Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சாதனையாளர் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சிறுகதை
எங்க மாமா
ஆசையைக் குறைத்தல் அருகே சொர்க்கம்!
சியாமளியின் ஹாரம்
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|பிப்ரவரி 2008|
Share:
Click Here Enlargeசனிக்கிழமை காலை. பெரியவனுக்குக் கோடை விடுமுறை என்பதுடன் கராத்தே, பியானோ போன்ற சில்லறை வகுப்புகளும் மூடப்பட்டிருந்ததால் ஒருவித இடையூறுமின்றி ரமணன் அருமையான காலைத் தூக்கத்தை ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான். மனுஷன் சற்று சுகப் பட்டாலும் பொறுக்காமல்தான் விதி என்னும் ஒன்று மனைவி என்கிற முட்டுக்கட்டையைப் படைத்து அனுப்பி வைக்கிறது போலும். 'மணி எட்டுக்கு மேலாகிறது. எப்படித்தான் மாய்ந்து மாய்ந்து தூங்க முடிகிறதோ? ஊர்ப்பட்ட வேலை கிடக்கிறது. சட்டுப் புட்டுனு எழுந்துக்கோங்க' என்று எட்டு வீடுகளில் தூங்குபவர்களையும் எழுப்பும் விதமாகப் பள்ளியெழுச்சி பாட ஆரம்பித்து விட்டாள் இம்சை அரசி, தப்பு, தப்பு, இல்லத்தரசி சியாமளி.

'இப்ப எந்தப் பட்டணம் கொள்ளை போகுதுன்னு இந்தக் கத்துக் கத்துறயாம்?' எனக் கேட்டபடியே ரமணன் புரண்டு படுத்தான். 'மறந்து போச்சா? இன்னிக்கு கோயிலில் ஷ¥ட்டிங்குக்குப் போகணுமே' என்று விளக்கமளித்தாள் சியாமளி.

ஆஹா! போதாத காலம் எப்படியெல்லாம் வருகிறது! ரமணன் சென்ற வார இறுதிக்குப் பயணித்தான்...

எடிஸனில் நண்பன் பிரபுவின் குழந்தைக் குப் பிறந்தநாள் விழா. வழக்கமான கொண்டாட்டங்கள், சம்பிரதாயங்கள், ஒரு வயதுக் குழந்தையின் நீண்ட ஆயுளுக்கும், வளமான எதிர்காலத்துக்கும் வாழ்த்திக் கொண்டே உணவு வகைகளை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தது சுற்றமும் நட்பும் கொண்ட கூட்டம். நண்பர் குழாத்தில் ஒருவனான ராக்கி என்கிற ராதா கிருஷ்ணன் ஒரு வேண்டுகோளைப் பிரகடனமாக விடுத்தான்.

இங்கு ராக்கி பற்றி ஒரு சிறு குறிப்பு. இந்தியாவில் மெக்கானிகல் எஞ்சினியரிங் முடித்த அவன் இங்கு வந்து திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்று, ஹாலிவுட் இயக்குனர்கள் சிலரிடம் உதவி யாளனாக இருந்து, சமீபத்தில் இயக்குன ராகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறான். இதை வைத்துக்கொண்டு தமிழுக்குத் தொண் டாற்றப் புறப்பட்டுவிட்டான். தொண்டை வறளக் கத்தி மக்களை இழுப்பதைவிடச் சிறந்த ஊடகமான வெள்ளித்திரையைத் தேர்ந்தெடுத்தான் அவன். புதுமையின் உச்சமாக, சில இந்திய நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு, உள்ளூர் நடிகர்கள் சிலருடன் தமிழ்த் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். அவன் தன்னுடைய படத்துக்காக ஒரு நிச்சய தார்த்தக் காட்சியைப் படமாக்கப் போவ தாகவும் அந்தக் 'கூட்டக் காட்சிக்கு' நண்பர்கள் சிலர் குடும்பத்துடன் வந்து ஆதரவை நல்க வேண்டுமென்றும் வேண்டு கோள் விடுத்தான். அந்தச் சுபதினம் இன்றுதான்.

'ராக்கி ஏதோ மாலை நாலு மணிக்குன்னு சொன்னதா ஞாபகம். அதுக்கு இப்பவே எழுந்து என்ன செய்யணும்?' மடக்கி விட்டதாக நினைப்பு.

'நிறைய வேலை கிடக்கு. முதலில் லாக்கருக்குப் போய் என் வைர ஹாரத்தை யும் நவரத்ன வளையல்களையும் எடுத்து வரணும். அடுப்பைக் கட்டிக்கொண்டு உட்காராமல் இன்று ஒருநாள் வெளியிலேயே சாப்பாட்டுக் கடையை வைத்துக் கொள்ள லாம். வந்ததும் பிறகு நான் மிஸஸ் மிஸ்ராவின் பியூட்டி சலூனுக்குப் போய் வரணும். நீங்களும் குர்த்தா செட்டைத் தேய்த்துத் தயார் செய்து கொள்ளுங்கள்...' அடுக்கிக் கொண்டே போனாள் சியாமளி.

