|
|
இதுவரை : முழுநேரத் துப்பறிவாளராகி விட்ட சூர்யா முன்னாள் சிலிக்கான் வேலித் தொழில்நுட்ப நிபுணர். அவரது நண்பர் முரளியின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவி புரிகின்றனர். முரளியின் நண்பர் ஒருவர் தன் சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாகக் கூறவே முரளி அவருக்குச் சூர்யாவை அறிமுகம் செய்ய அழைத்துச் செல்கிறார். சூர்யா தன் யூகத் திறமையால் வெர்டியான் நிறுவனரான மார்க் ஷெல்ட்டனை வியக்க வைத்து அவர் பிரச்னையைத் தன்னால் தீர்க்க முடியும் என்று நம்ப வைத்தார். கெர்டியானின் அலுவலகம் மற்ற அலுவலகங்கள் போலவே இருந்ததால், ஒரு விஞ்ஞானக் கனவுலகமாக இருக்கும் என்று கற்பனை செய்திருந்த கிரணுக்கு மிகவும் ஏமாற்றமாகவே ஆகிவிட்டது. ஆனால் அலுவலகத்தில் ஒரு தூசு தும்பு இல்லாமல் பளிச்சென்றிருந்ததைக் கவனித்து விட்டு, 'அட! இது என்ன சுத்த சக்தி நிறுவனம்னு காட்டிக்கறத்துக்காக இவ்வளவு பளிச்சுன்னு வச்சிருக்கீங்களா!' என்றான்.
அவன் முகத்தில் தோன்றி மறைந்த ஏமாற்றத்தைக் கவனித்து விட்ட மார்க், அவன் அடித்த ஜோக்குக்கு முதலில் அட்டகாசமாகச் சிரித்து விட்டு, பிறகு விளக்கினார். 'நல்ல ஜோக்தான் கிரண்! நான் என் நிறுவனத்தைப் பார்க்க வரவங்ககிட்ட என் ஜோக்காவே சொல்லிக்கறேன். ஆனா, இந்த அலுவலகம் ரொம்ப சாதாரணமா மத்த அலுவலகங்கள் போலவே இருக்கு, என்ன பெரிசா சுத்த சக்தி விஞ்ஞானம், தொழில்நுட்பம் இங்க செய்யறாங்கன்னு நீ நினைக்கறது எனக்குப் புரியுது. ஆனா இது வெளிப்புற அலுவலகந் தான். எங்க தொழில்நுட்பம் உள்ளே இருக்கற பரிசோதனை அறைகளிலேயும், கம்ப்யூட்டர் களிலேயுந்தான் உருவாக்கப்படுது. அதைப் போய்ப் பார்த்தாத்தான் நாங்க என்ன செய்யறோம்னு நல்லா விளங்கும்.'
கிரண் துள்ளிக் குதித்தான். 'ஓ.கே! இப்பவே காட்டுங்க.'
முரளி அவனை அடக்கினார். 'சே, என்ன கிரண் இது... குழந்தை மாதிரி துள்ளிக்கிட்டு! அவர் காட்டத்தானே உள்ள அழைச்சிக்கிட்டு வந்திருக்கார்.'
மார்க் பெருமிதத்துடன் புன்னகை புரிந்தார். 'கிரணை அடக்காதீங்க முர்லி. அவனுடைய உற்சாகம் என்னை மிகவும் ஊக்குவிக்குது. கேக்கறவங்களுக்கு ஆவல் அதிகமாக இருந்தா என்னைப் போன்றவங்களுக்கு குஷிதானே. சரி வாங்க காட்டறேன்' என்று கூறிவிட்டு, ஒரு கதவின் அருகில் இருந்த ஒரு சிறு கருப்பு சாதனத்தில் இருந்த வட்டமான கண்ணாடிப் பகுதியில் குனிந்து தன் வலது கண்ணால் பார்த்தார். அது பீப் என்று கத்தியதும், தன் இடது கண்ணால் பார்த்தார். சாதனம் மீண்டும் பீப்பளித்ததும் கதவு சொய்ங் என்று தானே பக்கவாட்டாக விலகி வழிவிட்டது.
கிரண், 'ஹை! பயோமெட்ரிக் ஐரிஸ் ஸ்கேன் பாதுகாப்பு வச்சிருக்கீங்க போலிருக்கு. ரொம்ப லேட்டஸ்ட் மாடல், வெரி நைஸ்' என்றான்.
