Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | சிறப்புப் பார்வை | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | Events Calendar
எழுத்தாளர் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | கவிதைப்பந்தல் | சமயம்
Tamil Unicode / English Search
சிறுகதை
உயிரின் விலை
விடிந்து கொண்டிருக்கிறது
- இரா.முருகன்|மே 2001|
Share:
Click Here Enlargeவிடியப் போகிறது.

''ஆண்டு இரண்டாயிரத்து நூறு ... டிசம்பர் மாதம்... பதினெட்டாம் தேதி... காலை ஐந்து மணி... இருபது நிமிடம்... உங்கள் நாள் இனிய நாளாக இருக்கட்டும்.

கடியாரம் இனிமையான பெண்குரலில் சொல்லி ஓய, விளக்கு மெல்ல ஒளிர்கிறது.

அவன் எழுந்து உட்கார்கிறான்.

ஏ.சி.யின் இதமான குளிரில் அவள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள். ராத்திரி எத்தனை மணிக்குத் திரும்பி வந்தாளோ...

முன்னறைக்கு வந்து வலைக்கருவியை (Network Device) இயக்குகிறான். அது கம்ப்யூட்டர் திரை மட்டும்தான். சம்பிரதாயமான கம்ப்யூட்டர்கள் காலாவதியாகி எத்தனையோ வருடமாகிறது. அங்கங்கே ராட்சத கம்ப்யூட்டர்களில் சேகரித்து வைக்கப்பட்ட தகவலைப் பெறவும், திரும்பத் தரவும் வீடுதோறும், அறைக்கு அறை வலைக் கருவிகள்.

ஒளி விடும் திரையில், 'செய்தி', 'நிகழ்ச்சிகள்', 'நாட்குறிப்பு' என்று வரிசையாகப் பட்டியல்.

செய்திகளைத் தேர்ந்தெடுக்கிறான்.

'உலகச் செய்திகள்', 'உள்ளூர்ச் செய்திகள்', 'விளையாட்டு', 'பொழுது போக்கு' என்று மேலும் தேர்ந்தெடுக்க விஷயங்கள்.

உலகச் செய்திகள் என்ற எழுத்துகளுக்கு நேரே திரையில் விரலை வைத்து அழுத்துகிறான்.

''நிகரகுவாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில்..."

திரையில் படம் விரிய, செய்தி சொல்கிற குரலை இடைமறித்து, திரையின் கீழ்வரிசையில் 'நிகராகுவா' என்று வந்த எழுத்துகளைத் தொட, அந்த நாடு எங்கே இருக்கிறது, ஜனத்தொகை விவரம், தொழில், பொருளாதாரம், அரசியல் என்று எல்லாம் விளக்கமாகச் சொல்லப்படுகிறது.

திரும்ப, நிகராகுவா நிலநடுக்கத்தைத் தொடர, ''கிருஷ்ணன் பேச விரும்புகிறார்" என்று திரையின் மேல்கோடியில் மின்னி மின்னி மறையும் எழுத்துகள்.

கிருஷ்ணன் அலுவலக நண்பன்.

அலுவலகம் என்பது பேருக்குத்தான். அவரவர் வீட்டிலேயே தொலைத் தொடர்பு இணைப்பு மூலம் வேலையை முடித்து அனுப்புகிற வசதி (Virtual Office) வந்து வெகு நாளாகி விட்டது. சம்பளம் வாங்கக் கூட ஆபீஸ் போக வேண்டியதில்லை. மாதம் பிறந்ததும், வங்கிக் கணக்கில் தானே வரவு வைக்கப்பட்டு விடுகிறது.

வலைக்கருவித் திரையில், 'சந்திப்பு' என்ற எழுத்துகளைத் தொட, 'தொலைபேசி எண்' கேட்கப்படுகிறது. கிருஷ்ணனின் எண்ணைத் தர, மேலே வீடியோ காமிராவும், விளக்கும் உயிர்பெற்று இயங்க ஆரம்பிக்கிறது.

கிருஷ்ணன் முகம் திரையில் தெரிகிறது.

''என்னய்யா.. இன்னிக்கு ஆபீஸ் போகலாமா? எல்லாரும் வரேன்னு இருக்காங்க".

மாதம் ஒரு முறையாவது அலுவலகத்தில் உட்கார்ந்து பேசி, முக்கியமான விஷயங்களை முடிவு செய்ய வேண்டும் என்று ஏற்பாடு.

கொஞ்ச நேரம் பேசி முடித்து விட்டுக் கிருஷ்ணன் விடைபெற்று மறைய, செய்திகளுக்குத் திரும்பும்போது, உள்ளே யிருந்து அவள் நடந்து வரும் மெல்லிய சதங்கைச் சத்தம்.

''நேத்து ராத்திரி ஒரு மணியாயிடுத்து... கஷ்டமான டெலிவரி... உழைப்பு, நடமாட்டம்னு எல்லாம் குறைஞ்சு போனதாலே பிரசவம் வரவர ஏகச் சிக்கலா ஆகிட்டு இருக்கு..."

