Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிரிக்க, சிந்திக்க
கண்டதுண்டோ கறிவேப்பிலையை!
- மாலா பத்மநாபன்|ஜூன் 2008|
Share:
Click Here Enlargeசிலிகான் பள்ளத்தாக்கின் தற்போதைய தலையாய பிரச்சனை கறிவேப்பிலை எந்தக் கடையிலும் இல்லை என்பதுதான். வீட்டு மார்க்கெட் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம், மணிக்கு மணி உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல் விலை--இவை அனைத்துக்கும் மேலான பிரச்சனை கறிவேப்பிலை காணாமல் போனதுதான் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

கறிவேப்பிலையில்லாததால் சாம்பார் சோம்பாரானது, உப்புமா சப்புமாவானது, பொங்கல் மங்கலானது. சமைப்போரும் சாப்பிடுவோரும் இதை மறுக்க முடியாது.

கறிவேப்பிலையைத் தேடி நான் பேயாக அலைந்து கொண்டிருந்த நாட்களில் என் கணவர், எனது ஒரு வார விடுமுறைக்கு ஹவாய்த் தீவுகளில் ஒன்றான 'கவாய்' போகலாமென்றதும், என் மனக்கண் நாங்கள் புதிதாக வாங்கியுள்ள 52" LCD TVயின் திரைபோலப் பரந்து, விரிந்தது. அதில் அலைமோதும் சமுத்திரமோ, பச்சைப் பசேலென்ற மழைக்காடுகளோ, ஆங்காங்கு தென்படும் நீர்வீழ்ச்சிகளோ தெரியவில்லை! மொத்தத் திரையிலும் கறிவேப்பிலைச் செடிகளும், அருகே பல கேள்விக்குறிகளும். எங்கோ, எவரோ கவாய்த் தீவில் கறிவேப்பிலை உண்டு என்று கூறியிருந்ததுதான் அதற்குக் காரணம்.

எங்கெங்கு நோக்கினும் கறிவேப்பிலை... 'கண்டேன் சீதையை' என்ற அனுமன் வாக்கு எந்த அளவு ராமனுக்கு மகிழ்வு கொடுத்ததோ அந்த அளவு மகிழ்ச்சி எனக்கு கறிவேப்பிலையைக் கண்டதும்.
இரண்டே வாரங்களில் நாங்கள் கவாய்த் தீவில் இருந்தோம். என் தம்பியும், அவன் மனைவியும் ஹூஸ்டனிலிருந்து அங்கு வந்தனர். சமுத்திரத்தையும், பச்சைச் செடி கொடிகளையும், வண்ண வண்ணச் செம்பருத்திகளையும் கண்கள் ரசித்துக் கொண்டிருந்தாலும் மனம் கறிவேப்பிலையை நாடி அலைந்து கொண்டிருந்தது.

கவாய்த்தீவின் மிக முக்கியமான 'இறைவன்' கோவிலுக்குச் சென்றோம். 400 ஏக்கரில் அமைந்துள்ள அக்கோவிலின் அழகை விவரிக்க முடியாது. நேரில்தான் பார்க்க வேண்டும். கோயிலின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் எங்களை அழைத்துச் சென்று காட்டினார் கோவிலின் ஓர் உறுப்பினர். அவர் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. அவரிடம் தயங்கித் தயங்கி, 'இங்கு கறிவேப்பிலை உண்டா?' என்ற முக்கியமான கேள்வியைக் கேட்டேவிட்டேன். 'நாம் திரும்பும் வழியில் ஒரு கறிவேப்பிலை காடே உள்ளது' என்று சொல்லிவிட்டு, கோவிலின் மற்ற விசேஷங்களைக் குறித்து மாய்ந்து மாய்ந்து குறிப்புகள் கொடுத்தார்.

ஒரு வழியாக கறிவேப்பிலைத் தோட்டம் சென்றடைந்தோம். என்னே அதன் அழகு... என்னே வாசனை! எங்கெங்கு நோக்கினும் கறிவேப்பிலை... 'கண்டேன் சீதையை' என்ற அனுமன் வாக்கு எந்த அளவு ராமனுக்கு மகிழ்வு கொடுத்ததோ அந்த அளவு மகிழ்ச்சி எனக்கு கறிவேப்பிலையைக் கண்டதும்.
கோவிலின் பின்புறமிருந்த உருத்திராட்ச மரத்தோப்பை கண்டபோதுகூட நான் காண்பிக்காத கொண்டாட்டத்தை கறிவேப்பிலைத் தோப்பில் நான் காண்பித்ததை வினோதமாகப் பார்த்தபடி ஒரு பெரும் பையை எனக்குக் கொடுத்தார். கறிவேப்பிலை பறித்து போட்டுக் கொள்ளத்தான்! அந்தப் பை நிரம்பும்வரை பறித்தேன், பறித்தேன், பறித்துக் கொண்டே இருந்தேன்.

ஒருவழியாக தங்கியிருந்த வீடு சேர்ந்தோம். எங்களது துணிமணிகளில் காரில், வீட்டில் எங்கெங்கு முகர்ந்தாலும் கறிவேப்பிலை. அடுத்து வந்த நாட்களில் பாயசத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் கொத்துக் கொத்தாகக் கறிவேப்பிலை.

விடுமுறை கழிந்து ஊர் திரும்பும் நாளும் வந்தது. கர்மசிரத்தையாகக் கறிவேப்பிலையைக் கழுவி, உலர வைத்து, பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொண்டு விமான நிலையம் வந்தோம். அங்கிருந்த விவசாயப் பொருள் பரிசோதகர் கறிவேப்பிலைப் பைகளைக் கையில் எடுத்துக் கொண்டு 'இந்த இலைகளை எடுத்துச் செல்ல முடியாது. இவற்றில் ஏதேனும் பூச்சி, புழுக்கள் இருந்தால் மற்றச் செடி கொடிகளுக்கும் பரவும். மன்னிக்கவும்' என்றபடியே, என் கண் முன்னால் அத்தனை பைகளையும் குப்பைத்தொட்டியில் எறிந்தார். அந்தக் கறிவேப்பிலைக்காக நான் பட்ட கஷ்டங்கள் நிழற்படங்களாய் மனதில் விரிய கனத்த மனத்துடன் மெதுவாக விமானம் நோக்கி நடந்தேன்.

ஐந்து மணிநேர விமானப் பயணமும் கைக்கு எட்டியும் சமையலுக்கெட்டாத கறிவேப்பிலையைக் குறித்த எண்ணங்களிலேயே கழிந்தது. இதோ இன்றுகூட கடை கடையாகக் கறிவேப்பிலையைத் தேடி விட்டுக் கிடைக்காமல் திரும்பிய பின்னர்தான் இதை எழுதுகிறேன்.

உங்களுக்குத் தெரிந்த கடை எதிலாவது நல்ல கறிவேப்பிலை இருந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ்!

மாலா பத்மநாபன்
Share: 




© Copyright 2020 Tamilonline