Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை | சிறுகதை | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | பொது
Tamil Unicode / English Search
பொது
"இலக்கியமும் தெரியாது சினிமாவும் தெரியாது" - இளையராஜா
ஆரம்பப் படிகள்
நுகர்வோர் உரிமைகள் வெட்டும் துண்டும்
தண்ணீர் இனி கானல் நீரா?
மணிக்கட்டி வைணவர்கள்
பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா?
பேரழிவில் உதவாத பேரழகிகள்
தெய்வ மச்சான் பதில்கள்
கிரிக்கெட் ஸ்ரீகாந்த்தின் அதிரடி வணிகம்
"மாற்றம் இல்லையேல் மரணம்"
மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா
போலிகளைக் கண்டு ஏமாறுங்கள்
தெய்வங்களை உருவாக்கும் பூலோக பிரம்மாக்கள்
- கண்ணம்மா|மார்ச் 2001|
Share:
Click Here Enlargeதொன்மையான நாகரிகம் கொண்ட நமது தமிழ்ச் சமுதாயத்தில், பாரம்பரியக் கலை வடிவங்களை சில குறிப்பிட்ட சமூகத்தினரே (சாதி) பாரம்பரியமாக உருவாக்கி வருகின்றனர். இப்படி பரம்பரை பரம்பரையாக நமது கலை வரலாறு தொடர்ந்த போது, அந்தக் கலை வடிவங்களால் ஈர்க்கப்படும் பிற சமூகத்தினரும் அந்தக் கலைப் பயிற்சிகளில் ஈடுபட முயன்று வெற்றியும் பெற்றுள்ளனர். இது ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்தின் உழைப்பு மற்றும் கலைத்திறனின் மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது.

உலோகச் சிற்பக் கலையும் தமிழின் தொன்மையான கலைகளில் ஒன்று. கலைகளின் இருப்பிடமான தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள சுவாமி மலை, உலோகச் சிற்பங்களுக்கு அகில உலக அளவில் சிறப்பும், பேரும் பெற்ற இடம். இங்கு பரம்பரை பரம்பரையாகச் சிலை வடிப்பதில் ஈடுபட்டு வரும் ஸ்தபதிகள் கணிசமான அளவில் உள்ளனர்.

இந்தச் சிற்ப வேலைகளில் தனது சிறு வயதில் இருந்தே மனதைப் பறிகொடுத்த, இதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற இளைஞர் ஸ்தபதிகள் சமூகத்தைச் சேராதவர். இருந்த போதும் தனது ஆர்வத்தினால், தமிழ்நாடு அரசு தொடங்கிய 'பூம்புகார் பயிற்சி நிலையத்தில்' சேர்ந்து உலோகச் சிற்பக் கலையைப் பயின்று, இன்று உலக அளவில் சிறந்த சிற்பக்கலைஞராக உயர்ந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், தனது கலைத்திறன் முழுவதையும் வெளிப்படுத்தும் வகையில் உலக சாதனை செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். நமது சிற்பக் கலைக்கும், ஆடல் கலைக்கும் சிகரமாகத் திகழும் நடராஜர் சிலையை, உலகில் எங்கும் இல்லாத வகையில், 20 அடி உயரத்தில் வடிக்கும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். இந்த முயற்சி வெற்றி பெற்றால் இது கின்னஸ் உலக சாதனையாகவும் மிளிரும்.

உளிகளின் ஓசையிலே உண்டாகும் கலை வடிவம்

காவிரிக் கரையில் அமைந்துள்ள சுவாமிமலை அறுபடை வீடுகளில் ஒன்றாக சிறப்புப் பெற்றது. இந்த ஊரெங்கும் உளிகள் உரசும் நாதம் விண்ணில் கலந்த வண்ணம் உள்ளது. இங்குள்ள பாரம்பரிய ஸ்தபதிகளின் கைகள் கலையின் அத்தனை பாவங்களையும் வெளிப்படுத்து

கின்றன. இதன் எதிரொலி சுவாமிமலை ஊர் தொடக்கத்தில் அமைந்துள்ள திம்மக்குடியில் 'ராஜன் இண்டஸ்ட்ரீஸ்' கலைக்கூடத்தில் கேட்கிறது.

