Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
Tamil Unicode / English Search
சிறுகதை
'X'
வெளிநாட்டு வேலை
- எல்லே சுவாமிநாதன்|ஆகஸ்டு 2001|
Share:
Click Here Enlargeரங்கன் அன்று ஆபீசுக்கு வரவில்லை.

''ரங்கன் எங்க தொலைஞ்சிட்டான். டீ கொண்டுவர நேரமாச்சு. ஆளயே காணோமே'' என்று கோபத்தோடு வினவினார் தலைமை கணக்கர் ராமநாதன்.

''இன்னிக்கு ஆள காணோம். ஒடம்பு சரியில்ல போல. ஒங்கிட்ட லீவு சொல்லலியா'' என்று கேட்டார் பார்த்தசாரதி.

ஆபீசே ரங்கனுக்கு காத்திருந்தது. சிற்றுண்டிக்கடை அருகில் முப்பதடி தூரத்தில் இருந்தாலும ரங்கனை அனுப்பி எல்லோருக்கும் டீ வாங்கி வரச் சொல்லுவார்கள். ரங்கன் ஒரு கடைநிலை ஊழியன். இந்த வேலை என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக இருக்காது. அவன் இல்லாவிட்டாலும் ஆபீசே நடக்காது என்று தோன்றும்.

''ரங்கா, போஸ்ட் ஆபீசுக்கு போய் இந்த லெட்டரை ரெஸிஸ்டர் பண்ணிட்டு வா''.

''ரங்கா, மார்க்கெட்டு போய் ஒரு கிலோ தக்காளி, அரை கிலோ வெண்ணை வாங்கி வீட்ல கொடுத்திட்டு வா''.

''வீட்டுல சுவத்துக்கு வெள்ளை அடிக்கணும். சனிக்கிழமை காலயிலே வா''.

''கூரையில ஆண்டெனா கட்டணும். ஒன் ஒதவி வேணும் சாயங்காலமா''.

இப்படி பல சொந்த விசயங்களும் அவனால் கவனிக்கப்பட்டன. அவன் இன்று வராததால் எல்லோருக்கும் போகம்.

''நாளக்கி வரட்டும் சீட்ட கிழிச்சிடணும்'' என்று சூளுரைத்தார்கள்.

மறுநாள் ரங்கன் ஆபீசுக்கு வந்தபோது அவனை ஆளுக்கொரு கேள்வி கேட்டார்கள்.

ரங்கன் பதில் பேசவில்லை. கையில் ஒரு வெள்ளைக்கவரை வைத்துக் கொண்டு ராமநாதன் இருக்கை அருகே வந்தான்.

''ஏன் நேத்து வரலை? நெனச்சா நீயா லீவு எடுத்திடரதா? அனுமதி கேட்டு தான் லீவு எடுக்கனும்னு தெரியாதா?'' என்று ராமநாதன் புலம்பிக் கொட்டினார். ரங்கன் பதிலே சொல்லாமல் மெதுவாக அந்தக் கவரைக் காட்டினான்.

'அரசு விவசாயத்துறை, துபாய்'' என்ற பச்சை எழுத்துக்கள் கவர்மேல் மினுமினுத்தன. அதைப் பிரித்துப் படித்த ராமநாதனுக்கு மிகுந்த வியப்பு ஏற்பட்டது.

''அடடே, ஒனக்கு துபாய்ல வேல கெடச்சிருக்கு. வாழ்த்துக்கள்'' என்றார் பொறாமையை உள்ளடக்கி.

ஆபீஸ் நண்பர்கள் அனைவரும் அருவே வந்து அந்த கவரைப் பார்த்தார்கள்.

ரங்கன் மெதுவாக சொன்னான். ''என்னோட தங்கச்சி புருசன் துபாய்ல எஞ்சினீயரா இருக்காரு. அவரு பாத்து ஏற்பாடு செஞ்சது. நேத்திக்குதான் காலையில தபால்ல வந்தது. பாசுபோர்ட் ஆபீசு, தூதரகத்துல விசாக்கு மனுன்னு போயிருந்தேன். இனிமதான் டிக்கட்டு எடுக்கணும். அதான் நேத்து வர முடியல. மன்னிச்சிருங்க''.

