இவர்களை அரசும் அதன் திட்டங்களும் புறக்கணிக்கிறதா? தெய்வ மச்சான் பதில்கள் மகா மலிவு விலை கார்: கோவையில் சாதனை வாஸ்து ஒர் அறிமுகம் கடம் கார்திக்கின் தகதிமிதகஜூனு
|
|
|
நவம்பர்-26 இந்தியச் சட்ட தினம்
கட்டுரையாளர் வழக்குரைஞர், மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். மனித உரிமைகள் சட்டவியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருபவர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்திய நாட்டின் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுக்குப் பதில் அளிக்க முடியாத நிலையில் இந்திய அரசியல் சாசனம் உள்ளது. இந்திய அரசியல் சட்டத்தைக் குறை சொல்வதும் சரியில்லை. இருப்பினும், நாட்டின் நலன் கருதி இந்திய அரசியல் சாசனத்தைப் பற்றி, ஓர் ஆரோக்கியமான சிந்தனையுடனும் நல்ல விமர்சனத்துடனும் ஆராய்ந்தால் சரியானதே.
இன்றைக்கு - இந்தியாவில் மால்தெஸ் கோட்பாட்டின்படி தேவையை நிறைவு செய்ய முடியாது. மக்கள் தொகைப் பெருக்கம், ஊழல், பொது வாழ்க்கை தூய்மையற்ற நிலை, சாதி மதச் சண்டைகள், வேலையற்ற நிலையில் இளைஞர்கள் விரக்தி, பொருளாதார நெருக்கடிகள், மத்தியில் நிலையற்ற ஆட்சிகள், மத்திய- மாநில அரசுகள் உறவில் சிக்கல், மாநில அரசுகளைக் கலைக்கும் 356-ஆவது பிரிவு பற்றிய தெளிவான விவாதம், தேர்தல் சீர்திருத்தங்கள், ஆளுநர் பதவி குறித்த விவாதம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தெளிவு ஏற்படும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சிந்தனைகளைக் கொண்டு மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விவாதத்திலிருக்கும் 'தேசிய அரசு' இந்தியாவுக்குச் சாத்தியமா? அதே போன்று இந்தியாவுக்கு ஜனாதிபதி ஆட்சி முறை (Presidential System) வேண்டுமா? அல்லது நாடாளுமன்ற ஆட்சி முறை (Parliamentary System, West minister Type) வேண்டுமா? என்று இந்தியாவின் அடிப்படை அமைப்புகளைப் பற்றி தினமும் விவாதங்கள் நடந்து கொண்டு வருகின்றன. இதற்கு விடை அளிக்கும் வகையில், இந்திய அரசியல் சாசனம் அமைய வேண்டும்.
இந்தியா கூட்டாட்சி அமைப்பா (Unitary) அல்லது கூட்டாட்சி கலந்த ஒற்றையாட்சி (Quasi Federal) அமைப்பா என்பதைத் தெளிவாக அரசியல் சாசனத்தில் அறிவிக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் நெகிழாத் தன்மை (Rigidity) அல்லது நெகிழும் தன்மையுடையதா (Flexibility) என்பதையும் தெளிவுபடுத்தவில்லை.