'ராஜன் இண்டஸ்ட்ரீஸ்' என்று தொழிற்சாலையைப் போல அறிவிப்புப் பலகை கூறினாலும் உண்மையில் இது ஒரு கலைத்திறனுடன் அமைந்துள்ள சிற்பக் கலைக்கூடம்தான். நுழைவாயிலைக் கடந்ததும் 7 அடி உயர ரிஷபதேவர் கலைச் சிற்பமும், தொடர்ந்து அதனருகில் அமைந்துள்ள நீருற்றின் மையத்திலமைந்த கிரேக்கச் சிற்பமும் நம்மை வரவேற்கின்றன.

கலைக்கூடமும், கலைப்பட்டறையும் இணைந்து அமைந்துள்ள விசாலமான இடம். 40 க்கும் அதிகமான சிற்பிகளும், கலைஞர்களும் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். பல நிலைகளில் வேலைகள் நிறைவு பெற்றும், நிறைவு பெறாமலும் சிற்பங்கள் நூற்றுக்கணக்கில் சிதறிக் கிடக்கின்றன. வலதுபுறம் அமைந்துள்ள கலைக்கூடத்தில் முழுமை பெற்ற சிற்பங்கள், கலைப்பொருள்கள் விஸ்தீரணமாக அழகுற காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வெண்கலம் மற்றும் பஞ்சலோக சிற்பங்கள் இங்கு வடிக்கப்படுகின்றன. பித்தளை, செம்பு, ஈயம் இணைந்தது வெண்கலம். இவற்றுடன் வெள்ளி, தங்க உலோகங்களும் இணையும் போது பஞ்சலோகம் ஆகிறது.

முன்பெல்லாம் வெண்கலச் சிற்பமானாலும், பஞ்சலோகச் சிற்பமானாலும் கனமான சிலைகள்தான் வடிக்கப்பட்டன. ஆனால், இது அதிக எடையுடன் கூடியதாகவும், விலை அதிகமாக இருப்பதாலும் அதிக எடையின்றி இப்போது உள்கூடாக (Hollow) உள்ள சிற்பங்கள்தான் அதிக வரவேற்பு பெறுகின்றன. இது 'மெழுகு இழப்பு முறை'யில் (Lost Wax Process) உருவாக்கப்படுகிறது.

புகைப்படம் அல்லது ஓவியத்தில் உள்ள மூலத்தை, எந்த அளவில் சிலை வடிக்க வேண்டுமோ, அந்த அளவில் வரைந்து கொள்கிறார்கள். இதை அவுட்லைன் (outline) என்கிறார்கள். பின், பேப்பரில் உள்ளபடி, மெழுகு வடிவத்தை உருவாக்குகிறார்கள். மெழுகையும், குங்கிலியம் என்ற மூலிகை மருந்தையும் கலந்து, நெருப்பில் வாட்டி, வாட்டி, கையாலேயே நெகிழ்த்தி மெழுகு மாடலை உருவாக்குகிறார்கள். குயவர்கள் கூட மண்பாண்டம் செய்யச் சக்கரத்தைச் சுழற்றி, கையால் வடிவமைக்கிறார்கள். ஆனால், ஸ்தபதிகள், சூட்டில் மெழுகை இளக்கி, அந்தச் சூடு ஆறும் முன், களிமண்ணால் பிடிப்பது போலவே, பிடித்து, அழுத்தித் தேவையான வடிவத்தைக் கொண்டு வருகிறார்கள். இப்படி எத்தனை சிலைகள் தேவையோ அத்தனை முறையும் மெழுகை இளக்கி மாடல்களை உருவாக்க வேண்டும்.

