வரலட்சுமி விரத வழிமுறைகள்
|
|
|
தமிழில் முருகு என்றால் அழகு. முருகன் என்பவன் அழகன். தமிழ் மொழிக்கும் முருகனுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. மற்ற மொழிகளுக்கில்லாத இரண்டு தனிச்சிறப்புகள் தமிழுக்கு உண்டு. 'ழ' என்ற எழுத்து தமிழில் மட்டுமே உள்ளது. இது முதல் சிறப்பு. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டது தமிழ் இலக்கணம். ஆனால், மற்ற மொழிகளில் நான்கு பிரிவுகள் மட்டுமே உண்டு. அங்கு இல்லாத பிரிவு பொருளிலக்கணம். இது தமிழ் மொழிக்கிருக்கும் இரண்டாவது தனிச் சிறப்பு. பொருள் இலக்கணம் அகம் என்றும் புறம் என்றும் இரண்டு பிரிவாகவும், அகம் என்பது கனவு என்றும் கற்பு என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. முருகக் கடவுள் வள்ளி, தெய்வயானை என்ற இரண்டு மனைவிகளை உடையவன். பொருள் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்பவன் முருகன். வள்ளியைக் களவு மணமும், தெய்வானையைக் கற்பு மணமும் புரிந்துகொண்டான்.
பொதுவாகவே முருகன் குன்றின் மேல்தான் அமர்ந்திருப்பான். காரணம் முருகன் குறிஞ்சிக் கடவுள். மலையும் மலை சார்ந்த இடமும் தான் குறிஞ்சி நிலமாகும். திருப்பரங்குன்றம், பழனி, திருவாவினன்குடி, திருத்தணி என்று முருகனின் படைவீடுகளும் மலைமீது அமைந்த கோவில்களேயாம்.
முருகன் வீற்றிருக்கும் ஒவ்வொரு கோயிலுக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். இந்த இதழில் 'எண்கண்' என்ற கோயில் சிறப்புப் பற்றிய சுவையான செய்திகள் இதோ!
தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான் அதைக் கட்டிய சிற்பிகளையெல்லாம் கொன்றுவிட்டான் என்று வரலாறு சொல்கிறது. இதற்குக் காரணம் அவர்கள் தாஜ்மஹாலைப் போன்ற இன்னொரு அழகிய நினைவுச் சின்னத்தைக் கட்டிவிடக் கூடாது என்ற சுயநலம். இதுபோன்ற சுயநலம் கொண்ட தமிழ்நாட்டு மன்னர் ஒருவர் சோழர் பரம்பரையில் இருந்திருக்கிறார். ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்னால் முத்தரச சோழன் என்பவன் சிக்கல் என்னும் திருத்தலத்தில் சிற்பி ஒருவனைக் கொண்டு முருகன் சிலை வடிக்கச் செய்தான். பின்னர் அது போன்று வேறு சிலை ஒன்றை அந்தச் சிற்பி செதுக்கி விடக்கூடாது என்பதற்காக அவனது வலதுகைக் கட்டை விரலை வெட்டி விட்டானாம்.
கட்டைவிரலை இழந்த சிற்பி மனம் தளராமல் எட்டுக்குடி என்னும் திருத்தலத்தில் இன்னுமொரு முருகன் சிலையை வடிக்கக்கண்டு, கோபம் கொண்ட மன்னன் அவனது இரு கண்களையும் பறித்து விடுகின்றான்.
