ஸ்ரீக்ருபா நடனக் குழுமத்தின் விஷால் ரமணி
|
|
|
|
கனடாவின் டொராண்டோவில் பத்மா விஸ்வநாதன் தனது முதல் புத்தகமான ‘Toss of a Lemon' பற்றிப் பேசப்போகிறார் என்று கேட்டதும், அந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆவல் பிறந்தது. சமூகவியலில் பட்டம் பெற்ற பத்மா நூலகராகப் பணியாற்றிய பின் கல்வி, சமூக விழிப்புணர்வு நாடகத் துறையில் ஈடுபட்டார். 2007ல் பாஸ்டன் ரெவ்யூ சிறுகதைப் பரிசை வென்றார். கனடாவிலும் அமெரிக்காவிலும் பல பத்திரிகைகளில் பத்மா எழுதிய கதைகள் வெளியாகியுள்ளன.
கனடாவில் அவரது 'Toss of a Lemon' வெளியானதை அடுத்து அவரை ராண்டம் ஹவுஸ் 'New Face of Fiction - 2008' ஆக அறிவித்தது. அவரது கணவர் ஜெஃப்ரி ப்ராக் (Geoffrey Brok) ஒரு கவிஞரும் இலக்கிய மொழிபெயர்ப்பாளரும் ஆவார். தற்போது இவர்கள் அர்கன்சாஸில் வசித்து வருகிறார்கள்.
1890 முதல் 1960 வரை வாழ்ந்த ஒரு தமிழ் பிராமணப் பெண்மணியின் கதையை வைத்துப் பின்னப்பட்ட நாவல் 'The Toss of a Lemon'. சோளப்பட்டி என்ற தென்னிந்தியக் கிராமத்தில் நடக்கிறது. பத்மா தனது பாட்டியிடம் அவரது வாழ்க்கையைப் பற்றிப் பேசி அறிந்தவற்றை ஆதாரமாகக் கொண்டது. சிவகாமி என்ற பத்துவயதுப் பெண் ஹனுமந்த் ரத்னம் என்ற இருபத்தியோரு வயது ஜோதிடரை மணக்கிறாள். திருமணத்தின்போதே சிவகாமியின் பெற்றோரிடம் திருமணமான பத்தாம் வருடம் தான் இறந்து போகலாம் என்று ஜாதகத்தில் இருப்பதை ஹனுமந்த் ரத்னம் சொல்கிறார். ‘ஆனால் இரண்டாவது பையன் பிறக்கும்போது உள்ள கிரகநிலைப்படி நிலைமை மாறி, தான் மேலும் உயிர்வாழ வாய்ப்பு உள்ளது' என்றும் கூறுகிறார். ஆனால் பையனின் கிரகங்கள்படி அவர் வாழ்வு முடிகிறது. சிவகாமி பிராமண குல வழக்கப்படி வெள்ளைப் புடவை அணிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்கிறாள். குழந்தைகளைத் தொடக்கூட அவளுக்கு இரவுவரை அனுமதி இல்லை. பிறந்த மகன் வைரமும் சற்று சரியில்லாதவன். அவனையும் மகளையும் எப்படித் தன் கடுமையான ஆசாரப்படி வளர்க்கிறாள் சிவகாமி, அதற்கு அவள் படும் கஷ்டங்கள் என்ன என்பதுதான் கதை. 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த நாவலை, ராண்டம் ஹவுஸ் கனடாவிலும் ஹார்கோர்ட் அமெரிக்காவிலும் வெளியிட்டுள்ளன. பத்மா விஸ்வநாதனைத் தென்றலுக்காக அலமேலு மணி அவர்கள் சந்தித்தார். நேர்காணலிலிருந்து சில பகுதிகள்...
கே: வாழ்த்துக்கள் பத்மா. தமிழ்க் குடும்பத்தின் வாழ்க்கையைக் கூறும் ஆங்கில நாவலான இது உருவானது எப்படி?
ப: நன்றி. எனது பாட்டி தனம் கோச்சேய் அவர்களைத்தான் இந்த நாவல் வெளி வருவதற்குக் காரணமாகச் சொல்ல வேண்டும். எட்மண்டனில் (கனடா) என் பெற்றோருடன் எனது பாட்டி வசித்து வருகிறார். நான் சிறுமியாக இருந்தபோது தன்னைப்பற்றியும், தன் பெற்றோர்கள் பற்றியும் கதைகளைச் சொல்வார். அப்போதெல்லாம் எனக்கு அதில் சுவாரஸ்யம் இருந்ததில்லை. ஆனால் 20 வயதானபோது ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டு, அடிக்கடி பாட்டியின் அந்தக்கால அனுபவங்களைக் கேட்க ஆரம்பித்தேன். அவற்றின் தொகுப்புத்தான் இந்த நாவல்.
| 18வது நூற்றாண்டு ரஷ்யா பற்றி, 20ம் நூற்றாண்டு அமெரிக்கா பற்றி நாட்டின் நடப்புகளைத் தெரிந்து கொள்ள வரலாறுகளைப் படிக்கிறோம். பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த நம் முன்னோர்களின், குடும்பங்களின் வாழ்க்கை முறையை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா? | |
கே: உங்கள் குடும்பத்தில் வேறு யாராவது எழுத்தாளராக இருக்கிறார்களா?