அரசு நெறிமுறைக் கொள்கைகளை (Directive Principles of State Policy) நீதிமன்றம் மூலம் எவ்வாறு நெறிப்படுத்தலாம் என்பதையும் திட்டவட்டமாகக் கூற வேண்டும். மத்திய- மாநில உறவுகளைப் பற்றியும் மாநிலங்களுக்கிடையே உள்ள நதி நீர்ச் சிக்கல்களை விரைவில் தீர்க்கவும் அரசியல் சட்டம் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். மத்திய மாநில உறவுகளை ஆராய, இதுவரை இந்தியாவில் நீதிபதி சர்க்காரியா குழு, தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ராஜமன்னார் குழு போன்ற குழுக்களின் பரிந்துரைகள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
மேற்கு வங்க அரசின் சார்பில் அம் மாநில முதல்வர் மத்திய அரசுக்கு அளித்த மத்திய - மாநில உறவுகள் குறித்த அறிக்கை, ஐதராபாத், ஸ்ரீநகர், கல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் கருணாநிதி, என்.டி. ராமாராவ், ஜோதிபாசு, ஈ.கே. நாயனார், ·பரூக் அப்துல்லா, ராமகிருஷ்ண ஹெக்டே போன்ற முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மத்திய-மாநில உறவுகளைக் குறித்து மாநாட்டில் எடுக்கப்பட்ட விவாதங்களையும் மனதில் கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, நிதி, ரயில்வே, தொலைத் தொடர்பு, வெளியுறவு போன்ற துறைகள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்கலாம் என்ற கருத்துக்கள் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இன்றைக்கு மாநில சுயாட்சிக் கொள்கைக்கு ஆதரவு பெருகிக் கொண்டுள்ளது. காஷ்மீரத்தில் டாக்டர் ·பரூக் அப்துல்லா அவர்களது அரசின் மாநில சுயாட்சித் தீர்மான அறிவிப்பு விவாதத்திலிருக்கிறது. பல்வேறு தேசிய இனங்களையும், மொழிகளையும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ள இந்தியாவிலுள்ள மாநிலங்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்று 'மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி' என்ற கொள்கை நெறிமுறைக்கேற்றவாறு அரசியல் சாசன ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாநில அரசுகளை இந்திய அரசியல் சட்டம் 356-ஆவது பிரிவின்படி மாநிலத்தின் ஆளுநருடைய பரிந்துரையில்லாமல் 'அதர்வைஸ்' என்ற 'சொற்றொடரின்'படி, மாநில அரசுகளை மத்திய அரசு சில சமயங்களில் கலைத்து விடுகிறது. தமிழகத்தில் 1991-இல் தி.மு.க. அரசு இதைப் போன்று ஆளுநருடைய பரிந்துரையில்லாமல் 'அதர்வைஸ்' என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சொற்றொடரின் அடிப்படையில் கலைக்கப்பட்டது.
இதுவரை இந்தியாவில் 50 ஆண்டுகளில் 105 முறை மத்திய அரசால் ஆட்சிக் கலைப்புகள் செய்யப்பட்டன. இதில் பல சமயங்களில் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆட்சிக் கலைப்புகள் நடந்துள்ளன. 'அதர்வைஸ்' என்ற சொல்லுக்குச் சரியான விளக்கம் அரசியல் சாசனத்தில் கூறப்படவில்லை. மத்திய அரசால் நியமிக்கப்படுகின்ற மாநிலக் குழுக்களைப் பற்றியோ, தேசிய வளர்ச்சிக் குழுக்களின் பணிகளைப் பற்றியோ அரசியல் சாசனத்தில் நன்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்தியக் குடியரசுத் தலைவர் அவசர நிலையைப் பிரகடனம் செய்யவும், பிரதம அமைச்சரைக் கூட நீக்கவும், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் அதிகாரமிருந்தாலும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒரு சம்பிரதாயத் தலைவராகயிருக்கிறார். பிரதம அமைச்சருக்கும், இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் உள்ள உறவை அரசியல் சாசனம் தெளிவுபடுத்தவில்லை. இதனால், பண்டித நேருவுக்கும், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்துக்கும் கருத்து வேற்றுமைகள் பல சமயங்களில் ஏற்பட்டன. நீதித் துறைக்கும் நாடாளுமன்றத்திற்கும் சில சமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. திட்டக் கமிஷன் மற்றும் நிதிக் கமிஷன் பற்றிய பணிகள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
1998 தேர்தலில் 170 அரசியல் கட்சிகள் களத்திலிருந்தன. 1967- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் செலவு ரூ.16 கோடியாகயிருந்தது. 1998-இல் 621 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலைமை இந்திய அரசுக்கு ஏற்பட்டது. 5 ஆண்டுகள் நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் எவ்விதத் தடையுமின்றி இயங்க வேண்டும். நார்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து போன்ற நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியைத் தருகின்றன. இந்தியாவில் அடிக்கடி ஆட்சிகள் மாறுவது அரசியல், பொருளாதார வளர்ச்சிக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தாலியில் கடந்த 50 ஆண்டுகளில் 54 அரசுகள் மாறியுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு நடைமுறையில் சட்டமன்றமும் நாடாளுமன்றமும் விவாதங்களைப் பயனுள்ள விதத்தில் நடத்த வேண்டும். நாடாளுமன்ற விவாதத்திற்கு ஒரு நிமிடத்திற்கு ரூ.7,000/-ம்; சட்டமன்றத்தில் 1 மணிக்கு ரூ.12,500-ம் செலவாகிறது. ஆனால், சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கண்ணியமற்ற, பொறுப்பற்ற முறையில் விவாதங்கள் நடைபெறுவது மிகவும் கவலையைத் தருகின்றது.