''என்ன வேல கெடச்சிருக்கு? பியூனா?'' என்று ஆவலோடு கேட்ட பார்த்தசாரதிக்கு, ''மானேஜர் வேலை'' என்றார் ராமநாதன் மெலிதான குரலில். இருவது வருடமாக தலைமை கணக்கராக இருக்கும் தனக்கு, ஓய்வு பெறுமுன் மானேஜர் பதவி கிடைக்காது என்ற ஏமாற்றம் அவர் குரலில் ஒலித்தது. என்ன முதுகலை பட்டம் வாங்கி என்ன பயன்? பிடிப்பெல்லாம்போக மாசம் மூவாயிரத்து சொச்சம் கூட தேராது. ஒரு கடைநிலை ஊழியன், பள்ளி இறுதி வகுப்பு கூட தேறாதவனுக்கு, மேனேஜர் பதவி, அதுவும் துபாயில. சம்பளம் மாசம் அம்பதினாயிரம் ரூபாயாம். ராமநாதனுக்கு வயிற்றெரிச்சல் தாங்கவில்லை.

''இதெல்லாம் நம்பாத. ஒரே மாசத்துல தூக்கிடுவான். துபாய்க்காரன நம்பக் கூடாது'' என்று எச்சரித்தார்.

''என் தங்கச்சி புருஷன் இருக்காருல்ல. அவரு கவனிச்சிப்பாரு. வந்திரு அப்புறமா ஏதாவது சொந்தமா பிசினசு பண்ணலாம்னு சொல்லியிருக்காரு'' என்று ரங்கன் பதிலளித்தான்.

''வா, கேண்டினுக்கு போய் டீ சாப்பிடலாம்'' என்று ஒருவர் சொல்ல, ரங்கன், ''வாங்க. ஒங்களுக்கு இன்னிக்கு டீ, டிபன் என் செலவு'' என்று அறிவித்தான்.

ஒரு கடைநிலை ஊழியனுக்கு வந்த திடீர் அதிர்ஷ்டத்தை கண்டு பொறாமையுடன் கூட்டம் பின் தொடர்ந்தது.

''எனக்கு வயிறு சரியில்ல. நீங்க போங்க'' என்று ராமநாதன் ஆபீசில் தங்கிவிட்டார்'', இப்ப யாருதான் வெளிநாட்டுக்கு வேலைக்கு போறதுன்னு ஒரு வெவஸ்தை இல்லாம ஆயிடுச்சி. பொடிப்பசங்க எல்லாம் போறங்க. இப்ப ஒரு பியூனும் போறான்''. அவர் மனதில் தான் எப்படி வெளிநாடு போகமுடியும் என்று யோசனை பலமானது.

இரு வாரங்களில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ரங்கன் துபாய்க்கு பயணமானான்.

ஒரு மாதம் கழித்து ராமநாதனுக்கு ஒரு பார்சல் வந்தது. அதற்கு ஐநூறு ரூபாய் சுங்கவரி கட்டி வாங்க வேண்டி இருந்தது. ரங்கன் அதில் ஒரு தொப்பி பரிசாக அனுப்பி இருந்தான். சிவப்பு நிறத்தில் கம்பளித்தொப்பி அது.

தனக்கு இன்னமும் இடம் பழகவில்லை என்றும் கிடைத்த வாய்ப்பில் கடைக்கு போனபோது கண்ணில்பட்ட பொருளை வாங்கி அனுப்பியிருப்பதாகவும் ஒரு குறிப்பு எழுதியிருந்தான்.

தொப்பிணை தலையில் போட்டுக் கொண்டார் ராமநாதன்.

''முஸ்லீம் தொப்பி மாதிரி இருக்கு. சலாம் ஆலே கும்'' என்றார் ஒருவர்.

''பரவாயில்ல. வீட்டுக்குள்ள குளிருக்கு போட்டுக்கலாமில்ல. யாரு பாக்கப் போறாங்க'' என்றார் இன்னொருவர்.

''போட்டுக்கங்க. பாஷனாயிரும். அப்புறம் பழகிரும். இப்ப லுங்கி கட்றது பழக்கமாயிருச்சுல்ல''.

''பவாம் ஏதோ அனுப்பியிருக்கான். ஆயிரம் ரூவா மதிப்பு இருக்கும்போல. அனுப்பணும்னு மனசு இருந்ததே அதை சொல்லு'' என்றார் ராமநாதன்.

