN), வலையிணைப்பு சேமிப்பகம் (network attached storage-NAS) போன்ற துறைகளில் மெய்நிகராக்கம் இடம்பெற ஆரம்பித்துள்ளது. பயன்பாட்டு வழங்கல் (application delivery) துறையில் ஏற்கனவே பல பணிப்பொறிகளையும், ஏன் பல தகவல் மையங்களையுமே கூட ஒன்றே ஒன்றாகக் காட்டும் மெய்நிகராக்கம் நிகழ்ந்தாகி விட்டது. Citrix போன்றோர் பயனர்கள் (users), பார்க்கும் திரையளவு மெய்நிகராக்கத்தை (presentation virtualization) பல வருடங்களாக அளித்திருக்கிறார்கள். எனவே, எங்கு எப்படி நடத்தப் படுகிறது என்று நிலைநிறுத்த வேண்டிய கட்டாயமே இல்லாமலாயிற்று. ஆனால் அதே நெகிழ்மை (flexibility) தகவல் மைய நிர்வகிப்பை (management) மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட மெய்நிகராக்கப் பட்ட தகவல் மையத்தை மிகச் சிறப்பாக நிர்வகிக்க உதவக் கூடிய மென்பொருட்களை உருவாக்கும் வாய்ப்பு தற்போது தோன்றியுள்ளது. இந்த வாய்ப்பு குறுகிய காலமே இருக்கும். ஏனெனில் பல பெரிய, மற்றும் சிறிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பலப்பல புது நிறுவனங்களும் இந்த வாய்ப்பின் மேல் குதித்துள்ளன. இதில் தழைக்க வேண்டுமானால் விரைந்து செயல்பட்டாக வேண்டும்.
பயன்பாட்டுத் துறையல்லாமல், அடிப்படை மென்பொருளாகவும் (foundation or platform), நிர்வாக உதவியாகவும் (management and administration) விளங்கும் மென்பொருள் துறைகளில் மேற்கூறிய வாய்ப்புக்கள் மட்டுமன்றி, இன்னும் பலப்பல வாய்ப்புகள் உள்ளன. தேர்ந்தெடுத்து விரைவில் செயல்பட்டால் வெற்றி காண இயலும். என் வாழ்த்துக்கள்!

மென்பொருள் துறைகளைப் பற்றித்தான் அலசியாயிற்று! வலைச் சாதனத் துறையில் Cisco மிக வலிமை வாய்ந்துள்ளது என்றீர்களே, அப்போது அத்துறையில் புது நிறுவனங்களுக்கு வாய்ப்பே இல்லை என்கிறீர்களா என்ன?

பெரும் நிறுவன மின்வலைச் சாதனத் துறையில் ஒரு புது நிறுவனம் பெரும் வெற்றி பெறுவது மிகக் கடினமாகி வருகிறது என்பதில் சந்தேகமில்லை. வாய்ப்பே இல்லை என்று சொல்லவில்லை. (தாமஸ் வாட்ஸன் உலகுக்கு ஐந்தே ஐந்து கணனிகள் போதும் என்று கூறியது ஞாபகத்துக்கு வருகிறது).

புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. Cisco-வும் அத் தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக வணிக ரீதிக்குக் கொண்டுவரும் நிறுவனங்களை வாங்கிக் கொண்டேதான் இருக்கிறது. ஓரிரண்டு நிறுவனங்கள் அதையும் மீறித் தனியாக வளர்ந்து விடுகின்றன. அதனால் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பது உண்மையே.

உதாரணமாகக் கம்பியில்லா மின்வலை (wireless networks), சேமிப்பக வலை (storage networking) போன்ற துறைகளை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இன்னொரு வலைத் துறையைக் குறிப்பிட வேண்டுமானால், தகவல் மைய மெய்நிகராக்கம் (datacenter virtualization) என்னும் புதிதாகத் தோன்றியுள்ள துறையைக் குறிப்பிடலாம். அதில், பணிப்பொறி மெய்நிகராக்கம் (server virtualization), வலை மெய்நிகராக்கம் (network virtualization), சேமிப்பக மெய்நிகராக்கம் (storage virtualization) போன்ற பல உபதுறைகள் உருவாகியுள்ளன. முன்பே கூறியபடி, பணிப்பொறி மெய்நிகராக்கத்தில் EMC/Vmware, Microsoft, XenSource போன்ற பல நிறுவனங்கள் அடிப்படை அளவை ஆக்கிரமித்து விட்டதால் அவற்றை எளிதாகப் பயன்படுத்துவதற்கான மேற்பார்வை மென்பொருள் (management software) துறையில்தான் வாய்ப்புள்ளது எனலாம். ஆனால் தகவல் மைய மெய்நிகராக்க மற்ற உப துறைகளில் அடிப்படைத் தொழில்நுட்பங்களில் புத்தாக்கம் செய்ய (fundamental innovations) இன்னும் வாய்ப்புள்ளது.