சிறையிலிருந்து கொண்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ், மான் ஆகியோர் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், சிறையிலுள்ளவர்கள் தேர்தலில் வாக்களிக்க இந்தியாவில் வாய்ப்பில்லை. சிறுபான்மையினர் நலன், வெறும் எழுத்துகளில் இல்லாமல் திட்டங்களில் வர வேண்டும். உண்மையான மதச் சார்பின்மை நாட்டில் நிலவி, அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வழி வகுக்க வேண்டும். |
|
இந்திரஜித் குப்தா குழுவின் பரிந்துரையின்படி தேர்தல் செலவுகளை (State Funding) அரசே ஏற்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பி அழைக்கும் (Recall) உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். கிரிமினல்களும், சட்டத்தை மீறுபவர்களும் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் நடத்துவதைப் பற்றி ஒரு பொது விவாதம் நடத்தப்பட வேண்டும்.
நாட்டின் முக்கியப் பிரச்சினைகளை மக்களிடமிருந்து கருத்தறியும் (Referendum) முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி, உறைவிடம், பணி (Right to Education, Housing, Work) ஆகியவை அடிப்படை உரிமைகளாக்கப்பட வேண்டும். அரசுப் பணிகளை மக்களுக்குத் தெரியக்கூடிய வகையில் வெளிக்காட்டுதல் உரிமை வழங்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கிடையேயான அவையை அரசியல் அதிகாரம் பெற்ற அவையாக மாற்றி அரசியலமைப்பில் அதற்கொரு முக்கியத்துவம் ஏற்படுத்த வேண்டும்.
1978- ஆம் ஆண்டு சட்டங்களின் கருப்பொருள் (The Spirit of Law) என்ற நூல் மூலம், மாபெரும் அரசியல் மேதை மான்க்டெஸ்க்யூ பின்வருமாறு கூறுகிறார் : ''சட்டமியற்றும் அதிகாரமும் நிர்வாக அதிகாரமும் ஒரே மனிதரிடம் சேர்ந்து அளிக்கப்பட்டாலோ அல்லது ஒரே குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாலோ உரிமைகளுக்கிடமில்லாமல் போய்விடும். ஏனெனில் ஓர் அரசு கொடுமையான சட்டங்களை இயற்றித் தானே அவற்றைக் கொடுமையான முறையில் செயல்படுத்தலாம். நீதித்துறை சட்டமியற்றும் துறையோடு இணைக்கப்பட்டு விட்டால், குடிமக்களுடைய வாழ்வும் உரிமைகளும் ஒருதலைபட்சக் கட்டுப்பாட்டுக்கு எளிதில் இலக்காகும். ஏனெனில், நீதிபதிகளே சட்டமியற்றுபவர்களாக விளங்குவர். நீதித்துறைக்கு நிர்வாக அதிகாரம் கொடுக்கப்பட்டாலோ, நீதிபதி வன்முறையோடும் அடக்கு முறையோடும் நடக்கத் தலைப்படுவர்.''
பல தெளிவின்மைகள் (Ambiguity) இன்றைக்கிருக்கின்ற நமது அரசியல் சாசனத்திலிருக்கிறது. ஒரு நாட்டின் உயிர் நாடியாக உள்ள அரசியல் சாசனம் நாட்டை நடத்திச் செல்லும் வழிகாட்டியாக விளங்க வேண்டும். 1967-க்கு முன்பு இந்தியாவின் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியாகக் காங்கிரஸ் கட்சி ஆண்டது. அதன் பின்பு பல்வேறு மாநிலக் கட்சிகள் தோன்றி மாநிலங்களில் ஆட்சிப் பீடங்களைப் பிடித்தன.