இந்தப் பொருளுக்கு பதில் ரூபாயாக அனுப்பியிருக்கலாம் என்று நினைத்தார்.

தான் வெளிநாட்டுக்கு போகவேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.

கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்ந்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்றார்கள்.

சேர்ந்து பார்த்தார். 'சி' படித்தால், 'சி++' படி என்றார்கள். ஜாவா தான் நல்லது என்றார்கள். எச்டிஎமெல் இல்லாமல் பிரயோஜனம் இல்லை என்றார்கள். சொல்லிக் கொடுப்பவர்கள் பொடிப் பையன்களாக இருந்தார்கள். ஒரு எழவும் புரியவில்லை. அவரை விட மற்றவர்களுக்கு அதிகம் புரிவது போல் இருந்தது. வீட்டில் ஹோம் ஒர்க் செய்ய கம்ப்யூட்டர் வாங்க காசில்லை. சக மாணவர்கள் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.

''என்னப்பா, கம்ப்யூட்டர் டைரக்டரில ஏகப்பட்ட பைல் இருக்குங்கறான். நான் கேக்கறச்சே பைலக் காணும்னு மெசேஸ் வரது. தெறந்து பாத்தா உள்ள துளிக்காகிதம் இல்ல. ஏதாவது சித்து வேலயா இருக்குமோ?'' என்று ஒரு பையனிம் சந்தேகம் கேட்கப்போய், ''ஒங்களுகூகு எதுக்கு சார் இந்த வயதில் இதெல்லாம்'' என்று பரிகசித்தான்.

பாதியில் நிறுத்திவிட்டார்.
Click Here Enlargeபத்தாயிரம் முன்பணம் கட்டினால் ஒரு ஏஜெண்ட் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கப் போனார். அவர் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருப்பது அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பினார்.

தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளுக்கு அவர் அனுப்பி விண்ணப்பங்களுக்கு பணம் செலவழிந்ததே தவிர, பலன் இல்லாமல் போனது. ''உங்கள் தகுதி சிறப்பாக இருந்தாலும், எங்கள் தேவைக்கு பயன்படாமைக்கு வருந்துகிறோம். எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் உடனே அழைக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய உங்களுக்கு ஆவல் இருப்பதற்கு மிகுந்த நன்றி'' என்று ஒரு கடிதம் வந்ததும் அவர் மகிழ்ந்தார். அதை ஆபீசில் காட்டி ''பாத்தியா.... என்ன மரியாதயா பதில் போடரான்'' என்று வியந்தார்.

ஆனால் அடுத்து வந்த கடிதங்களும் அதே போல் இருக்கே மனம் சலித்தார்.

ஒருநாள் ஓட்டலில் ராமநாதன் காப்பி சாப்பிடும்போது சூட்டும் கோட்டும் அணிந்த ஒருவர் எதிரில் வந்து அமர்ந்தார். தன் பெயர் ராஜன் என்றும் அபுதாபியில் எஞ்சினீயராக இருப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். ராமநாதன் அங்கு வேலைவாய்ப்பு பற்றி கேட்டார். ராஜன், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் கடுமையாக உழைத்துபணம் சம்பாதித்தாலும் மன அமைதி இல்லாமல் இயந்திரம் போல இருக்கிறார்கள் என்றும், வெளிநாட்டில் போய் பிழைப்பதை விட ஊரில் கெளரவமாக பிச்சை எடுத்து பிழைப்பது நல்லது என்றும் உபதேசம் செய்தார். வெளிநாட்டுல வேல செஞ்சு காசு சேத்த திமிர்தான் இது போல அவரை பேசச் செய்கிறது என்று எண்ணியவராய் ராமநாதன் பதில் பேசாமல் பொறுமையாக் கேட்டார்.

மூன்று மாதம் கழித்து ரங்கனிடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. அதில் அவன் வேலை செய்யுமிடத்தில் ஒரு உதவி மானேஜர் பதவி காலியாக இருப்பதாகவும், அதை அவனுடைய நண்பன் ஒருவனுக்கு தெரிவித்து மனுப்போடச் சொன்ன கடிதம் திரும்பி விட்டதென்றும், அந்த நண்பன் இருந்த விலாசத்தில் விசாரித்து அவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து எழுத முடியுமா என்றும் கேட்டிருந்தான். நல்ல விலையில் கிடைத்தால், வருடக் கடைசியில் வாங்க தோதாக தனக்கு அஞ்சு லட்சம் ரூபாயில் வீடு கட்ட ஒரு மனைக்கட்டு பார்க்கும்படியாக எழுதியிருந்தான்.