பிரபலமான பெண் மருத்துவர் அவள். முக்கியமாகப் பிரசவ அழைப்புகள். தானியங்கி ரோபாட்டுகள் இருந்தாலும், ஒரு புது உயிரை உலகத்துக்குக் கொண்டு வர, மனித சகாயம்தான் இன்னும் விரும்பப்படுகிறது.

''இரு காப்பி போட்டு எடுத்து வரேன்..."

அவன் எழுந்து போகிறான்.

சமையலறை.

காப்பி தயாரிக்கும் பாத்திரத்தின் குமிழைத் திருக, அதிலிருந்து ஒலிக்கும் குரல்...

''காப்பித்தூள் எடை ஒரு கிலோவுக்குக் குறைந்து போனது..."

சமையலறை மேடைக்குப் பக்கமாக இருந்த வலைக் கருவியை இயக்கி, பல்பொருள் அங்காடியோடு தொடர்பு கொள்கிறான்.

மளிகைப் பகுதி, மெல்ல நகர்கிற படமாகத் திரையில் வருகிறது. பருப்பும், அரிசியும், கோதுமையும், மற்றதும் அடுக்கி வைத்த அலமாரிகள் மெல்ல நகர்ந்து போக, அங்கங்கே படத்தை நிறுத்தி, எந்தப் பொருள் எவ்வளவு வேண்டும் என்பதைத் திரையில் எழுதுகிறான்.

மளிகை முடித்ததும், துணி விற்பனைப் பிரிவுக்கு இணைப்பு ஏற்படுத்தி, ஒவ்வோர் உடையாகப் படம் பார்த்து, நீலக்கோடு போட்ட முழுக்கைச் சட்டையையும், வெள்ளைக் கால் சராயையும், தேர்ந்தெடுக்கிறான். இன்று அலுவலகத்துக்கு அணிந்து கொண்டு போக வேண்டும்.

அப்படியே சூப்பர் மார்க்¦ட்டின் உணவுப் பகுதியில் இட்லி, சாம்பார், பிஸ்ஸா என்று காலையுணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு, ரகசிய சங்கேதமாகத் தன் கிரடிட் கார்ட் எண்ணையும் கொடுத்து முடிக்கிறான்.

இன்னும் அரைமணி நேரத்தில் எல்லாச் சரக்கும் வீடு தேடி வந்துவிடும்.

காப்பிப் பாத்திரத்தையும், கோப்பைகளையும் எடுத்துக் கொண்டு முன்னறைக்குத் திரும்ப, அங்கே வலைப்பின்னல் திரையில் தெரிகிற யாரையோ நாக்கை நீட்டச் சொல்லி, அவள் பரிசோதித்துக் கொண்டிருக்கிறாள்.

நோயாளி உட்கார்ந்து இருக்கும் நாற்காலி ஓரத்தில் தொங்கும் சிறிய நாடாவை அவர் கையில் இணைத்துக் கொள்ள, திரையில் இரத்த அழுத்தமும், உடல் வெப்பமும் தெரிகிறது.

தேவையான மருந்து விவரங்களை திரையில் எழுதிச் சொல்லி, டாக்டர் ·பீஸை அனுப்பத் தோதாகத் தன் வங்கிக் கணக்கு எண்ணையும் தெரிவித்து விட்டு நாற்காலியில் வந்து உட்காருகிறாள் அவள்.

பிள்ளை படுக்கையிலிருந்து எழுந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு வருகிறான்.

''உன்னோட பாடத்தை எல்லாம் காந்தத் தகட்டிலே இறக்கி வச்சுட்டேன். குளிச்சுப் பசியாறிட்டு ஒவ்வொண்ணா முடிச்சுடு... பத்து மணிக்கு வீடியோ கிளாஸ்... ஞாபகம் இருக்கு இல்லியா?".

பிள்ளைக்கு ஒரு கோப்பையில் பாலை நிறைந்தபடி கேட்கிறாள்.

பள்ளிக்கூடம் போவது என்பதும் மாதாந்திரச் சடங்கு போலாகிவிட்டது. தலைநகரிலிருந்து ஆசிரியர் வீடியோ மூலம் பாடம் நடத்துகிறார். தேர்வும் அதேபடிதான். செயல்முறைப் பயிற்சிக்கு மட்டும்தான் பள்ளிக்கூடம்.

''சாயந்திரம் ஆஸ்பத்திரியிலே இருந்து எப்போ வருவே?"

காப்பியைக் குடித்தபடி கேட்கிறான் அவன்.

''என்ன விஷயம்?"

''சாயந்திரம் கலையரங்கத்துலே ஒரு கச்சேரி.. நீயும் வர்றியாடா?"

பையனைப் பார்த்துக் கேட்க, அவசரமாக மறுக்கிறான் பையன்... ''இல்லேப்பா... வெர்ச்சுவல் ரியலிட்டி பூங்காவிலே பனியுகம்னு ஒரு புது விளையாட்டு வந்திருக்கு. நிஜமா இருக்கறதுபோல டைனாசர் துரத்திக்கிட்டு ஒடி வரும்.. மாட்டிக்காம அதைப் பிடிக்கணும்.. செமை திரில்.. பிரண்ட்ஸ் எல்லோரும் சாயந்திரம் போறோம்."