கட்டைவிரலையும் இரண்டு கண்களையும் இழந்துங்கூட சிற்பி மனம் தளரவில்லை. ஒரு சிறுமியின் துணையுடன் சமீவனம் என்னும் வன்னிமரங்கள் அடர்ந்த ஒரு வனத்தில் ஒரே கல்லில் தோகை விரித்தாடும் மயில்மேல் அமர்ந்திருக்கும் முருகன் சிலை ஒன்றைச் செதுக்கி விடுகின்றான். சிலை செதுக்குபவர்களும் சரி, ஓவியங்கள் தீட்டுபவர்களாயினும் சரி கண் அமைப்பைக் கடைசியில் தான் வைத்துக் கொள்வார்கள். அதற்கு கண் திறப்பு என்று பெயர். சிற்பியும் முருகன் சிலையின் கண்திறப்பன்று அந்தச் சிறுமியின் கையினைப் பிடித்துக் கொண்டு உளியால் முருகனின் கண்ணைத் திறக்கச் செதுக்கியபோது அவன் வைத்திருந்த உளி தவறி அந்தப் பெண்ணின் கையில்பட, உளிபட்ட இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டுச் சிற்பியின் கண்களில் தெறிக்க, அவன் பார்வையும் மீண்டது. இறைவனின் கண்களும் திறக்கப்பட்டன. இதுதான் எண்கண் என்று இத்தலம் பெயர் பெற்ற வரலாறு. தஞ்சை மாவட்டத்தில் திருவாரூரிலுள்ள குடவாசல் தாலுக்காவில் உள்ளது இத்திருத்தலம்.
வன்னி மரத்தைத் தல விருட்சமாகக் கொண்டுள்ள இத்திருத்தலத்தின் பழமைக்குச் சான்றுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. மனுநீதிச் சோழனின் முதலமைச்சர் உபயகுலாமலன் பிறந்தது இவ்வூர் என்றும், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய முதலாம இராஜராஜ சோழன் இந்தக் கோயிலுக்கு 'பவித்திரமாணிக்க சதுர்வேதிமங்கலம்' என்று பெயர் சூட்டி, கோயில் வழிபாட்டிற்கென்று நிவந்தங்கள் அளித்திருப்பதற்கும், கி.பி.1219-ல் மூன்றாம் குலோத்துங்க சோழன் இக்கோயிலில் வீற்றிருக்கும் பிரம்மபுரீஸ்வரர் சன்னிதியில் விளக்கெரிய உபயமளித்தும் கற்றளி எழுப்பியதும் குறிப்பிடத் தக்கன. |
|
கோயிலின் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பவர் பிரம்மபுரீஸ்வரர். பிரம்மனுக்கு பிரணவ மந்திரம் உபதேசித்தவன் என்ற காரணத்தால் முருகன் தோகை விரித்தாடும் மயிலின் மீதமர்ந்திருக்கும் கோலத்தில் தெற்கு நோக்கி இருக்கின்றான். இது ஞானசபை என்றும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் காட்சி கொடுக்கும் உற்சவ மூர்த்தி முருகன் வீற்றிருக்கும் கிழக்கு திசையிலுள்ளது தேவசபை என்றும் பெயர் பெற்றுள்ளது. மூலவர் பிரம்மபுரீஸ்வரர் என்பதற்கிணையாக தாயார் பிரஹன்நாயகி என்றழைக்கப்படுகின்றார்.
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் இக்கோயிலில் ஒவ்வொரு மாதக் கார்த்திகையும் விசேஷ தினமாகும். தை மாதத்தில் தேரோட்டமுள்ளிட்ட 14 நாட்கள் பிரம்மோற்சவமும், தைப்பூசத் திருவிழாவும் மிகவும் சிறப்பானவை. திருப்புகழ் பாடிய அருணகிரியாரும் இத்தலத்தைப் போற்றி,
சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங் டம்பி லங்கு சண்ப கஞ்செ றிந்தி லங்கு திரள்தோளுந் தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லஞ்ச லென்று சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச மயிலேறித் திந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று சென்ற சைந்து கந்து வந்து க்ருபையோட சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து சந்த தம்ப ணிந்தி ரென்று மொழிவாயே.
என்று மயில் மீதமர்ந்து அழகாக ஆடி வரும் முருகனை வருணித்துப் பாடி "எண்கண் அங்கமர்ந்திருந்த பெருமாளே" என்று முடிக்கின்றார்.
தல விசேஷம்
கண் பார்வையில் கோளாறு உள்ளவர்கள் தமிழ் மாதத்து விசாக நட்சத்திர நாளிலே இத்தலத்திற்கு வந்து குமார தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட்டால் தொடர்ந்து 12 மாதங்கள் வழிபட பார்வையில் குணம் தெரியும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. எண்கண் முருகன் அல்லவா அவன்!
முனைவர் அலர்மேல்ரிஷி |
|
|
More
வரலட்சுமி விரத வழிமுறைகள்
|
|
|
|
|
|
|