இளம் சாதனையாளர் சாயிகணேஷ் ரவிகுமார்
|
|
இட்லி விற்றார் இன்று எம்பிஏ பட்டதாரி |
|
- கேடிஸ்ரீ|ஜூன் 2006| |
|
|
|
சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் சரத்பாபு. அவருடைய அம்மா தீபராணி இளம் வயதில் கணவரால் கைவிடப்பட்டவர். தீபராணிக்கு அவரது நான்கு குழந்தைகளே உலகம். காலையில் இட்லி வியாபாரம், மதியம் சத்துணவுக் கூடத்தில் வேலை, மாலையில் மருத்துவமனையில் வேலை, இரவில் அறிவொளி இயக்கத்தில் வேலை என்று பம்பரமாய் நாள்முழுதும் அயராது உழைத்தார்.
இன்று மகன் சரத்பாபு ஐ.ஐ.எம். அகமதாபாதின் எம்.பி.ஏ. பட்டதாரி.
பிலானியில் பொறியியல் படிப்பை முடித்த சரத், தொடர்ந்து MBA-வை முடித்தார். ஆண்டுக்கு எட்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் ஒரு பதவியைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இவருக்கு வழங்க முன் வந்தது.
தான் சம்பாதித்தால் போதாது, தன் திறமையால் பிறருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிய சரத்பாபு '·புட் கிங் கேடரிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அகமதாபாதிலேயே தொடங்கினார். அந்த நிறுவனத்தை இன்·போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி தொடங்கி வைத்தார்.
"அகமதாபாதில் நடைபெற்ற சரத்பாபுவின் பட்டமளிப்பு விழாவிற்கு நான் போயிருந்தேன். முதன்முதலாக அப்போதுதான் நான் விமானத்தில் பயணம் செய்தேன். விழாவிற்கு வந்திருந்தவர்கள் என்னிடம் 'நீங்கள்தான் சரத்தின் அம்மாவா' என்று கேட்டனர். 'ஆமாம்' என்று நான் சொன்னதும், 'உங்கள் மகன் தங்கமானவன்' என்று கூறினார்கள். அதைக் கேட்டதும் என்னையறியாமல் நான் அழுதேன். எனக்குப் பெருமையாக இருந்தது.." என்கிறார் ஈன்றபொழுதிற் பெரிது உவக்கும் அந்தத் தாய்.
"நான் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய குழந்தைப் பருவத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறேன். நான் பிலானியில் என்னுடைய பொறியியல் படிப்பிற்குச் சேரும்வரை எல்லோருமே நம்மைப் போல்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்" என்று ஒரு குழந்தையைப் போலச் சொல்கிறார் சரத்பாபு.
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள கிங் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்த சரத்பாபு படிப்பில் கெட்டிக்காரர் மட்டுமல்ல. எப்போதும் வகுப்பில் முதல் மதிப்பெண் தான். வீட்டு அலமாரியில் பள்ளிநாட்களில் இவர் வாங்கிய வெற்றிப் பதக்கங்களும், கேடயங்களும் அணிவகுத்து நிற்கின்றன.
"அவன் படிக்கும் நாளில் எங்கள் வீட்டில் மின்சார வசதிகூடக் கிடையாது. ஆனால் சரத் அதைப் பற்றிக் குறைகூற மாட்டான். தெருவிளக்கு வெளிச்சத்திலும், சிம்னி விளக்கிலும் படித்துக் கொண்டிருப்பான். வகுப்பு ஆசிரியருக்கு அவன் மேல் அதிக அன்பு. அவரும் இவன் படிப்பிற்காக பல உதவிகளைச் செய்திருக்கிறார்" என்று கூறுகிறார் சரத்தின் சகோதரி கஜலட்சுமி. தெருவிளக்கில் படித்து உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரைப் பற்றிச் சிறுவயதில் கேட்டது நினைவுக்கு வந்தது. |
|
தமிழக அரசு இவருக்கு உதவித் தொகை வழங்கியது. அது போதாமல் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இவரைப் படிக்க வைத்தார் தீபராணி. பொறியியல் படிப்பை முடித்தபின் இவர் போலாரிஸ் நிறுவனத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றினார். அப்போது கடன்களைத் திருப்பிச் செலுத்தினார். இந்நிலையில் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு ஏற்பட்டது.
"நான் பிலானியில் மூன்றாவது ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நானே செய்தேன். என் நண்பர்கள் 'உனக்கு நிர்வாகத் திறமை நிறைய இருக்கிறது. ஏன் எம்.பி.ஏ. படிக்கக் கூடாது?' என்று கேட்டனர். என் நண்பர்களின் தூண்டுதலே நான் மேலே படிக்கக் காரணம்" என்று கூறுகிறார் சரத்பாபு.
நல்ல வருமானம் தரக்கூடிய வேலையை உதறி விட்டு இந்நிறுவனத்தைத் தொடங்கக் காரணம் என்ன என்று சரத்பாபுவிடம் கேட்ட போது "நான் படிக்கும் காலத்தில் ஒருநாள் பத்திரிகையில் 'இந்தியாவில் 30 கோடி மக்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்குக் கூடக் கஷ்டப்படுகிறார்கள்' என்ற செய்தியைப் படிக்க நேரிட்டது. அப்போதுதான் 'நிர்வாகம் படித்தால் போதாது. மற்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என்ற எண்ணம் ஏற்பட்டது. சிறுவயதில் அம்மாவுடன் இட்லி விற்ற அனுபவம். அதன் விளைவே இந்த அதிநவீன உணவு நிறுவனம்" என்று கூறுகிறார்.
வெகு விரைவில் சென்னையில் மற்றொரு கிளையை ஆரம்பிக்கவிருக்கும் சரத் தன்னுடைய இந்தத் தொழிலின் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உதவ வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல, குறைந்தது பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் தன் நிறுவனத்தை நடத்திச் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
"என் மகனின் முடிவு எனக்குச் சந்தோஷத்தை அளிக்கிறது...." என்கிறார் சரத்தின் அம்மா தீபராணி. நமக்கும்தான்.
கேடிஸ்ரீ |
|
|
More
இளம் சாதனையாளர் சாயிகணேஷ் ரவிகுமார்
|
|
|
|
|
|
|