கந்தர்வ கான ஏழிசை மன்னர் பாகவதர் தமிழ் சினிமாவின் திகில் அன்புடன் அருண்குமார் சங்கவியின் இரண்டாவது ஆட்டம் சிநேகிதியே...விமர்சனம் அய்யோடா... சுஜாதா... 'பெண்கள்' விவகாரம் தலைமுறை தலைமுறையாய் லட்சுமி
|
|
80/100 ஜெமினி கணேசன் சில நினைவுகள்! |
|
- வேணுஜி|ஜனவரி 2001| |
|
|
|
ஜெமினி கணேசனுக்கு வயது எண்பது என்ற விஷயம் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். காரணம், இன்றைக்கும் அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். அதாவது, நடித்துக் கொண்டிருக்கிறார். மனதளவில் இன்றும் 'இளமையாக' அவர் இருப்பதே அதற்கு அடிப்படை.
இளமையாக' என்று கூறுவது 'நவீனமாக' என்ற பொருளில் மட்டுமல்ல... நேரடியான பொருளிலும் அவர் 'இளமையாக'வே எண்ணுபவர் என்பதற்குச் சமீபத்தில் படப்பிடிப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருந்த இளம் நடிகை. எப்போதும் அந்த நடிகையுடனேயே அவரின் அப்பா பாதுகாப்புக்கு வந்து கொண்டிருந்தார். இதைக் கண்ணுற்ற ஜெமினி கணேசன், அருகிலிருந்தவரிடம், "அந்த ஆள் யார்?" என்று கேட்டார். அவரும் அந்த நடிகையின் பெயரைச் சொல்லி "அவருடைய அப்பா" என்றார். "இருக்கட்டுமே, அதற்காக அந்தப் பெண்ணின் பின்னாலேயே திரிய வேண்டுமா?" என்ற ஜெமினி கணேசன் தொடர்ந்து, "என்னை மாதிரி ஒரு குட்டி ஜெமினி கணேசன் யாராவது அந்தப் பெண்ணைத் தள்ளிக் கொண்டு போய்விடுவானோ என்று பயப்படுகிறார் போலிருக்கிறது" என்று 'கமெண்ட்'டும் அடித்தார். இவர் 'காதல் மன்னனாக' இன்றும் அறியப்படுவது இதனால்தான்.
"இவர் முதலில் நடித்தது எப்போது?" என்றால் யாவரும் 'ஒளவையார்' படத்தைச் சொல்லக்கூடும். ஆனால், அவர் தன்னுடைய நடிப்பு ஆரம்பித்தது தன் ஆறாவது வயதில் என்கிறார். நடித்தது படத்தில் அல்ல, வாழ்க்கையில்!
புதுக்கோட்டையில் கல்லூரி முதல்வராக இருந்த ஜெமினி கணேசனின் தாத்தா நாராயணசாமி ஏதாவது ஒரு வேலைக்காக அடிக்கடி வேலைக்காரனை அழைத்துக் கொண்டிருப்பாராம். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆறு வயது கணேஷ் ஒரு முறை தாத்தா கூப்பிட்ட போது, வேலைக்காரன் போலவே துண்டை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டு "சாமி..!" என்று நின்றிருக்கிறான். திரும்பிப் பார்த்த தாத்தா பேரன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறார். நினைவு தெரிந்து அவர் முதலில் வேடமேற்றது அப்போதுதான்.
பிறகு அப்பா ராமசாமி போல் புல்லாங்குழல் வாசிக்க ஆசைப்பட்டு அது வராமல் போகவே புல்லாங்குழலை வாயில் வைத்துக் கொண்டு அதை வாசிப்பது போல 'விசில்' அடித்து நடித்திருக்கிறார்.
அவரது சித்தப்பா மகன் கிருஷ்ணமூர்த்தியுடன் ஒருமுறை வீட்டில் ராம, லஷ்மணனாக வேடம் போட்டு நடிக்கும்போது குச்சியால் செய்த வில்லில் அம்பைப் பொருத்திக் கொண்டு 'மந்தரை'யின் மேல் விடத் தயாராக, அந்த நேரம் பார்த்து அவரது பாட்டி சிவகாமி குறுக்கே வர, "அதோ மந்தரை" என்று கூவியவருக்கு, அதே அம்பால் அடி விழுந்தது அத்தையிடமிருந்து.
ராமகிருஷ்ணா மடம் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தபோது மேடையேறிய 'லீலாசுகர்' நாடகத்தில் அவர்தான் 'கிருஷ்ணன்'. உடம்பெல்லாம் நீலம் தடவிக் கொண்டு நடித்ததில் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தைக் கவர்ந்தார்.