களிமண்ணும் கலையாகும் அற்புதம்

சுவாமி மலையை ஒட்டினாற் போலக் காவிரியாறு ஓடுகிறது. அதன் கரைகளில் படியும் ஒரு வகையான வண்டல் கலந்த களிமண்ணே சிலை வடிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் இத்தகைய களிமண் சுவாமிமலை பகுதியில் மட்டும் படிவதால் தான் இங்கு ஸ்தபதிகள் அதிகம் உள்ளனர். இந்த மண்ணின் இயற்கை குணங்களைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஸ்தபதிகள் அறிந்திருந்தனர். இது நமது இயற்கை விஞ்ஞான அறிவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தக் களிமண் கலைவயால் மெழுகு வடிவத்தை மூடி, ஒரே சீராக வெயிலில் காய வைக்கிறார்கள். அதன் பிறகு குறிப்பிட்ட கனம் உள்ள கம்பியால் அந்தக் களிமண் கலவையைச் சுற்றிக் கட்டுகிறார்கள். இதை ஸ்தபதிகள் மோல்டு (Mold) என்கிறார்கள்.

தரையில் சிறிது பள்ளம் தோண்டி, வரட்டியால் ஆன சூளை அமைத்து, அதில் இந்த மோல்டை வைத்துச், சூடேற்றுகிறார்கள். இந்த உஷ்ணத்தால் உள்ளே இருக்கும் மெழுகு உருகி வெளியே வரும் அதே சமயத்தில், மற்றொரு சூளையில் 1,400 டிகிரி வெப்பத்தில் எந்த உலோகத்தில் சிலை செய்ய வேண்டுமோ, அந்த உலோகத்தை உருக்குகிறார்கள். உலோகத்தைப் போட்டு உருக்குவதற்கான கல் போன்ற பாத்திரத்தை மூகை, அல்லது குரிசி அல்லது குகை என்கிறார்கள். இந்தக் குகை எந்த வெப்பத்திலும் உருகாது. இப்படி இளகிய நிலையில் நீர்மமாக உருக்கப்பட்ட உலோகக் குழம்பை, மெழுகு நீங்கி வெற்றிடம் ஏற்பட்ட மோல்டில் ஊற்றி விடுகிறார்கள். அதிகக் கொதி நிலையிலும் இக் குழம்பை ஊற்றக்கூடாது. ஓரளவு ஆற வைத்த பின்பே ஊற்ற வேண்டும். அதிகமான சூட்டில் ஊற்றும்போது களிமண்ணும் உருகி உலோகக் கலவையுடன் ஒன்றாகக் கலந்து விடும் அபாயம் இருக்கிறது.

பின் தக, தகவெனத் தகித்த உலோகக் குழம்பு ஊற்றிய மோல்டு ஆறும் வரை காத்திருக்க வேண்டும். இயற்கைக் காற்றிலேயே இரண்டு நாள்கள் வரைஅதை ஆற வைக்க வேண்டும்.

அதன் பிறகு, கம்பிகளை உடைத்து எடுத்து மண்ணை அகற்றுகிறார்கள். கடைசியில், தேவைப்படும் சிற்பத்தின் உலோக அவுட்லைன் மிஞ்சும். மேல் பகுதியில் தீயில் கருகியதால் ஏற்பட்ட பிசிறுகள் கொஞ்சம் ஒட்டியிருக்கும். இதனை, நுட்பமான அரம் அல்லது கத்தி கொண்டு ஒரு பேப்பர் கனத்துக்கு சீவி சுத்தம் செய்கிறார்கள்.

அதற்கு மேல் அந்தச் சிலையின் மீது, உடைகள், ஆபரணங்கள், அலங்காரங்களைக் கை தேர்ந்த கலைஞர்கள் தங்கள் உளிகளால் கீறிச் சிலைக்கு மேலும் மெருகேற்றுகிறார்கள். சிற்பக் கலையின் சிறப்பு அதனை வடிப்பதின் ஒவ்வொரு பகுதியிலும் மிளிருகிறது.

இவ்வாறு 'ராஜன் இண்டஸ்ட்ரீஸில்' வடிக்கப்பட்ட சிற்பங்கள் இன்று உலகம் முழுவதும் உள்ள பல கலைக்கூடங்களை அலங்கரிக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக இவ்வாறு சிற்பங்களை ஏற்றுமதி செய்து வரும் திம்மக்குடி ராஜனின் கலைக்கூடத்தில் பணியாற்றும் கலைஞர்கள் அனைவருமே ஆர்வத்தால் பயிற்சி பெற்றவர்கள், பரம்பரை ஸ்தபதி வகுப்பைச் சாராதவர்கள் என்பது குறிப்பிடத்தக்க மற்றொரு தகவல்.

