|
|
|
அந்தத் தெருவுக்குள் புகுந்து, அந்த வீட்டை நெருங்கிப் பந்தலையும் வாழை மரத்தையும், டியூப் லைட்டையும் பார்த்த பிறகுதான் எனக்கு ஞாபகம் வந்தது. ''அடாடா, ராமய்யர் வீட்டுக் கல்யாணம் அல்லவா இன்று. காலையில் முகூர்த்தத் துக்குத்தான் போகவில்லை. சாயங்காலம் போய் கல்யாணமாவது விசாரித்துவிட்டு வந்திருக்கலாம். மறந்தே போய்விட்டது. இன்று காலையிலிருந்து வேறு நினைவே இல்லாமல் பணம் தேடிக் கொண்டிருக்கிறேன். என் இரண்டாவது பெண்ணைக் கோயம் புத்தூருக்கு அனுப்பியாக வேண்டும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு நாளைக்குக் கடைசி நாள். நாளைக்காவது புறப்படா விட்டால் மிகவும் பாடுபட்டுக் கிடைத்த இடம் பறிபோய்விடும். வீட்டில் ஒரே துக்கம். வைக்காததை வைத்து, விற்கக்கூடாததை விற்று இரு நூறு ரூபாய்கள் தேற்றிவிட்டோம். காலேஜுக்கே அறுநூறு ரூபாய் கட்ட வேண்டும். பிரயாணச் செலவும் கைச் செலவுக்கு எல்லாம் சேர்த்து இன்னும் ஐந்து நூறுகள் தோது செய்ய வேண்டும். காலையிலும் மாலையிலும் எங்கெல்லாமோ போய்ச் சுற்றிவிட்டு, அலுத்துச் சலித்துக் காரியம் ஆகாமல் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். ஏதோ ஞாபகத்தில் இந்தத் தெருவில் புகுந்தேன். கல்யாண வீட்டைப் பார்த்ததும் ஞாபகம் வருகிறது. இரவு மணி பத்து, பத்தரை இருக்குமே; இப்போது போய் என்ன செய்வது; ஆனால் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்திருக்க வேண்டும். இலை கொண்டு வந்து போட்ட இடத்திலிருந்து மனிதர் கையை நக்கிக் கொண்டே நகர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் விரட்டிய நாய்கள் வந்து ஒன்றை மற்றொன்று விரட்டிக் கொண்டிருந்தன. பந்தலுக்குள் எட்டிப் பார்த்தேன். சீட்டாட்டம் நடந்து கொண்டி ருந்தது. நாலு சீட்டு, களத்தில் நிறையப் பணம் கிடந்தது, புரண்டது. பந்தலுக்குள்ளும் போய்விட்டேன். ராமய்யர் எதிர்பட்டார்.
''என்னய்யா இது'' என்றார்.
| ஆடிக்கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாய் இருந்தது. கண்ணும் கையும் சீட்டைப் பார்த்தன. நோட்டையும் சில்லறை நாணயங்களையும் நெருடின. வீசி எறிந்தன. அள்ளிச் சேர்த்து இழுத்தன. அள்ளாமல் தோற்று ஓய்ந்தன. தொடர்நது நடந்தது இது. | |
''மன்னிச்ரணும், ரொம்ப அவசரமான காரியம். எங்கெல்லமோ போய் அலைந்து விட்டு இப்போதுதான்.''
''உள்ளே வாரும், சாப்பிடலாம்.''
''மன்னிச்சரணும். எனக்குச் சாப்பாடெல் லாம் ஆகிவிட்டது.''
''சந்தனம் சர்க்கரை கொண்டு வருகிறேன் இரும்...''
''ஏழு கைதான் ஆடிக்கொண்டிருக்கு. ஒரு இடம் இருக்கிறது!'' கடைக் கையிலே போடலாமோன்னோ...'' என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஆடுகிறவர் அந்த இடத்தில சீட்டையும் போட்டுவிட்டார். 'நூறு ரூபாய் ஷோ... என்றான் ஒருவன். அதாவது நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அவ்வளவு இருந்தால்தான் உட்கார்ந்து ஆட அனுமதிப்பார்களாம். ஐந்தும் பத்தும் வைத்துக் கொண்டு உட்கார்ந்து சிக்கனமாக ஆடிச் சூதாட்டத்தில் விறுவிறுப்பைக் குறைத்துவிடக் கூடாதாம். நான் என் சடடைப் பையைத் தடவினேன். இருநூறு ரூபாய் இருப்பது நெருடிற்று. எப்படியும் நாளைக்குப் புறப்பட முடியாது. ஒரு சான்ஸ் பாப்போமே. அந்தப் பாக்கி நூறுகள் கிடைச்சுட்டுமே இல்லையென்றால் இருக்கும் நுறுகள் தொலையட்டுமே. இது எத்தனையோ தடவை சத்தியம் செய்திருக்கிறோம். சீட்டைத் தொடுவதில்லை என்று. நாளைக்கு நூறாவது தடவையாகச் சத்தியம் செய்துவிட்டால் போகிறது. உட்கார்ந்தேன். ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்துக் காட்டினேன்; அதிகமாக இருப்பதையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள்.
