Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சமயம்
தொட்டாச்சாரியார் சேவை
- அலர்மேல் ரிஷி|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeநகரங்களிலேயே சிறந்ததாகப் போற்றப்படும் காஞ்சிமாநகரில் உள்ளது வரதராஜப்பெருமாள் கோயில். இது ஆழ்வார்களால் போற்றப்பட்ட 108 திவ்ய தேசங்களின் வரிசையில் மூன்றாவதாக வைத்து எண்ணப்படுகிறது. 100 அசுவமேத யாகங்களைச் செய்து தரிசிக்கவேண்டிய பெருமாளை பிரமதேவன் இத்தலத்தில் ஒரே ஒரு யாகம் செய்து தரிசித்த பெருமையால் இத்தலம் 'ஸத்யவிரத ஸ்தலம்' என்று போற்றப்படுகிறது. ஒரு காலத்தில் சரசுவதி தேவியின் சாபத்தால் யானை உருவில் திரிந்துகொண்டிருந்த இந்திரன் இங்கு வந்து தவம் செய்து சாபவிமோசனம் பெற்றதால் இத்தலம் 'ஹஸ்திகிரி' என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் அத்திகிரி என்றும், இறைவன் நாமம் அத்திகிரிநாதன் என்றும் வழக்கில் வந்தன.

அண்டினோரின் துயர் தீர்த்து அருள்பாலிக்கும் ஆண்டவன் என்ற பொருளில் இங்குள்ள மூலவர்க்கு 'பிரணதார்த்திஹரன்' என்றும் தேவேந்திரனுக்கு வரம் அளித்த மையால் வரதன் என்றும் பெயர். யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்ட இங்குள்ள பெருமாளின் முகத்தில் வெப்பத்தின் அடையாளமான வடுக்களைக் காணலாம். இதனால் ஊரும் காஞ்சி எனவாயிற்று.

பிரமன் தனக்கு யாக குண்டத்தில் காட்சி தந்த பெருமாளை உற்சவ மூர்த்தியாகவும் 'தாரு' என்றொருவகை மரத்தில் ஒரு பெருமாளை வடிவமைத்து அதை மூலவ ராகவும் பிரதிஷ்டை செய்து உற்சவம் நடத்தினான். அதனால் இது பிரமோற்சவம் என்றழைக்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த பிரமோற்சவம் நடைபெறுகிறது.

பிரமோற்சவத்தின் மூன்றாம் நாள் விழா வான 'கருட சேவை' உலகப் பிரசித்த மானது. இவ்விழா வைகாசி மாத விசாக நாளில் கொண்டாடப் படுகின்றது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் ஜன்ம நட்சத்திரமும் வைகாசி விசாகம் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

