Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | பயணம் | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | சமயம் | Events Calendar
Tamil Unicode / English Search
சிறுகதை
ஒரு நாளாவது
பழக்கம்
- பாகிரதி சேஷப்பன்|மார்ச் 2002|
Share:
மாலா மூன்றாவது முறையாக தொலை காட்சியில் அலைவரிசையை மாற்றி னாள். "ஒன்றுமே சரியாகயில்லை" சலிப்பாக வந்தது. காலையிலிருந்து துணி துவைத்தாகி விட்டது. செய்தித்தாள் படித்தாகி விட்டது. வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் வருகிற தமிழ் வானொலி கேட்டாகி விட்டது. எங்கேயோ தொலை தூரத்தில் உள்ள தோழியை தொலைபேசியில் கூப்பிட்டு ஒரு மணி நேரம் அறுத்தாகி விட்டது. இரவு உணவு தயாரித்தாகி விட்டது. அப்படியும் நேரம் போகவில்லை.

மாலா மணியைப் பார்த்தாள். மணி மாலை நான்கு. சந்திரன் வீட்டுக்கு வர குறைந்தது இரவு எட்டு மணியாகும். அது வரை நேரத்தை தொலைத்தாக வேண்டும்.

மாலா கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் நடுவில் மாலாவின் வீடு. ஒரு பக்கத்துக்கு ஆறு வீடுகள் வீதம் ஒரு மாடியில் பன்னிரண்டு வீடுகள் இருந்தன. இதுவே சென்னையாக இருந்தால்... திடீரென்று ஊர் நினைவு வந்தது. எப்படி, பேச்சும் கும்மாளமும், ஒலி பெருக்கியும், சைக்கிள் மணி சத்தமும், பேருந்து வண்டியின் சங்கொலியும்...

நம்ம ஊர் வண்டிகளின் ஒலிகளைக் கூட இழப்பது கஷ்டமாக இருக்கிறது என்று நினைத்த மாத்திரத்தில் சிரிப்பு வந்தது. வீட்டுக்கு வெளியில் வந்து விட்டதால் அது ஒரு புன்னகையாக மலர்ந்தது.

மாலா திருமணமாகி அமெரிக்காவிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் கூட இந்த மாடியில் குடியிருப்பவர்கள் எல்லோரை யும் அவளுக்குத் தெரியாது. எப்போது பார்த்தாலும் ஒரே நிசப்தம். குளிர்சாதனப் பெட்டி ஓடும் சப்தம் கூட்ஸ் இரயில் ஓடும் இறைச்சல் போல கேட்கும் நிசப்தம். புதுக் கணவனைப் போல் சந்திரன் சீக்கிரம் வீட்டுக்கு வந்து அவளை மாலையில் சினிமா, கடை வீதி என்று எங்கும் அழைத்துப் போவதில்லை. கேட்டால், "இது, நம்ம ஊர் இல்லை. இங்கு வேலைக் கண்டிப்பு அதிகம். ஐந்து மணி அடித்து விட்டது என்று வேலையை முடிக்காமல் கிளம்பினால், நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவான்." என்கிறான்.

"இந்த கட்டிடத்தில் நாம் மட்டுந்தான் இருக்கமா இங்க ஆள் நடமாட்டமே காணோமே!" மாலா ஒரு நாள் சந்திரனிடம் கேட்டாள்.

"இடம் காலியில்லைனு எழுதிப் போட்டி ருக்கான். எல்லா வீட்டிலயும் ஆள் இருக்காங்க. நமக்குத் தான் யாரையும் தெரியல"

பன்னிரண்டு குடும்பங்கள் குடியிருக்கிற மாடியில் நிசப்தமா? மாலாவால் நம்ப முடியவில்லை. ஆனால் தான் கடந்த மூன்று மாதங்களில் தெரிந்து கொண்ட உண்மை. இப்போது பரவாயில்லை. நான்கு வீடுகளில் யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தாகி விட்டது.

மாலா படிக்கட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். கடைசி வீட்டில் குடியிருக்கும் நடுத்தர வயதுப் பெண் எதிரெ வந்தாள். "ஹை" என்று ஒரு புன்னகை புரிந்துவிட்டு கடந்து போய்விட்டாள். "நின்று இரண்டு வார்த்தைகள் பேசினால்தான் என்ன? என்ன மனிதர்களோ!"