நல்ல முரட்டுக் கைகள்; மும்முரமான ஆட்டம். நாலைந்து கலவைகள் வந்தாலே போதும், நமக்கு வேண்டிய நூறுகள் கிடைத்துவிடும்.
ஆடிக்கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாயிருந்தது. பீட்டை நிறையப் போட்டு ஆடினேன். பெரிய சீட்டுகள் அடிவாங்கின. ஒரு நூறு போய்விட்டது. அடுத்ததை எடுத்தேன். சற்று நிதானமாக ஆடியதில், கரைந்து கொ¡ண்டிருந்தது மெல்ல. இரவு இரண்டு மணியென்று யாரோ சொன்னது காதில் விழுந்தது. முதல் முழுகிப் போய்விட்டது. ஒருக்கால் எப்போதும் போல என்றைக்கும் ஆவது போல் இன்னும் யாவற்றையும் தோற்றுவிட்டு மிக விரைவி லேயே நூறாவது தடவையாக சத்தியம் பண்ணும் படி நேர்ந்துவிடுமோ என்ற ஓர் எண்ணம் வந்தது. வீட்டு நினைவும், என் பெண்ணின் நினைவும், அவள் காலையிலும் சாயங்காலமும் பட்ட வேதனையின் நினைவும் வந்தது.
ஆடிக்கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாய் இருந்தது. கண்ணும் கையும் சீட்டைப் பார்த்தன. நோட்டையும் சில்லறை நாணயங்களையும் நெருடின. வீசி எறிந்தன. அள்ளிச் சேர்த்து இழுத்தன. அள்ளாமல் தோற்று ஓய்ந்தன. தொடர்நது நடந்தது இது.
சிறிது நேரத்தில் சீட்டாட்டக் களத்திலிருந்து கவனத்துடன் ஒன்றியிருந்த உள்ளத்தில் மற்றொரு களம் விரிந்தது. அருகே தனியே கண்களும் காதுகளும் தனியே செயல்படத் தொடங்கியிருந்தன. அதனால் ஆட்டத்தில் சிறிதும் இடையூறு இல்லை. சுற்றியலைந்து சலித்துப் போய் வீட்டில் நுழைந்து தொப்பென்று உட்கார்ந்தேன். சாய்வு நாற்காலியில் சிறிது நேரம் கழித்து காப்பி கொண்டு வந்து கொடுத்தாள் என் பெண். அவள் கண்கள் கலங்கியிருந்தன. என்னைப் பார்த்தவள், மெல்லச் சமாளித்துக் கொண்டு, ''அப்பா, உன்னை இப்படிக் கஷ்டப்படுத்துவதற்கென்றே நாங்கள் பிறந்திருக்கிறோமா? உங்கள் முக வாட்டமும், உடம்பின் ஓய்ச்சலும், உங்கள் நடையின் தளர்ச்சியும் எங்கள் பிறப்பையே அவமானப் படுத்துகின்றன வேண்டாம் அப்பா, வேண்டவே வேண்டாம். பெரிய உடம்பைச் சிறியதாக்கிக் கொண்டு முகத்தின் தேஜஸ்ஸை மங்கச் செய்து கொண்டு யாரிடமும் போய் கடன் கேட்க வேண்டாம். அக்காவும் பி.ஏ. படித்துவிட்டு வேலை யில்லாமல் இருக்கிறாளே, நானும் பி.எஸ்.ஸி முடித்துவிட்டு இரண்டு வருஷமாய் தண்டச் சோறு தின்கிறேனே. டிரெயினிங் போய்விட்டு வந்தாலாவது வேலை கிடைக்காதா, உங்கள் சிரமம் குறையாதா என்று பார்த்தேன். வேறு காலேஜ்களில் ஆயிரம் இரண்டாயிரம் கேட்கிறார்களே. அந்தக் காலேஜிகளில் நல்ல வேளையாக இடம் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டேன்; ஆனால், இங்கும் அறுநூறு ரூபாயுடன் வர வேண்டுமென்று எழுதியிருப்பதைப் படித்தவுடனேயே எனக்குப் பகீர் என்றது. அப்போதே தீர்மானித்து விட்டேன். இது நடக்காதென்று; ஆரம்பத்திற்கே இப்படி இருந்தால், இன்னும் பத்து மாதம், ஹாஸ்டல் பீசும் மற்ற செலவுகளும் ஆகுமே. எனக்கு அடுத்தவள் காலேஜில் படிப்பதை நிறுத்தினால்கூட உங்களால் எனக்கு மாதா மாதம் அனுப்ப முடியாது. வேண்டாம் விட்டுவிடுங்கள். இனிமேலும் உங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது நான்...'' என்று முடித்துவிட்டாள் கதையை.
