வாராயோ வசந்தமே!! தமிழ் இணைய மாநாடு 2002 சான் ·பிரான்சிஸ்கோவுக்கு வருகிறது! நந்தலாலா மிஷன் சிறுவர்கள் விழா! பாரதி கலாலயாவின் ஒரு நாள் நிகழ்ச்சி! ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனியின் புதிய ஸ்டூடியோ
|
|
லலிதகான வித்யாலயா 10 ஆவது ஆண்டு விழா |
|
- |ஏப்ரல் 2002| |
|
|
|
பிப்ரவரி 23-ஆம் தேதி மாலை 4.00 மணியிலிருந்து சுமார் 6.30 மணி வரை சான்பிரான்ஸிஸ்கோ பே ஏரியாவில், சுமார் 500 பெரியோர்களும், சிறியோர்களும் இனிய இசை வெள்ளத்தில் மூழ்கி இருந்தனர். எங்ககே என்கிறீர்களா? ஓலோனே காலேஜ், காரன் ஸ்மித் சென்டரில் ஸ்ரீ லலிதா கான வித்யாலாயாவின் 10-ஆவது ஆண்டு விழாவில் திருமதி லதா ஸ்ரீராமின் மேற்பார்வையில் அவரும் அவருடைய சுமார் 100 மாணவ மாணவியரும் பொழிந்த காண மழையில்தான் !
திருமதி லதாவின் திருப்புகழ் பாடலில் மயங்கி அவருடைய முதல் மாணவியாக சேர்ந்து இந்த இசை பள்ளியின் துவக்கத்திற்கு காரணமா யிருந்த பெர்க்கிலி பேராசிரியை திருமதி கெளசல்யா ஹார்ட்டின் துவக்க உரையுடன் இந்த நிகழ்ச்சி இனிதே ஆரம்பித்தது.
வடஅமெரிக்க நாட்டில் நம் மண்ணின் கலாசாரத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் பத்து வருடங்களாக பயிற்றுவித்து வந்திருக் கிறார் என்பது ஆச்சர்யப் படவேண்டிய விஷயம் தான். அந்தப் பணியின் பலனை அடுத்து வரப்போகும் நிகழ்ச்சிகளில் பார்க்க அனைவரும் ஆவலாய் இருந்தனர்.
''குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார்''. ஆனால் இங்கோ, மழலைச் சொற்களே குழலாகவும் யாழாகவும் இனிய கர்நாடக இசை படிப்பதை, படைப்பதைப் பார்க்கும் போது நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை.! கண்களில் துறுதுறுப்பு, கைகளில் தாளம், வாயசைவில் ராகம் ! ஹம்சத்வனி ராகத்தில் நிகழ்ச்சியின் முதல் பாடலான விநாயகர் நாமாவளியையும், துர்காலக்ஷ்மி சரஸ்வதியின் பெயரில் இரு இனிமையான பஜனைப் பாடல்களையும் பாடி, அச்சிறு பிஞ்சு விரல்கள் ஆதிதாளத்தை தன் தலை உயரத்திற்கு உயர்த்திப்போட்டு, எதிரே அமர்ந்து இருக்கும் தன் ஆசிரியையை அவ்வப்போது பார்த்து, மேடைய பயமின்றி பாடினார்கள். இதில் நாலு வயது முதல் ஆறேழு வயது வரையுள்ள சுமார் 50 மழலைகள் கலந்து கொண்டனர்.
இசை கற்றுக்கொள்ள வயது அடிப்படை இல்லை என்பதை இச்சிறுவர் சிறுமியர் நிரூபித்தனரா? இல்லை யார் வேண்டுமானாலும் இசை கற்றுக் கொள்ளலாம் என்பதை அவர்கள் குரு லதா அவர்கள் நிரூபித்தாரா?
இது சிறுவர் சோலையோ என்று வியந்த பொழுதில், மோகன ராகத்தில் ''ஒம் காத்யா யனாய வித்மஹே'' என்று துவங்கிய ஸ்லோகத் தை, லதா அவர்களின் தந்தை திரு. ர.ராஜ கோபாலன் இசையமைப்பில் மூன்று பெண்கள் பாட, அந்த அரங்கமே அமைதியானது. நவவித பக்தி மார்க்கங்களில், கீர்த்தனை மார்க்கத்தில் இறைவனை அடைவதற்கு எடுத்துக்காட்டு போலும் இப்பாடல் !
