Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2001 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar | குறுக்கெழுத்துப்புதிர்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
சு.சமுத்திரம்
- சரவணன்|செப்டம்பர் 2001|
Share:
Click Here Enlargeநெல்லை மாவட்டம் திம்மணம்பட்டிக்காரரான சு.சமுத்திரம் எண்பதுகளின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்தவர். முற்போக்கு இலக்கிய உலகம் மதிக்கும் சிறந்த நாவலாசிரியர் மற்றும் சிறுகதையாளர்.

'வாடாமல்லி', 'வேரில் பழுத்த பலா', 'பாலைப் புறா', 'மூட்டம் ', 'கோட்டுக்கு வெளியே' போன்ற நாவல்கள் இவரது எழுத்துக்களில் குறிப்பிடத்தக்கவை. 'வேரில் பழுத்த பலா' நாவலுக்காக சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற இவர் மத்திய செய்தித் தொடர்புத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழக அரசின் குறள்பீட விருதுகள் திட்டத்தின் பின்னணியில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டவர்.

தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் சிறுகதைகளும், தொடர்கதைகளும் நிறையவே எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகளின் ஆதார சுருதியே பிரச்சனைகள் தான். எந்தப் பிரச்சனைகள் குறித்தும் உரத்துச் சிந்தித்து, பேசி, எழுதி வருபவர்.

முற்போக்குப் படைப்பாளிகளுள் மிகவும் வீச்சான மொழிநடையைப் பயன்படுத்துபவர் சு. சமுத்திரம். சமூகத்தால் உடலளவிலும் மனதளவிலும் புறக்கணிக்கப்பட்டவர்கள் குறித்தே இவரது பெரும்பாலான படைப்புகள் பேசியிருக்கின்றன. செம்மலர் பத்திரிகையில் தொடராக வெளிவந்த 'மூட்டம்' நாவல், சு. சமுத்திரத்தின் படைப்பாளுமைக்குக் கட்டியங் கூறியதாக விமர்சகர்கள் கருதுவார்கள்.

மந்திர் - மசூதிப் பிரச்சனையால் அப்பாவிப் பொதுமக்கள் சமூக விரோதிகளின் கையில் சிக்கிச் சின்னா பின்னப்படுத்தப்பட்ட பின்னணியின் உருவான கதை 'மூட்டம்'.

இந்து வாகவோ முஸ்லீமாகவோ அல்லாமல் இந்தியராக வாழ வேண்டும்; மாற வேண்டும் என்ற சிந்தனையை முன் வைத்து இந்து-முஸ்லீம் இடையேயிருக்கும் பாசப் போராட்டத்தை இந்நாவலின் மையப் பொருளாக்கியிருப்பார். இந்த நாவல் தொடராக வெளிவந்து பரவலான வாசக வரவேற்பைப் பெற்றது.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அலிகள் இனத்தவர்களுக்கு நேரும் கொடுமைகள் பற்றி 'வாடாமல்லி' நாவலில் சித்தரித்திருப்பார். சுயம்பு என்கிறவன் அலியாக மாற்றமடைந்ததும் கல்லூரி முதல் கடைக்காரர் வரை அவனை ஒதுக்குவதும், இறுதியாக அவன் குடும்பமே அவனைத் தள்ளி வைப்பதும், அந்தக் கதாபாத்திரம் பம்பாய்க்கு ஓடிப் போய் வசதியான ஆளாகத் திரும்பி வந்து இந்தச் சமூகத்துக்கு நல்லது செய்கிற மாதிரியும் அந்நாவலின் கதைப் போக்கு அமைக்கப்பட்டிருக்கும். இந்நாவலின் வழியாக இதுவரை எடுத்துச் சொல்லாமல் இருந்த அலிகளின் வாழ்வை முதன் முதலாகத் தமிழிலக்கிய உலகிற்குக் காட்டிய பெருமை சு. சமுத்திரத்தைச் சாரும்.

'பாலைப் புறா' எய்ட்ஸ் நோயாளிகள் குறித்து சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட நாவல். எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் மற்றையவர்களைப் போலவே ஆசா பாசங்கள் இருக்கின்றன. வாழ்வு குறித்த தேடல் இருக்கிறது. அவர்களுக்கும் இதயம் இருக்கிறது என்பதையெல்லாம் சமூகத்துக்கு உணர்த்தும் வகையில் இந்நாவல் எழுதப்பட்டிருக்கும்.

நாவல்கள் தவிர இவருடைய சிறுகதைகளும் பிரச்சனைகளையே மைய நீரோட்டமாகக் கொண்டு இயங்குவன. 'கலை மக்களுக்கானதே!' என்கிற தாரக மந்திரத்தை உறுதியாக நம்பி எழுதி வருபவர் சு. சமுத்திரம். எழுத்து தவிர்த்து நிறைய மேடைப் பேச்சுக்களையும் நிகழ்த்தியிருக்கிறார் சு. சமுத்திரம். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து உண்மையான அனுபவங்களைத் தொகுத்து எழுதுவது சு. சமுத்திரத்தின் மிகப் பெரிய பலம்.

சர்ச்சைகளைக் கிளப்பி விவாதங்களுக்கு வழிகோருவது சமுத்திரத்தின் தனிப்பட்ட பாணி. சமீபத்தில் கூட சாகித் அகாதெமி மீது சர்ச்சைகளைக் கிளப்பினார்.

அலைகள் ஆர்ப்பரிக்கும் சமுதத்திரம் (கடல்) போல ஓயாத கேள்விகளுடன் தன்னுடைய படைப்புகளை ஆர்ப்பாட்டங்களுடன் வெளிக் கொண்டுவரும் படைப்பாளி சு. சமுத்திரம்.

சரவணன்
Share: 




© Copyright 2020 Tamilonline