போயி நாலு மாசம் ஆகல, வீடு கட்ட மனை வேற பார்க்கணும்னு சொல்றான், நாம இன்னும் வாடகை வீட்டுல சாகறோம் என்ற எண்ணம் அவரை மிகவும் வாட்டியது.

ராமநாதனின் மூளை வேகமாக வேலை செய்தது. எதற்கு ரங்கனின் நண்பனுக்கு போய் சொல்ல வேண்டும்? தானே அந்த வேலைக்கு மனு செய்தால் என்ன?

அன்றிரவே வீட்டுக்குப் போனதும் ரங்கனுகூகு வேலை கொடுத்த துபாய் விவசாயத்துறை விலாசத்துக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். தன்னுடைய தகுதிகளைப் பட்டியலிட்டார். தனக்கு தெரிந்த நுட்பங்களை விளக்கி எழுதினார். துளிப் பிசிறில்லாமல் சுத்தமாகச் செய்யும் தன் வேலைத்திறமையை இந்தியா பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டது என்பதைக் குறிப்பிட்டு எழுதி இருமுறை அடிக்கோடிட்டார். முடிந்தால் தனக்கு மேனேஜர் பதவி கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஒரு மாதம் கழித்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவருக்கு உதவி மானேஜர் வேலை தருவதாகவும் மாதச் சம்பளம் முப்பதினாயிரம் ரூபாய் என்றும் எழுதியிருந்தார்கள். இரண்டு வாரத்தில் துபாய்க்கு வரச்சொல்லியிருந்தார்கள்.

மேனேஜர் வேலை தராதது சற்று ஏமாற்றம் கொடுத்தாலும், முப்பதினாயிரம் சம்பளத்தில் உதவி மேனேஜர் பதவி பரவாயில்லை என்று தோன்றியது.

அவருக்கு பிரயாணச் செலவுக்கு உடனடியாக ஒரு லட்ச ரூபாய் தேவைப்பட்டது. பெண் கல்யாணத்துக்கு சேர்த்திருந்த பணம், உறவினர்களிடம் கடன், மனைவியின் நவைகள் விற்பனை என்று ஒருவழியாக பணம் தேற்றினார். நாலு புது சூட்டு கோட்டு தைத்துக் கொண்டார். சில்க் டை ஆறு வாங்கினார். நான்கு ஜோடி ''ஷ¥க்கள்'' வாங்கினார். இரண்டு பெட்டிகளில் பரிசுப்பொருள்கள் வாங்கி அடைத்தார்.

வீட்டுக்கு ஒரு மாசத்துக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்தார். கிட்டத்தட்ட எல்லா பணமும் இதிலேயே கரைந்தது.

துபாய்க்கு ஒரு வழிப் பயணத்துக்கு டிக்கெட் வாங்கி விமானத்தில் பயணமானார்.

துபாயில் இறங்கியதும் அரசு விவசாயத்துறை சார்பில் ஒரு அதிகாரி வந்து சந்தித்து அவரை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஒரு இரவு தங்க வைத்தார்.

''ஏதாவது இண்டர்வியூ இருக்குமோ நாளைக்கு'' என்று வினவினார் ராமநாதன்.

''நோ, உங்க வேலை சுதூதமாயிருக்கும்னு நீங்க எழுதினதப் பாத்து உங்களுக்கே இந்த வேலைன்னு முடிவு பண்ணிட்டாங்க'' என்றார் அவர்.

''இன்னிக்கு ராத்திரி இங்க தங்குங்க. நாளைக் காலையில உங்களை நீங்கள் பணி செய்ய வேண்டிய ஊருக்கு அழைத்துப் போகிறேன். இந்த ஓட்டலில் தங்கும் செலவை அரசு விவசாயத்துறை ஏற்கும்'' என்றும் சொல்லிப் போனார்.

