Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
அகில உலகப் பெண்கள் தினம் - மார்ச் 8
சென்னை சங்கமம்
புஷ் பிடித்த புலிவால்
- அழகிய ஈஸ்வரன்|மார்ச் 2007|
Share:
Click Here Enlargeஈராக் பிரச்னை அதிபர் புஷ்ஷின் அரசுக்கு புலிவாலைப் பிடித்த கதையாகி விட்டது. 2003 மார்ச்சில் தொடங்கியது ஈராக் போர். அவ்வருடம் மே மாதத் தொடக்கத்தில் குறிக்கோள் நிறைவேறியதாக அதிபர் புஷ் வெற்றியறிவிப்பு விட்டார் (அப்போது சதாம் இன்னும் பிடிபடவில்லை); அதற்குப் பிறகு 4 வருடங்கள் முடியும் நிலையில் இன்னமும் அமெரிக்க மற்றும் ஈராக்கிய உயிர்களைக் காவு வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது. புஷ் வெற்றியறிவிப்பு வரை உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை 200-க்கும் குறைவு; அதன்பின் இறந்த அமெரிக்கப்படை வீரர்களின் எண்ணிக்கையோ 3000-க்கும் அதிகம்!

இன்று ஈராக் ஆக்கிரமிப்பு, பல பில்லியன் டாலர்களை விழுங்கி நாளொரு குண்டு வெடிப்பும் பொழுதொரு ரத்தக்களறியும் ஆகியிருக்கும் நிலையில், கடைசி முயற்சியாக மேலும் 21500 படைவீரர்களை அனுப்பி அமைதியை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. டெமாக்ரடிக் கட்சியும், ரிபப்ளிகன் கட்சியிலேயே சில உறுப்பினர்களும் எதிர்த்தாலும், அதிபரின் முனைப்பால், இந்தப் படை அதிகரிப்பு நடந்தே தீரும் என்பதுதான் நடைமுறை உண்மை. இது எங்கே போய் முடியும் என்பது அமெரிக்காவில் மட்டுமன்றி உலக அரங்கிலும் ஒரு முக்கியக் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

ஈராக்கில் போர் தொடங்கியதன் நியாய அநியாயங்கள் அதிகம் விவாதிக்கப்பட்டு விட்டன. ஈராக்கை சதாமிடமிருந்து விடுவித்து அங்கு ஜனநாயக ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற 'ஈராக் விடுதலைத் தீர்மானம்' முந்தைய அதிபர் பில் கிளிண்டனால் 1998-இல் நிறைவேற்றப்பட்டு, ஈராக்கின் சதாம் எதிர்ப்பு இயக்கங்கள் பலவற்றிற்கும் உதவப் பல மில்லியன் டாலர்களும் ஒதுக்கப்பட்டன. ஆனாலும் நேரடிப் படையெடுப்பு என்றில்லாமல், உள்ளிருந்து மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஊக்கம் தரும் விதத்திலேயே அமைந்திருந்தன. அவசரக்காரனுக்குக் கண் தெரியாது என்று சொல்வார்கள். அவசரமாய் ஈராக்கில் ஓர் அரசு மாற்றத்தைக் கொண்டுவர எண்ணிய அதிபர் புஷ்ஷின் நிர்வாகம் மத்தியக் கிழக்கின் சமூக அரசியல் சிக்கல்களை நிதானமாக அணுகி எடைபோடத் தவறிவிட்டது.


