|
|
மார்ச் 2005 'தென்றல்' இதழில் சானியா அட்டைப்படக் கட்டுரையில் இடம் பெற்றார். அதற்கு இரண்டு காரணங்கள்: ஆஸ்தி ரேலியன் ஓபனில் மூன்றாவது சுற்றை எட்டியதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டி எதிலும் இந்த நிலையை எட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றது; உலகத் தர வரிசையில் முதல் 100 டென்னிஸ் வீராங்கனைகளுள் ஒருவராக வந்தது. அந்த ஆண்டு முடிவுக்குள் 50க்குள் வருவது தனது லட்சியம் என்று சானியா கூறியிருந்தார். அதைச் சாதித்தார்.
ஆகஸ்ட் 27, 2007 அன்று அவர் தொட்டி ருப்பது 27-வது இடத்தை! தரவரிசையில் தனக்கு மேலே இருந்த மார்டினா ஹிங்கிஸ் (12), டினாரா ச·பினா (14), பேட்டி ஷ்னைடர் (17) ஆகியோரைத் தோற்கடித்துத் தனது இடத்தை உயர்த்திக் கொண்டுள்ளார். இதன்மூலம் யூ.எஸ். ஓபன் போட்டிகளிலும் இடம்பிடித்த (seeded) முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதில் இவர் முதலாவதாகச் சந்திக்கப் போவது எஸ்டோனியாவைச் சேர்ந்த கைய்யா கனேபியை (44). இந்திய வீராங்கனைகளிடையே ஒற்றையர் பிரிவில் சானியாவை அடுத்துச் சிறந்த ஆட்டக்காரராகக் கருதப்படும் சுனிதா ராவ் ஏ.டி.பி. தரவரிசையில் 220 ஆகவும், ஷிகா ஒபராய் 334 ஆகவும் இருப்பதே சானியா எட்டியிருக்கும் உயரத்தைக் காட்டப் போதுமானது.
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை, உடல்நலத்தில் சரியான அக்கறை, விடாத பயிற்சி இவைதாம் அவரை இங்கே கொண்டு வந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, இரட்டை யர் பிரிவில் இந்த ஆண்டில் மட்டும் 4 முறை பரிசுகள் வென்றதன் மூலம் முதல் 20 ஜோடிகளுக்குள் இவர் இடம் பிடித்துவிட்டார். ஆடத் தொடங்கியதிலிருந்து இதுவரையில் மொத்தம் 7 முறை இரட்டையர் பிரிவு வெற்றிகளில் பங்கேற்றுள்ளார்.
உடல் எடையைக் குறைத்தும், சற்றே பலவீனமான தனது இரண்டாவது சர்வை வலுப்படுத்தியும் தனது ஆட்டத்தை மிகவும் மேம்படுத்தியுள்ளார். அதிலும் கடினத் தளத்தில் இவரது விளையாட்டு மிகச் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்தியர்கள் மட்டுமல்லாமல் எல்லோருமே இந்த 20 வயது வீராங்கனையிடம் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.
*****
ஆடவர் இரட்டையர் பிரிவில் மஹேஷ் பூபதி 18வது இடத்தைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 20ஆம் இடத்திலிருந்து 2 இடங்கள் முன்னேறியுள்ளார். ஆனால் ஒற்றையர் பிரிவில் ரோஹன் பொப்பண்ணா (261), பிரகாஷ் அமிர்தராஜ் (272), கரன் ரஸ்தோகி (374) என்று இருப்பதைப் பார்த்தால் பெரிய நம்பிக்கை ஒன்றும் ஏற்படவில்லை.
***** |
|
இந்திய கிரிக்கெட் லீக்
தட்டிக் கேட்க ஆளில்லாத தனிப்பெரும் கிரிக்கெட் ஆணையமாக இதுவரை இந்தியாவில் BCCI இருந்து வந்தது. 'மையத்திலும் சரி, மாநிலங்களிலும் சரி இதன் ஆட்சி பீடங்களை நெடுங்காலமாக ஒரு சிலரே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள்' என்கிறார் கபில் தேவ். இயல்பாகவே இது சர்வாதிகார பீடமாக மாறிவிட்டதில் ஆச்சரியம் இல்லைதான்.