இன்றைக்கு சோளிங்கர் என்றழைக்கப்படும் சோளங்கிபுரம் 'திருக்கடிகை' என்றும் அழைக்கப்படுகிறது. இது காஞ்சிபுரத்தின் அருகிலுள்ள ஒரு பெருமாள் தலம். கடிகாசலம் என்பது பெருமாளின் திருநாமம். இங்கு இரண்டு மலைகள் உள்ளன. பிரகலாதனுக்குக் காட்சி தந்த நரசிம்மன் இங்குள்ள பெரிய மலையின் உச்சியில் யோக நரசிம்மராய் வீற்றிருக்கிறார். இன்னொரு சிறிய மலையின் மீது ஆஞ்சனேயர் கைகூப்பி நிற்கின்றார். மலையடிவாரத்தில் உற்சவராக வீற்றிருக்கும் பெருமாளுக்கு 'அக்காரக்கனி' என்பது திருநாமம். இனிப்பு என்ற சுவையே ஒரு மரமாகி அதில் ஒரு காய் காய்த்துப் பின் கனிந்தது போன்ற இனிப்பின் மொத்த உருவமாக விளங்குபவர் என்பதுதான் அக்காரக்கனி என்பதன் பொருள்.
இன்றும் காஞ்சிபுரத்தில் கருடசேவையன்று கோயிலை விட்டு வெளிவரும் பெருமாளை ஒரு நிமிடம் நிறுத்தி, குடையைச் சற்றுத் தாழ்த்திப் பிடித்துப் பெருமாளை மறைத்து அதன் பிறகே புறப்பாடு நடைபெறுகிறது. இதற்குத் தொட்டாச்சாரியார் சேவை என்று பெயர்.
தொட்டாச்சாரியார் என்ற பெயர் கொண்ட பக்தர் ஒருவர் இங்கு வாழ்ந்து வந்தார். இவர் இராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தை விளக்கிப் பல நூல்களை இயற்றியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் வைகாசியில் காஞ்சி புரத்தில் வரதராஜப் பெருமாளின் கருட சேவையைக் கண்டு தரிசிக்கச் செல்லும் வழக்கமுடையவர். வயது முதிர்ந்த நிலையில் ஒரு சமயம் இவரால் காஞ்சிக்குப் பயணப்பட முடியவில்லை. கருட சேவை நாளன்று தன் இயலாமையை எண்ணி நொந்துபோய் அக்காரக்கனிப் பெருமாளைப் பிரார்த்தித் தவாறே கருட வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருளும் காட்சியினைக் கற்பனை செய்துகொண்டிருந்தார் தம்முடைய பக்தனின் ஏக்கத்தைப் புரிந்துகொண்ட பெருமாள் தமதருகிலிருந்த அர்ச்சகரிடம் தனக்காகப் பிடித்திருக்கும் குடையைச் சற்றுத் தாழ்த்தித் தன்னை மறைக்குமாறு பணித்தார். அந்த இடைவெளியில் தொட்டாச்சாரி யாருக்குத் தமது கருடவாகனக் காட்சி தந்து அருள் பாலித்தார். அதன் பிறகே வீதி புறப்பாடு தொடங்கிற்று. இன்றும் காஞ்சி புரத்தில் கருடசேவையன்று கோயிலை விட்டு வெளிவரும் பெருமாளை ஒரு நிமிடம் நிறுத்தி, குடையைச் சற்றுத் தாழ்த்திப் பிடித்துப் பெருமாளை மறைத்து அதன் பிறகே புறப்பாடு நடைபெறுகிறது. இதற்குத் தொட்டாச்சாரியார் சேவை என்று பெயர்.

தொட்டாச்சாரியார் வழிபட்ட அக்காரக் கனிப் பெருமாளை ஒரு தினம் - ஒரேயொரு தினம் - தரிசித்தாலும் வேண்டுவார் வேண்டுவன வேண்டியவாறே அருளும் அருளாளன் அவன் என்பதைத் தொட்டாச் சாரியார் வரலாற்றாலும், வரம் தரும் வரதனாம் காஞ்சி வரதராஜனின் அருள் அடியாரைத் தேடிச்சென்றடையும் என்பதையும் காஞ்சிமாநகரக் கருடசேவை உலகுக்குப் பறை சாற்றுகின்றது.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியைக் கால்கோள் செய்தவரான ராபர்ட் கிளைவ் ஒரு சமயம் காஞ்சியில் நடைபெற்ற கருட சேவையைக் கண்டு பிரமித்துப் போய் அருகிலிருந்த தம் மனைவியின் கழுத்திலிருந்த முத்துமாலையைக் கழற்றி வரதராஜப் பெருமாளுக்குக் காணிக்கையாய்க் கொடுத் தார் என்பதும், இன்றும் அந்த ஆபரணம் ஒவ்வொரு கருடசேவை நாளன்றும் 'கிளைவ் மகர கண்டி' என்ற பெயரிலே பெருமாளை அலங்கரிக்கின்றது என்பதும் வரலாற்றுப் பெருமை மிக்க செய்திகள்.

டாக்டர் அலர்மேலு ரிஷி
Share: 




© Copyright 2020 Tamilonline