பாத்ரூம் பாத்ரூம்
|
|
|
'என் தங்கச்சிய நாய் கடிச்சிடுத்துப்பா' என்று நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் ஒரு திரைப்படத்தில் புலம்புவார். இந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது எனக்கு என் நாத்தனாருக்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வரும்.
என் கணவர் திருநெல்வேலியிலிருந்து மும்பைக்கு வந்து அழகு சாதனங்கள் விற்பனை செய்யும் அமெரிக்கக் கம்பெனியில் மானேஜராக சேர்ந்தார். பல வருட சேவைக்கு பின் கம்பெனி சென்னைக்கு மாற்றலானது. தேனாம்பேட்டை அருகே ஒரு பெரிய வீடு வாங்கி செட்டிலானோம்.
அப்பொழுது எங்கள் பொமெரேனியன் நாய் பதினோரு குட்டிகள் போட்டிருந்தது. குட்டிகள் வீடெங்கும் சுதந்திரமாய்த் திரியும். குழந்தைகள் அதனுடன் விளையாடுவார்கள். வீட்டில் விருந்தாளிகள் வந்து தங்கி இருந்தார்கள்.
எங்களைப் பார்க்க என் நாத்தனார் மும்பையிலிருந்து வந்தார். வந்த களைப்பு தீர அறையில் தூங்கிய என் நாத்தனார், எழுந்தவுடன் எதையோ தேடலானாள். கையால் வாயைப் பொத்திக் கொண்டு இங்குமங்கும் தேடினார்.
'என்ன தேடுகிறீர்கள்' என்று கேட்டதற்கு அவர் பதிலே சொல்ல வில்லை.
'அத்தை கட்டில்கிட்ட நாய்க்குட்டி இருந்துது.. ஒரு வேளை அத்தையை நாய் கடிச்சிடுத்தோ' என்று குழந்தைகள் சந்தேகத்துடன் சொல்ல, கலவரப்பட்டு டாக்டருக்கு போன் செய்தோம்.
டாக்டர் உடனே வந்தார்.
வீட்டிலிருந்தவர்கள் வந்து சூழ்ந்து கொண்டார்கள்.
'எங்க கடிச்சிது' என்று டாக்டர் கேட்க, அத்தை கையால் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னது புரியவில்லை.
இன்னொரு கையை மூடித்திறந்து வாயைச் சுட்டிக் காட்டி ஏதோ சாடை காட்டினார்.
"வெடுக் வெடுக்னு வாயில கடிச்சிது சொல்றாங்களோ? என்ன கடிச்சிருக்கலாம்?" என்றார் ஒருவர்.
'நாய்க்குட்டியைத் தூக்கிக் கொஞ்சியிருப் பாங்க.. நாய் கடிச்சிருக்கும் போல. பார்த்து உடனே ஊசி போடுங்க டாக்டர்' என்று என் கணவர் பதறினார்.
'தொப்பிளச் சுத்தி பதினாறு ஊசி போடணும்பாங்களே.. அதுக்கு நாய்க்கடியே பரவாயில்ல' என்றார் ஒருவர்.
'நான் மட்டும் பேசறேன்.. மத்தவங்க பேசாம இருங்க' என்று அதட்டிவிட்டு 'கையை வாயிலேருந்து எடுங்க மேடம் நான் சோதிக்கணும் என்று டாக்டர் பையிலிருந்து டார்ச் லைட்டை எடுத்தார்.
நாத்தனார் கையால் வாயை இறுக மூடி தலையை ஆட்டினார். |
|
"கையை எடுங்கம்மா.. பயப்படாதீங்க.. நான் பார்க்கிறேன்.. 'ஆ' காட்டுங்க.. என்ன கடிச்சது.. எங்க கடிச்சிது.. காயம் எப்படினு தெரிஞ்சாத்தானே மருந்து தரலாம்" என்றார் டாக்டர்.
"அத்தை இப்படித்தான் 'ஆ' காட்டணும்" என்று ஒரு குழந்தை வாயைத் திறந்து காட்டியது.
'ஹாய் ஹடிக்கல.. ஹாக்டர்... பழ் ஷெழ்ழை எழுத்துண்டு போயிழுத்து' என்று நாத்தனார் சொன்னார்.
