நன்றி நவில ஓர் நாள் பிச்சை
|
|
வேண்டும் சகிப்புத் தன்மை [நவம்பர் 16 - உலக சகிப்புத் தன்மை நாள்] |
|
- துரை.மடன்|நவம்பர் 2001| |
|
|
|
மனித குலத்தை இன்னும் போரும் வன்முறையும் அலைக்கழிக்கின்றன. இதனால் நாம் புதிய உலகளாவிய அறைகூவல்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறோம். நம்பிக்கைகள் மீதான சந்தேகங்களும் மேல்மேலும் வலுப்பெற்று வருகின்றன. ஆக புதிய நூற்றாண்டில் பொறுப்புடமை பற்றிய சிக்கல் ஒரு புதிய பரிணாம் பெற்றுள்ளது எனலாம்.
மனிதர்களுக்கிடையேயும், மனிதர்களுக்குள்ளும் நாடுகளுக்கிடையேயும் நாடுகளுக்குள்ளும் என ஏற்றத்தாழ்வுகள், முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஒவ்வொரு மனிதர்களும் தங்களைப் பற்றியும் தமக்கான இருப்பு அடையாளம் தொடர்பாகத் தொடர்ந்து ஏதோவொரு களங்களில் போராட்டம் நடத்திக் கொண்டு வருகின்றனர். தேசியம், இனம், மொழி, மதம், சாதி, பால்நிலை, பிரதேசம்.... எனப் பல்வேறு வகையிலான 'அடையாள அரசியல்' பிரச்சனைகள் உருவாகியுள்ன.
ஒருபுறம் ஆதிக்கமும், அதிகாரமும் உள்ளவர்களுக்கு அடிபணிந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம். மறுபுறம் இது போன்ற பிரச்சனைப் பாடுகள் சமகால வரலாற்றுத் திசைப் போக்குகளை நிர்ணயம் செய்பவையாகவும் உள்ளன. ஆக மனித சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மனிதராக இருப்பது என்பது சுதந்திரமாக இருப்பது என்றுதான் பொருள். சுதந்திரம் என்றால் 'செயல்' என்னும் நிலைப்பட்டதாகவும் மாறுகிறது.
ஆகவே அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் ஆதிக்கமும் சுரண்டலும் எந்தெந்த வடிவில் தோன்றி நிலை பெற்று வருகின்றனவோ, அந்தளவிற்கு அவற்றுக்கெதிரான போராட்டமும் பன்மடங்கு அதிகரித்து வருவதும் இயல்பாகி விட்டது. இதனால் சந்தேகம், பயம், சகிப்புணர்வின்மை, பகையுணர்வு, நம்பிக்கையின்மை ஆகியவை வளர்க்கப்பட்டு வருகின்றது. இவை பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டவை தான்.
தற்போது உலகளவில் எங்கும் ஆயுதப் பூசல்கள் முனைப்படைந்துள்ளன. அகிம்சா தர்மம் புதைக்கப்பட்டுள்ளன. அமைதியின்மை நிரந்தரமாகி வருகிறது. ஆயுதங்களின் விற்பனை பெருக்கம், சுற்றுப்புறக்சூழல் நாசமடைதல் போன்றவை நமது நாகரீகத்தின நன்னெறிகள் போல் உள்ளன. இவை வாழ்க்கை பற்றிய புதிய மதிப்பீடுகளை உருவாக்குகின்றன.
ஒருபுறம் ஆயுத விற்பனையும் மறுபுறம் அமைதிப் பேச்சுவார்த்தையும் என்ற நிகழ்ச்சி நிரல்கள் சர்வதேச அரங்கில் பிரதானமான இடத்தை வகிக்கின்றன. போர்ப் பண்பாட்டிலிருந்து ஓர் அமைதிப் பண்பாட்டுக்கு மாறுவது சமகாலத்தில் முன்னணிக் கோரிக்கையாக அறைகூவலாகவே இருக்கிறது. இதில் நாம் வெற்றி பெறவேண்டுமானால் நாம் அனைவரும் வன்முறை அடிப்படையிலான அணுகுமுறைகளை ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும். மேலும் பண்பாட்டு மனப்போக்குகளையும் அன்றாட நடத்தை முறைகளையும் அடியோடு மாற்றுவதற்கும் பாடுபட வேண்டும்.
வளர்ந்துவரும் பூசல்களை தடுப்பதற்கு நமது சிந்தனைகளையும், செயல்திறனையும், நேர்மையையும், துணிவையையும், விட்டுக் கொடுத்தலையும், மாறுபாடுகளை அங்கீகரிக்கும் மனப்பான்மையையும், மனித நேயத்தையும், சகிப்புணர்வையும் நாம் ஒவ்வொரு கணமும் வளர்த்துக் கொள்வதன் மூலமே அமைதிப் பண்பாட்டை உருவாக்கிக் கொள்ள முடியும்.