பெருநிறுவன வலைத் துறைகளில் புதுத் தொழில்நுட்பங்களை உருவாக்கிப் புது நிறுவனங்களை வளர்க்கக் கூடிய வாய்ப்பிருப்பதாகக் கூறினேன். ஆனால் வலைச் சாதனங்கள் (network equipment) என்னும் துறையை இன்னும் விரிவாகக் பார்க்கப் போனால், இன்னும் பல புது வாய்ப்புக்கள் மலர்வதைப் பார்க்கலாம். அதாவது நகரும் தொலைத்தொடர்பு (mobile telecom), நுகர்வோர் வீட்டு வலைத்துறை (consumer home networking), ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (media and entertainment) போன்ற துறைகளில் பல புதிய வாய்ப்புக்கள் எழுந்துள்ளன.

தற்போது கம்பிகளால் பிணைக்கப் பட்டுள்ள எவற்றையும் கம்பியின்றிப் பிணைக்க Bluetooth, பெரும் அகல அலைப்பட்டை (ultra wide band), 802.1[a-z], WiMax போன்றப் பல தொழில்நுட்பங்கள் உருவாகியுள்ளன. மேலும், மின்சார விநியோகக் கம்பிகள் வழியாகக் கூட தகவல் தொடர்பு தரும் தொழில்நுட்பங்களும் வணிக ரீதியாக வந்துள்ளன. அதனால், இதுவரை புதுக் கம்பிகள் போட முடியாத தடங்கலால் பிணைப்பதை நினைத்தே பார்க்காத பலவற்றையும் பிணைக்கக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. (இந்திய கிராமங்களில் தானியம் விற்பவர்களும் செல்பேசியைப் பயன்படுத்தி அனுகூலமான விலைகளை நேரடியாகத் தெரிந்து கொள்வதைக் குறிப்பிடலாம்).

அது மட்டுமல்ல. பொழுதுபோக்கு ஊடகங்களில் (entertainment media) ஒரு பெரும் புரட்சியே உண்டாகியுள்ளது. ஓரிரண்டு வருடங்களுக்கு முன்னால்தான், 'சே! என்னடா இது! 500 சேனல்கள் இருந்தாலும் ஒன்றும் பார்க்க சகிக்கும்படி இல்லையே' என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தோம். இப்போதோ 'ஐயையோ, பார்க்க இவ்வளவு இருக்கிறதே. பார்ப்பதற்குத்தான் நேரம் இல்லை' என்று அங்கலாய்க்க வேண்டியாகிவிட்டது. ஏனென்றால், நமக்கு வேண்டிய காட்சிகளை இப்போதுதான், இந்த சேனலில்தான், இந்த இடத்தில்தான் பார்க்க முடியும் என்ற நிர்ப்பந்தம் ஒட்டு மொத்தமாகத் தகர்த்தெறியப் பட்டுவிட்டது. TiVo போன்ற டிஜிடல் வீடியோ ரெகார்டர்கள் (DVR), Apple iPoD/iTunes, YouTube போன்ற சாதனங்கள்/சேவைகள், NetFlix போன்ற வேண்டும்போது தருவித்துப் (on-demand download) பார்க்கும் வசதிகள், Sling போன்று வீட்டுக்கு வரும் தொலைக்காட்சியை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்க உதவும் சாதனங்கள், செல்பேசியிலிருந்தே வீடியோக்களைப் பார்க்க வசதி... அப்பப்பா!

அவ்வளவு வசதிகள் இருக்கின்றன. ஆனால், அது உலக மக்களில் 0.1 சதவீதத்தினருக்குக் கூட இன்னும் போய்ச் சேர்ந்த பாடில்லை. அப்படியென்றால், இந்த வசதிகள் வளர்ந்து, இன்னும் பெருக வேண்டுமானால், அதற்குத் தேவையான வலைச் சாதனங்கள் என்னவாக இருக்க முடியும்? வலைச் சாதன நிறுவனங்கள் ஆயிரம் தேன்கூடுகளை ஒரே இடத்தில் பார்த்துவிட்ட கரடியைப் போல் இளித்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியம் இல்லைதானே?

ஆனால். பெரும் மின்வலைச் சாதன நிறுவனங்களே அதற்குத் தேவையான தொழில்நுட்பப் புத்தாக்கங்களை (technology innovations) செய்ய முடியாது. (முன்பு ஒரு கட்டுரையில் புதுமைப் படைப்பாளர் சங்கடம் (innovators dilemma) பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் பார்க்கவும்). அதனால், பல புது நிறுவனங்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. அந்த வாய்ப்பைப் பிடித்துக் கொண்டு வெற்றி பெறுவது தங்கள் சாமர்த்தியம். சென்று வாருங்கள், வென்று வாருங்கள்!

2007-ஆம் ஆண்டில் நிறுவனங்களை ஆரம்பித்து முதலீடு பெறும் வாய்ப்புள்ள இன்னும் சில துறைகளைப் பற்றி இனிவரும் பகுதிகளில் காண்போம்.

கதிரவன் எழில்மன்னன்
(தொடரும்)
Share: 




© Copyright 2020 Tamilonline