அந்த ஓட்டலின் அறையில் இருந்த வசதிகள் அவரைக் கவர்ந்தன.

''என்ன அருமையான மெத்தை. பாத்ரூம் எவ்வளவு சுத்தமா இருக்கு, இங்கேயே தூங்கலாம் போல இருக்கே என்று வியந்து போனார். அந்த இடத்தின் வாடகை ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து நானூறு ரூபாய் என்று தெரிந்ததும் அவரால் தூங்கவே முடியவில்லை. ஒவ்வொரு மணி கழிந்த பிறகு ''அய்யோ.. நூறு ரூபா ஆயிருக்கும்'' என்று கணக்கிட்டார்.

மறுநாள் காலை அவர் அரசு அதிகாரியுடன் ஒரு மெர்சிடஸ் பென்ஸ் காரில் ஏறி ஒரு மணி பயணத்துக்குப்பின் நகருக்கு வெளியில் ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பொட்டைக்காடாக இருந்த இடத்தில் கார் நின்றது. சிறிது தூரத்தில் ஒரு மரத்தினாலான கொட்டகை இருந்தது. ''இது தான் ஒங்க ஆபீசு'' என்று கூட வந்தவர் காடடியதும், அந்தக் கட்டிடம் அவருக்கு ஏமாற்றமளித்தது. ஆனால் சன்னல் வழியே துருத்திக் கொண்டிருந்த குளிர்சாதனப் பெட்டி, ''அப்பாடா, ஏசி வெச்சிருக்கான்'' என்று மகிழ்ச்சி கொடுத்தது.

அவர்கள் அந்தக் கட்டிடத்தில் நுழைந்து இரு சிறு அறைகளை கடந்து உள்ளே போனார்கள்.

''உங்கள் பெட்டியை இங்கே வையுங்கள்'' என்று அவர் சொன்னதும், ராமநாதன் பெட்டியை மூலையில் வைத்தார். அவர் அங்கிருந்த ஒருவனிடம் ''மானேஜர் எங்கே?'' என்றார்.

''மானேஜரயா தேடறீங்க? அவர் பீல்டுல இருக்காரு'' என்று அவன் பதிலளித்தான்.

அவர்கள் கட்டிடத்தை விட்டு வெளியே போய்ப் பின்புறம் போனார்கள். அங்கு பல ஒட்டகங்கள் அங்குமிங்குமாய் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது ரங்கன் இரு ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு எதிரில் வந்தான். ராமநாதன் திடுக்கிட்டு ரங்கனைப் பார்க்க, ரங்கன் கூசியபடியே அவரைப் பார்த்தான். அரசு அதிகாரி ராமநாதனை ரங்கனுக்கு அறிமுகப்படுத்தி, ''மானேஜர் ரங்கன். இவர்தான் புதிதாக வந்த துணை மானேஜர் ராமநாதன்''. உங்களைப் போல் இவரும் இந்தியாவிலிருந்து வந்தவர். வேலை ரொம்ப சுத்தமா இருக்குமாம். அதிக நேரம் வீணாக்காமல் இவருக்கு வேலை சொல்லிக் கொடுங்கள்'' என்று சொல்லிக் காரில் ஏறிப் பயணமானார்.

கார் புழுதியை கிளப்பிக் கொண்டு பறந்தது.

சில நிமிஷ மெளனத்துக்கு பிறகு ரங்கன் சொன்னான், ''சார் நான் ஏமாந்துட்டேன். விவாசயத்துறையில் அனிமல் ஸ்பெண்டரி பிரிவில் மானேஜர்னா ஏதோ ஆபீசுலன்னு நெனச்சேன். வேகாத வெயில்ல ஒட்டகம் மேய்க்கிற வேலைதான்னு தெரியாம போச்சு. ஏதோ கை நெறயக் காசு வருது. தங்கறதுக்கு அந்த மரக்கொட்டகைதான். காசைத் தேத்திக்கிட்டு ஊரக்கு போயிரலாம்னு இருக்கேன். ஊர்ல இதுபத்தி யாருகிட்டயும் சொல்லிடாதீங்க. என் பெண்டாட்டிக்கி கூட இது தெரியாது. என் தங்கச்சி புருசன் எஞ்சினீயராக இருக்காருன்னு சொன்னேன் இல்ல. குப்பை அள்ளற வேலை செய்யறாரு. என்விரோன் மென்டல் எஞ்சினீயர்னா, இந்த ஊருல குப்பை அள்ளறவங்களாம். மாட்டு வண்டிக்கு பதிலா ஒரு லாரி கொடுத்திருக்காங்க அவருக்கு. வாயப் பொத்திட்டு தெருவில குப்பை அள்ராரு'' என்றான்.

