Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
வண்ணநிலவன்
- சரவணன்|ஆகஸ்டு 2001|
Share:
Click Here Enlargeதெற்கத்திக் கதை சொல்லிகளில் மிக முக்கியமானவர். இயற்பெயர் ராமச்சந்திரன். அதிராமல் விசயத்தைச் சொல்லி ஆச்சரியப்படுத்துவது இவரின் கைவந்த கலை, 'கடல்புரத்தில்', 'கம்பாநதி', 'ரெய்னீஸ் ஐயர் தெரு' போன்ற நாவல்களையும் 'எஸ்தர்', 'தேடித்தேடி', 'பாம்புப் பிடாரனும்' போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

இவரின் கடல்புரத்தில் நாவல் தகழியின் செம்மீனுக்குச் சவால் விடும் வகையில் அமைந்தது. செம்மீனின் பாதிப்பில் இந்த நாவல் எழுதப்பட்டிருந்தாலும், வண்ணநிலவனின் கைவண்ணத்தில் செம்மீன் நாவலைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் அமைந்திருந்ததை விமர்சகர்கள் அனைவரும் சுட்டிக் காட்டத் தவறியதில்லை. கடல்புரத்தில் நாவலின் நாயகியான பிலோமிக்குட்டி, தகழியின் கருத்தம்மா பாத்திரத்தைவிட மிகச் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது.

வண்ணநிலவனின் கதை உலகம் மனிதர்களால் நிறைந்திருப்பது. ஆர்ப்பாட்டமில்லாத மனிதர்கள் அவருடைய கதைகளில் பவனி வருவார்கள். கதைத் தனத்துக்காக ஒருபோதும் மனிதர்களின் நடவடிக்கைகளை வெட்டிக் குறைத்து எழுதியதில்லை. இயல்புப் போக்கில் மனிதர்களுடைய வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியவர் வண்ணநிலவன்.

கடன் தொல்லையால் நேர்ந்த அவமானத்தால் செத்துப் போகிறவர், முதலாளி, மனசு சங்கடப்படுகிறத மாதிரி பேசி விட்டதால்தற்கொலை செய்து கொள்கிறவர், வேலையில்லாமல் அலைந்தாலும் தாமிரபரணிக் கரைக்கு நாள்தோறும் வந்து போகிறவர், மழை பெய்கையில் குடையெடுக்காமல் தெருவைக் கடந்து போகிறவர்..... என மனிதர்களில் பலவகைப்பட்டவர்களையும் தன்னுடைய கதைகளில் வாழ வைத்தவர் வண்ணநிலவன். திடுக்கிடும் மற்றும் ஆர்ப்பாட்டமான கதை சொல்லும் போக்கை அறவே ஒதுக்கி, தனக்கென அமைதியான கதை சொல்லும் தளத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்.

இவருடைய 'கடல்புரத்தில்' நாவலில் இவர் கையாண்டிருக்கிற மொழிநடையை அனைவரும் சுட்டிக் காட்டிப் பாராட்டுகின்றனர். திருநெல்வேலித் தமிழைப் பேசுறி ஒருவர் மீனவத் தமிழை வெகுசிறப்பாகப் பயன்படுத்தியமை ஆச்சர்யத்தைத் தருகிறது. ஒரே மாதிரியான கதை சொல்லும் போக்கையே கொண்டிருக்கிறார் என்னும் குற்றச்சாட்டும் வண்ணநிலவன் மேல் உண்டு. அதைப் பற்றி வண்ணநிலவன் குறிப்பிடும்போது, ''பெரும்பாலும் என்னோட எழுத்துக்களை நல்லாருக்குன்னு சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். யாரும் நல்லாயில்லைன்னு சொன்னதில்லை. எனக்கே கூட, 'அப்படித் தப்பேயில்லாத எழுத்தா நம்முடைய எழுத்து' என்று தோன்றும். ஒரே ஒரு புத்தக விமர்சனம் மட்டும் வந்திருக்கு. இவரு எப்பவும் ஒரே மாதிரி எழுதிட்டிருக்காருன்னு எங்கேயோ படிச்ச ஞாபகமிருக்கு'' என்று கூறுகிறார்.

நாவல், சிறுகதை என்பதோடு மட்டுமல்லாமல் வண்ணநிலவன் சிறந்த கவிஞரும் கூட. கதைகளைப் போலவே கவிதையிலும் மனிதர்களை முன்னிறுத்தியதாகவே இவருடைய கவிதைகள் இருக்கும்.
இந்த நூற்றாண்டில் தென்மாவட்டத்தை மையமிட்டுத் தோன்றிய கரிசல் வட்டார இலக்கியப் போக்கில் வண்ணநிலவன் குறிப்பிடத்தகுந்தவர் என்று கரிசல் வட்டாரத் தந்தை எனறழைக்கப்படும் கி. ராஜநாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகையாளராகவும் பணியாற்றியிருக்கிறார். சுபமங்களாவில் துணையாசிரியராகக் கொஞ்சக் காலங்கள் கோமல் சுவாமிநாதனுடன் கைகோர்த்துப் பணியாற்றியுள்ளார். துக்ளக் பத்திரிகையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக துர்வாசர் என்கிற புனைப் பெயரில் கட்டுரைகளை எழுதியுள்ளார். ருத்ரய்யா இயக்கிய 'அவள் அப்படித்தான்' படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார் வண்ணநிலவன்.

''என்னோட பள்ளி நாள்களில் பாடப் புத்தகங்களை விட அதிகமாகக் கதைப் புத்தகங்களைத்தான் வாசித்திருக்கிறேன். எனக்குப் பள்ளிக்கூட படிப்பும் குறைவு. அந்தக் கால எஸ்.எல்.சி. வரைக்கும்தான் படித்திருக்கிறேன். ஆனால் பத்திரிகை, நாவல், சிறுகதைன்னு எது கைக்குக் கிடைத்தாலும் மனம் போன போக்கில் கட்டுப்பாடில்லாமல் நிறைய படித்திருக்கிறேன். நான் எழுத வந்தது ரொம்ப நாளைக்குப் பின்னாடிதான். 1969-ல் எழுதத் தொடங்கினேன்'' என்று தன்னைப் பற்றி மிகவும் அடக்கத்துடன் கூறிக் கொள்ளும் வண்ணநிலவன் இயல்பிலேயே மிக அடக்கமானவர்.

சரவணன்
Share: 




© Copyright 2020 Tamilonline