மார்க் அவனை மீண்டும் பாராட்டினார். 'ஆஹா, கிரண், பாதுகாப்புத் தொழில் நுட்பங்களைப் பற்றி நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கே போலிருக்கு? யூ ஆர் அப்ஸொல்யூட்லி ரைட். இது ரெண்டு கண்ணுல இருக்கற ஐரிஸ் பேட்டர்ன் களையும் உள்வர உரிமை உள்ளவங்கன்னு சரி பாத்தப்புறந்தான் திறக்கும். கைரேகையை சோதிக்கறதை விட அதிக சக்தி வாய்ந்த தொழில்நுட்பம். நீ சொன்னா மாதிரி, மிகமிகப் புதுசுதான். பாதுகாப்பு ரொம்ப அவசியம்னு என்னுடைய கருத்து. அதுனால பணம் அதிகமா செலவானாலும் பரவாயில்லைன்னு இருக்கறதுலயே ரொம்ப பலமான பாதுகாப்புத் தொழில்நுட்பமா பொருத்திட்டேன். சரி உள்ள வாங்க, மேல காட்டறேன்' என்றார்.
அவர்கள் அலுவலக வாயிலைத் தாண்டி தொழில்நுட்பப் பகுதிக்குள் நுழைந்ததும் அவர்கள் முன் விரிந்தது ஒரு சுத்த சக்தித் தொழில்நுட்பக் கனவுலகம்! மார்க் தன் வலக்கையை விஸ்தாரமாக வீசிக் காட்டி, 'கிரண், அலுவலகப் பகுதியைப் பார்த்துட்டு அலட்சியமாக முகம் சுளிச்சயே, இது எப்படி இருக்கு' என்றார்.
தங்கள் முன் விரிந்த பெரும் பரிசோதனைக் கூடத்தின் காட்சியைப் பார்த்து, சூர்யா, கிரண், முரளி, மூவரும் மூச்சை இழுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று! கிரண் கற்பனை செய்திருந்தது, அவன் உயர்பள்ளியில் வேண்டா வெறுப்பாகச் செய்திருந்த விஞ்ஞானப் பாடங்களின் பரிசோதனைக் கான குப்பிகளும் மீட்டர்களும். ஆனால் அங்கு இருந்ததோ ஒரு பெரும் தொழிற் சாலையின் வேலைக் கூடம்!
பலப்பல விஞ்ஞானிகளின் தனியறைகளாக இல்லாமல், ஒரு வானளாவிய கூரையின் கீழ் தடுப்புகளே இல்லாமல் விரிந்திருந்தது அந்தக் கூடம். அதன் ஓர் ஒரமாக மட்டுமே சில அறைகள் தென்பட்டன. மற்றப்படி கூடத்தின் தரையில் ஒரே களேபரந்தான். ஆங்காங்கு பளபளவென ஜொலித்துக் கொண்டிருந்த இயந்திர அமைப்புக்கள். சிலவற்றின் மேல் சதுர சதுரமாக கருநீலப் பட்டைகள் பொருத்தப் பட்டிருந்தன. அவற்றின் அருகே சில மேஜைகளின் மேல் பலதரப்பட்ட அன்றாட வாழ்க்கைக்கான மின் சாதனங்கள் சிதறிக் கிடந்தன.
கூரையின் சற்றுக் கீழ் குறுக்கும் நெடுக்குமாக இரும்புத் தண்டவாளங்கள் போன்று அமைக்கப் பட்டிருந்தன. அவற்றிலிருந்து பல பெரும் விளக்கு அமைப்புக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றில் பளீரெனெ சிறு சூரியன்கள் போல் ஒளிவிட்டுக் கொண்டிருந் தவை கிரணின் கவனத்தை ஈர்த்தன.
