WeReachOut இரண்டாம் ஆண்டு விழா மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா, கனடா விஜயம் லலித கான வித்யாலயாவின் மும்மூர்த்திகள் தினம்
|
|
அபிநயா நடனக் குழுமம் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சி |
|
- சீதா துரைராஜ்|ஜூலை 2008| |
|
|
|
|
மே 31, 2008 அன்று சான் ஹோசே, ஹிஸ்டாரிக் ஹவர் திரையரங்கில் அபிநயா நடனக் குழுமத்தினரால் ஒரு நாட்டிய நிகழ்ச்சி வழங்கப்பட்டது. இறைவந்தனம், புஷ்பாஞ்சலி ஆகியவற்றோடு நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்து, சிவனுக்கும் காளிக்கும் இடையே கடும்போட்டி ஏற்பட்டு இறுதியில் காளி ஆட இயலாமல் போட்டியிலிருந்து விலகுவதைச் சித்தரிக்கும் திருவாலங்காடு காளி கவுத்துவப் பாடலில் மாணவ மாணவிகள் ஆடியது மிக அருமை.
அடுத்து ஒடிஸி நடனத்தில் சிறந்த ஆண் நடனக் கலைஞர் விஷ்ணுதத்வதாஸ், ஜகன்னாத ஸ்வாமிக்கு புஷ்பாஞ்சலி செய்தது, பிருந்தாவனத்தில் கண்ணன் வரும்போது கோபிகைகள் அவன் அழகை வர்ணிக்கும் விதம், பூமி, இறைவன், குரு, அவையோருக்கு செய்த வந்தனம் யாவும் மிக்க நளினத்துடனும் சிறந்த பாவத்துடனும் இருந்ததை அவையோர் ரசித்தனர்.
பின் பாபநாசம் சிவனின் 'கோசலை புதல்வன்' எனும் ராகமாலிகைப் பாடலில் கானகம் செல்லுதல், தாடகை வதம், அகல்யை சாபவிமோசனம், சிவதனுஸை ஒடித்து சீதையின் கைப்பிடித்தல் என ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக ஆடி நெஞ்சை அள்ளினார் அஞ்சனா தாஸ்.
அடுத்து 'நந்தனார் சரிதம்' நிகழ்ச்சியை மைதிலி குமார் ஆடியது மனதில் வெகுநேரம் நின்றது. அழகான பாடல்களை தாளமாலிகையில் அமைத்த விதம், பாடலை உருக்கமாகப் பாடிய குரல் யாவும் மிகச் சிறப்பு. நந்தனார், நடராஜரை தரிசிப்பதற்காக அனுபவித்த வேதனைகளை நாட்டியத்தில் வடித்த விதம், 'வாருங்கள், பரமானந்தத்தை அனுபவிக்கலாம்', 'மீசை நரைத்து கூன் குறுகிப் போச்சே', 'அடித்ததும் போதும் ஐயே' ஆகிய இடங்களில் கண்ணீர் வரவழைக்கச் செய்து, சிதம்பரநாதனை ஒரு கணம் சிந்திக்கச் செய்த பெருமை மைதிலி குமாரைச் சாரும்.
பின் 'தா தை என்றாடுவார்' எனும் கோபாலகிருஷ்ண பாரதி பாடலுக்கு ஸமீரா மொகரா, நீரஜா வெங்கட் ஆகிய மாணவிகள் பாடலுக்கேற்ற அங்க அசைவு, முகபாவம், தாள ஒலிக்கேற்ப சிறந்த தீர்மானம் ஆகியவற்றுடன் ஆடிக் கைதட்டலைப் பெற்றனர். அடுத்து, சியாமா சாஸ்திரியின் தோடி ராக ஸ்வரஜதியில் அன்னை காமாக்ஷியைப் பற்றிய வர்ணனையை மிக்க பாவத்துடன் அருமையாக ஆடினார் மாதவ் விஸா என்கிற மாணவன். நாராயண தீர்த்தரின் தரங்கம் 'நந்தன கோபாலா'வுக்குப் பாடலில் வேக கதிக்கேற்ப கிருஷ்ண லீலைகளைச் சிறப்புடன் சித்தரித்து கடைசியில் குச்சுபுடி ஸ்டைலில் கண்ணனின் 'சரணாரவிந்தத்தை' தாள இசையுடன் இணைந்து மாளவிகா குமார் ஆடியது மனதிற்கு இதம். |
|
அடுத்து ஒரிய மொழியில் அமைந்த கவிதையில் கிருஷ்ணன், ராதையின் புடவையை ஒளித்து வைத்துக்கொண்டு கொடுக்க மறுப்பது, வெட்கப்படும் ராதையின் கெஞ்சுதல், முடிவில் கண்ணன் திருப்பிக் கொடுத்தல் ஆகியவற்றை விஷ்ணு தத்வதாஸ் ஒடிஸி பாணியில் தத்ரூபமாக ஆடியது அற்புதம்.
நிறைவாக கீதோபதேச ஸ்லோகத்தில் யுத்தபூமியில் சங்கு ஊத, போருக்குத் தயாரான அர்ஜுனன் தன் சாரதி கிருஷ்ணனிடம் உற்றார், உறவினர், குருவுடன் நான் போரிட மாட்டேன் என காண்டீபத்தை கீழே போட, கண்ணன் சுகதுக்கம் யாவும் சமம், கடமையைச் செய் எனக் கூறித் தன் விசுவரூப தரிசனத்தைக் காண்பித்து அர்ஜுனனின் சந்தேகத்தைப் போக்கிப் போரிட செய்த காட்சியை நாட்டியத்தில் கொணர்ந்து ரசிகாகுமார் அளித்தது வெகு ஜோர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் 'ஸத்குரும் தம் நமாமி' என சொல்லி இணைந்து குருவந்தனம் செலுத்தியது மிகப் பொருத்தம்.
சீதா துரைராஜ் |
|
|
More
WeReachOut இரண்டாம் ஆண்டு விழா மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா, கனடா விஜயம் லலித கான வித்யாலயாவின் மும்மூர்த்திகள் தினம்
|
|
|
|
|
|
|