|
|
தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் முன்னோடி வேதநாயகம்பிள்ளை. இவரது பிரதாப முதலியார் சரித்திரம் தமிழ்ப்புனைகதை வரலாற்றில் ஒரு தீர்ப்பு மையமாக அமைந்தது. இதைவிட பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் மறுமலர்ச்சியில் வேதநாயகம் பிள்ளையின் சிந்தனையும் செயற்பாடும் கவனிப்புக்குரியதாக இருந்துள்ளது. தமிழ்ச் சூழல் ஐரோப்பிய சிந்தனை மரபுகளுடன் தாக்கம் செலுத்தும் காலத்தில், அந்த மரபுகளை உள்வாங்கி தமிழ்ச்சிந்தனையில் புதிய சாளரங்கள் உருவாவதற்கு வேதநாயகம் பிள்ளை பிரக்ஞைபூர்வமாக செயற்பட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள குளத்தூரில் 1826.10.11 இல் சவரிமுத்துப் பிள்ளைக்கும் ஆரோக்கியமேரி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் வேதநாயகம்பிள்ளை. இவர்களது குடும்பம் ஆரம்பத்தில் சைவசமயப் பின்புலத்தில் வளர்ந்த குடும்பம். பின்னர் கத்தோலிக்க கிறித்தவ சமயத்தை தழுவியது. கிராமத் திலேயே தனது ஆரம்பப் பள்ளியில் படிப்பைப் படித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்கு புலமை கொண்டவராகவும் கற்றோர் மட்டத்தில் கவனிப்புக்குரிய இளைஞராகவும் வளர்ந்தார். தமிழில் பாடல்கள் புனையும் அளவுக்கு தமிழில் அதிகம் நாட்டம் உடையவராகவே இருந்தார்.
வேதநாயகம் பிள்ளை தம் இருபத்திரண்டாம் வயதில் 1848 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் ஆவணக்காப்பாளராக(Record Keeper) நியமனம் பெற்றார். தனது பணியில் மிகுந்த உற்சாகத்துடனும் பொறுப்புடனும் செயற்பட்டு வந்தார். 1850 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்திற்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டி இருந்தது. இப்பணிக்கு பலர் விண்ணப்பித் திருந்தனர். அப்பணிக்கு வேதநாயகம் பிள்ளையும் விண்ணப்பம் அனுப்பியிருந்தார். வேதநாயகம்பிள்ளையே தகுதியானவர் எனக் கருதி மொழி பெயர்ப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
ஆங்கில அரசு உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்தவற்கு எழுத்துத்தேர்வு ஒன்றை 1856ல் நடத்தியது. இத்தேர்வில் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதுவரை ஆவணக் காப்பாள ராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் திறமை யாகப் பணியாற்றிய வேதநாயகம்பிள்ளை 1857ல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பதவி பெற்றார். அதுவரை நீதிபதி பதவிக்கு இந்தியர் எவருவே நியமிக்கப்படவில்லை. இவரே தமிழகத்தில் முதல் இந்திய நீதிபதி என்னும் பெருமைக்கு உரியவராகவும் இருந்தார்.
வேதநாயகம்பிள்ளை தரங்கம்பாடியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். பின்னர் 1858ம் ஆண்டு சீர்காழிக்கு மாற்றப்பட்டார். இரண்டு ஆண்டு களுக்குப் பிறகு அண்மைக்காலம் வரை அழைக்கப்பட்ட மயிலாடுதுறைக்கு மாற்றப் பட்டார். தான் பதவியில் இருந்த ஒவ்வொரு இடத்திலும் அந்த மக்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். சமுதாயப் பணியும், இலக்கிய பணியும் அவரை மேன்மேலும் பண்பட்ட மனிதராக வளர்த்தெடுத்தது. ஆங்கிலேய அதிகாரிகளின் பல்வேறு இன்னல்களுக்கும் ஆட்பட்டு அவற்றுக்கெதிராக சளைக்காது போராடி வந்தார். நீதிபதி பதவியிலிருந்து 1872ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
வேதநாயகம்பிள்ளை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்று மயிலாடுதுறையில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் மிக மோசமான பஞ்சம் ஏற்பட்டது. 1876-78 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த மாபெரும் பஞ்சத்தின் காரணமாக பட்டினிசாவுகள் நிகழ்ந்தன. மிக மோசமான நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப் பட்டனர்.