முரளிக்கு வியப்பளித்ததோ கூடத்தின் தரை. அதன் மீது பெரும் மலைப் பாம்புகள் போன்று, பல தடிமன்களில் மின்கம்பிகள் வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருந்தன. அவை இயந்திர அமைப்புக்களிலிருந்து ஆங்காங்கு கிடந்த பெட்டிகளைப் பிணைத்திருந்தன. பெட்டிகள் கனசதுர வடிவில் இருந்தாலும் அவற்றின் வெளிப்புறங்களில் பலப்பல குமிழ்களுடன் மின்கம்பிகள் இணைக்கப் பட்டிருந்ததால் முரளிக்கு கூடத்தின் தரையில் பல முள்ளம் பன்றிகள் கிடப்பதாகவேத் தோன்றியது. அதில் ஒன்று தானே நகர்வது போலவும் கூடத் தென்பட்டதால், தலையை அசைத்துக் கொண்டு மீண்டும் உற்றுப் பார்த்தார். ஒன்றும் நகரவில்லை! 'சே, என்ன கற்பனை, ஒண்ணும் நகரலை, வெறும் பெட்டிதான்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
ஆனால் கிரணோ அவர் பார்த்தது கற்பனையல்ல என்று நிரூபித்தான். 'ஹே! இது என்ன முள்ளம்பன்னி மாதிரி நிறைய பொட்டி இருக்கு? அப்பப்ப குலுங்குது?' என்றான். முரளி மீண்டும் பார்த்தார். தரைமீது அமர்ந்திருந்த முள்ளம்பன்றிப் பெட்டிகளில் எதோ ஒன்று குலுங்கிவிட்டு நின்றது.
மார்க் புன்னகையுடன் விளக்கினார். 'அது எங்க பேட்டரிப் பெட்டிகள். எங்கத் தொழில்நுட்பத்தால உற்பத்தியாகிற மின்சாரம் பேட்டரியில ரொம்பி, அதிலிருந்து செலவாகிற மின்சாரத்தை விட உள்ள வர மின்சாரம் அதிகமாயிட்டா கொஞ்சம் மோட்டர்ல செலுத்தி குலுக்கி இன்னும் சேமிக்கறா மாதிரி செய்யுது. மோட்டர்ல போகிற மின்சாரத்தை வேற இயந்திரங்களை இயக்கி சேமிக்கறோம்.'
கிரண் எதையோ நினைத்துக் கொண்டு சிரித்தான். மார்க் அவனைக் கேள்விக் குறியுடன் பார்க்கவே, தலையையும் கையையும் 'ஒன்றும் பிரமாதமில்லை' என்னும்படியாக ஆட்டிக் கொண்டு, சிரிப்புக்கிடையில் கூறினான். 'அது ஒண்ணுமில்லை. அப்பா, ஞாபகம் இருக்கா? நாம இந்தியா போகறச்சே கல்யாணம் மாதிரி எதாவது விசேஷம் வந்தா கிட்டு மாமா முதல்ல கொஞ்சம் சாப்பாடு அமுக்கிட்டு கடைசியில பாயசம் சாப்பிட உடம்பைக் குலுக்கி இடம் பண்ணிப்பார். அந்த ஞாபகம் வந்தது அவ்வளவுதான்' என்றான்.
முரளியும் உடம்பு குலுங்க உரக்க சிரித்து விட்டு, 'சரிதான்! ஸாரி மார்க், உங்களுக்குப் புரியாது, அதைப் பார்த்திருந்தாத்தான் எங்க சிரிப்பு புரியும்' என்றார்.
சூர்யா அந்தக் காட்சியைக் கற்பனை செய்து கொண்டு, புன்னகையுடன் விஷயத்துக்கு வந்தார். 'மார்க், நீங்க அந்த மின்சாரத்தை எப்படி உற்பத்தி செய்யறீங்க? என்ன மாதிரித் தொழில் நுட்பம்?' என்று கேட்டார்.
மார்க் அதைப் பற்றி விவரிப்பதற்குள், அவரது செல்பேசி அலறியது. அதை எடுத்து கூப்பிட்டவரின் தொலைபேசி எண்ணைப் பார்த்த மார்க், கையைத் தூக்கி, 'ஒரு நிமிடம் ப்ளீஸ்' என்பது போல் ஒற்றை விரலாலும் முகபாவனையாலும் காட்டிவிட்டு, சற்றுத் தள்ளி ஒரு மூலைக்குச் சென்று கிசுகிசுத்து விட்டு மீண்டு வந்தார்.
கிரண் அவர் வந்த தோரணையைப் பார்த்துக் கிண்டலாக 'என்ன, மேலிடத்தி லிருந்து ஸம்மன்ஸா?' என்றான். மார்க் வெட்கப் புன்னகையுடன், 'சரியான கெஸ்தான்! நான் உடனே கிளம்பணும். மேல நாளைக்குப் பேசலாமா? நீங்க 9 மணி வேளைக்கு இங்க வர முடியுமா?' என்றார்.