சாயங்காலம் வெளிய கிளம்பினேன். மேற்கே போய் ரங்கனைப் பார்த்து ஏதாவது உதவி கேட்போமென்று போனேன். அவன் நல்ல பணக்காரன். ஊருக்கே பெரிய மனிதர் குடும்பத்தில் பிறந்தவன். நாற்பதைத் தாண்டிவிட்டதால் இன்னும் பாப புண்ணியங்களைப் பற்றி நினைப்பு வரவில்லை அவனுக்கு. தானதர்மங்களின் வழியே தெரியாது. அவனுக்கு என்று அவனுடைய அந்தரங்க நண்பர்களே கூறுவார்கள். ஆனால் என்னுடைய இந்தச் சந்தர்ப்பம் அவனைச் சிந்திக்கத் தூண்டாதா என்ற சபலத்தில் போனேன். அவன் வீட்டில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் முப்பது நாற்பது பேர் கூடி ஒரே கும்மாளமாயிருத்து.
''வாய்யா, விணாப்போன கிராக்கி, வாய்யா...'' என்ற வரவேற்புடன் நுழைந்தேன்.''பாவிகளா, உங்களாலேதான் நான் வீணாப்போனேன்'' என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனோ சொல்ல வரவில்லை எனக்கு. ஸ்வீட், காரம், காப்பி வந்தது. சாப்பிட்டேன். ''இன்னும் சிறிது நேரமிருந்தால் ஸோமபானம் உண்டு'' என்றான் ரங்கன்.
''இதெல்லாம் என்ன இன்னிக்கு'' என்றேன். எல்லோரும் சிரித்தார்கள். ஒருவன் என் காதோடு, “ரங்கன் நேற்று செஞ்சுரி போட்டான், அதற்காகத்தான் பார்ட்டி'' என்றான்.
''அப்படியென்றால்...'' என்றேன் புரியாமல்.
''ரங்கன் நேற்றிரவு தன் நூறாவது தோழியை...'' என்றான் ஒருவன்.
தன் வாழ்வின் லட்சியமே நிறைவேறி விட்டது போல் வெறியுடன் சிரித்தான் ரங்கன். அப்பொழுதே அங்கிருந்து விடைபெற்றுப் போயிருக்கலாம். இருந்தாலும் சிறுமை விடவில்லை. ரங்கனைத் தனியே அழைத்து, விவரமாகச் சொன்னேன். கடனாகக் கேட்டேன்.
''ஏகச் செலவு காலம், தாக்குப்பிடிக்க முடியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்...'' என்றான்.
அவன் வீட்டை விட்டுப் புறப்பட்டுத் தெருவில் நடந்தேன். அடுத்த இரண்டு வீடுகளும் அவனுடையதுதான். அநேகமாக அந்தத் தெரு முழுவதுமே அந்தக் குடும்பத்திற்கே சொந்தம். அவர்களுடைய தகப்பனார் அப்படி வாங்கிச் சேர்த்துவிட்டுப் போயிருக்கிறார். இரண்டு வீடுகள் தள்ளி சீமா வீடு. அவன் ரங்கனுக்குத் தம்பி. ரைஸ்மில் வைத்திருக்கிறான். அரிசி வியாபாரமும், நெல் வியாபாரமும் செய்கிறான். காசில் கிண்டன். கடவுள் பக்தி உள்ளவன். ஆசார அனுஷ்டானங்களுடன் இருப்பவன். உபகாரி, கடன் கொடுப்பான், வட்டி அதிகம். ஆறு மாத வட்டியை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் கொடுப்பான். ஆறு மாதத் தவணை. மாதா மாதம் உள்ள தவணையைக் கழுத்தில் கத்தி வைத்தாவது கறந்துவிடுவான். நான் பல முறை அவனிடம் கடன் வாங்கியது உண்டு. தகராறு இல்லாமல் தீர்ந்ததும் உண்டு. தெருவோடு போன என்னைச் சீமாவே கூப்பிட்டான். தெருக்கோடியில் இருக்கும் கடையில் வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டு திரும்பி வந்து அவனைப் பார்ப்பதாக இருந்தேன். அவனே கூப்பிட்டதும், காரியம் பழமென்று சற்று நிம்மதியாகவே உள்ளே போனேன்; உட்கார்ந்தேன்.
