|
ஷெகாவத் பகுதியின் மாளிகைகள் |
|
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ.பிச்சை|மார்ச் 2008| |
|
|
|
|
ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை
ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு
சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக அதனைக் கற்றுக் கொண்டு, ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்க்கை நடத்தி வருபவர். அவர் தமது அனுபவங்களைத் தொடர்ந்து சென்னை ஆன்லைனில் எழுதி வருகிறார். அதிலிருந்து சில பகுதிகளைத் தென்றல் தருகிறது...
1996 பொதுத்தேர்தல் பல காரணங் களால் திருப்புமுனையாக அமைந்தது. அதில் மிக முக்கியமானது டி.என்.சேஷன் இந்தியத் தேர்தல் ஆணையராக இருந்தது தான். ஓர் அதிகாரி என்ற முறையில் பல தேர்தல் பணிகளில் நான் பங்கு கொண்டி ருக்கிறேன். 1988ல் விழுப்புரம் தொகுதியிலும், 1991ல் மயிலாடுதுறையிலும் நான் தேர்தல் பார்வையாளராக இருந்திருக்கிறேன்.
எந்த அதிகாரியும் அவர்கள் பணியாற்றும் மாநிலத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபடு வதை சேஷன் விரும்பவில்லை. சிலர் மேலதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் முசோரி, டேராடூன், நைனிடால் முதலிய குளிர்ச்சியான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். என்னைப் போன்ற சிலர் 50 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ள ராஜஸ்தானின் தார் பாலைவனப்பகுதியான ஜுன்ஜுனு போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். இது ராஜஸ்தானில் உள்ள ஷேகாவதி பகுதி. அதன் அரண்மனை போன்ற வீடுகளுக்கும், வண்ணமிகு மாடமாளிகைகளுக்கும் பெயர் பெற்றது. இவைகள் ஜுன்ஜுனுவைச் சுற்றியே உள்ளன. இந்த உண்மையைத் தெரிந்துகொள்ள மாவட்ட ஆட்சியாளர் திரிபாதி அவர்களிடம் பேசினேன். என் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவர், 'அம்மணி உங்களுக்குத் தங்குவதற்காக வண்ணமயமான மாளிகை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது, நீங்கள் பணியாற்றும் இடங் களுக்குச் செல்லும் பாதை பெரிய மாளிகைகள் இருக்கும் வழியாகத்தான் செல்கிறது. அதுபோன்ற மாளிகைகளில் இருக்கும் வாக்குச் சாவடிகளையே நீங்கள் மேற்பார்வையிட ஏற்பாடு செய்கிறோம்' என்று சொன்னார். இப்படி அதிகாரிகள் உறுதி அளித்ததும் நான் கவலையை விட்டுவிட்டேன். மிகுந்த உற்சாகத்துடன் ஜுன்ஜுனுவுக்குப் புறப்பட்டேன்.
அதிகாரிகளுடன் தேர்தல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, ஹோட்டலாக மாற்றப்பட்ட மண்ட்வா அரண்மனையில் தங்க வைக்கப்பட்டேன். தேர்தலுக்கு முன் ஒரு வாரமும், தேர்தல் சமயத்திலும், தேர்தலுக்குப் பின்னும் மொத்தம் பதினைந்து நாட்களுக்கு இந்த இடம் எனக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தங்கி இருந்தது எனது வாழ்க்கையில் கிடைத்த இணையற்ற அனுபவமாகும். பாலைவனப் பகுதியில் குளிர்சாதன அறை கிடைத்தது சொர்க்கமே போன்றதாகும். உயர்வகைச் சாப்பாடு, உணவு பரிமாறுவது என்று மற்ற சேவைகளும் பிரமாதம்.
