|
|
உலகமே ஸ்தம்பித்து நின்று, கையாலாகதத்தனத்தோடு கைக்கட்டிக்கொண்டும் வரட்டு மிரட்டலை அனுப்பிக் கொண்டும், சும்மா இருந்துவிட்டது, தாலிபான் அரசாங்கம், பாமியன் புராதான சரித்திர அடிச்சுவடுகளைத் தகர்த்து நிர்மூலமாக்கும் வரை. யூ.என் ஆகட்டும், மற்றபடி வளர்ந்த நாடுகளாகட்டும், இந்த காட்டுமிராண்டித் தர்பாரை வன்மையாகக் தண்டிக்க முன் வராதது மிகவும் ஆச்சரியம்தான். பொருளாதாரத் தடைகள் போன்ற மிரட்டல்களுக்கு, அந்த வட்டார அரசுகள் மிகவும் பழகிவிட்டன. கடந்த பிப்ரவரி 26-ம் தேதியன்று, தாலிபான் தலைவர் முல்லா முகம்மது ஓமர், விதித்த ·பத்வாவின் விளைவாக, பாமியனின் புகழ் பெற்ற 5-ம் நூற்றாண்டு, புத்தர் சிலைகள் முழுவதுமாக கற்குவியல்களாக மாற்றப்பட்டுவிட்டன. பல நாடுகளின், வேண்டுகோள்களை முழுவதுமாக நிராகரித்துவிட்டு, பிடிவாதமாக, தாங்கள் நினைத்த காரியத்தைச் சாதித்துவிட்டார்கள் தாலிபான் அரசாங்கத்தினர்.. இத்தகைய அழிவுகளை, உள்நாட்டு மதவிவாகாரம் என்று, தள்ளிவிடவும் முடியாது. ஜெ.என்.யூ பல்கலைக்கழக பேராசிரியர் வி.எஸ்.மணி சொல்வது போல, யுனெஸ்கோ 1954ம் வருட உடன்படிக்கைகளில் ஒன்று, அங்கத்தினர் நாடு ஒவ்வொன்றும், தன்னுடைய கலாச்சாரச் சின்னங்களைப் பாதுகாக்க உறுதி அளித்திருப்பதைக் குறிக்கிறது. இந்த உடன்படிக்கையில் ஆப்கானிய அரசும் ஒப்பமிட்டிருக்கிறது.அதை மீறும் பட்சத்தில், யூ.என் செக்யூரிட்டி கவுன்ஸில் இந்த மாதிரி நேரங்களில், தங்கள் படை பலத்தை உபயோகிக்கலாம். இத்தகைய விபரீதங்கள் தொடர அநுமதித்தால், உலகில் எந்த கலாச்சாரச் சின்னம்தான் மிஞ்சும்...? ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மதவெறியர்களும், தீவிரவாதிகளும், அவரவர் செயல்களை நியாயப்படுத்திக் கொண்டேபோனால், காந்தி சொன்னது போல், கண்ணுக்குக் கண் என்பது,- உலகையே குருடாக்கிவிடும்.
அயோத்தி விவகாரம் சம்பந்தமாக, பார்லிமெண்டை இயங்கவொட்டாமல் அடித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இப்போது, அடுத்ததாகப் பிடித்துக் கொண்டிருப்பது, 'தெஹல்கா.காம்', ராணுவ-ஊழல் விவகாரத்தை. இதில், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்க அமைச்சர்கள் மற்றும் கட்சித்தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக வந்திருக்கும் செய்திகள், உண்மையோ, இல்லையோ, மிகவும் அதிர்ச்சியைத் தரக்கூடியதாயும், அருவருப்பை உண்டுபண்ணுவதாயும் உள்ளன. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது போல இருக்கிறது,எது ஈயம், எது பித்தளை என்பது உங்கள் ஊகத்துக்கே! பி.ஜே.பி கட்சித்தலைவராக இருந்த பங்காரு லக்ஷ்மணன், அடையாளத் தொகையாக ரூபாய் 1 லட்சம் வாங்கியதைக் கையும் களவுமாக ரகசியமாக வீடியோ டேப் எடுத்து காட்டிவிட்டது டெஹல்கா.காம். முதலில் மறுத்துவிட்டு, பிறகு, ஒத்துக்கொண்ட பங்காரு, கட்சி நிதிக்காகத்தான் வாங்கினேன் என்பதை, எந்த அளவுக்கு நம்பமுடியும்? பதவியை ராஜினாமா செய்துவிட்ட, ராணுவ அமைச்சராயிருந்த ஜார்ஜ் ·பெர்னாண்டஸ¥க்கு, சமதா கட்சியில் தலைவர் ஜெயா ஜெய்த்லி, மிகவும் நெருங்கியவர், இவர் ரூபாய் 2 லட்சம் லஞ்சமாகப் பெற்றதும், டெஹல்கா டேப்பில்! சமதா கட்சியின் பொருளாளரான ஆர்.கே. ஜெயின், ராணுவ வியாபாரத்தின் மூலம், கட்சிக்காக 50 கோடி ரூபாயும், தனக்கு மட்டுமே 10 கோடிக்கு மேலும், சேர்த்திருப்பதாக ஒத்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள், பணத்துக்காக, எதைத்தான் அடமானம் வைக்கமாட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இவர்களாவது அரசியல்வாதிகள்.. இந்த லஞ்ச விவகாரம் பெருமைக்குரிய ராணுவத்தையும், அதன் முக்கிய அதிகாரிகளையும் ஊடுருவி விட்டதை நினக்கும் போது, வேதனைதான் மிஞ்சுகிறது. வெளியிலிருந்து வரும் ஐ.எஸ்.ஐ. போன்ற நாச சக்திகளே தேவையில்லை.. நம் நாட்டிலேயே போதுமான அளவுக்கு இருக்கின்றன. நாட்டின் இறையாண்மையை, உலக அரங்கில், கேலிக் கூத்தாக்கிவிட்டார்கள் |
|
இந்த அவலத்துக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்று, மக்கள் மன்றத்தை மறுபடியும் சந்திக்க வாஜ்பாயி அரசு தயாராக வேண்டும். ஆனால், மக்கள் மன்றத்தின் தீர்ப்பு ஒன்றே, மாசில்லாத கட்சி என்ற ஒன்றை அடையாளம் காட்டுமா..? "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை" என்றுதான் நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியா, மீண்டும் கடினமான நாட்களை எதிர்நோக்கி இருக்கிறது!
அஷோக் சுப்பிரமணியம். கலிபோர்னியா ஏப்ரல் 2001. |
|
|
|
|
|
|
|
|