இந்திய அரசியல் சாசனம், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட பெரும்பான்மையினரால் வகுக்கப்பட்டது. 9-12-1946- ல் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் 296 உறுப்பினர்களும் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற கருத்திருக்கின்றது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சாரியார் நரேந்திர தேவ் போன்ற சோஷலிஸ்டுகள் அரசியல் நிர்ணய சபையில் பங்கேற்க விரும்பவில்லை. இந்த அரசியல் சாசனத்தை வகுக்கக் கிட்டத்தட்ட 63,93,729 ரூபாய் செலவாகியது. வயது வந்தவர்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இன்றைக்கு உள்ள தேர்தலில் இந்தியாவில் உள்ள அத்தனை குடிமக்களும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பிரதிநிதிகள் போலில்லாமல், ஒரு குறிப்பிட்ட மேட்டுக்குடி, கல்வி கற்றார் என்ற அடிப்படையில் அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, இன்றைக்கு உள்ள இந்திய அரசியல் சாசனம் என்பது அனைத்து இந்திய மக்களின் பிரதிபலிப்பல்ல.
பி.என். ராவ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள அரசியலமைப்புச் சாசனங்களை நன்கறிந்து வந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொகுக்கப்பட டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்குப் பேருதவியாகயிருந்தார்.
மத்திய அரசில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்கேற்கக்கூடிய நிலைமைகள் மாறியுள்ளன. மாநிலங்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். அடிப்படை உரிமைகள், மதச் சார்பின்மை சட்டத்தின் ஆட்சி, கூட்டாட்சி முறை, போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்பைச் சரி செய்ய வேண்டும். 1975-ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் சுவரண்சிங், அன்றைய சட்ட அமைச்சர் எச்.ஆர். கோகலே ஆகியோரின் முயற்சியில் இந்திரா காந்தி ஆட்சியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு 44-ஆவது திருத்தத்தை மாற்றிய கரும்புள்ளி இன்றைக்கும் இந்திய வரலாற்றிலிருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் காரணிகளை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கோலகநாத், கேசவனாத் பாரதி போன்ற வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநர் பதவி குறித்தும் ஹர்கோவிந்த் பந்த் வழக்கில் ஆளுநர் மத்திய அரசின் முகவர் அல்ல என்பதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தில் இன்றுவரை 79-க்கு மேல் சட்டத் திருத்தங்கள் வந்துள்ளன. சுமார் 53 ஆண்டுக்குள்ளேயே இவ்வளவு திருத்தங்கள் வர வேண்டிய காரணமே, இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு சில தெளிவின்மைகள் இருப்பதால்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அமெரிக்க அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 211 ஆண்டுகள் ஆயினும் 27 சட்டத் திருத்தங்களே அந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டுள்ளன.
உலகளவில் பார்த்தால் இந்திய அரசியல் சாசனம்தான் அதிகமான பிரிவுகளும், பக்கங்களும் அடங்கிய அரசியல் சாசனமாகும். இந்திய அரசியல் சாசனம் இங்கிலாந்தில் உள்ள அரசியல் மரபுகளையும் (Customs and Conventions), நாடாளுமன்ற முறையையும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டத்திலிருந்து அடிப்படை உரிமைகளையும, கனடா நாட்டு அரசியல் சாசனத்திலிருந்து கூட்டாட்சி முறையையும் மற்றும் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஐரிஷ் போன்ற நாடுகளிலிருக்கிற அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகளையும் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. 1935-ஆம் ஆண்டின் சட்டத்தின் அடிப்படையைக் கொண்டு நமது அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு அரசியல் சாசனமும் ஒரு புரட்சி அல்லது போராட்டம் ஆகியவற்றிற்குப் பிறகு¡ன் உருவாக்கப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் விடுதலைப் போராட்ட உணர்வுகளினால் 'பன்மையிலும் ஒருமை' என்ற தத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாகக் கட்டுக்கோப்பாகச் சேர்த்து வைக்கின்ற கருவியாக அரசியல் சாசனமிருக்கவில்லை.