நான் மேற்பார்வையிட வேண்டிய இடங்கள் பாரம்பரியப் புகழ்பெற்ற நாவல்கார், மாண்ட்வா, ·பதேபூர், ராம்பூர், துண்ட்லோத் ஆகிய ஐந்து அழகான நகரங்கள் அடங்கிய பகுதியாகும். நான் கோயங்கா, சிங்கானியா, ஜுன்ஜுன்வாலா, கேம்கூர், செளத்ரி, பிர்லா ஆகியோரின் சொந்த ஊர்கள் உள்ள ஷேகாவதி பிராந்தியத்தின் நடுவில் இருந்தேன். ஷேகாவதியை தமிழ்நாட்டின் செட்டிநாட்டுப் பகுதியுடன் ஒப்பிடலாம். இரண்டுமே வறண்ட பகுதிகளாகும். ஆயினும் செட்டியார்கள் அங்கிருந்து திரவியம் தேடத் திரைகடல் கடந்து சென்றார்கள். அவர்களின் குடும்பத்தினரோ தங்கள் சொந்த ஊரிலேயே தங்கி இருந் தனர். அவர்களுள் பலர் பெரும் செல்வம் குவித்தனர். சிலர் ராஜா என்ற பட்டமும் பெற்றனர். பலர் தமிழ்நாட்டின் தொழில் துறையில் தலைவர்களாகவும் இருக்கிறார் கள். அவர்களிடம் பணம் சேர்ந்த போதெல் லாம் அரண்மனை போன்ற வீடுகள் கட்டிச் சீன ஓடுகளால் அலங்கரித்தார்கள். வீடு களை மரவேலைப்பாடுகளாலும் வண்ணங் களாலும் அழகுபடுத்தினார்கள்.
அதேவழியில் ஷேகாவதி 'மார்வாரிகள்' தங்கள் குடும்பத்தினர் ஊரில் இருக்க, தாங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றனர். தங்களுக்கென்று அரண்மனை போன்ற வண்ணமயமான பெரிய மாளிகை களைக் கட்டிக் கொண்டனர். இந்தத் தலைமுறையில்தான் அவர்கள் தங்கள் கணவர்களுடன் சேர்ந்து வசிக்க ஆரம்பித் திருக்கின்றனர். ஆயினும் குடும்பத்தின் முக்கிய நிகழ்ச்சிகளைச் சொந்த ஊரிலுள்ள தங்கள் வீடுகளிலேயே நடத்துகின்றனர். செட்டியார்களின் வழக்கமும் இதுதான்.
நான் மேற்பார்வையிட வேண்டிய முதல் இடம் நாவல்கார். இங்கு 'போதார்களின் ஹவேலி' என்ற அழகான மாளிகையைக் கண்டு மகிழ்ந்தேன். இதை அந்தக் குடும்பத்தினர் உயர்நிலைப்பள்ளி நடத்த நன்கொடையாக வழங்கியுள்ளனர். அது ஒரு பெரிய மாளிகை. அதில் பல வாக்குச் சாவடிகள் அடங்கியுள்ளன. இந்தியாவில் வாக்குச்சவாடிகள் அமைந்துள்ள இடங் களில் இதுவே மிக அழகான இடமாக இருக்குமென நான் நிச்சயமாகச் சொல் வேன். வாக்குச்சாவடி அமைந்திருந்த இன்னொரு இடம் உள்ளூர்க் கல்லூரி யாகும். இதுவும் போதார் குடும்பத்துக்குச் சொந்தமான மாளிகைதான். இது மகாத்மா காந்திக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டு, அவரது ஆணைக்கிணங்க கல்லூரியாக மாற்றப்பட்டது. எனது தேர்தல் பணியின் முதல் நாளே நாவல்கார் என் கண்களுக்கு அரிய விருந்தானது. நாவல்கார் அரச குடும்பத்தின் அரண்மனைக்குச் சென்று அங்கு 'ராஜா சாஹிப்' அவர்களுடன் தேநீர் பருகினேன்.
சேஷன் சாஹிப் கொண்டுவந்த மாற்றம்
தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பாக எங்கள் பொறுப்பிலிருந்த தொகுதிகளில் நாங்கள் கவனம் செலுத்தவேண்டுமென்று சேஷன் வற்புறுத்தினார். ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் என்பதற்குப் பதிலாக ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு மூன்று பார்வையாளர்கள் இருந்தோம்.