மாலா கட்டிடத்தை விட்டு வெளியே வந்தாள். குழந்தையை வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு இன்னொரு பெண் வந்தாள். குழந்தை கிலுகிலுப்பையை ஆட்டிக் கொண்டே இவளைப் பார்த்து சிரித்தது. அழகான, மெழுகு பொம்மைபோல் 'பளிச்' சென்று இருந்தது. குழந்தையைப் பக்கத்தில் போய் கொஞ்ச வேண்டும்போல் ஆசையாக இருந்தது. ஆனால் தயக்கம் தடுத்தது.

"இந்த ஊர்ல தெரியாத குழந்தையை யெல்லாம் நம்ம ஊரு மாதிரி நெனச்சுகிட்டு தூக்கிக் கொஞ்சிடாதே. நீ ஏதோ கடத்தல் பண்றேன்னு நெனச்சுகிட்டு போலீசுலே புடிச்சு குடுத்துடுவாங்க." சந்திரன் என்றோ ஒருநாள் எச்சரித்தது நினைவுக்கு வந்தது.
மாலா பூங்காவை அடைந்தாள். பல இளம்பெண்கள் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். நிறையப் பேர் பந்து விளையாடுவதும், ஓடுவதுமாக ஏதேதோ செய்து கொண்டிருந்தார்கள். நடந்து சென்றவர்கள் எல்லோரும் அநேகமாக காதிலே பாட்டுப் பாடும் கருவியை மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டவாறே சென்று கொண்டிருந் தார்கள். இன்னும் பல விதமான மனிதர்களையும் புன்னகைகளையும் பார்த்து விட்டு ஆனால் பேசுவதற்கு யாரும் கிடைக்காமல் மாலா வீடு திரும்பினாள். இந்த மக்களுக்கு நடுவில் எப்படிப் பழகி குடும்பம் செய்யப்போகிறோமோ என்று அவள் மனம் திகைத்தது.

மாலா மீண்டும் தொலைக்காட்சிமுன்னே சென்று அமர்ந்தாள். இப்போதாவது ஏதாவது உருப்படியாக வந்தால் பார்க்கலாம்.

திடீரென்று அபாய மணியின் ஒலி பெரிதாகக் கேட்டது. மாலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியே எழுந்து செல்லலாமா, உள்ளேயே இருக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டி ருந்தாள். சந்திரனுக்கு போன் செய்யலாம் என்று போனை எடுத்து எண்ணை அழுத்தினாள். ஆனால் பதில்நாடாவின் குரல்தான் வந்தது. அவளுக்கு பயமாக இருந்தது. அட கடவுளே, இப்போது என்ன செய்வது? இங்கு யாரையும் தெரியாதே" என்று மலைத்தாள். அபாய மணியின் ஒலி அதிகமாகிக்கொண்டே வந்தது. வாசலில் கதவு தட்டும் ஓசை கேட்டது. பயந்துகொண்டே மெதுவாகக் கதவைத் திறந்தாள்.

வாசலில் எதிர்வீட்டு அமெரிக்கப் பையன் நின்றுகொண்டு இருந்தான். அவன் அவசரமாக "நெருப்பு அபாயமமணி ஒலிக்கிறது. கட்டிடத்திற்குள் யாரும் இருக்கவேண்டாம் என்று தீயணைப்புப் படையினர் அறிவித்து விட்டார்கள். நீங்கள் என் அன்னையோடு சேர்ந்து பாதுகாப்பான இடத்துக்கு சென்று விடுங்கள். எல்லாம் சரியான பிறகு திரும்பி வரலாம்" என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு படிக்கட்டைவிட்டு வேகமாக இறங்கி நடக்க ஆரம்பித்தான். மாலா சிறிது தயங்கினாள்.

''தயங்காதே. சீக்கிரம் வா" என்று அவனுடைய அன்னை அழைத்தாள்.

இந்த ஒரு நிமிடத்தில் அத்தனை மாதங்கள் அந்தக் குடும்பத்தோடு பழகியதே இல்லை என்ற உணர்வேயில்லாமல் எல்லோரும் அந்த சூழ்நிலையைப்பற்றிப் பேசியவாறு, ஒருவருக் கொருவர் உதவிசெய்த வண்ணம் பாதுகாப்பை நோக்கிச் சென்றனர்.

பாகீரதி செஷப்பன்
More

ஒரு நாளாவது
Share: 
© Copyright 2020 Tamilonline