உட்பிரிவுகளும் உரசல்களும்

ஈராக்கின் ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்கும் இடையேயான பிளவுக்குப் பல நூற்றாண்டுகால வரலாறு உண்டு. அது 65% ஷியாக்களும் 35% சுன்னிக்களும் உள்ள நாடு. இதில் அராபிய சுன்னிப்பிரிவு 15%; குர்திய சுன்னிப்பிரிவு 20%. பல நூற்றாண்டுகளாக சுன்னிப்பிரிவைச் சேர்ந்த ஆட்டோமான் பேரரசின் கீழிருந்த ஈராக்கின் நிலப்பரப்பில் (அப்போது ஈராக் என்ற நாடு இல்லை), ஆட்சி அதிகாரங்கள் பலவும் சுன்னிக்கள் கையில்தான் இருந்தன; ஷியாக்கள் அடக்கப்பட்டிருந்ததனர். ஈராக் 1921-இல் உருவான பின்பும் கூட இந்நிலை அதிகம் மாறவில்லை. அராபிய சுன்னியாகிய சதாம் ஹ¤சேனும் தன் பிரிவினரையே முக்கியப் பதவிகளில் வைத்திருந்தார். சதாமின் ஆட்சி கவிழும்வரை ஷியாக்களின் மீதான பல அடக்குமுறைச் சட்டங்கள் அப்படியேதான் இருந்தன. சுன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் இடையில்தான் என்றில்லை, அராபியர்கள் தங்களை இனத்தால் பெர்சியர்களைவிட உயர்வாகக் கருதுவதால், ஈராக்கில் உள்ள பெர்சிய ஷியாக்களுக்கும் அராபிய ஷியாக்களுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. மேலும் பெர்சிய ஈரானின் பெரும்பான்மை சமுதாயம் ஷியா என்பதால், ஈராக்கின் சுன்னி அராபியர்கள் அந்நாட்டு ஷியாக்களின் அராபியத்தன்மையை முழுதாய் ஒப்புக்கொள்வதில்லை. அது மட்டுமன்றி, குர்து மக்கள் சுன்னிப்பிரிவைச் சார்ந்திருப்பினும், அவர்களது சு·பி அபிமானங்களாலும், அரேபிய சுன்னியான சதாம் குர்துகளின் மீது நிகழ்த்திய கொலை வெறியாட்டத்தாலும், குர்து மக்களுக்கு ஆளும் சுன்னி வர்க்கத்தின்மீது கடும் பகை இருந்தது. குர்து மக்களுக்கிடையே கூட நாக்ஷ்பந்தி பிரிவுக்கும் க்வாதிரி பிரிவுக்கும் உரசல்கள் உண்டு.
Click Here Enlargeஒருவழிப் பாதை

இத்தனை சிக்கல்கள் உள்ள ஒரு நாட்டின்மேல், தெளிவான வெளியேறும் திட்டம் (Exit strategy) என்ற ஒன்று இல்லாமல், தடாலடியாக உள்நுழைந்து போர் தொடுத்தது அமெரிக்கா. 15% அராபிய சுன்னிக்கள் மட்டுமே தங்களை எதிர்ப்பார்கள் என்றும், எப்படியாவது ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் எல்லாம் சரியாகி விடும் என்றும் எளிய கணக்குப் போட்டது. ஆனால் நடந்தது வேறு. பல நூறாண்டுகளாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த அதிருப்திகளும் கோபங்களும், அதன் அடக்குமுறை சர்வாதிகாரியின் ஆட்சி கவிழ்ந்ததும் பீறிட்டு வெடித்தன. ஒவ்வொரு பிரிவும் மற்றப் பிரிவைப் பழிவாங்க ஆயுதமேந்திப் புறப்பட, திடீரென ஏற்பட்ட அதிகார வெற்றிடமும், சதாம் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்று தப்புக்கணக்கு போட்ட அமெரிக்காவின் மெத்தனமும், கட்டுப்பாடற்ற ஒரு கொலைக்களத்துக்கு அடிகோலி விட்டது.

அதிகாரம் இழந்த சுன்னிக்களின் பாதுகாப்பின்மை உணர்வு; புதிய அதிகாரங்களின் மீது ஷியாக்களின் கண்; சுயாட்சி வேண்டும் குர்து மக்கள்; ஈராக்கிய அரசியலில் ஈரானின் தலையீட்டுக்கு அஞ்சி வெளியேற முடியாத நிலையில் அமெரிக்கா; மசூதியிலும், மார்க்கெட்டிலும் நாளும் வெடிக்கும் குண்டுகளுக்கிடையில் நம்பிக்கை இழந்த வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ள ஈராக்கியப் பொதுமக்கள் - இதுதான் இன்றைய ஈராக்.

அதிகப் படைகளை அனுப்புவது ஒரு தாற்காலிக அமைதிக்கு உதவலாம். ஆனால் ஈராக் மண்ணில் அமெரிக்கா இருக்கும்வரை நீண்டகால அமைதி சாத்தியமாகாது என்றே தோன்றுகிறது. உடனடியாக வெளியேறினாலோ ஈரானின் ஆதிக்கம் ஈராக்கில் அதிகரித்து விடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. ஈரானுடனான ரஷ்யா மற்றும் சீனாவின் அண்மைக்கால நெருக்கம் இந்த அச்சத்தை அதிகரிக்கிறது. ஈரானால் வளர்க்கப்படும் தீவிரவாத ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக நிகழ்த்தி வரும் தாக்குதல்கள் இதனால் மேலும் வலுவடையும். இஸ்ரேலை அழிக்க வெளிப்படையாகவே அறைகூவல் விடுக்கும் ஈரானும் அதன் கைக்குள் வலுவற்ற ஜனநாயக நாடாக ஈராக்கும் இருப்பது வெகு விரைவாக மத்தியக் கிழக்கை மற்றொரு இஸ்ரேலுடனான போருக்குள் தள்ளி விடலாம்தான். இந்த சாத்தியம் கருதியே ஈரானைக் கட்டுக்குள் வைக்கவும் அமெரிக்கா விரும்புகிறது.