எனது கார் ஓட்டுநரும், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் வழிகாட்டி வர, நான் ஒவ்வொரு கிராமமாகச் சென்று தேர்தலுக் கான ஏற்பாடுகளைக் கண்காணித்தேன். (ஆயுதம் தாங்கிய பாதுகாவலரோடு நான் பணிகளைக் கவனித்தது அதுதான் முதல்முறை). அதிகாரிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளித்த சேஷனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். |
|
அடிக்கடி பீஹாரிலும், உத்தரபிரதேசத் திலும், வடமாநிலங்களிலும் நடக்கும் வாக்குச்சாவடி கைப்பற்றுதல் போன்ற சம்பவங்களை நாம் தமிழ்நாட்டில் கேள்விப் பட்டதில்லை. சில இடங்களில் பலவீனமான மக்களை மிரட்டுவதாகப் புகார்கள் வரும். வாக்குப்பதிவு செய்ய இயலாதவாறு அவர் களைத் தடுப்பவர்கள் பற்றியும் தகவல்கள் வரும். வேறு சில இடங்களில் ஆள்மாறாட்டம் செய்பவர்களும் உண்டு. இம்மாதிரி சம்பவங்களைத் தவிர்க்க மக்களிடம் இதுபற்றி மேலும் சில தகவல்கள் பெற விரும்பினேன்.
பல கிராமத்து மக்கள், இது ஒன்றும் அசாதாரண செய்தி அல்ல என்றும், சென்ற தேர்தல் வரை இது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்ததென்றும் உறுதி செய்தார்கள். எனது கார் ஓட்டுனர் ஏழு பேர் சார்பாக வாக்களித்ததாகவும், எனது ஆயுதப் பாதுகாவலர் சென்ற தேர்தலில் பத்து நபருடைய வாக்குகளைத் தானே போட்டதாகவும் சொன்னதைக் கேட்க எனக்கு வியப்பாக இருந்தது. இதன்பிறகு தான், இது குண்டர்களும், சமூக விரோத சக்திகளும் மட்டுமே கையாளும் பழக்கம் அல்ல என்பதை உணர்ந்தேன். மதிப்புக் குரிய இரண்டு அரசு ஊழியர்கள் குற்ற உணர்வு சிறிதுமின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்!
'எல்லோரும் தங்கள் வேலையை விட்டு விட்டு வாக்களிக்க வருவதால் என்ன பயன்? தன் குடும்பத்தின் சார்பாக ஒருவர் வாக்களித்தால் போதாதா? மலைவாழ் மக்கள் சார்பில் அவர்களது தலைவர் வாக்களிக்கிறார். தங்கள் கிராம மக்களின் வாக்குகளை கிராமத்தலைவரே போடுகிறார்' என்று இருவரும் தங்கள் செயலுக்கு நியாயம் கற்பித்தனர். அந்தப் பகுதியின் பெரும் பாலான பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதில்லை. ஆகவே வீடே கதி என்றிருக் கும் பெண்களுக்காக வாக்களிக்கச் சிலரை அனுப்ப வேண்டியதாகிறது. அதே போன்று ஒரு பஞ்சாயத்தில் உள்ள கிராமவாசிகள் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பது என்று முடிவு செய்த பிறகு, ஏன் மக்கள் அனைவரும் வாக்களிக்கப் போக வேண்டும்? ஒரு நபரே போதுமே! இவ்வாறு இவர்கள் செய்வதை 'வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவது' என்று நாம் கொள்ளமுடியாது. ஆயினும் ஒரு மனிதன் தனது கிராமத்தார் அனைவருக்குமாக வாக்களிப்பது, ஒருவகையில் வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவதற்கு இணையான தாகிவிடுகிறது. மேலும் அப்பகுதியின் நிலப்பரப்பு வறட்சியானது, மிகவும் வெப்பமானது. குடிநீர்ப் பற்றாக்குறை அதிகம். போக்குவரத்துச் சாதனம் மிகக் குறைவு. பெண்கள் வெளியில் வருவதில்லை. அதனால்தான் வாக்கெடுப்பு இப்படி நடக்கிறது. யாரும் புகார் செய்வது கிடையாது. பெண்கள் வீட்டில் அடைந்து கிடப்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் சௌகரியமாக இருக்கிறது.