இந்தச் சிலைகள் லண்டன், வாஷிங்டன், நியூயார்க், ஜெர்மனி, ஆஸ்திரியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளிலும், நகரங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் புதுதில்லியில் சி.சி.ஐ.சி, பூம்புகார் கலைக்கூடங்கள் , சென்னை விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட் காட்சிக்கூடம் போன்ற இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Click Here Enlargeபிரமிக்க வைக்கும் 'கின்னஸ்' நடராஜர்

வழக்கமான படைப்புகளை விட வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு திம்மக்குடி ராஜனிடம் இருக்கிறது. ஒரு சில ஆண்டுகள் முன்பு 9 1/4 அடி உயர நடராஜர் சிலையை வடித்து, கலை உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சென்னை விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்டின் நுழைவாயிலை இன்றும் அலங்கரிக்கும் இந்தச் சிலையை உருவாக்க இவருக்கு ஓராண்டுக்கும் மேலாக ஆனது.

அதைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக 20 அடி உயர நடராஜர் சிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். சுமார் 9 டன் எடையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த வெண்கலச் சிலை முழுமை பெற இன்னும் ஆறு ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள்.

மெழுகினால் ஆன மோல்டை களிமண் சுதையில் வைத்து, கம்பியினால் கட்டப்பட்ட பிரம்மாண்ட வடிவத்தைக் காணும்போது, உண்மையில் அது நம்மை பயமுறுத்தவே செய்கிறது.

இந்தச் சிலை முழுமை பெற்றால், ஜப்பான் நாட்டில் சுவாமிமலையின் கலைப் பெருமையைப் பறை சாற்றும் என்பதில் சந்தேகமில்லை. இதே போல் இரண்டு வண்ணம் கொண்ட அர்த்த நாரீஸ்வரர் சிற்பமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இதன் சிவன் பகுதி பித்தளையாலும், சக்தியின் பகுதி செம்பாலும் ஒரே மோல்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியம்?

மெழுகு மோல்டை இரு பகுதியாக்கி, இதில் முதல் பகுதியில் உருகுநிலை அதிகம் கொண்ட உலோகத்தை உருக்கி ஊற்றுகிறார்கள். அதன்பிறகு, உருகுநிலை குறைவான உலோகத்தை உருக்கி ஊற்றுகிறார்கள்.

இதே போல் அமைந்த குழலூதும் கிருஷ்ணன் சிற்பமும் நம்மை ஆச்சரியப் பட வைக்கிறது. கிருஷ்ண சிற்பம் நின்றிருக்கும் பீடம் ஒரு வகையான உலோகத்திலும், உடல் இன்னொரு உலோகத்திலும், ஆடை, அணிமணி ஆபரணங்கள் மற்றுமோர் உலோகத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.

எல்லாம் அதிசயம்தான் இங்கு !. ஏனென்றால் இங்கிருப்பவர்கள் பிரம்மனையே படைக்கும் பூலோக பிரம்மாக்கள் !

எழுத்து - படங்கள்: கண்ணம்மா
More

"இலக்கியமும் தெரியாது சினிமாவும் தெரியாது" - இளையராஜா
ஆரம்பப் படிகள்
நுகர்வோர் உரிமைகள் வெட்டும் துண்டும்
தண்ணீர் இனி கானல் நீரா?
மணிக்கட்டி வைணவர்கள்
பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா?
பேரழிவில் உதவாத பேரழகிகள்
தெய்வ மச்சான் பதில்கள்
கிரிக்கெட் ஸ்ரீகாந்த்தின் அதிரடி வணிகம்
"மாற்றம் இல்லையேல் மரணம்"
மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா
போலிகளைக் கண்டு ஏமாறுங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline