தமிழ் சினிமாவின் நடமாடும் நூலகம்!
|
|
தீவிரத் தமிழ் என்பதில் உடன்பாடில்லை! - கவிஞர் பொன்னடியான் |
|
- சரவணன்|ஏப்ரல் 2002| |
|
|
|
பாரதிதாசன் என்கிற ஆலமரத்திலிருந்து ஏகப்பட்ட கிளைகள் தமிழ்க் கவிதையுலகில் பரவியிருக்கின்றன. பாரதிதாசனின் பரம்பரை என்று இவர்களைக் குறிப்பிடுவர். இந்தப் பரம்பரையினருள் மிக முக்கியமானவர் கவிஞர் பொன்னடியான். பாரதிதாசனின் மறைவு வரை அவருடனே இருந்து பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். 'முல்லைச்சரம்' என்கிற இலக்கியப் பத்திரிகையைத் தொடர்ந்து 35 வருடங்களாக நடத்தி வருபவர். கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாசிரியர்... எனப் பல முகங்களைக் கொண்ட கவிஞர். பொன்னடியானுடன் ஒரு உரையாடல்...
பாரதிதாசனுடன் பணியாற்றிய அனுபங்களைப் பற்றிக் கூறுங்களேன்?
பாரதிதாசன் என்கிற சகாப்தத்துடன் அறிமுகமான போது எனக்கு வயது இருபது. அவர் நடத்தி வந்த 'குயில்' பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது என்னு டைய கவிதைகளைக் குயில் பத்திரிகையில் அவர் வெளியிட்டு, என்னை மேன்மேலும் எழுதத் தூண்டினார். அப்போது மிகுந்த சிரமத்திற் கிடையேதான் குயில் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. பாரதிதாசனும் நானும் சேர்ந்து மட்டுமே அந்தப் பத்திரிகையைக் கொண்டு வந்து கொண்டிருந்தோம். அதைப் பற்றி அவர் ஒரு முறை குறிப்பிடுகையில், 'அங்கு நான் ஒருவன். பொன்னடியான் ஒருவர்' என்று குறிப்பிட்டார்.
உலகக் கவிஞர்களை ஒன்று சேர்த்து ஒரு இயக்கமாக உருவாக வேண்டும் என்று பாரதிதாசன் எண்ணி, தமிழ்க் கவிஞர்கள் மன்றத்தை ஆரம்பிக்க முயற்சிகள் மேற் கொண்ட போது நானும் அவரோடு தோளோடு தோள் நின்றேன். அதனால்தான் அவருக்கு அடுத்து அந்த மன்றத்தின் செயலாளராக என்னை முன்மொழிந்தார். இப்போது நான் அந்த மன்றத்தின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன்.
கவிஞர் 'பாண்டியன் பரிசு' காவியத்தைத் திரைப்படமாக ஆக்கும் முயற்சியில் சொந்தப் பட நிறுவனத்தைத் துவக்கிய போது அதில் நான் உதவியாளராக இருந்தேன். அவர் எழுதும் கவிதைகளைப் படியெடுப்பது, குயில் பத்திரிகை பணிகள் என்று கடைசிவரை அவருடனேதான் இருந்தேன்.
அவர் கடைசியாக மரணத் தருவாயில் இருந்த போதுகூட அவர் மகனுக்கு நான்தான் தந்தி கொடுத்தேன். கடைசியில் ஜன்னி வந்து அவர் பிதற்றிக் கொண்டிருந்த போதும் உடனிருந் தேன். ஆனால் இப்போது பலர் நான் அவருடன் இருந்தேன், பண உதவி செய்தேன் என்றெல் லாம் போலியாகச் சொல்லித் திரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் பெயரை யெல்லாம் இப்போது எனக்குச் சொல்ல விருப்பமில்லை.