கல்லூரியில் படிக்கும்போது ஒத்தெல்லோ, ஹாம்லெட் போன்ற ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்த அனுபவங்களும் இருக்கின்றன அவருக்கு. |
|
நடிப்பது மட்டுமல்லாமல் நன்றாகப் பாடவும் தெரிந்தவர் ஜெமினி கணேசன் என்பது பலருக்குத் தெரியாது. மிகச் சிறிய வயதிலேயே டி.பி. ராஜலட்சுமி நடித்த 'வள்ளித் திருமணம்' படத்தைப் பார்த்துவிட்டு, அதில் வரும் அறுபத்து நான்கு பாடல்களையும் மனப்பாடம் செய்து பாடினார் அவர். அப்படி அவர் பாடியதைக் கேட்டு வியந்தவர்களுள் புதுக்கோட்டை திவானும் ஒருவர். அதற்குப் பரிசாக ஒரு வெள்ளிக்கோப்பை நிறைய பால் வழங்கினார். பாலைக் குடித்து முடித்தவுடன் அந்த வெள்ளிக் கோப்பையையும் அவருக்குப் பரிசாக வழங்கினார் திவான்.
கல்லூரிப் படிப்பெல்லாம் முடித்து இரண்டு ஆண்டுகள் தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த பின்புதான் ஜெமினி ஸ்டுயோவில் 'காஸ்டிங்' பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். நடிக்க வருபவர்களின் தகவல்கள் மற்றும் முகவரியைப் பெற்றுக் கொண்டு வேண்டும்போது உரியவர்களை அழைத்து நடிக்க வைப்பதுதான் அவர் வேலை. அப்போது, அப்படி அவரிடம் வாய்ப்பு விஷயமாக அடிக்கடி சந்தித்ததன் விளைவாக நண்பரானவர் சந்திரபாபு. ஜெமினி அதிபர் வாசனை நேரடியாகச் சந்தித்தும், இனி வாய்ப்பு கிடைக்காது என்ற அவநம்பிக்கையில் சந்திரபாபு 'காப்பர் சல்பேட்'டைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றபோது அவரைத் தூக்கிக் கொண்டு போய் உரிய நேரத்தில் மருத்துவரிடம் சேர்த்து உயிரைக் காப்பாற்றியவர்களில் ஜெமினி கணேசன் முக்கியமானவர்.
பின்னர் ஜெமினி நிறுவனம் தயாரித்த 'ஒளவையார்' படத்தில் 'தெய்வீகன்' என்ற வேடத்தில் நடித்தார் அவர். அதற்குப் பின் 'சக்ரதாரி' படத்தில் இரண்டு வேடமேற்றார். ஆனால், அது 'Dual Role' அல்ல. அதாவது ஒரு காட்சியில் 'மகாவிஷ்ணு' வேடமேற்பார். இன்னொரு காட்சியில் வேலைக்காரனாகவும் வருவார். இந்தப் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது 'மகாவிஷ்ணு' வேடமேற்ற இவரைக் காமிராவுக்குள்ளிருந்து பார்த்த ஒளிப்பதிவாளர் தம்பு, உணர்ச்சி மேலீட்டில் சொன்ன வார்த்தைகள் -- "இந்த மாதிரி ஒரு அழகான முகத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை".
அந்த அழகுதான் அவருக்கு நிறையக் காதலிகளையும், 'காதல் மன்னன்' என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது. எப்படியிருந்தபோதும் அவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளை அன்புடன் நேசித்தார். அந்த அன்பின் எதிரொலியாகத்தான் அவர் குடும்பத்தினர் அவரது சதாபிஷேகத்தை வரும் முப்பதாம் தேதியன்று சென்னையில் கொண்டாடுகிறார்கள்.
எண்பது வயது, ஒரு நூற்றாண்டுக்கு இருபது வருடங்களே குறைவானது. எதிர் வரப் போகும் அந்த ஆண்டுகளும் ஜெமினி கணேசனைப் பொறுத்தவரை இன்னும் இருபது 'இளமையான' ஆண்டுகளே..!
தொகுப்பு : வேணுஜி |
|
|
More
கந்தர்வ கான ஏழிசை மன்னர் பாகவதர் தமிழ் சினிமாவின் திகில் அன்புடன் அருண்குமார் சங்கவியின் இரண்டாவது ஆட்டம் சிநேகிதியே...விமர்சனம் அய்யோடா... சுஜாதா... 'பெண்கள்' விவகாரம் தலைமுறை தலைமுறையாய் லட்சுமி
|
|
|
|
|
|
|