அடுத்து கல்யாணி ராகத்தில் தர்மசம்வர்தணி வர்ணம் என்று அறிவித்தனர். அப்போதுதான் புரிந்தது இந்த நிகழ்ச்சிக்கு 'மகாதேவி' என்று பெரியட்டதன் முழு அர்த்தமும். பாட்டு மட்டும் அல்ல, பாட்டின் ராகத்திலும் தேவியின் பெயரே! அதற்கு மேலும் பல சாட்சிகள். மதுரை வாழ் மீனாட்சியை முறையிட்டு 'தேவி நீயே துணை' என்ற கீரவாணி ராகத்தில் அமைந்த பாபநாசம் சிவன் பாடல்; தவிர ''மாமவது ஸ்ரீ சரஸ்வதி''யும், ''கஞ்சதளாய தாக்ஷி''யும், ''பாரசக்தி''யும் மேடை வீற்றிருந்த ஹிந்தோளம், கமலாமனோஹரி, பாகேஸ்ரீ ஆகிய ராக மலர்களில் அமைந்த பாடல்கள். பாட்டின் ஆரம்பம் எது, ராகத்தின் பெயரெது என்று ஒரு நொடி யோசிக்க வைக்கும் அளவிற்கு ராகங்களையும், அதில் உள்ள பாடல்களையும் ''மகாதேவி'' நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்தது திருமதி லதாவின் சங்கிதத் திறமைக்கு ஓர் அத்தாட்சியே ஆகும்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய பாடலாய் விளங் கியது லதா ஸ்ரீராம் அவர்களும் அவருடைய மகனும் மகளும் பாடிய ''நின்னே நம்மி'' என்ற ஷ்யாமா சாஸ்திரியின் தோடி ராகப் பாடல். பதினொரு வயது, பதினான்கு வயது சிறுவனும் சிறுமியுமா இத்துணை நயத்தோடும், லயத் தோடும் கல்பனா ஸ்வரமிட்டுப் பாடுவது! கல்பனா ஸ்வரத்தில், வயலினும் வீணையும்கூட சேர்ந்து தோடியின் அழகை மேலும் அதிகரித்தனர். இப்பாட்டின் இறுதியில், திரு ரமேஷ் ஸ்ரீநிவாசன் மற்றும், திரு பி.வி. ஸ்ரீதரின் தனியா வர்த்தனம் அபாரம். பார்வையே வார்த்தையா, கண்கள் பேசியபடி, இருவர் கைகளும் தாளத்திற்கு ஏற்ப எழுப்பிய மிருதங்கம் மற்றும் தபலாவின் ஒசை, வாயால் பேசும் மொழியை விடச் சிறந்த இசை மொழியோ திரு ஸ்ரீநிவாஸ் பல்லக்கின் வயலினும் திரு ராஜா சிவமணியின் வீணையும், இந்நிகழ்ச்சிக்கு உயிர் நாடியாக இருந்தன. ஒவ்வொரு பாட்டின் ஆரம்பித்திலும், இடைவெளிகளிலும் வயலின், வீணையின் நாதம் தனித்துக்கேட்க, பார்வையாளர்கள் கைத்தட்டி அவர்களையும் உற்சாகப்படுத்த தவறவில்லை அடுத்து வந்த பத்து நிமிட இடைவெளியில், தோடியே மனத்தை தோண்டிக்கொண்டு இருந்தாள்.
இடைவேளைக்குப் பின் முதல் பாடல், பாரதியார் பாடல். செப்பு மொழி பதினெட்டிற் கும் மேல் பேசப்படும் இந்நாட்டில் நம் மண்ணின் பெருமையை பூமாதேவியின் புகழை ''தொண்டு நிகழ்ந்தது'' என்னும் பாடல் வரிகளில் மாண்டி ராகத்தில் கேட்டோம். தேவிக்குத்தான் எத்தனை பெயர்கள். எத்தனை பாடல்கள்... |
|
''சரஸ்வதி சாராதாமை'', ''அம்ப வந்தனம்'', ''ஹிமாத்ரி சுதே'', ''சுதா மாதுர்ய பாஷினி'', ''மாமவசதா ஜனனீ'', மஹிஷாசுரசூதனி'', ''சங்கீத சாம்ராஜய சஞ்சாரினி'' என ஆரம்ப மாகும் இப்பாடல்களை சுத்த சாரங்க், மால்கெளன்ல் (ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஹிந்தோள ராகத்தின் மற்றுமொரு பெயர்) கல்யாணி, வந்தனதாரினி, மோகனம் ஆகிய ராகங்களில் முறையே பாடினர். இந்நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்கள் யாவும் பல காலகட்டங் களில் பலரால் பாடப்பட்டவை. முத்துஸ்வாமி தீஷிதர், ஷ்யாமா சாஸ்திரிகள், சுவாதி திருநாள், கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள், பாபநாசம் சிவன், மைசூர் வாசுதேவாச்சாரியார், கிருஷ்ண தாசர், குன்னகுடி வெங்கடராம ஐயர் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சில பாடல்களுக்கு திருமதி லதாவின் தந்தையார் திரு ர. ராஜகோபாலன் இசை அமைத்திருக் கிறார்.