'நான் எங்கும் வருவதாக இல்லை. சின்னவளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்துவிடுகிறேன். பிரதீப்பை மட்டும் நீ அழைத்துக்கொண்டு போ. அவனை என்னால் சமாளிக்க முடியாது. அது சரி, உன்னை என்ன ஹீரோயினாகவா நடிக்க வைக்கப் போகிறார்கள்? கூட்டத்தில் ஒருத்தியாக நின்றுவிட்டு அரை நிமிஷம் வரப்போகிற காட்சிக்கு எதற்கு இந்த அலட்டல்?' சற்றுக் கடுமையாகவே கேட்டான் ரமணன்.
'ஓரொருத்தரும் மனைவிக்கு ஒரு நல்லது என்றால் மனசார வாழ்த்தி, அவளுக்காக வேண்டியதைப் பாடுபட்டுச் சேகரித்துக் கொடுப்பார்கள். என் அதிர்ஷ்டம், நொடிப் பதற்கும், கிண்டலடிக்கவும்தான் மனுஷாள் வாய்த்திருக்கிறார்கள்' புலம்பத் தொடங்கி விட்டாள் சியாமளி. ஒரு மாதிரியாக வெள்ளைக் கொடி காட்டி, அவளுடன் லாக்கருக்கும், அங்கிருந்து உணவு விடுதிக் கும் சென்றுவிட்டு வீடு திரும்ப மணி ஒன்றாகிவிட்டது. அடுத்த அத்தியாயம் ஒப்பனை. அது முடிந்து வந்தவுடனே பட்டுப்புடவையும் தானுமாக பையனை அழைத்துக்கொண்டு ஷ¥ட்டிங் நடக்கும் உள்ளூர் கோயிலுக்குக் கிளம்பிவிட்டாள். ஒன்றரை வயது கவிக்குட்டியை அணைத்துக் கொண்டு காலையில் மறுக்கப்பட்ட தூக்கத்தைத் தொடர்ந்தான் ரமணன்.

அரைமணி கூடச் சென்றிருக்காது. தொலைபேசியில் சியாமளி. 'ஏங்க, எல்லாரும் பிரமாதமா டிரெஸ் செய்துட்டு வந்திருக்காங்க. என் புடவை ரொம்ப சாதாரணமா இருக்கு. வார்டுரோபில் ருக்மிணி கலரில் ராமாயண சேலை இருக்கு அதை எடுத்து வைங்க.' 'கம்ப ராமாயணமா? வால்மீகி ராமாயணமா? துளஸி ராமாயணமா?' இது தூக்கத்தை இழந்த ரமணனின் எரிச்சல் கேள்வி. 'நீங்க ஒண்ணும் அலுத்துக்க வேண்டாம். நானே ஏற்பாடு பண்ணியாச்சு. ஆறாவது பிளாக் யாமினி அந்தப்பக்கம் கிளம்பி வந்துட்டே யிருக்கா. அவள் தேடி எடுத்துக் கொண்டு வருவா. நீங்க அவளுக்கு ஹெல்ப் பண்ணினா போதும்' என்று பேச்சை முடிக்கவும் யாமினி பிரவேசிக்கவும் சரியாயிருந்தது. அவளே தேடி குறிப்பிட்ட புடவையை எடுத்துச் சென்றாள். மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தான்.

சியாமளி சென்ற கோயிலில் கலைநிகழ்ச்சி நடக்கும் மண்டபத்தில் ஷ¥ட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த் திரையுலகக் கொள்கைக்கு மாறாக, இங்கு எடுக்கும் படத்துக்குத் தமிழ் நடிகையே கதாநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தாள். ஆனாலும் நடிகைக்குரிய பந்தாவை மீறாமல் நாலு மணி படப்பிடிப்புக்கு ஐந்து மணிக்கு வந்து, மேக்அப்பிக்கொண்டு வரவே ஐந்தரை ஆகிவிட்டது. சுற்றுமுற்றும் பார்வையைச் சுழற்றிய அந்த ஏதோ ஒரு ஜா, சியாமளி அணிந்திருந்த வைர ஹாரத்தைப் பார்த்துப் பிரமித்துவிட்டாள். டைரக்டர் ராக்கியிடம் அவள் ஏதோ சொல்ல, அவனும் சியாமளியை அணுகி, 'மணமகள் ரோலுக்கு இந்த வைர ஹாரம் அழகாக இருக்குமென்று ஹீரோயின் நினக்கறாங்க. இந்த ஷாட் முடியுமட்டும் அவங்களுக்கு இதைக் கொடுத்து ஹெல்ப் பண்ண முடியுமா?' என்று வேண்டுகோள் விடுத்தான். சியாமளிக்குப் பெருமையோ பெருமை. ஹீரோயின் கழுத்தில் தன் நகையும் நடிக்கப் போகிறதே? இந்த கௌரவம் யாருக்குக் கிடைக்கும்?