ப: அதற்கும் பாட்டியைத்தான் சொல்ல வேண்டும். அவர் நிறையச் சிறுகதைகள் எழுதிப் பல பத்திரிகைகளுக்கு அனுப்பி இருக்கிறார். ஆனால் அவை அச்சேற வில்லை. சிறிது காலத்திற்குப் பின் பாட்டியும் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டார்.
கே: இது ஒரு குடும்பக் கதை மட்டுமல்ல; கிராம வாழ்க்கையின் பிரதிபலிப்பும் கூட. இந்த நாவலை எழுத உங்களுக்கு எவ்வளவு காலம் பிடித்தது?
ப: கிட்டத்தட்ட பத்து வருடங்கள்.
கே: உங்கள் எழுத்துப்பயணம் எப்போது ஆரம்பித்தது?
ப: எழுத்தாளர்களுக்கான உதவிப்பணம் கிடைத்து ‘பான்ப் ரைட்டர்ஸ் காலனி'யிலிருந்து எழுதினேன். பிறகு பாஸ்டன் ரெவ்யூ (Boston Review) சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. பின்னர் ஜான் ஹாப்கின்ஸில் எழுதுகலையில் மாஸ்டர் பட்டமும் அர்கன்சாஸில் MFA பட்டமும் பெற்றேன்.
கே: நீங்கள் அமெரிக்கா, கனடாவில் மேற்கத்திய முறையில் வளர்ந்தவர். பத்தாயிரம் மைல் தொலைவிலுள்ள இந்திய கிராமத்து வாழ்க்கையைச் சித்திரிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படிச் சாத்தியமாயிற்று?
ப: நல்ல கேள்வி. முதலில் இது கடந்த கால வரலாறு. என் பாட்டியும், பெற்றோரும் விட்டுவந்த வாழ்க்கையின் வரிப்பதிவு இது. அந்தக் கிராமத்து வாழ்க்கையை அப்படியே விட்டுவிட்டு வந்தது என் பாட்டியை முதலில் ஒரு வருத்தத்தில், துக்கத்தில் ஆழ்த்தியது. பிறகு அந்த வாழ்க்கையையே வேறு கோணத்தில் அவரால் ஆராய, அலச முடிந்தது. அது ஒருவிதத்தில் எனக்குப் பாடமாகவும் அமைந்தது.
கே: எப்படி என்று சொல்லுங்களேன்!
ப: 18வது நூற்றாண்டு ரஷ்யா பற்றி, 20ம் நூற்றாண்டு அமெரிக்கா பற்றி நாட்டின் நடப்புகளைத் தெரிந்து கொள்ள வரலாறுகளைப் படிக்கிறோம். பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த நம் முன்னோர்களின், குடும்பங்களின் வாழ்க்கைமுறையை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா? அப்படி ஏற்பட்ட ஆர்வத்தில் என்னை, என் வேரை, என் முன்னோர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள எனக்கு இது தேவையாயிற்று.
கே: உங்கள் முன்னோர்களின் வாழ்க்கையைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டீர்களா?
ப: ஆம் என்றுதான் நினைக்கிறேன். இன்று, இங்கே வட அமெரிக்காவில், ஏன் இந்தியாவிலேயே கூட வாழும் என் தலைமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்கள் முன்னோர் வந்த வழியைப் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும். பதினெட்டு வயதுப் பெண், கணவனை இழந்து, நகை நட்டு எல்லாம் உருவப்பட்டு, குழந்தைகளைத் தொடக்கூட இரவுவரை உரிமை இல்லாமல் எப்படியெல்லாம் வாழ்ந்தாள் என்று எங்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடிந்திருக்காதே! |
|
கே: உங்கள் பாட்டியிடம் இந்தக் கதையை இருபது வருடம் கழித்துத் தான் பொதுவெளியில் வெளியிடுவேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் பத்து ஆண்டுகளிலேயே புத்தகத்தை வெளிக்கொண்டு வந்துவிட்டீர்கள். உங்களுக்குக் குற்ற உணர்வு இல்லையா?
ப: நிச்சயமாக இல்லை. பாட்டி இந்தக் கதையால் தன் குடும்பத்தினர் மனம் புண்பட வேண்டாம் என்றுதான் அப்படிக் கூறியிருக்க வேண்டும். தவிர இந்தக் கதை முழுவதும் அவர் கதை இல்லையே! அவர் சொன்னதை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட ஒரு வீடுதான் இது. தவிர, எனக்கும் பாட்டியே இதைப் படித்துக் கொண்டாட வேண்டும் என்ற சுயநலமும் காரணம். பாட்டி முதலில் திகைத்தாலும் பின்னர் சந்தோஷப்பட்டார். 'நீ உண்மையை உணர்ந்து எழுதியிருக்கிறாய்' என்று என்னைப் பாராட்டினார்.
| கதையில் ஜானகியை அவள் தகப்பனார் தான் வளர்ப்பதாகக் கூறி தன்னுடன் கூட்டிச் செல்கிறார். ஆனால் தன் தம்பி மனைவியிடமே திருப்பி அனுப்பிவிடுகிறார். அந்தப் பகுதி பாட்டியின் கதை. அதைப் படித்ததும் நிகழ்ச்சியின் நிதர்சனம், உண்மை பாட்டியை வருத்தி விட்டது. அதனால் அன்று மனம் தளர்ந்து விட்டார். | |
கே: இல்லை... ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் படித்தவுடன் பாட்டிக்கு உடல்நலமில்லாமல் போய்ப் படுத்து விட்டார் என்னும் போது...
