|
|
|
முன்னுரை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்துகொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்குவர்த்தகம். சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி Stanford மருத்துவமனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இக்கதையில் இதுவரை: ஷாலினியின் தந்தை முரளியின் நண்பர் மார்க் ஷெல்ட்டன், தன் சுத்த சக்தி தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாக கூறவே, சூர்யாவின் திறமையைப் பற்றி நன்கு அறிந்திருந்த முரளி, அவருக்கு சூர்யாவை பற்றிக் கூறி அறிமுகம் செய்ய அழைத்து வந்தார். மார்க், சூரிய ஒளி உற்பத்தி நுட்பத்திலும், மின்சக்தியை சேமிக்கப் பயன்படும் உயர்தர பேட்டரி நுட்பத்திலும் வெர்டியான் புரட்சிகரமான முன்னேற்றம் கண்டிருப்பதாகக் கூறினார். பல வடிவங்களில் வளைக்கக் கூடிய, ஆனாலும் பெருமளவில் சூரிய ஒளி மின்சக்தி தரும் நுட்பத்தை வெர்டியான் உருவாக்கியிருப்பதாகவும் விளக்கினார். சூர்யா விஞ்ஞானி யூ பிங் சூ தாக்கப்பட்டதைப் பற்றிக் கேட்கவே, ஷாலினியின் உதவியுடன் அவரை நேரில் விசாரிக்கச் சென்றனர். யூ தான் தாக்கப்பட்டதைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்...
சூர்யாவின் யூகத் திறமையை நேரில் பார்த்த யூவுக்கு, அவரால் வெர்டியானின் பிரச்சனையைத் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை வளரவே, மன நிம்மதியுடன், சூர்யாவுக்குத் தேவையான விவரங்கள் யாவற்றையும் அளிப்பதாகக் கூறி, அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கலானார்.
சூர்யா மீண்டும் யூவைத் தூண்டினார். 'சரி, முதல்ல நீங்க தாக்கப்பட்டப்போ என்ன ஆச்சுங்கறதுலிருந்து ஆரம்பிப்போம். எப்போ, எங்கேத் தாக்கப்பட்டீங்க? கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க.'
யூ அந்த நினைவு அளித்த மனவலியால் முகத்தைச் சுளித்துக் கொண்டார். சில நொடிகளிலேயே சுதாரித்துக்கொண்டு விவரிக்கலானார். 'நான் தாக்கப்பட்டதைப் பத்திச் சொல்லணும்னா அப்படி ஒண்ணும் பிரமாதமான விவரம் இல்லைன்னுதான் தோணுது... நான் வழக்கம்போல் வேலையை ஒரு நிலையில நிறுத்திட்டு என் காருக்குப் போனேன். இரவு ரொம்ப நேரம் ஆயிட்டிருந்தால, முன்வாசல் காவலாளரைத் தவிர வேற யாரும் இல்லை. பார்க்கிங் லாட்டும் அங்கங்கே இருந்த விளக்குகளைத் தவிர இருட்டாத்தான் இருந்தது. என் கார் இருட்டுப் பகுதியில் இருந்தது.'
| நான் என் கார்கிட்ட வந்து குனிஞ்சு கதவைத் திறக்கணும்னு சாவியைப் போட்டேன் அவ்வளவுதான். ஒண்ணும் சத்தமே இல்லாம பட்டால்னு ஒரே அடி. | |
மார்க் இடைமறித்தார். 'யூ, நிச்சயமா நான் அதை உடனே நிவர்த்திச்சு யாராவது நடமாடறச்சே பார்க்கிங் லாட்டில பளிச்சுன்னு எல்லாக் காருக்கும் வெளிச்சம் வரா மாதிரி விளக்குகள் போட வச்சுடறேன்' என்று கூறிவிட்டு யாரையோ கூப்பிடத் தன் செல்பேசியை எடுத்தார்.
கிரண் களுக்கெனச் சிரித்து விட்டு சற்றே நக்கலாக, 'அந்த விளக்கெல்லாம் வெர்டியான் நுட்பத்துல உற்பத்தி செய்யற மின்சக்தில ஓடும்னு நம்பறேன்! இருட்டை விலக்கறேன் பேர்வழின்னு இன்னும் அசுத்த சக்தியை அதிகமா செலவழிச்சுடப் போறீங்க!' என்றான்.