இதையெல்லாம் பற்றி 'நினைவலைகளில் பாவேந்தர்' என்ற புத்தகமொன்று வெளியிட்டிருக்கிறேன். அதில் படித்துப் பாருங்கள். எல்லா விவரங்களும் அதில் இருக்கின்றன. பாரதிதாசன் அவர் எழுத்தைப் போலவே வாழ்ந்தவர். தமிழுக்கும் தமிழர்களுக்கும் காலமெல்லாம் உழைத்தவர். என்னையும் என் போன்றவர் களையும் வளர்த்து விட்டவர். அவர் புகழைப் பற்றி நான் காலமெல்லாம் பேசிக் கொண்டிருப்பேன்.
கடற்கரைக் கவியரங்கம் எப்போது தொடங்கினீர்கள்?
1971-இல் கடற்கரைக் கவியரங்கத்தைத் துவக்கினேன். ஒவ்வொரு முதல் ஞாயிறன்றும் கவிஞர்கள்கூடி கவிதைகள் வாசிப்பர். அந்தக் கவிதைகளைக் கேட்பவர்கள் விறுப்பு வெறுப் பின்றி விமர்சிப்பர். இதுதான் கடற்கரைக் கவியரங்கத்தின் நோக்கம். பாலகுமாரன் போன்ற முன்னணி எழுத்தாளர்களெல்லாம் கடற்கரைக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு முன்னேறியவர்களே! தொடர்ந்து இன்று வரை அதை நடத்தி வருகிறேன்.
உங்களது படைப்புகள் பற்றி...?
'பனிமலர்', 'ஒரு இதயத்தின் ஏக்கம்', 'ஒரு கைதியின் பாடல்கள்' போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அது போக 'பொன்னடியான் கவிதைகள்' என்ற முழுத் தொகுப்பொன்றும் வெளியாகியுள்ளது. 'நினை வலைகளில் பாவேந்தர்' என்கிற புத்தகமும் வெளியாகியுள்ளது. என்னுடைய படைப்புகள் ஆங்கிலம், பெர்சியன், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
திரைப்படப் பிரவேசம் எப்போது?
திரைப்படப் பிரவேசம் என்று சொன்னால், பாரதிதாசன் பாண்டியன் பரிசை படமாக்க எண்ணிய போதே நான் உதவியாளராக இருந்ததைச் சொல்லலாம். என்னுடைய முதல் படம் 'நெஞ்சில் ஒரு முள்'. இதில் பாடல் எழுதினேன். இந்தப் படத்தில் ஜி.கே.வெங்க டேஷ் இசையமைப்பாளராக இருந்தார். அடுத்து எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வி.குமார், சந்திரபோஸ், தேவா போன்றோர் இசையமைப் பிலெல்லாம் பாடல்கள் எழுதினேன்.
'ராஜாதி ராஜா', 'சிங்கார வேலன்', 'அரண் மனைக்கிளி', 'என் ராசாவின் மனசிலே', 'சேது' போன்ற படங்களையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்தப் படங்களிலுள்ள வெற்றி பெற்ற பாடல்களை எழுதியது நான்தான்.
'எங்கிட்டே மோதாதே', 'என் தாயென்னும் கோயிலைக் காக்க மறந்திட்ட', 'போடா போடா புண்ணாக்கு', 'எட்டணா இருந்தால் என் பாட்டை எட்டூரு கேட்கும்', 'கான கருங்குயிலே கச்சேரிக்கு' போன்ற பாடல்களெல்லாம் நான் எழுதியதுதான்.
நானாகப் போய் யாரிடமும் வாய்ப்புக் கேட்பதில்லை. என்மீது நம்பிக்கை வைத்துக் கேட்பவர்களுக்கு மட்டும் இப்போதும் எழுதித் தந்து வருகிறேன்.
பிரபலமாகவில்லையே என்கிற ஆதங்கம் உங்களுக்கு உண்டா?
ஆமாம். 1968-இல் எம்.ஜி.ஆர் 'புதிய பூமி' படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அந்தப் படத்துக்குப் பாடல் எழுத என்னை அழைக்க நினைத்து ஒரு நண்பரிடம் சொல்லி விட்டிருந்தார். அந்த நண்பர் என்னைச் சந்திக்க வரும் போது, நான் பாண்டிச்சேரியில் நடந்த கவியரங்கமொன்றில் கலந்து கொள்ளச் சென்று விட்டேன். அப்புறம் அந்தப் படத்துக்கு நான் எழுத முடியாமல் போய்விட்டது.