ராமநாதன், ''அது கெடக்கட்டும். துணை மானேஜர்னு என்னை எடுத்திருக்கானே. எனக்கு இங்கு என்ன வேலை? ஒரு வேள காஸ்ட் அக்கவுண்டிங்கோ'' என்றார் மிகுந்த ஆவலுடன்.

ரங்கன், ''அக்கவுண்டிங் பாக்க வெள்ளக்காரனை வேலைக்கு வெச்சிருக்காங்க. காசுக் கொழுபெடுத்தவங்க. ஒட்டகம் மேய்க்க, எடுபுடி வேலை செய்யதான் நம்மள மாதிரி ஆளுங்களை பயன்படுத்தறாங்க''.

ராமநாதன், ''அப்ப நான் இங்கு என்ன பண்ணணும்?'' என்றார் மெலிந்த குரலில்.

ரங்கன் புன்னகையுடன், ''தப்பா நெனக்காதீங்க சார். ஒட்டக சாணிய அள்ளறதுக்கு ஆள் வேணும். நா மேய்ப்பேன். ஆனா சாணி மட்டும் மட்டும் அள்ளமாட்டேன்னேன். அந்த வேலைக்கு ஒரு துணை மானேஜர் தரேன்னான். வேலையில்லாம ஊருல அலைஞ்சிட்டு இருந்த என் சினேகிதனை இதுல வெச்சுடலாம்னு இருந்தேன். தெரியாத்தனமா நீங்க வந்து மாட்னீங்க.

பேசாம ராவோட ராவா ஊருக்கு போயிருங்க சார். இது நீங்க செய்யற வேலையா? எம்.காம், சி.ஏ.ன்னு எவ்வளவு படிப்பு படிச்சு பட்டம் எல்லாம் வாங்கி இருக்கீங்க. இந்தத் தலை எழுத்து உங்களுக்கு ஏன்?'' என்றான்.

ராமநாதன் முகத்தில் ஒரு ஏமாற்றப் புன்னகை நெளிந்து மறைந்தது.

ஒரு அசாதாரணத் தெளிவுடன் சொன்னார், '' ரங்கன். வடைய எண்ணச் சொன்னா என்ன, இல்ல, தொளய எண்ணச்சொன்னா நமக்கு என்ன? கையில காசு தரான். ஊருல ஏகப்பட்ட கடன் வாங்கி இங்க வந்தாச்சு. திரும்பினா மானம் போயிரும். விட்டுட்டு வந்த வேலையும் திரும்பக் கிடைக்காது. வாங்கின கடனை இந்த ஜென்மத்தில் அடைக்க முடியாது. பேசாம சொன்ன வேலய செஞ்சிட்டு காசை வாங்கி முடிஞ்சிண்டு ஊருக்கு போய் செட்டிலாரதுதான் புத்திசாலித்தனம். இந்தியால இருவது வருசம் அக்கவுண்டிங் பண்ணி என்ன கிழிச்சேன்? பைசா என்ன மிச்சம் இருக்கு? இங்க வந்து அஞ்சு வருசம் ஒட்டகசாணி அள்ளினா எவ்வளவு காசு தேறும்? ஒரு பத்து லச்சமாவது தேறாதா?''

கர்ம வீரராக மேல் கோட்டைக் கழற்றி தோளில் போட்டுக் கொண்டார். கைச் சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக் கொண்டு விட்டார்.

''சாணிய அள்ளரதுக்கு கரண்டி, கூடை மாதிரி ஏதாவது வெச்சிருக்கானா. இல்லாட்டி கையால அள்ளணுமா? அள்ளி எங்க கொட்டணும்? முட்டு முட்டா எவ்வளவு கெடக்கு? சட்டு புட்டுனு வேலய தொடங்க வாணாம்?''

எல்லே சுவாமிநாதன்
More

'X'
Share: 




© Copyright 2020 Tamilonline