கூட்டமாக வந்திருந்த இரண்டு டஜனுக்கு மேற்பட்ட ஆண்பெண்களில் ஒருத்தியாகக் கையில் காபி டம்ளருடன் நின்று கொண் டிருந்தாள் சியாமளி. கண்கள் மட்டும் கதாநாயகியின் கழுத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. 'பட்டுப்புடவையை இரவல் கொடுத்துவிட்டு மணைப் பலகையைத் தூக்கிக்கொண்டு பின்னோடு போனாளாம்' என்று அம்மா அடிக்கடி சொல்லும் பழமொழி ரொம்பப் பழுத்த மொழிதான். ஹாரம் பத்திரமாகத் திரும்பிவர வேண்டுமே என்று அந்தக் கோயிலிலிருக்கும் சுவாமியை நூறுமுறை வேண்டியிருப்பாள். அந்தக் கூட்டக் காட்சியை மாற்றி மாற்றி முப்பது தடவை எடுத்துக் கொண்டிருந்தார்கள். இடையில் பிரதீப் மற்றொரு குழந்தையுடன் கத்தி விளையாடிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக ஓடித் தன் பங்குக்குப் படப்பிடிப்பு எண்ணிக்கையைக் கூட்டினான்.

கதைப்படி, பாதி நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே கதாநாயகியின் அண்ணன் வந்து அந்த விழாவை நிறுத்தி விட்டுத் தங்கையை அழைத்துச் சென்றுவிட வேண்டும். ஆவேசமாக வந்த அந்த அண்ணனாகப்பட்ட நடிகர், 'தங்கை'யின் கழுத்திலிருந்த மாலையைப் பறித்து வீசிவிட்டு அவளை இழுத்துக்கொண்டு வெளியேறினார். காட்சி ஒரே டேக்கில் அழகாக அமைந்துவிட்டதில் டைரக்டருக்கு மிகத் திருப்தி. சியாமளிக்கோ ஒரே உதறல். வைர ஹாரம், அது என்னவாயிற்று?

ஐந்தாவது நிமிஷமே விடை கிடைத்து விட்டது. மாலையுடன் சேர்ந்து கொக்கி மாட்டிக்கொண்டு விட, மாலையை வீசியெறிந்தபொழுது ஹாரம் கீழே விழுந்துவிட்டது. பிரித்து எடுத்துப் பார்த்ததில் இரண்டு கற்களைக் காணவில்லை! சியாமளிக்கு இதயமே நின்றுவிட்டது போலிருந்தது. ராக்கியிடம் கீச்சுக்குரலில் 'என்ன பொறுப்பற்ற வேலையிது? முதலில் கற்களைத் தேடி யெடுக்க வழி செய்யுங்கள்' என்று பதறினாள். பாவம், ராக்கியும் அலைந்து தேடி, குட்டி வாக்குவம் க்ளீனரை மேடை பூராவும் ஓட்டித் திறந்து பார்த்ததில் நல்ல வேளையாக இரண்டு கற்களும் மின்னின. சற்றுச் சமாதானமான சியாமளி, வீட்டுக்குத் தொலைபேசி, 'இப்பதான் எல்லாம் முடிந்தது. மணி எட்டரை ஆகிறது. குழந்தைக்கு பாஸ்தா செய்து கொடுங்கள். நானும், பிரதீப்பும் சப்-வேயில் சாப்பிட்டுவிட்டு உங்களுக்கும் வாங்கி வருகிறோம்' என்று இரவு உணவுக்கு வழி செய்தாள். திரும்ப இந்தியா செல்லும்போதுதான் கற்களைப் பதிக்க முடியும். பொக்கையாக இருந்த ஹாரத்தைக் காணக் கண்களில் ரத்தமே வந்துவிட்டது சியாமளிக்கு.

இரண்டு மாதங்களுக்குப் பின் படத்தை முடித்துவிட்டு ப்ரி-வ்யூவுக்கு எல்லோரையும் அழைத்தான் ராக்கி. சும்மா சொல்லக் கூடாது, பட்ட பாட்டுக்கு மிக நன்றாகவே நடித்திருந்தது சியாமளியின் ஹாரம்; அதற்கு மட்டும் நான்கு க்ளோஸ்- அப் காட்சிகள்!

அம்புஜவல்லி தேசிகாச்சாரி
More

எங்க மாமா
ஆசையைக் குறைத்தல் அருகே சொர்க்கம்!
Share: 




© Copyright 2020 Tamilonline