மக்களைத் துன்புறுத்திய பட்டினிக் கொடுமை களிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேதநாயகம் பிள்ள செல்வந்தர்களிடம் உதவி நாடினார். அதைவிட தம் சொந்தச் செலவில் மயிலாடு துறையில் கஞ்சித் தொட்டியைத் தொடங்கி பசித்த மக்களின் துயரை துடைக்க முயற்சி செய்தார்.
1859லேயே 'நீதிநூல்' என்ற இலக்கிய நூலை எழுதி வெளியிட்டிருந்தார். இருப்பினும் ஓய்வுக்குப் பின்னர் முழுநேர இலக்கியப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அக் காலத்தில் தமிழில் உரை இலக்கியம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. வேத நாயகம்பிள்ளையும் உரைநடை இலக்கியத் திலும் தனது கவனத்தைக் குவித்து வந்தார்.
அக்காலகட்டத்தில் இருந்த பெண்களின் முன்னேற்றம் குறித்து அதிகம் அக்கறைப் பட்டார். பெண் கல்வி, பெண் மானம் என்ற இரு சிறு நூல்களை எழுதி வெளியிட்டார். பெண்மதி மாலை கவிதை நூலையும் எழுதி வெளியிட்டார்.
1869ம் ஆண்டில் இந்தக் கவிதை நூலுடன் பெண் கல்வி பற்றிய உரைநடையையும் சேர்த்து ஒரு நூலாக வெளியிட்டார். 1870ம் ஆண்டில் பெண்மானம் என்ற மற்றொரு நூலையும் எழுதி அனைத்தையும் ஒரு சேர இணைத்து பெண்மதி மாலை எனும் பெயரில் வெளியிட்டார்.
''இந்த தேசத்தில் பெண்களை அடிமைகளைப் போலவும் மிருகங்களைப் போலவும் நடத்துவது மிகவும் பரிதவிக்கத் தக்க விஷயமாயிருக்கிறது. ஜாதியும், செல்வமும் எவ்வளவு உயர்வோ, அவ்வளவும் ஸ்திரீகளுடைய நிர்ப்பாக்கியம் பெரிதாயிருக்கின்றது. உயர்ந்த பிராமணர் முதலானவர்கள் ஸ்திரீகளை விலைக்கு வாங்குவது போல் வாங்கி நிஷ்டூரமாக நடத்துகிறார்கள்.''(பெண்மதி மாலை)
பெண்களை அடிமையாக நடத்துவது இந்திய மரபுகளுக்கு எதிரானது என்பதையும் அவர் எடுத்துக் காட்டி, பெண்ணடித்தனத்துக்கு எதிராக உரத்தக்குரலில் வாதாடுகிறார். இந்துக் கடவுளர் தம் மனைவியரைத் தம் உடலின் ஒரு பகுதியில் வைத்திருப்பதையும் இராமாயணம், பாரதம், நைடதம் போன்ற காவியங்களில் பெண்களுக்கு உயர்ந்த இடம் கொடுக்கப் பட்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறார். |
|
மேலும் அக்காலத்தில் பெண்கள் கல்வி கற்பதற்குக்கூட பரவலான எதிர்ப்பு நிலவியது. இதற்கு எதிராகவும் வன்மையாக குரல் கொடுத்து வந்தார். பெண்கள் ஏன் கல்வி கற்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துப் பேசிவந்தார்.
''பெண்கள் சமையல்காரிகள் அல்ல; எங்கள் உடலிலிருந்து உதிக்காமல் எங்கள் முலைப்பால் உண்ணாமல், நீங்கள் வளர்ந்தீர்களா? அடிமை என்று நீங்கள் எங்கள் தலையில் மிதிப்பது நியாயமா? ஐரோப்பிய மாதர்களைக் கண்டு நாங்கள் பொறாமை கொள்ளும்படி செய்து விட்டீர்கள். இந்த நாட்டில் பிறந்து என்ன இலாபத்தைக் கண்டுவிட்டோம்?'' என்று பெண்கள் ஆண்களிடம் மன்றாடுகிறார்கள் (பெண்மதி மாலை) பெண்கல்வியால் சமுதாயத் துக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை எடுத்துப் பேசுகிறார். மேலும் கல்வியறிவில்லாத பெண்களால் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் ஏற்படக்கூடிய தீமைகளையும் விளக்குகிறார். கல்வியறிவில்லாத பெண்கள் தங்கள் குழந்தை களுக்கு கல்வியை போதிக்கமுடியாது. குழந்தை களை நல்வழிப்படுத்த முடியாது என்றெல்லாம் எச்சரிக்கை செய்கின்றனர்.
மேலும் விதவைகளின் மறுவாழ்வு, குழந்தை மணம் பற்றியும் சிந்திக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்கள் மனநிலையில் இருந்து பேசுகிறார். தனது பிரதாப முதலியார் சரித்திரம் எனும் புதினத்தில்கூட விதவைகளின் மறுமணத்தை வலியுறுத்துகிறார். குழந்தை மணத்துக்கு எதிராக சுகுணசுந்தரி புதினத்திலும் குரல் கொடுக்கிறார்.
பெண்களுக்கென தனிப்பள்ளியை 1869ல் மாயூரத்தில் தொடங்கினார். தன் சொந்தச் செலவில் அவர்களுக்குக் கல்வி அளித்தார். 'பெண்கல்வி' வேண்டுமென்ற அவரது முழக்கம் சிந்தனை நடைமுறைசார்ந்த செயற்பாடாகவும் அமைந்திருந்தது.
பெண்கல்வி, விதவை மறுமணம், சதி ஒழிப்பு, குழந்தை மணக் கொடுமை போன்றவற்றை இலக்கியமாக்கி எடுத்துச் சென்றவர். இருப தாம் நூற்றாண்டில் பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த பாரதியார், திருவிக, பாரதிதாசன் போன்றோருக்கு முன்னோடியாக வேதநாயகம் பிள்ளை இருந்துள்ளார்.
ஆங்கிலக் கல்வி பெருமளவில் பரவாத அந்தக் காலத்தில் வேதநாயகம்பிள்ளை வழக்குறிஞர் களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் முறையில் ஆங்கிலத்தில் இருந்த நீதி, நிர்வாகம் தொடர்பான சட்டங்களைத் தமிழில் மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்னும் பெயரில் 1862ல் வெளியிட்டார்.
நீதிமன்றங்களில் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று விரும்பி 1860-61 களில் அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து 1863ல் வெளியிட்டார்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்துக்கான நடைமுறைசார்ந்த செயல் வாதத்தில் நம்பிக்கை கொண்டு செயற் பட்டுள்ளார். இன்று பின்னோக்கி பார்க்கும் போது வேதநாயகம்பிள்ளை பல்வேறு முயற்சி களுக்கு ஓர் முன்னோடியாக இருந்து செயற்பட்டுள்ளார். இந்த செயற்பாடுகளின் வீரியமின்மைதான் தமிழகச் சூழல் எதிர் கொள்ளும் இன்றைய நெருக்கடிகளுக்கான பிரதான காரணமாகும்.
வேதநாயகம்பிள்ளை தான் வாழ்ந்த காலத்தில் 'தமிழின் மறுமலர்ச்சிக்கு' உரிய களங்களில் தீவிரமாக இருந்த செயற்பட்டுள்ளார். நமது முன்னோடிகளில் வேதநாயகம்பிள்ளை பன்முக ஆளுமையுடன் இயங்கி ஓர் தனித்துவமான மனிதராக வாழ்ந்து நமக்கு புதிய வளங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
வேதநாயகம்பிள்ளை பெண்களின் சுய முன்னேற்றம் பெண்களின் தன்னிலைத்துவம் மீது அதிகம் அக்கறை கொண்டவராகவே இருந்துள்ளார். பெண்கள் அடிமைத்தன தப்பெண்ணங்களிலிருந்து விடுபட்டு சுதந்திர ஜீவிகளாக செயற்பட வேண்டும் என்பதை தனது எழுத்தில் சாத்தியமாக்கியவர். பெண்களின் சுதந்திரத்துக்கு எதிராக தொழிற்படும் போக்குகளுக்கு எதிராக போராடியவர். தமிழ்ச்சூழலில் பெண்களின் முன்னேற்றத் துக்கும் சீர்திருத்தத்துக்கும் பாடுபட்டவர் சிந்தித்தவர் என்ற ரீதியில் பெண்ணிய முன்னோடி என்ற தகுதிப்பாட்டுக்கு மிகப் பொருத்தமானவராகவே வேதநயாகம் பிள்ளை இருந்துள்ளார்.
மதுசூதனன் |
|
|
|
|
|
|
|