அடுத்து, தேவியின் அனைத்துப் பெயர்களும் ஒரே பாட்டில் அமைந்த ஆதி சங்கரரின் அம்பாஷ்டகம் ராகமாலிகையில் பாடப்பட்டது. தேவியின் நாமங்களைப் பாடி மட்டும் நம்மை இவர்கள் மகிழ்விக்கவில்லை. குழந்தையின் வடிவில் இறைவனை காட்டியும்தான் ! பிரம்மா -சரஸ்வதியாக, விஷ்ணு - லக்ஷ்மியாக, சிவன்-பார்வதியாக, துர்கையாக, காமாட்சி, மீனாட்சியாக வேடமிட்ட சிறுவர் சிறுமியர், அவ்வப்போது ஒவ்வொரு பாட்டில் ஆரம்பத் திலும் மேடையை வலம் வந்தனர். தவிர, இடையிடையே இந்து மத வழிபாட்டைப் பற்றியும், சக்தி வழிபாட்டைப் பற்றியும் தேவி யின் கதைகளையும், மகான்களின் வாழ்க்கை வரலாறுகளையும், சிறுவர்களே வாசித்து நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றனர். இதில் வியப்பென்னவென்றால், அவர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியில் பாடிப் பங்கெடுத்தவர் கள்தானாம்.
அம்மழலைகளின் கவனத்தை கானத்தில் ஈர்த்த லதா அவர்கள் செய்த திட்டங்களில் இதுவும் ஒன்றோ?
மற்றுமொரு வியக்கத்தக்க காட்சி. அனைத்து மாணவ மாணவியரும் ஒரே சீராக உடுத்தியி ருந்த நம் தமிழ்நாட்டு ஆடைகள்தான்! மழலை கள் பச்சை வெள்ளை கலந்த பாவாடை சட்டையும், சிறுவர்கள் சிகப்பு அங்கியும், சிறுமியர் பாவாடை தாவணியும், மங்கையர் புடவையும் இவை அனைத்தும் பச்சை, வெள்ளை, சிகப்பு நிறங்களுடன் மேடையில் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் சரஸ்வதியா இல்லை தேசியக் கொடியா என்ற எண்ணம் தோன்றியது.
அருணகிரிநாதரின் திருப்புகழ், முருகனைப் பற்றி எழுதப்பட்ட பாடல்கள் என்பதை அனைவரும் அறிவோம். அதில் தேவியின் துதியை கண்டுபிடிப்பது திருப்புகழில் தேர்ந்த லதாவிற்குக் கடினமா? ''கொம்பனையார் காது'' என்று அத்திருப்புகழை கரகரப்ப்ரியா ராகத்தில் மங்கையர் சிலர் பாடினர். நிகழ்ச்சி முடிய இருக்கும் இத்தருவாயில், கமனாஷ்ரமா ராகத்தில் தேவியின் நாமங்கள் நிறைந்த தில்லானாவை அடுத்து பாடினர். மிருதங்கமும், தபலாவும் தில்லானாவின் கம்பீரத்தை மேலும் உயர்த்தியது.
இப்பள்ளியின் அனைத்து மாணவ மாணவி யரும் பங்கெடுத்த நிகழ்ச்சியின் கடைசிப் பாடல், ''மைத்ரீம் பஜத்த'' என்று தொடங்கிய காஞ்சி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதிசுவாமிகள் அருளிய பாடல். 1962ல் பெரியவர் அருளிய இப் பாடலை இன்று பாடியது, வன்முறையும் அழிவும் நிறைந்த இன்றைய காலகட்டத்திற்கு உகந்ததாகவே தோன்றியது.
''அஸமோ ஹத் கமைய, தமஹோம ஐயோதிர் கமைய ம்ருத்யோன்மா அம்ருதம் கமைய'' -
''இறைவா பொய்மையிலிருந்து உண்மைக்கு இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு இறப்பிலி ருந்து இறவாமைக்கு எங்களை அழைத்துச் செல்''
சாந்தி ! சாந்தி ! சாந்தி!
என்ற ஸ்லோகத்தோடு லலித கான வித்யாலையாவின் ஆண்டு விழா அமைதியாக இனிதே முடிந்தது. |
|
|
More
வாராயோ வசந்தமே!! தமிழ் இணைய மாநாடு 2002 சான் ·பிரான்சிஸ்கோவுக்கு வருகிறது! நந்தலாலா மிஷன் சிறுவர்கள் விழா! பாரதி கலாலயாவின் ஒரு நாள் நிகழ்ச்சி! ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனியின் புதிய ஸ்டூடியோ
|
|
|
|
|
|
|
|