ஆயினும் இந்தமுறை அப்படி நேராது என்று மக்கள் நம்பினர். சேஷனை வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருந்தனர். தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என மாவட்ட அதிகாரிகளை சேஷன் கேட்டுக் கொண் டார். தேர்தல் செலவுகளுக்கு உச்சவரம்பை நிர்ணயித்திருந்தார். வாக்குச்சாவடிக்கு வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றி வருவதைத் தடை செய்திருந்தார். ஆட்சே பணையோ, புகார்களோ வந்தால் மறு தேர்தலுக்கோ, மறு எண்ணிக்கைக்கோ உத்தரவிடும் மனோநிலையில் அவர் இருந்தார். எல்லோரும் சேஷனின் புகழ் பாடிக் கொண்டிருந்தனர். ஆனால் மறுபக்கத்தில் எனது கார் ஓட்டுநரும் எனது பாதுகாவலரும், சேஷன் இருக்கிறாரோ இல்லையோ, நாங்கள் சென்ற ஆண்டுகளில் செய்த அதையே இந்த ஆண்டும் செய்வோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். அவர்களுடைய சொந்த ஊர் என் கண்காணிப்பு எல்லைக்கு வெளியே இருந்தது. ஆகவே அவர்கள் மீது நேரடி கவனம் செலுத்த முடியவில்லை. அதே சமயம் என்ன நேர்ந்தது என்பதை அறியவும் ஆர்வமாக இருந்தேன்.
தேர்தல் ஊழியர்களுக்கு இவ்வளவு ஏற்பாடுகள் செய்து நம்பிக்கையூட்டியும், பாதுகாப்பு அளித்தும், வழிகாட்டியும் கூட அவர்கள் இந்த வழக்கத்தை இன்னும் அனுமதித்துக் கொண்டுதானிருந்தனர். நான் ஓய்வாக இருக்கும்போது எனது ஓட்டுநரை யும், பாதுகாவலரையும் சொந்த ஊருக்குச் சென்று வாக்களித்துவிட்டு வருமாறு சொன்னேன். அத்துடன் அவர்களோடு ஒரு பந்தயமும் போட்டேன். அவர்கள் ஒரு வாக்குக்கு மேல் போட்டுவிட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா நூறு ரூபாய் தருவதாகச் சொன்னேன். இருவரும் ஒரு மணிநேரம் சென்றபின் வருத்தம் தோய்ந்த முகத்துடன் திரும்பி வந்தனர். அவர் களுடைய வாழ்க்கையில் முதல்முறையாக உபரி வாக்குகள் அளிக்க முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. 'ஜனங்கள் சேஷன் சாஹிபுக்குப் பயப்படுகிறார்கள். அவர்கள் உபரியாக வாக்களிக்க எங்களை அனுமதிக்கவில்லை' என்றார்கள் வருத்தத்துடன். மாவட்டத்தில் ஆள் மாறாட்டம் பற்றி எதிரிடையான குறிப்புகள் எதுவும் அனுப்ப வேண்டியதில்லை என்பதால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். பழைய வழிமுறைகளை மாற்றிக்கொள்ள இதுதான் தக்க தருணம் என்று சேஷன் சொல் வதைக்கேட்டு, ஆண்களாயினும் பெண்களா யினும் அவரவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே முடிவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டுமென்று அவர்களிடம் நான் சொன்னேன்.
(தொடரும்)
ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை |
|
|
|
|
|
|
|