"புரியல.. நீங்க பாம்பேக்காரங்கல்ல... தமிழ் தெரியாதா.. ஆப் கோ க்யா ஹுவா, போலோ ஆன்டி?" என்று இந்தியில் விசாரித்தார் டாக்டர்.
"நாய் கடிக்கலயாம்.. அவங்க பல் செட்டை நாய் தூக்கிண்டு போயிடுத்தாம்" என்று என் கணவர் டாக்டருக்கு மொழி பெயர்த்தார்.
பிறகு திடுக்கிட்டவராய், அக்காவிடம், 'பல் செட்டா.. எப்ப பொய்ப்பல் செட் கட்டிண்டே.. எனக்கு தெரியாதே' என்று சொல்ல நாத்தனாருக்கு மிக வெட்கமாகப் போய் விட்டது.
"ஆமாம், நாய் பல் செட்டை வாயிலேருந்து பிடுங்கறபோது தடுக்க முடியலியா?" என்று அப்பாவித்தனமாய் இவர் கேட்க, நாத்தனார் தன் அறைக்கு அழைத்துப் போய் கையை அசைத்து சாடை காட்டியதில், தூங்கும் முன் கட்டில் கீழே பல்லைக் கழட்டி வைத்ததை நாய் எடுத்துப் போய்விட்டது என்பதை ஒருவாறு புரிந்து கொண்டோம். 'பல் செட்டு வரண்டாவில கெடந்துது.. நாய் கொண்டு போட்டிருக்கும்" என்று யாரோ கொண்டு வந்து கொடுத்தார்கள். அதில் பொய்ப்பற்கள் சிதைந்து உடைந்து போயிருந்தன. 'இந்த நாய்க்குட்டி செஞ்ச வேலைதான் இது' என்று ஒரு குட்டியைக் காட்டினார்கள். 'இத்துணூண்டு இருந்திண்டு எப்படி அத்தை பல்லைப் பொடிப் பொடியா கடிச்சிருக்கு பாரு..' என்று வியந்தார்கள்.
யாரோ பரபரப்பில் மிருக வைத்தியருக்கு போன் செய்துவிட அவரும் வந்து சேர்ந்தார்.
இவரை ஏன் அழைத்து தொலைத்தார்கள் என்று நினைக்கும்போது, 'அத்தை பல்லைக் கடிச்சதாலே நாய்க்கு விசம் ஏறியிருக்குமோ' என்று யாரோ கேட்க, 'வெஷப்பல்லு வெங்கம்மானு ஒருத்தி இருந்தாளாம்.. வாயைத்தெறந்தா வசவு விஷமாக் கொட்டு மாம்' என்று இன்னொருவர் ஏடா கூடமாய்ச் சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிக்கவும் முடியவில்லை. நாத்தனாராச்சே, சிரிச்சா மரியாதயா இருக்குமா?
மிருக வைத்தியரும் வந்ததற்கு நாய்க் குட்டிகளை பரிசோதித்துவிட்டு "குழந்தை களை நாய்க்குட்டிகளிடம் ஜாக்கிரதையாக விளையாடச் சொல்லுங்கள்" என்று அறிவுரை கொடுத்து விட்டுப் போனார்.
'அத்தை பல்லை நாய் கடிச்ச' கதை எங்கள் குடும்ப வட்டாரத்தில் பிரபலமானது. வீட்டுக்கு வருபவர்கள் அத்தையை விட, அத்தையின் பல்லைக் கடித்த நாயைப் பார்க்க விரும்பினார்கள்.
ஒரு கொசுறுச் செய்தி: அத்தையின் பல்லைக் கடித்த நாய் பின்னாட்களில் சென்னை நாய்க் கண்காட்சியில் முதல்பரிசு பெற்றது. (பரிசு பல்லைக் கடித்ததுக்கு இல்லை. அழகான நாய் என்பதால்). இன்று அந்த நாய் உயிரோடு இல்லை. ஆயினும் Madras Canine Club - faithful until death என்ற வாசகங்களுடன் அந்த நாய் பெற்ற பரிசு மெடல் இன்றும் எங்கள் வீட்டில் உள்ளது.
ஜெயலஷ்மி மணி, இர்வைன், கலிபோர்னியா |
|
|
More
பாத்ரூம் பாத்ரூம்
|
|
|
|
|
|
|