யோம்-கிப்பூர் போருக்குப் பின்

1973-இல் அரபு-இஸ்ரேல் யோம்-கிப்பூர் போரில் அடைந்த தோல்விக்குப்பின் அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு உதவிய அமெரிக்காவைத் தண்டிக்கும் பொருட்டு பெட்ரோலிய உற்பத்தியைக் குறைத்து, விலையைப் பெருமளவு உயர்த்தி உலகளாவிய எண்ணெய்ச் சிக்கலை (The Oil Crisis) உருவாக்கின. இது அமெரிக்காவில் எரிபொருள் விலையை 4 மடங்கு உயர்த்தி, பணவீக்கத்தை அதிகரித்து அமெரிக்கப் பொருளாதாரத்தை பின்னடைவுக்குத் (recession) தள்ளியது. அமெரிக்கத் தொழில்துறையில் இதன் தாக்கம் பல துறைகளில் எதிரொலித்தது. எண்ணெய் குடிக்கும் பெரிய கார்களை உருவாக்கிக் கொண்டிருந்த அமெரிக்கக் கார் உற்பத்தித்துறை அடி வாங்கியது; ஜப்பானியச் சிறு கார்களின் விற்பனை பெருமளவு அதிகரித்தது; ஜப்பான் எண்ணெய் சார்ந்த கனரகத் தொழில்களிலிருந்து மின்னணுவியல் துறைக்கு கவனத்தைத் திருப்பி, உலக அளவில் பெரும்சக்தியாக உருவெடுத்தது. 80-களில் எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்வரை இந்தப் போரின் பாதிப்புகள் சிறியதும் பெரியதுமாய் பலவிதங்களில் தொடரவே செய்தன. மற்றொரு யோம்-கிப்பூர் வகைச் சண்டையைத் தவிர்க்க வேண்டுமென்றால், மத்தியக் கிழக்கில் மற்றொரு அரபு-இஸ்ரேல் போரைத் தவிர்க்கவே அமெரிக்கா விரும்பும். அந்த நம்பிக்கை ஏற்படும் வரையில் ஏதோ ஒரு வகையில் மத்தியக் கிழக்கிலும் ஈராக்கிலும் அமெரிக்காவின் இருப்பும் ஆதிக்கமும் தொடரவே செய்யும்.

இன்று அமெரிக்கா பிடித்துள்ள புலிவால் என்பது ஈராக் மட்டுமல்ல, பெட்ரோலுக்கு மத்தியக் கிழக்கை அது சார்ந்திருப்பதும்தான். எண்ணெய் இறக்குமதிக்கு 20-25% மத்தியக் கிழக்கு நாடுகளையும், அதிலும் பெருமளவு மத அடிப்படைவாத சவுதி அராபியாவையுமே சார்ந்துள்ளது. இவ்வருடம் அதிபர் புஷ் தனது ஸ்டேட் ஆ·ப் த யூனியன் உரையில், அடுத்த 10 ஆண்டுகளில் மத்தியக் கிழக்கு நாடுகளின் மீதான எண்ணெய்ச் சார்பை 20% குறைக்க வேண்டும் என்று சொன்னது இந்த நிலையை மாற்ற வேண்டித்தான். தாமதமாகவேனும் அரசு விழித்துக்கொண்டதே என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

ஈராக்கில் அமைதிநிலை திரும்பவேண்டும் என்றால், ஈராக் என்ற நிலப்பரப்பை நிர்வகிப்பதில் சதாமையும் தாண்டி ஏராளமான சவால்கள் இருக்கின்றன என்று அமெரிக்கா உணர வேண்டும். அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளும் இதை ஓரளவு உணரத் தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது. ஈராக் தந்த படிப்பினை ஈரான் விஷயத்திலாவது அதிபர் புஷ்ஷின் அரசுக்கு உதவினால் நல்லது.

அழகிய ஈஸ்வரன்
More

அகில உலகப் பெண்கள் தினம் - மார்ச் 8
சென்னை சங்கமம்
Share: 
© Copyright 2020 Tamilonline