ஷாலினி உடனே வழக்கம்போல் கிரணைக் கடிந்துகொண்டாள். 'என்ன கிரண் இது. இவ்வளவு சீரியஸான விஷயத்தைக் கூட இப்படியா சிரிப்பாக்கறது?'
ஆனால், கனமாக இருந்த அந்த அறையின் சூழ்நிலையை, கிரணின் வார்த்தைகள் லேசாக்கி யாவருக்கும் மனம் மலரச் செய்துவிட்டன.
யூவும் சிரித்தார். 'கிரண், நான் சிரிச்சு கொஞ்ச நாளாயிடுச்சு. என்னைச் சிரிக்க வைச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்! ஆனா நீ சொன்னது நூத்துக்கு நூறு சரிதான், சுத்த சக்திலதான் செய்யணும்.'
மார்க்கும் பலமாகத் தலையாட்டி மோதித்தார். 'நிச்சயமா! இப்பக்கூட வெர்டியானின் சக்தித் தேவைகள் பெரும்பாலும் எங்க நுட்பத்திலயேதான் தீர்க்கப்படுது. இதுவும்கூட அப்படித்தான் செய்வோம்!' என்று கூறிவிட்டு அதை நடத்தி வைக்குமாறு மின்னஞ்சலும் அனுப்பினார்.
சூர்யா மீண்டும், 'சரி யூ, அப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க...' என்று தூண்டினார்.
யூவும் அப்போதுதான் அடிபட்டது போல் காதுக்கு அருகில் கழுத்தைத் தடவிவிட்டுக் கொண்டு தொடர்ந்தார். 'நான் என் கார்கிட்ட வந்து குனிஞ்சு கதவைத் திறக்கணும்னு சாவியைப் போட்டேன் அவ்வளவுதான். ஒண்ணும் சத்தமே இல்லாம பட்டால்னு ஒரே அடி. தாக்கியவன் ரொம்பவே பழகிய தொழில்ரீதி நிபுணனா இருக்கணும்னு நினைக்கிறேன். ஒரே அடியில மூளை அதிர்ச்சியாகி மயக்கமாவே விழுந்துட்டேன். அடிபட்ட இடத்துலேந்து ரத்தம் வர ஆரம்பிச்சுடுச்சு. ஆனா விழறச்சே நல்ல வேளையா என் கையில இருந்த கார் சாவியுடைய பேனிக் பட்டனை அகஸ்மாத்தாவோ இல்லை அடிமனசுல உணர்ந்துகிட்டேயோ அழுத்திக்கிட்டே விழுந்தேனா, என் கார் முன் விளக்குகளை வெளிச்சமா மினுக்கிக்கிட்டு ரொம்ப சத்தம் போட ஆரம்பிச்சுது. என்னைத் தாக்கினவங்க ஓடிட்டாங்க. கட்டிடப் பாதுகாப்பாளன் ஓடிவந்து பாத்துட்டு ஆம்புலன்ஸுக்கும் மார்க்குக்கும் ஃபோன் செஞ்சுட்டான். நான் முழிச்சுப் பாக்கறப்ப இங்க கிடக்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். நான்மட்டும் அபாய பட்டனை அழுத்தாம இருந்திருந்தா என்ன ஆகியிருக்குமோ தெரியல. நினைச்சாலே குலை நடுங்குது!'
சூர்யா தன் குறுந்தாடியைத் தடவிக் கொண்டே சில நொடிகள் யோசித்துவிட்டு 'யூ, நீங்க தினமும் ஒரே சமயத்துலதான் வீட்டுக்குப் போவீங்களா?' என்று கேட்டார்.
யூ-வும் சில நொடிகள் யோசித்துப் பார்த்தார். 'கிட்டத்தட்ட ஒரே சமயந்தான்னு சொல்லலாம்...'
மார்க் சிரித்தார். 'கிட்டத்தட்ட என்ன யூ? அப்படியேதான்னு சொல்லணும். நாங்க எல்லாம் யூ எப்ப வரார், எப்ப கிளம்பறார்னு பாத்து எங்க வாட்ச் சரியா இருக்கான்னு பாத்துக்கணும்னு ஜோக் அடிக்கற அளவுக்கு இவர் கறாரா இருக்கறவர். ஏன் கேட்கறீங்க?' |
|
சூர்யா விளக்கினார். 'பார்க்கிங் லாட்ல கார்கிட்ட சும்மாக் காத்துக்கிட்டில்லாம இவர் கிளம்பற சமயம் தெரிஞ்சு தாக்கியிருக்கறாங்களோன்னு ஒரு எண்ணம் அவ்வளவுதான். அப்படித் தெரிஞ்சிருந்தா, அப்ப அவங்களுக்கு வெர்டியான் உள் சமாசாரம், உள் உதவியும் இருக்கலாமோன்னும் ஒரு சின்ன சந்தேகம்...