மாநில அரசு மீது மாற்றாந்தாய்ப் போக்கு, மூத்த சகோதரன் என்ற போக்கில்லாதவாறு மத்திய அரசின் அணுகுமுறையிருக்க அரசியல் சாசனம் தன்னுடைய பணிகளைச் செய்ய வேண்டும். அரசியல் சாசனம் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் இல்லாதவாறு வழி செய்யும் வகையில் அமைய வேண்டும். இந்தியாவினுடைய பிரச்சினைகள், கலாச்சாரம், இந்திய மக்களின் தேவைகளை மனதில் கொண்டு எல்லா மண் வாசனைகளையும் பிரதிபலிக்குமாறு நமது அரசியல் சாசனம் அமைய வேண்டும். அரசியல் சாசனம் அந்த நாட்டின் பொது மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
இந்தியாவின் திட்டங்களில் கலப்புப் பொருளாதாரம், சோசலிசத் தன்மை என்ற நிலைமை நேரு காலத்தில் பேசப்பட்டு இன்றைக்குத் தாராளமயமாக்கல் என்ற பொருளாதாரக் கொள்கையாக மாறியிருப்பது நம்முடைய அரசியல் பார்வையின் தெளிவின்மையைக் காட்டுகிறது.
''While trying to transplant foreign institution model and concepts in our soil, we tend to forget that they evolved in their original environment over a long period of time, in a different millieu, and came to acquire their present shape and content only at a particular stage of development in their history'' என்று நாடாளுமன்ற முன்னாள் தலைமைச் செயலர் சுபாஷ் காஷ்யப் கூறுகிறார். ''மற்ற நாடுகளின் அரசியல் சாசனப் பிரிவுகளை நாம் பயன்படுத்துவதை விட நமது கலாச்சாரம், நமது தேவைகளை அறிந்து நாம் நமது அரசியல் சாசனத்தை வகுக்க வேண்டும்'' எனவும் அவர் கூறுகிறார்.
'Constitutions are made for men not for constitution.' அரசியல் சட்டம் மனித குலம் வளம் பெறுவதற்காக உருவாக்கப்பட்டதாகும். அது அரசியல் சட்டம் மட்டும் உருவாக்கப்படுவதற்கல்ல'' என்று ஒரு சமயம் கூறினார் அரசியல் அறிஞர் பி.கே. நேரு.
25-11-49-இல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தேவைக்கேற்றவாறு அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிக் கொள்ளலாம் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குப் பயனளிக்கவில்லையெனில் அதை எரிக்கக்கூடிய முதல் நபராக நானிருப்பேன்" என 2-9-53-இல் மாநிலங்களவையில் தன்னுடைய கருத்தைத் தெளிவாக்கியுள்ளார்.
கடந்த 1998-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டுமா என்பது பற்றி ஆய்வு செய்தபோது 68 சதவீதத்தினர் மாற்ற வேண்டுமென கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ள இந்தியாவில் இந்திய ஒருமைப்பாட்டைக் காக்கக்கூடிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று பாரதிய ஜனதா கூட்டணி அரசு 1998-லிருந்து வலியுறுத்தி வருகிறது.
இந்திய விடுதலைப் பொன் விழாவையொட்டி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் மறுமலர்ச்சி பெற, அன்றைய மக்களவைத் தலைவர் சங்மா, இரண்டாவது விடுதலைப் போரை நடத்த அறைகூவல் விடுத்தார். அதற்கேற்ற வகையில் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட வேண்டும். இது குறித்து ஏற்கனவே நீலம் சஞ்சீவ ரெட்டி, பி.கே. நேரு, ஜே.ஆர். டாட்டா, என்.டி. ராமராவ், பல்கிவாலா, சிறந்த சட்ட வல்லுநரான ராவ் போன்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளுக்கு அவ்வப்போது தெளிவுபடுத்துகின்ற உயிருள்ள ஜீவனாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆய்வு செய்து திருத்தப்பட வேண்டும்.
கே.எஸ். ராதாகிருஷ்ணன் |
|
|
More
இவர்களை அரசும் அதன் திட்டங்களும் புறக்கணிக்கிறதா? தெய்வ மச்சான் பதில்கள் மகா மலிவு விலை கார்: கோவையில் சாதனை வாஸ்து ஒர் அறிமுகம் கடம் கார்திக்கின் தகதிமிதகஜூனு
|
|
|
|
|
|
|
|