மனித சமுதாயத்தில் ஆன்ம ஈடேற்றுக்கான வாயில்கள் திறக்கப்பட வேண்டும். இதற்காகவே தத்துவங்கள் பல இந்தியப் பிராந்தியச் சூழலில் எழுந்துள்ளன. இவை யாவும் மனித வாழ்க்கையின் மீதான புதிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. அறம், அன்பு, மனிதநேயம் போன்றவற்றை வளர்த்தெடுப்பதாகவே உள்ளன. மேற்கத்திய சிந்தனை முறைக்கும் வாழ்க்கைப் போக்குக்கும் மாறாக கீழைதேச மரபும் சிந்தனையும் புதிய வெளிச்சங்களை கொடைகளை வழங்க முடியுமென துணிகின்றன. மனிதர்களிடையே ஆத்மபலத்தை தத்துவ விசாரணையை சகிப்புணர்வை ஆழமாக வளர்த்தெடுத்துள்ளன.
இந்த நடைமுறைகள் மனிதகுல வாழ்க்கையில் புதிய அர்த்தங்களை புதிய மதிப்பீடுகளை உருவாக்கியுள்ளன. மனிதர்களிடையே அகிம்சா தர்மத்தை வலியுறுத்துவதுடன் சகிப்புணர்வை அசுரபலத்துடன் வளர்க்கவும் தீர்க்கமாக உள்ளன. |
|
இன்று இந்திய அளவில் இந்தியாவின் பன்மைத்துவம் மறுக்கப்படும் அபாயகரமான சூழல் உருவாகி வருகிறது. மதம், மொழி, சாதி, தேசியம் போன்ற பல்வேறு அடையாளங்கள் எழுச்சி பெற்றுவரும் காலமாக மாறிவிட்டது. வன்முறைகள் எங்கும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் அரசியல் நடத்தும் போக்கு ஒடுக்குமுறை வடிவங்களாக மாறிவிட்டது. பன்மைத்துவப் பண்பாட்டு அடையாளங்கள் மறுக்கப்பட்டு ஒற்றைத் தன்மையுடன் கூடிய 'இந்திய பண்பாடு' கட்டமைக்கும் முயற்சி எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை மீதான சந்தேகத்தை வலுப்படுத்தி விட்டது.
அரசியலில் லஞ்சம் ஊழல் மோசடிதான் புதிய நாகரீகப் போக்காகத் தோற்றம் பெற்றுவிட்டது. அரசியலுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமது அரசியல் நிகழ்த்துதல்கள் எத்தகைய வன்முறையின் மூலமும் சாத்தியமாக்கும் சாதனைகள் தான் படிப்பினையாகி வருகின்றன. எம்மிடையே உள்ள சகிப்புணர்வு காயடிக்கப்பட்டு சகிப்புணர்வின்மை நிரந்தரமாகி விட்டது.
இந்தியாவின் எதிர்காலம் குறித்த அச்சம் சாதாரண மக்கள், சனநாயகச் சக்திகள் என்பவர்களிடையே மட்டும் இல்லாமல் கே.ஆர். நாராயணன் வரை ஆழமாகவே வேர் பாய்ச்சி உள்ளது.
''நாட்டில் இன்று சகிப்புத் தன்மை என்பது அறவே போய்விட்டது. சகிப்புத் தன்மையைக் கட்டிக் காக்காமல் இன்றுள்ள தலைவர்கள் அமைதி காத்து வருவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. சாதி மதத்தின் பெயரால் சில தொண்டர்களைத் தலைவர்கள் தூண்டி விடுவது கண்டிக்கத் தக்கது - சகிப்புத் தன்மை இல்லாமலே - இந்த வன்முறைக்குக் காரணங்கள் இருக்கின்றன.'' இவ்வாறு குடியரசுத் தலைவர் தற்போதைய நிலைமையைச் சுட்டிக் காட்டுகின்றார்.
ஆக சகிப்புத் தன்மை கட்டிக் காக்கக் கூடிய சூழல்கள் பறிக்கப்பட்டுச் செல்கின்றன. சகிப்புத் தன்மை படிப்படியாக இல்லாமல் போகுமானால் காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கையும், வன்முறையும் போர்ப் பண்பாடும், ஆயுதக் கலாச்சாரமும் விதைக்கப்பட்டு விடும். எதிர்காலம் மீதான நம்பிக்கையின் பரிணாமங்கள் சிதைக்கப்படும்.
இவ்வாறான நெருக்கடி மிக்க காலம் உருவாவதைத் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து மனிதர்களிடையே தேசச் சகிப்புத் தன்மையைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு இன்று ஏற்பட்டுள்ளது. நம்முன் விடப்பட்டுள்ள சவாலாகவும் இதனைக் கருத வேண்டும்.
இன்றைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை நாடவும் சுதந்திரம் சமாதானம் சகோதரத்துவம் இவற்றுக்கான புதிய தாத்பரியங்களை நாடவும் சகிப்புணர்வு கட்டிக் காக்கப்பட வேண்டும். வளர்ந்து வரும் சகிப்புணர்வின்மைக்கு முடிவுகட்ட வேண்டும்.
பன்மைத் தன்மைகளை அங்கீகரிப்போம். சகிப்புணர்வின்மைக்கு விடை கொடுப்போம். சகிப்புத் தன்மையைக் கட்டிக் காப்போம்.
துரை. மடன் |
|
|
More
நன்றி நவில ஓர் நாள் பிச்சை
|
|
|
|
|
|
|