| யாராவது உள் மனுஷங்க வேலையா இருக்கலாமோன்னு யோசிச்சுப் பார்க்கணும். ஒருவேளை சமீபகாலத்துல சேர்ந்தவங்க யாராவது இருக்கலாமோ?. | |
யூ, மார்க் உங்க ரெண்டு பேருக்கும் வெர்டியான் ஆளுங்க யார் மேலயாவது அப்படி எதாவது சந்தேகம் வந்ததா, இல்லன்னா இப்ப நான் சொன்னப்புறம் தோணுதா?'
மார்க் உணர்ச்சிப் பிழம்பாகிவிட்டார். குரல் தழுதழுக்கச் சூர்யாவின் கருத்தை அடியோடு மறுத்தார். 'சே சே, சூர்யா என்ன இப்படிக் கேட்டுட்டீங்களே? வெர்டியான் என்னோட குடும்பம் மாதிரி. ஒவ்வொருத்தரையும் நானே நேரில பேசி மணிமணியா தேர்ந்தெடுத்து சரமாக் கோர்த்திருக்கேன்.
ஒருத்தரும் மனசால கூட கெடுதல் நினைக்க மாட்டாங்கன்னு உறுதியா நம்பறேன்.'
யூ-வும் பொதுவாக மார்க்கின் கருத்தை ஆமோதித்தார். ஆனாலும் லேசாக கடுகளவு சந்தேகம் அவர் குரலில் இழையோடத்தான் செய்தது. 'மார்க் சொல்றது சரிதான்னு நானும் நம்பறேன். நான் இதுவரைக்கும் வெர்டியான்ல பழகினவங்க எல்லாம் ரத்தினங்கள்தான்னு சொல்லணும். ஆனா நான் மார்க் அளவுக்கு எல்லாரிடமும் பழகிட்டதா சொல்லிட முடியாது. ஸோ... மார்க் சொல்றதையே சரின்னு எடுத்துக்கலாம்.' மார்க் தன் பரபரப்பால் யூ-வின் சந்தேகத் தொனியை உணர்ந்து கொள்ளவில்லை.
கிரண் இடைபுகுந்தான். 'ஹுக்கும்... இந்த மாதிரி எங்களோட ஒவ்வொரு கேஸ்லயும் சொல்லியிருக்காங்க. ஏசு கிறிஸ்துவைக் கூட அவரோட ஆத்மார்த்தமான சீடரான ஜூதாஸ்தான் காட்டிக் கொடுத்தார் இல்லையா? அமெரிக்க சுதந்திரப் போருக்குக் கூட ஒரு பெனடிக்ட் ஆர்னால்ட்!' என்றான்.
முரளியும் தலையாட்டியபடி 'இந்திய சுதந்திர சரித்திரத்துல கூட கட்ட பொம்மன்ங்கற ஒரு வீரனை பிரிட்டிஷ்காரங்களுக்குக் காட்டிக் கொடுத்தது அவன் நெருங்கிய உறவினன் எட்டப்பன் - துரோகிகளுக்கெல்லாம் எட்டப்பன் பரம்பரைன்னே ஏய்க்கறாங்களே இப்போ!'
கிரண் தொடர்ந்தான். 'அது மட்டும்னா பரவாயில்லையே, சில கேஸ்களில நிறுவனத்தோட தலைவரே பண காரணத்துனால தொழில்நுட்பத்தைக் கெடுத்ததைக் கண்டு பிடிச்சிருக்கோம். ஏன் ஒரு கேஸ்ல அந்தத் தொழில்நுட்பமே கூட... சூர்யா ரோபாட் ரகளையின் ரகசியம் கவனமிருக்கா?'
கிரண் நிறுவனத் தலைவர் பற்றிக் கூறியதைக் கேட்டுவிட்டு, ரோபாட் பற்றிக் கூறியதைத் துளிக்கூட காதில் போட்டுக் கொள்ளாமால், மார்க் எரிமலையாக வெடித்தே விட்டார். 'என்ன நிறுவனத் தலைவரா? அப்படி இப்படிப் போயி இப்போ என்னையே சந்தேகிக்கறயா? எனக்கு வர்ற கோபத்துக்கு உன்னை அப்படியே...' என்று கிரணின் மென்னி யைத் திருகிவிடுவது போலக் கைகளை நெறித்தார்.