சீமா, உள்ளே பார்த்துக் கொண்டு “ஏய் ராமாஞ்சு, இலை போடு, பிரசாதமெல்லாம் சாதி'' என்று உத்தரவு போட்டுவிட்டு ''பார்ட்டிக்குப் போய் வருகிறீரோ ஹ¤ம் கஷ்டம், நல்ல குடும்பத்தில் பிறந்து, இப்படி நாயாய் அலைய வேண்டாம். உம்; ஸ்நேகிதர் வெட்கமில்லாமல் பார்ட்டி வேற கொடுக்கி றாரே, மஹா பாபம்...” என்றான்.
''அதற்கென்று வரவில்லை. வேறு காரியம். அவனைப் பார்க்கலாமென்று வந்தேன். பிறகுதான் கேள்விப்பட்டேன். பாபம்தான் இது!''
''சரி, வாரும், கொஞ்சம் பெருமான் பிரசாதம் சாப்பிடும்; கையை, காலை அலம்பணுமா? தண்ணீர் கொண்டு வரச் சொல்லட்டுமா?''
''என்ன விசேஷம்...?''
''ஒண்ணுமில்லை; இன்னிக்கு சுந்தர காண்டம் நூறாவது பாராயணம் முடித்தேன்.
பெருமாளுக்கும் திருவடிக்கும் (ஆஞ்சேனயர்) அர்ச்சனை.''
பிரசாதம் சாப்பிட்டேன். சீமா என் குடும்ப யோக§க்ஷமங்களை விசாரித்தான். காலம் போகிற போக்கில் என் போன்ற சம்சாரி களின் குடும்பதிற்குள்ள கஷ்டங்களைத் தானே சொல்லி அனுதாபப்பட்டான். நான் தயக்கத்துடன் என் பணமுடையைச் சொன்னேன். அவனுக்குப் புரியுமே என்று வித்யா தர்மம், புண்ணியம் என்றெல்லாம் வேறு சொல்லி என்னையே அசிங்கப் படுத்திக் கொண்டேன்.''
''ஐயோ... பாவம்'' என்றான் சீமா. |
|
சரி. காரியம் பலித்துவிட்டதென்று நினைத்துக் கொண்டேன். சிரித்தேன்.
சீமா, தன் கஷ்டங்களைச் சொல்கிறான். ''ஐநூறாவது, ஆறுநூறாவது, இப்போ ஒண்ணும் மூச்சு விட முடியாது. ஏராளமாய் ஸ்டாக் பண்ணிவிட்டேன் நெல்லை. நானே எல்லா பாங்கிலும் ஓவர்டிராப்ட் உளுந்து, பயறு வேறே நிறைய வாங்கிப் போட்டிருக் கிறேன். கவர்ன்மெண்ட் அடிக்கிற கூத்தில் ஒன்றுமே புரியவில்லை. ஆடி ஆவணியில் ஏதாவது விலை ஏறினால் வெளியே எடுக்கப் போகிறேன். மேட்டூரில் ஜலமே இல்லையாம். குறுவை என்ன ஆகப்போகிறதோ, எது எப்படிப் போனாலும் பல்லைக் கடித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறேன். பெருமாள் கைவிட மாட்டரென்று பூரண நம்பிக்கை எனக்கு. ஐநூறாவது அறநூறாவது நூறு இரு நூறுக்குக்கூட வழி இல்லை. உமக்குக் கொடுப்பதற்கு என்னய்யா தயக்கம்? ரொம்ப நம்பிக்கையான புள்ளி நீர்; அதுவும் தவிர படிப்புக்குன்னு கேட்கிறீர், ஐயோ பாவம். ஆனால் நம்மகிட்ட வழியே இல்லை. வேறு எங்காவது புரட்டிப் பாரும்'' சீமா முடிக்கிறான்.
சிரித்தேன்; வாய்விட்டுச் சிரித்து விட்டேனோ! உள்ளும் புறமும் இணைந்து விட்டனவோ! உள்ளே நிகழ்ந்து கொண்டிருந்த களம் மறைந்து, வெளியே, கண் எதிரே இருந்த சீட்டாட்டக் களம் மட்டுமே தெரிந்தது.
