|
|
|
ஆங்கிலேய மருத்துவரான சர். ஜேம்ஸ் பேஜட் (Sir. James Paget) என்றவரின் பெயரில் வழங்கப்படும் பேஜட் நோய் (Paget disease) ஏதோ காரணத்தால் தற்போது தென் இந்தியாவில் பல முதிய நோயாளிகளிடத்தில் காணப்பட்டுள்ளது. தற்போது முன்னேறி வரும் மருத்துவ முறைகளாலும், கூடி வரும் ஆயுளினாலும் இந்த நோய் இப்போது பரவலாகத் தெரிகிறது. எலும்பு நோய்களில் மிக சுவாரஸ்யமான நோய் என்று கூட இதைச் சொல்லலாம். ஒருவர் பிறந்தது முதலே ஒருவரது எலும்புகளின் அணுக்கள் உருவாகியும் மடிந்தும் வருகின்றன. நன்றாக வளர்ந்துவிட்டபோதும், எலும்புகள் தொடர்ந்து வளர்வதால் இந்த எலும்பு அணுக்களின் தேய்மானமும் உற்பத்தியும் தினப்படி நடக்கின்றன. இந்த அணுக்களின் உருமாற்றம் சீராக இல்லாமல் ஏற்படும் தடுமாற்றமே பேஜட் நோய் என்று சொல்லலாம். தேய்வின் அளவைக் காட்டிலும் உருவாக்கும் அணுக்கள் அதிகமானால், எலும்புகள் துருத்தி, மிருதுவான எலும்புகள் உருவாகக் கூடும். இந்த மிருது எலும்புகள் வலுக் குறைவானதாக இருக்கும். உடைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். பெரும்பாலும் இந்த நோய்க்கு எந்தவித அறிகுறிகளும் காணப்படுவதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு மூட்டு வலி போன்ற சில அறிகுறிகளைத் தரலாம்.
அறிகுறிகள்
* எலும்பு வலி * மூட்டு வலி * நரம்பு பிசகுதல் * காது கேளாமை * சையாடிகா (sciatica) என்று சொல்லப்படும் கால் நரம்புத் தளர்ச்சி * தலைவலி * பார்வை பாதிக்கப்படுதல் * எலும்பு முறிவு
இதுபோன்ற அறிகுறிகள் இருக்கலாம். இந்த நோய் பெரும்பாலும் 40 வயதுக்கு மேல் ஆனவர்களையே தாக்குகிறது. ஆண்களை அதிகமாகத் தாக்கக்கூடியது. இந்த அறிகுறிகள் ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் இருப்பதால், இதைச் சீக்கிரத்தில் கண்டுபிடிக்க முடிவதில்லை. உடலின் எலும்புகளில் எந்தப் பகுதி அதிகம் பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப நோயின் அறிகுறிகள் மாறுபடலாம். குறிப்பாக மண்டை ஓட்டின் எலும்பு (skull) பாதிக்கப்பட்டால், காது கேளாமை, பார்வை பாதிப்பு, தலைவலி முதலிய அறிகுறிகள் தெரியலாம். |
|
பரிசோதனைகள்
* இரத்தத்தில் Alkaline Phosphatase அதிகமாக இருக்கலாம். * எக்ஸ்ரே எடுக்கும் போது எலும்பு துருத்திக் காணப்படலாம். * எலும்பு ஸ்கேன் (bone scan) எடுத்தாலும் எலும்புச் செல்களின் உற்பத்தி அதிகமாக இருப்பது தெரிய வரலாம்.
இந்த நோய் பெரும்பாலும் பெரிய தொந்தரவு ஏதும் தருவதில்லை. அரிதாக மூட்டு வலி (Arthritis), இருதய பாதிப்பு முதலிய பிரச்சனைகளை உருவாக்கலாம். ஆனால் தக்கபடி கண்காணித்தால் இந்த பிரச்சனைகள் இருப்பதில்லை.
தீர்வு முறைகள்
இந்த நோயின் அறிகுறிகள் அதிகம் இல்லாதபோது மருந்துகள் தேவையில்லை. ஆனால், அறிகுறிகள் அதிகமானால் Bisphosphonates என்று சொல்லப்படும் மருந்துகள் வழங்கப்படலாம். இதைத் தவிர வலி மருந்துகள் தேவைப்படலாம்.
நோய்த்தடுப்பு மற்றும் தீர்வுக்கான பயிற்சிகள்
இந்த நோய் என்று மட்டுமில்லாமல் எலும்புகள் பலமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய பயிற்சிகள்.
* உடற்பயிற்சி. தினமும் நடை பயிலுதல் வேண்டும். * தகுந்த அளவு சுண்ணாம்புச் சத்து, விட்டமின் D ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். * உடல் எடையை அளவாகப் பராமரித்தல் வேண்டும். * வயது முதிர்ந்தவர்கள் கீழே விழாமல் கவனமாக இருக்கவேண்டும்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |
|
|
|
|
|
|
|