மிகப் பெரிய வணிகக் குழு நிறுவனமான எஸ்ஸெல் இப்போது பிசிசிஐ-க்குப் போட்டியாக இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) என்ற ஓர் அமைப்பைத் தொடங்கியிருக்கிறது. நான்கு மாதங்களே ஆன இதன் நிர்வாகக் குழுத் தலைவராகக் கபில் தேவ் பொறுப்பேற்றிருக்கிறார். 'எங்கிருந்து உனக்கு வீரர்கள் கிடைப்பார்கள்?' என்று என்னை BCCI கேட்டது எனக் கூறுகிறார் கபில். தற்போது 51 இளம் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் இதில் உறுப்பினராக இருக்கிறார் கள். போதாததற்கு, சந்தீப் பாட்டில், மதன்லால், கிரண் மோரே, பிரையன் லாரா, இன்ஸமாம் உல் ஹக், அப்துல் ரஸ்ஸாக், லான்ஸ் க்ளூஸனர், நிக்கி போயே என்று பெரிய பட்டியலே லீகுடன் சேர்ந்திருக்கிறது. தவிர, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் பிளெமிங்குக்கு 440,000 டாலர் கொடுக்கத் தயாராக இருப்பதாக ஒரு வதந்தி சொல்கிறது. அவர் ஐசிஎல்லில் சேர்ந்து அதன் 6 அணிகளில் ஒன்றுக்குத் தலைமை ஏற்பாரா என்று பார்க்க வேண்டும்.
மாநிலங்களில் இருக்கும் மைதானங்களில் ஐசிஎல்லின் போட்டிகள் அனுமதிக்கப்பட மாட்டா, லீகுடன் சேர்ந்துவிட்ட விளையாட்டு வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப் பட மாட்டார்கள் என்று பலவகை மிரட்டல்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. தனது மேலாண்மை திடீரென்று சவாலுக்குள்ளான தில் அதற்கு அதிர்ச்சி. அதுமட்டுமல்ல, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங் களில் வேலை செய்யும் விளையாட்டு வீரர்கள், லீகில் சேர்ந்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தப் பட்டதாகத் தெரிகிறது.
உடனடியாக இதை எதிர்த்து ஐசிஎல் டெல்லி உயர்நீதி மன்றத்துக்குப் போய்ச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுக் கொண்டுள்ளது. 'இரண்டு பேரமைப்புகளின் மோதலில் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப் படக் கூடாது' என்று நீதி மன்றம் கூறியுள்ளது. இந்தியக் கிரிக்கெட் லீகில் இவர்கள் சேர்ந்தால் அதற்காக அவர்கள் தண்டிக்கப் படக் கூடாது என்பது முக்கியமான தீர்ப்பாகும்.
இதற்கு மாறாக ஐசிஎல் வீரர்கள் பிசிசிஐ அல்லது வேறு அமைப்புகளின் அணிகளில் பங்கேற்கலாம் என்று கூறுகிறது ஐசிஎல். யாருடைய வாய்ப்பையும் கெடுக்கக் கூடாது என்பது ஐசிஎல்லின் கருத்தாக இருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் கெர்ரி பேக்கர் என்பவர் இப்படிப் போட்டி அமைப்பைத் தொடங்கியதால்தான் ஒருநாள் போட்டி என்ற வடிவமே உருவானது. அதைப்போல ஐசிஎல்லும் Twenty20 என்ற புதிய வடிவத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. 'தவிர 50 ஓவர் போட்டி, மூன்றுநாள் டெஸ்ட் போட்டி ஆகியவற்றையும் நாங்கள் காலக்கிரமத்தில் ஏற்பாடு செய்வோம்' என்கிறார் கபில்.
'அரேபியன் கன்ட்ரி கிளப்' என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் நடந்துவரும் ஓர் அமைப்பு ஐசிஎல்லின் போட்டிகளுக்குத் தனது மைதானத்தைத் தர முன்வந்திருக்கிறது. ஐந்து நட்சத்திரத் தங்குமிட வசதிகள், உடற்பயிற்சிக் கூடம் என்று பல வசதிகளைக் கொண்ட இந்த இடம் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடித்த இடமாம். 'கிரிக்கெட்டை ஆதரிக்க விரும்புகிறோம். ஐசிஎல் செய்வதில் எனக்கு எதுவும் தவறாகப் படவில்லை' என்கிறார் இதன் தலைவர் ஆரி·ப் அலி அப்பாசி.
கபில் தேவ் போன்ற சாதனையாளர்களையே பிசிசிஐ மதிக்கவில்லை என்றால், இளம் விளையாட்டுக்காரர்கள் எம்மாத்திரம்? ஜனநாயகமின்மை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என்ற பல காரணங்களை இந்தப் போட்டி நிறுவனம் தோன்றுவதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.
இருக்கலாம். ஆனாலும், கிரிக்கெட்டின் மீது பார்வையாளருக்கு இருக்கும் ஆர்வம், அதிகமான பயிற்சிக் கூடங்கள் தோன்றியமை, விளையாட்டு வீரர்கள் அதிகமாகி அதற்கேற்ப வாய்ப்புகள் பெருகாதது என்கிற நிலைமை யில் மாற்று அமைப்புகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அதுவும் மற்றொரு பிசிசிஐ ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம்.
மதுரபாரதி |
|
|
|
|
|
|
|