''ஐயோ பாவம். சிரிக்க மாட்டீரா, என் கையை முறிக்க வேண்டுமென்றே, சின்ன சீட்டுக்கு இவ்வளவு ரவுண்ட் வந்து, களத்தை அள்ளி வாரிவிட்டீர்; சிரித்து வேறு என் வயிற்றிரிச்சலைக் கொட்டிக்கிறீரே; ஐயகாலம். சீட்டு நன்னாப் பேசறதே உமக்கு என்று பயந்துண்டு விட்டுத் தொலைத்தேன் பெரிய சீட்டை; தொலையட்டும். ஒரு களக்காயாவது கட்டும்'' என்றான் ஒருவன்.
| ஐநூறாவது அறநூறாவது நூறு இரு நூறுக்குக்கூட வழி இல்லை. உமக்குக் கொடுப்பதற்கு என்னய்யா தயக்கம்? ரொம்ப நம்பிக்கையான புள்ளி நீர்; அதுவும் தவிர படிப்புக்குன்னு கேட்கிறீர், ஐயோ பாவம். ஆனால் நம்மகிட்ட வழியே இல்லை. | |
சீட்டுக்களைச் சேர்த்து கொசுவி, புறாவிட்டுக் கலைத்துப் போட்டேன். ஆடிக் கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாக இருந்தது.
''புரட்ட வேண்டியதுதான்'' என்று சீமாவுக் குப் பதில் சொல்கிறேன். இங்கே ஆட்டத்தில் எதிரே பந்தயம் போட்டுக் கொண்டிருந்தவன் தன் சீட்டைப் புரட்டி விட்டான். 'புரட்டச் சொல்லவில்லையே'' என்றேன்.
''ப்போ சொன்னீரே...''
''ஒகோ, சொன்னேனோ? இன்னும் இரண்டு பந்தயமாவது போட்டிருப்பாய்...'' என்று பேசிக் கொண்டே குறையோடு சீட்டை கலைத்தேன்.
''தூக்கக் கலக்கமோ...'' என்றான் ஒருவன்.
''ஆமாம். மத்தியானம் முழுக்க ஒரே அலைச்சல், தூக்கம் கண்ணச் சுற்றுகிறது.''
''சுற்றுமைய்யா, சுற்றும். நூறு நூறாகச் சுற்றிச் சுருட்டிவீட்டீர் அநேகமாக எல்லாக் கைகளும் குளோஸ். தூக்கம் கட்டாயம் கண்களைச் சுற்றுமே...'' என்றான் ஒருவன்.
சட்டைப் பை கனத்திருந்தது; வெளியே துருத்திக் கொண்டிருந்தது. அவன் சொன்னது உண்மை, நிறையவே ஜெயித் திருந்தேன். ஏதோ ஞாபகத்தில், ''மணி என்ன?'' என்று கேட்டுவிட்டேன்.
''பதினொன்றரைதான் ஆகிறது'' என்று கிண்டல் பண்ணினான் ஒருவன்.
ராமய்யர் வந்து என்னை அவசரமாகக் கூப்பிட்டார் ''ரொம்ப அவசரம்'' என்றார்.
சிதறிக் கிடந்த ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நோட்டுக்களைப் பையில் திணித்துக் கொண்டு, ஒரு ரூபாய் நோட்டுக்களையும் சில்லறை நாணயங்களையும் அடுக்கி வைத்துவிட்டு எழுந்து சென்றேன். ''ஓய்... உம்முடைய ஜன்மாவிலேயே இன்னிக்குத் தான் நீர் ஜெயித்திருக்கிறீர். மணி நாலு ஆகப் போகிறது. போய் உட்கார்ந்து ஒரு நாலு ஆட்டம், சும்மா பேருக்குப் பார்த்துவிட்டு புறப்படும் வீட்டிற்கு'' என்றார்.
அதேபோலச் செய்துவிட்டுக் கிளம்பினேன். ஒரே இருட்டு எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வீட்டின் வாசற் கதவு திறந்திருந்தது. வெளிச்சமும் தெரிந்தது. கையில் இருந்ததை ஓரமாக எறிந்துவிட்டு, ''எங்கேந்து வந்தாகிறது? விடிந்ததும் கிளம்ப வேண்டுமே குழந்தை? கூடப் போகிற உத்தேசம் உண்டோன்னோ?” என்றாள் மனைவி.
''விடிந்தும் விட்டது. புறப்பட வேண்டியது தான்'' என்று சட்டையைக் கழற்றினேன். நோட்டும் நாணயமும் சட்டைப் பையிலிருந்து சிதறின. ஏழெட்டு நூறுகள் இருக்கும்.
கரிச்சான்குஞ்சு |
|
|
|
|
|
|
|
|