|
கீதா பென்னட் பக்கம் |
|
- |பிப்ரவரி 2002| |
|
|
|
"எனக்குக்கூட எழுத வேண்டும் என்று ரொம்பவே ஆசை. நிறைய விஷயம் மனத்துக்குள் ஓடுகிறது. ஆனால் எனக்கு சரியாக கோர்வையாக எழுத வராதே! என்று ஆசையுடன் அதே சமயத்தில் பயத்துடனும் எழுத தயங்குபவர்கள் தான் அதிகம்.
மனதில் ஓடும் சுவாரசியமான விஷயங்களை - கற்பனையை - எழுத இலக்கியம் படித்திருக்க வேண்டுமா? இலக்கணம் தெரிந்திருக்க வேண்டுமா?
இளம் கன்று பயம் அறியாது என்பார்கள். அது மாதிரி நான் எழுத ஆரம்பித்த புதிதில் எந்தவித பயமும் இல்லாமல் மனதுக்குள் எப்போதும் ஒரு துள்ளல் இருந்தது. மற்றவர்களுடன் என் கருத்துக்களை, கற்பனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆவல் மட்டுமே அதிகமாக இருந்தது. ஆனால் எனக்கும் 'ப்' எங்கே போட வேண்டும், எங்கே 'ச்' வரும்.. என்றெல்லாம் சரியாக தெரியாது. ஆனாலும் பயமில்லாமல் எழுத ஆரம்பித்துவிட்டேன். அதற்குக் காரணம் தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள்தான். என்னை மிகவும் ஊக்கப்படுத்தி 'நீ இலக்கணத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே! பத்திரிகைகள் இதற்கென்றே சம்பளம் கொடுத்து இலக்கண பிழைகளைத் திருத்த ஆள் வைத்திருக்கிறோம். அதனால் சொல்ல வந்ததை சுவாரசியமாக சொல்லு. மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்.'' என்றார்கள்.
இந்த வாரத்து ஆனந்தவிகடனைப் புரட்டிப் பாருங்கள். பிழை திருத்தமட்டுமே எத்தனை பேர்இருக்கிறார்கள் என்று புரியும். எந்தவித அச்சுப் பிழையும் இல்லாமல் பக்காவாக பிரசுரமாகும் பத்திரிகைகளில் இன்று முன்னிலையில் விகடன் இருப்பதற்கு அதுதான் காரணம் என்பது என்னுடைய அபிப்ராயம். |
|
மதுரையில் சங்கீத சத்குரு சமாஜத்தில் அப்பா டாக்டர் எஸ். இராமநாதன் வேலை பார்க்கும் போது திரு. ரமணி என்பவர் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். மழவராய சுப்பராம பாகவதர் என்ற இசைக்கலைஞரின் பாட்டை அவர் நேரிடையாக கேட்டவர். சுப்பராம பாகவதர் கற்பனை சுரம் பாடுவதை அப்படியே பாடி காட்டுவார். கொக்கி கொக்கியாக சுரங்கள் அடுக்கடுக்காக வரும். மணிக்கணக்கில் பாடினாலும் கேட்பவருக்கு அலுப்பு தட்டாது. அப்பா அவரை அடிக்கடி பாட சொல்லி கேட்பார். ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் திரு. ரமணி முறையாக சங்கீதம் பயின்றதில்லை. தான் என்ன பாடுகிறோம் என்பது சரியாக தெரியாது. ‘நீங்கள் இப்போது பாடினீர்களே அது என்ன ஸ்வரம் என்ன தாளம்’ என்றால் தெரியாது. கேள்வி ஞானத்திலேயே பாடுபவர். அதனால் அப்பா எதிரில் பாட கூச்சப்படுவார். ''நீங்கள் ராகம், சுரம், தாளம் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். அதெல் லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்... கூச்சப்படாமல் தயங்காமல் பாடுங்கள்'' என்று பத்திரிகை ஆசியர்கள் மாதிரியே அப்பாவும் அவரை ஊக்குவித்துப் பாட வைப்பார். அதனால் அந்த காலத்தில் கோர்வைகளை முன்னதாக மனப்பாடம் பண்ணி வைத்துக் கொள்ளாது நிஜமான கற்பனையில் லகுவாக எப்படி சர்வலகு சுரங்கள் பாடியிருப்பார்கள் என்று கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது.
அத்தோடு உங்கள் எழுத்து அச்சாகி ஒரு பத்திரிகையில் வரும்போது அதை முதன் முதலில் பார்க்கும் போது வருகிற சந்தோஷம் இருக்கிறதே, அதை அனுபவித்தால் மட்டுமே புரியும். புதிதாக எழுத ஆரம்பித்து அச்சேறியவர் களைக் கேட்டுப் பாருங்களேன். ''என் முதல் குழந்தை பிறந்த உடனே அதை முதன் முதலாக தொடுகிற சந்தோஷம். அப்போது தான் மலர்ந்த ரோஜா இதழைத் தடவும் இன்பம்...'' என்றெல்லாம் கற்பனை வளத்துடன் புருடா விடலாம். இருந்தாலும் அதிலும் உண்மை இருக்கிறது. எதற்கும் நீங்களும்தான் அனுபவித்துப் பாருங்களேன்.
அதனால் நண்பர்களே! தென்றல் நம் பத்திரிகை. அமெரிக்காவில் பல வருடங்களாக வசிக்கும் உங்களுக்கு எத்தனையோ அனுபவங்கள் இருந்திருக்கும். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். எழுத்தில் பிழை இருந்தாலும் பரவாயில்லை, விஷயம்தான் முக்கியம். |
|
|
|
|
|
|
|