சூர்யா 'அதுக்கென்ன நிச்சயமா நாளைக்கு 9 மணிக்கு பேசலாம். நீங்க உங்க திருமண நாளை ரிலாக்ஸ்டா நல்லாக் கொண்டாடிட்டு வாங்க' என்று கூறிவிட்டுக் கிரண் முரளியுடன் வெளியேறினார்.
காரில் திரும்புகையில், சூர்யா முரளியிடம், 'வெர்டியானுக்கு இணையதளம் இருக்கா? அவங்க என்ன செய்யறாங்கன்னு இன்னிக்கு ராத்திரி கொஞ்சம் படிச்சுப் பாக்கலாமே' என்று கேட்டார். முரளி தலையசைத்து மறுத்தார். 'இணையதளம் கிடையாது. ரொம்ப ரகசியமா வச்சிருக்காங்க. |
|
நாமகூட நாளைக்குப் பேசறத்துக்கு முன்னாடி ரகசியத்தை உடைக்கிற தில்லைன்னு கையெழுத்து போட வேண்டி யிருக்கும். ஆனா, இது ஒரு சூரிய ஒளியை வச்சு மின்சாரம் உற்பத்தி பண்றதுல எதோ தொழில்நுட்பம்' என்றார்.
கிரண் முகம் சுளித்தான். 'அவ்வளவுதானா! ஐயே, அது பண்றத்துக்கு இந்த மாதிரி எவ்வளவோ பேர் கிளம்பியிருக்காங்களே' என்றான்.
முரளி அவனைக் கண்டித்தார். 'சே சே, கிரண் அந்த மாதிரி அலட்சியப் படுத்திடாதே. இது எதோ ரொம்ப உயர்தரத் தொழில் நுட்பம்னு மார்க் சொல்லியிருக்கார். அவர் சும்மா எல்லாரும் செய்யற மாதிரியான விஷயத்துக்கெல்லாம் தடால்னு குதிச்சுடற டைப் இல்லை. நாளைக்கு எல்லாம் அவர் விவரமா சொன்னப்புறம் அதைப்பத்தி எடை போடு' என்றார்.
மறுநாள் மூவரும் மீண்டும் வெர்டியானுக்கு 9 மணிக்குச் சென்றடைந்தனர். மார்க் தயாராக வெளியில் காத்திருந்தார். கைகுலுக்கல் படலம் முடிந்தவுடன் சூர்யா 'என்ன மார்க், நீங்க நேத்து ஷோவுக்குப் போகலை போலிருக்கு' என்றார்.
சில நொடிகள் அதிர்ச்சிக்குப் பின் 'என்ன... உங்களுக்கு எப்படி...' என்று தடுமாறிய மார்க், சுதாரித்துக் கொண்டு ஓஹோவென்று அட்டகாசமாகச் சிரித்தார். 'சூர்யா, நல்ல யூகந்தான். ஒரு நிமிஷம் அசந்துட்டேன், இப்பத் தெரிஞ்சுடுச்சு. என் சட்டைப் பையில நீட்டிக் கிட்டிருக்கற கிழிக்காத டிக்கட்டை வச்சுத்தானே சொல்றீங்க, சபாஷ்! ஆமாம். டின்னர் ரொம்ப லேட்டாயிடுச்சுன்னு போகலை. ரீ·பண்ட் கிடைக்குமான்னு பார்க்கக் கொண்டு வந்தேன்.' சூர்யாவும் புன்னகையுடன் தலை வணங்கிப் பாராட்டை ஏற்றுக் கொண்டார்.
கிரண் 'ஆஹா, நேத்து எங்கப்பா ஒரு யூகத்தை விளக்கினார். இன்னிக்கு என்னடான்னா, மார்க்கும் துப்பறியற வேலைக்குக் கிளம்பிட்டார். சூர்யா, கூடிய சீக்கிரமே உங்களுக்கு வேலையே இருக்காதுன்னு நினைக்கிறேன்' என்றான்.
சூர்யா விஷயத்துக்கு வந்தார். 'சரி, சரி... அப்புறம் வேலையில்லாட்டா எனக்கு சந்தோஷந்தான். இப்ப முதல்ல வேலையைப் பார்க்கலாம் வாங்க. மார்க், உள்ளே போய் உங்க சூரியமின்சக்தித் தொழில்நுட்பத்தைப் பத்திக் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.'
மார்க் வியப்புடன், 'பரவாயில்லையே, நேத்து நான் நாங்க சூரியசக்தித் தொழில்நுட்பந்தான் செய்யறோம்னு சொல்லவேயில்லை. ஆனாலும் கொஞ்ச நேரம் பாத்ததை வச்சே கணிச்சிட்டீங்க. சரி வாங்க விவரமா சொல்றேன்' என்று கூறி அனைவரையும் நிறுவனத்தின் பிரும்மாண்டமான ஆராய்ச்சிக் கூடத்துக்கு மீண்டும் அழைத்துச் சென்றார்.
அங்கு போய் மேல்தளத்தில் நின்றதும் மார்க் தன் கையை விஸ்தாரமாக சுற்றிலும் பெருமிதத்துடன் வீசிக் காட்டி, பொங்கி எழுந்த உணர்ச்சியுடனும், தான் எதோ கனவுலகில் நுழைந்துவிட்டது போன்ற முகத்தோற்றத்துடனும், விவரிக்க ஆரம்பித் தார். 'இதோ பார்க்கறீங்களே இது என் வாழ்க்கைக் கனவு. நம் பூவுலகத்தின் சுற்றுச்சூழல் ·பாஸ்ஸில் எரிபொருட்களால் மாசுபட்டழிவதையும், பல போர்களால் பல்லாயிரக் கணக்கோர் மாள்வதையும், வளர்ந்து வரும் நாடுகள் சக்தித் தட்டுப் பாட்டால் தங்கள் மக்களின் ஏழ்மையைத் தீர்க்கத் தடுமாறுவதையும் கண்டுத் தளர்ந்து போன என் மனத்துக்கு, அந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கப் போகிறது என்னும் ஆறுதல் வளர்க்கும் கனவு. அந்தக் கனவு நனவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை, எங்கள் தொழில் நுட்பத்தால் வெகுசீக்கிரமே நம் கையில் கிட்டிவிடும் என்று நான் நம்புகிறேன்.'
சூர்யா அவரை நனவுலகுக்கு மீட்டார். 'நீங்க சுத்த சக்தியில சூர்ய மின்சக்தி சம்பந்தமா எதோ செய்யறீங்கன்னு புரியுது. ஆனா என்னன்னு கொஞ்சம் விவரமா சொல்லுங் களேன்' என்றார்.
மார்க் கனவிலிருந்து விழித்தெழுந்தது போல் தன்னை உலுக்கிக் கொண்டு 'நாங்க என்ன செய்யறோம்னு புரியணும்னா முதல்ல உங்களுக்கு சுத்த சக்தி நுட்பங்களுக்குள்ள ஏன் நான் சூர்ய மின்சக்திதான் சிறந்ததுன்னு அந்தத் துறையில பல வருஷங்களா முயற்சிக்கறேன்னு தெரியணும். உங்களுக்கு பலதரப்பட்ட சுத்த சக்தி நுட்பங்களைப் பத்தி எவ்வளவு தெரியும்னு சொல்லுங்க, அதை வச்சு மேல விளக்கறேன்' என்றார்.
சூர்யா, 'எனக்கு எதோ கொஞ்சம் தெரியும். இருந்தாலும் மேல புரியறது நல்லது, பரவா யில்லை முதல் படியிலிருந்து விவரமாவே சொல்லுங்க' என்றார்.
கிரணும், 'ஆமாமாம். எனக்கு சுத்த சக்தித் துறையில ABCகூடத் தெரியாது. நீங்க சொன்னீங்கன்னா இங்க மட்டுமில்லை, என் பங்கு வர்த்தகத்துக்கு உதவிதான். எல்லாத் தைப் பத்தியும் சும்மா எடுத்து விடுங்க. நான் வாங்கி வச்சுக்கறேன்' என்றான். முரளியும் தன் பங்குக்குத் தலையாட்டி ஆமோதித்தார்.
மார்க் ஒருவித பக்திப் பரவசத்துடன் வீராவேசமாகத் தன் சுத்த சக்திப் புராணத்தை விவரிக்க ஆரம்பித்தார்...
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|