மேலும் பேச முடியாமல் அவர் திணறவே முரளி இடைபுகுந்து அமைதிப்படுத்தினார். 'பதறாதீங்க மார்க், பதறாதீங்க! கிரண் பேச்சுவாக்குல தங்களோட முந்தைய கேஸ்களைப் பத்தித்தான் சொல்லியிருக்கணும். உங்களைப்பத்தி இருக்காது. என் பிள்ளையைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அவனுக்கு அப்படி மறைமுகமாக் குத்திக் காட்ட எல்லாம் தெரியாது. நேரா பளிச்சுன்னு நக்கலா சொல்வானே ஒழிய ஒண்ணுக்குள்ள ஒண்ணு வச்சு பேச மாட்டான். என்ன கிரண், நீயே சொல்லு.'
கிரண் பலமாகத் தலையாட்ட ஆமோதித்தான். 'கரெக்டா சொன்னீங்க அப்பா! அப்படியேதான். பூடகமாப் பேசறதுல நான் க்ளூலெஸ்! இதோ இருக்காளே ஷாலூக்குக் கூட நல்லாத் தெரியும். ஸாரி மார்க். உங்களைச் சொல்றதா நீங்க நினைப்பீங்கன்னு துளிக்கூடத் தோணலை எனக்கு, என் தப்புத்தான். மன்னிச்சுக்குங்க.'
ஷாலினியும் முறுவலுடன் தன் பங்குக்கு ஆமோதித்தாள். 'கிரண் சொல்றது சரிதான் மார்க். அவன் இப்படித் தத்தக்கா பித்தக்கான்னு சொல்லி மாட்டிக்குவானே ஒழிய நீங்க சொல்ற மாதிரி மறைமுகமா சொல்ற அளவுக்கு அவன் க்ளெவர் இல்லை.'
கிரண் அவளைச் செல்லமாகத் தட்டினான். 'ஹே, ஷால், வாட்ச் இட்! எனக்கு சாதகமா சொன்னதுக்கு நன்றி. அதோட என் தலையிலயும் குட்டிட்டே பாத்தியா!'
முரளி வாய் விட்டே சிரித்தார். 'மார்க், கிரண் ரெண்டு பேருமே பஸ்மாசுரன் கிட்ட மாட்டின சிவபெருமான் மாதிரி ஆயிட்டாங்க! அப்படி இப்படிப் பார்த்து கடைசிலயே என் தலையிலயே கை வைக்கறயான்னு கேக்கறாங்க பாரு. கிரண் நீ சொல்லப்போக இப்போ உன் தலைக்கே வந்துடுச்சு!'
பஸ்மாசுரன் கதையை தன் பலமத புராணங்களின் ஆராய்ச்சியால் முன்பே அறிந்திருந்த யூ பிங் சூ பலமாகச் சிரித்தார். 'நல்ல குறிப்புத்தான் அது. மார்க் எதோ தவறிப்போய் சொல்லியிருக்கணும் விட்டுடுங்க. ஆனா அவங்க சொன்னதுலயும் நியாயம் இருக்கலாம். யாராவது உள் மனுஷங்க வேலையா இருக்கலாமோன்னு யோசிச்சுப் பார்க்கணும். ஒருவேளை சமீபகாலத்துல சேர்ந்தவங்க யாராவது இருக்கலாமோ?. நம்மகிட்ட இருக்கறவங்க எவ்வளவு நாளா இருக்காங்கன்னு பட்டியல் போட்டுப் பார்க்கலாம்' என்றார்.
மார்க்கும் தணிந்து கிரணின் தோளில் மெல்லத் தட்டிக்கொடுத்தார். 'சரி, கிரண், நான் அப்படி வெடிச்சதுக்கு ஸாரி. நீங்க என்ன சொல்றீங்க சூர்யா? யூ சொல்றா மாதிரி பட்டியல் போடணுமா?'
இவ்வளவு ரகளையிலும் தன் யோசனையிலேயே ஆழ்ந்திருந்த சூர்யா தலையாட்டினார். 'உடனே காட்டிக் கொடுக்காட்டாலும், அது உதவியாயிருக்கும்னு தோணுது. பட்டியல் போடுங்க.' என்றார்.
தொடரும்
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|