ப: அதுவும் ஒரு வேறுபட்ட கண்ணோட்டத்தால்தான். கதையில் ஜானகியை அவள் தகப்பனார் தான் வளர்ப்பதாகக் கூறி தன்னுடன் கூட்டிச் செல்கிறார். ஆனால் தன் தம்பி மனைவியிடமே திருப்பி அனுப்பிவிடுகிறார். அந்தப் பகுதி பாட்டியின் கதை. அதைப் படித்ததும் நிகழ்ச்சியின் நிதர்சனம், உண்மை பாட்டியை வருத்தி விட்டது. அதனால் அன்று மனம் தளர்ந்து விட்டார். ஆனால் பிறகு தெளிந்து விட்டாரே!
கே: God of Small Things நாவலைப் படித்தபின் எழுந்த உந்துதல்தான் ‘Toss of a Lemon' என்று கூறப்படுகிறதே...
ப: இல்லை. என் நாவல் எங்கள் குடும்பத்திலேயே நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, மெருகூட்டி எழுதப்பட்டது. இது நிஜவாழ்க்கையின் விஸ்வரூபம்.
கே: இதில் உங்களது கணவரின் பங்கு என்ன? அவரும் ஒரு கவிஞர், மொழிபெயர்ப்பாளர். அது உங்களுக்கு பலமா, பலவீனமா?
ப: நிச்சயம் பலம்தான். நாங்கள் சந்தித்ததே எழுத்து மூலம்தான். எழுத்துக்காக உதவித்தொகை பெற்றவர்கள் நியூ ஹாம்ப்ஷயரில், மெக்டோவல் காலனியில் சென்று எழுதுவார்கள். எனக்கு அப்படி ஒரு மாத உதவித்தொகை கிடைத்தபோது நாலாபுறமும் காடுபோல இயற்கை செறிந்த இடத்தில், சிறு அறையில் அமர்ந்து காலை முதல் மாலைவரை எழுதிக் கொண்டே இருப்போம். சாப்பாடு, தண்ணீர் எல்லாம் அறையில் வைத்துவிட்டுப் போய் விடுவார்கள். எடுத்துச் சாப்பிட்ட நாட்களும் உண்டு. சாப்பிடாமல் அப்படியே தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த நாட்களும் உண்டு. அங்குதான் என் கணவர் ஜெப்ரி ப்ராக்கைச் சந்தித்தேன். பிறகு மணம் புரிந்துகொண்டேன்.
கே: உங்கள் நாவலை ராண்டம் ஹவுஸ் பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றதும் உங்கள் முதல் உணர்வு என்ன?
ப: ஆனந்தக் கண்ணீர்! பேச்சும் மூச்சும் அடைப்பது போன்ற ஆனந்த உணர்வு. அதை மறக்க முடியுமா என்ன!
கே: இந்தக் கதை எழுதுவதற்காக எத்தனை முறை இந்தியா சென்றீர்கள்?
ப: முதலிலெல்லாம் எனது பெற்றோர்களுடன் கடமைக்குப் போய் வந்தேன். பின்னர் பாட்டியின் கதையைக் கேட்டபின், அந்த ஊரைப் பார்க்க, என் உறவினர்களைப் பார்க்க என அடிக்கடிப் போக ஆரம்பித்தேன்.
கே: தமிழில் எழுதும் ஆசை உண்டா?
ப: ஆசைக்குக் குறைவில்லை. ஆனால் கதை எழுதும் அளவுக்கு எனக்குத் தமிழில் புலமை இல்லை என்பது எனக்கே நன்கு தெரியும். முயற்சிகூடச் செய்யமாட்டேன்.
கே: இரண்டு குழந்தைகளையும் கணவரையும், குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டு எழுத எப்படி நேரம் கிடைத்தது?
ப: எனக்கு உதவுவதற்காக என் பெற்றோர் கனடாவை விட்டு அமெரிக்காவுக்கு வந்துள்ளார்கள். அவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
கே: அடுத்த முயற்சி என்ன?
ப: 'Losing Further Losing Faster' என்ற நாவல்.
கே: அதன் கதை?
ப: அதுவும் நடந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதுதான். எதைப்பற்றி என்பதைப் புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கே: நிச்சயமாக. அதுவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ப: நன்றி. வணக்கம்.
சந்திப்பு: அலமேலு மணி |
மேலும் படங்களுக்கு |
|
More
ஸ்ரீக்ருபா நடனக் குழுமத்தின் விஷால் ரமணி
|
|
|
|
|
|
|