வலைக்கருவியை இயக்கி அவன் அலுவலக வேலையைச் செய்ய ஆரம்பிக்க, பாடம் படிக்கப் பிள்ளை உள்ளே போக, அவள் குளித்து கிளம்பத் தயாராகிறாள்.

மணித்துளிகள் ஓடி மறைய, மாலை மங்கிக் கொண்டு வருகிறது.

நெரிசல் குறைந்த வீதியில், மின் சக்தியில் இயங்கும் வாகனங்கள் ஊர்கின்றன. கலையரங்கில் வண்டியை நிறுத்தி. அவனும் அவளும் உள்ளே போகிறார்கள்.

பாடகர் வந்து அமர்ந்திருக்கிறார். தம்புரா சுருதி சேர்ந்து கொண்டிருக்கிறது.

காரியதரிசி முன்னால் வந்து பேசுகிறார்.

''இன்று மிருதங்கம் வாசிக்க வேண்டிய திரு. ராஜேந்திரன் தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலவில்லை. எனவே இன்றைக்கு.."

ஒரு ரோபோட் மேடையேறி அமர்கிறது.

''நான் நந்தி"
Click Here Enlargeகரகரத்த குரலில் சொல்லியபடி அது மிருதங்கத்தை மடியில் எடுத்து வைத்துக் கொள்ள, பாடகர் முகத்தில் லேசான அசிரத்தை தெரிய, ஹம்ஸத்வனியில் ''வாதாபி கணபதி"யைக் கூப்பிட ஆரம்பிக்கிறார்.

''அந்த நந்தி பிரமாதமா தனியா வர்த்தனம் வாசிச்சுது.. பாட்டு சுமார் தான் .."

திரும்பும் போது அவள் சொல்கிறாள்.

வீடு அமைதியும், இருளுமாகக் கிடக்கிறது. முன்னறையில் வலைக் கருவியில் நூறு வருடத்துக்கு முந்திய சினிமாப் படத்தை ஓட வைத்து விட்டு பிள்ளை உள்ளே தூங்கியிருக்கிறான். சாப்பாட்டுத் தட்டு தரையில், விளையாட்டு சிடி ராம்கள் நாலைந்து பக்கத்தில் உருண்டு கிடக்கின்றன.

ஒழுங்கு படுத்தி வைத்து விட்டுச் சாப்பாடு மேசைக்கு வருகிறாள்.

ஏதும் பேசாமல் சாப்பிடுகிறார்கள்.

கையைக் கழுவிக் கொண்டு உள்ளே போய் பிள்ளைக்குப் போர்வையைச் சரியாகப் போர்த்தி விடுகிறாள். நெற்றியில் முடி ஒதுக்கி, மென்மையாக முத்தம் கொடுத்து, விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையறைக்கு வருகிறாள்.

அங்கே வலைக்கருவியில் செய்து கொண்டிருந்த ஆபீஸ் வேலையை நிறுத்தி, வரிசையாகத் திரையில் தெரியும் பட்டியலில் 'இசை'யைத் தேர்ந்தெடுக்கிறான் அவன்.

சன்னமான வீணை இசை அறையில் இழைந்து பரவ, படுக்கையில் அவளுக்காகக் கையை நீட்டுகிறான்.

''டாக்டர் மேடம்.."

இசை ஒரு விநாடி தேய்ந்து , யாரோ அவசரமாக அழைக்கிற குரல் வலைக் கருவியிலிருந்து ஒலிக்கிறது.

எழுதுவதை நிறுத்திவிட்டு வாசலைப் பார்க்கிறேன்.

அதிகாலைப் பனியில், தெருவை அடைத்துக் கொண்டு சைக்கிளில் போகிற இளைஞர்களின் பேச்சும் சிரிப்புமாக உயர்கிற சத்தம்.

அடுத்த தெரு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்துக்குப் போகிறவர்கள். இருபத்தொன்றாம் நூற்றாண்டை வரவேற்கப் போகிற உற்சாகம் ஒளிவிடும் முகங்கள்.

குரல்கள் தேய்ந்து மறைய, பெரிய கோணிச் சாக்கைக் கட்டித் தூக்கிச் சுமந்தபடி, கந்தல் பாவாடையில் ஒரு பத்துவயதுப் பெண். கூடவே துருதுருவென்று ஓர் ஐந்து வயதுப் பையன்.

''தா பாருடா... சாக்கை இப்படிக் காலால விரிச்சுப் பிடிச்சுக்கிட்டு அள்ளிப் போட்டா வெரசா நெறையக் காயிதம் வாரலாம்".

தொட்டிக்கு வெளியே தெறித்து விழுந்த காகிதத்தைச் சின்னக் கைகள் பொறுக்கி எடுத்துச் சாக்கில் திணிக்கின்றன.

விடிந்து கொண்டிருக்கிறது.

இரா. முருகன்
More

உயிரின் விலை
Share: 




© Copyright 2020 Tamilonline