இதை மனதில் வைத்திருந்த எம்.ஜி.ஆர் தமிழக முதல்வரானவுடன் உலகத் தமிழ் மாநாட்டு பொதுக் குழு உறுப்பினர் பதவியை எனக்குத் தந்தார். திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக நான் ஆவதற்கும் உதவிகள் செய்தார். இருந்தாலும், அவர் படத்தில் அன்றைக்கு நான் எழுதியிருந்தால், இந்நேரம் நான் புகழ்பெற்ற பாடலாசிரியான ஆகியிருப் பேன் என்கிற ஆதங்கம் இன்னும் என்னுள் இருந்து கொண்டிருக்கிறது. |
|
நீங்கள் பெற்ற விருதுகள் குறித்து...?
1970-இல் ஐ.நா பண்பாட்டுக் கழக விருது, 1990-இல் பாவேந்தர் பாரதிதாசன் விருது இந்த இரண்டு விருதுகள் தவிர்த்து வேறு எந்த விருதுகளும் எனக்குக் கொடுக்கப் படவில்லை. இதைப் பற்றி நான் பேச விரும்பவும் இல்லை. ஏதாவது பேசினால், விருதுக்காகப் பேசுகிறான் என்று சொல்லி விடுவார்கள். விருதுகள் தரப்படுவதன் பின்னணியில் செயல்படும் அரசியலையும் நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
ஒரு பத்திரிகையின் ஆசிரியராக, நிறு வனராக நீங்கள் பெற்ற அனுபவங்கள்...?
கடந்த 35 வருடங்களாக 'முல்லைச்சரம்' என்கிற இலக்கிய பத்திரிகையைத் தொடர்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். பால குமாரான், மாலன், வைரமுத்து, மஞ்சுளாரமேஷ், பொன்மணி வைரமுத்து போன்ற இப்போது பிரபலாகியிருக்கிறவர்களின் ஆரம்ப காலப் படைப்புகளையெல்லாம் முல்லைச்சரத்தில் வெளியிட்டு அவர்களை ஊக்குவித்திருக்கிறேன். தொடர்ந்து இளம் கவிஞர்களை வளர்த்து விட்டிருக்கிறேன். இதைப் பற்றி கலைஞர் குறிப்பிடுகையில், 'கவிஞர்களை வளர்க்கும் கவிஞர்' என்று குறிப்பிட்டார்.
தொலைக்காட்சி, சினிமாவின் ஆக்கிரமிப்பு அதிகமுள்ள சூழலில் இந்தப் பத்திரிகையை நடத்துவதில் நிறையச் சிரமங்கள் இருக்கின்றன. விளம்பரங்கள் போதிய அளவு கிடைப்பதில்லை. வாசகர்களும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற மனநிலையை இழந்து விட்டதாகவே தோன்றுகிறது. முல்லைச்சரம் மிகுந்த நஷ்டத்தில்தான் போய்க் கொண்டிருக்கிறது. நஷ்டத்திலிருந்து மீட்டு லாபகரமாகவும் அதே நேரம் தரமாகவும் தருவதற்குண்டான பணிகளில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.
தீவிரத் தமிழ்ப் பற்றாளர் என்கிற முறையில் இன்றைக்கு தமிழ் குறித்து நடந்து கொண்டிருக்கும் சர்ச்சைகளைப் பற்றிய உங்களது கருத்தென்ன?
நான் தீவிரத் தமிழ்ப் பற்றாளன் இல்லை. தமிழ் உணர்வாளன் அவ்வளவே! இதை நான் ஏன் சொல்கிறேனென்றால், இன்றைக்கு போலித் தமிழ் வெறியர்கள் பெருகி விட்டார்கள். இவர்களெல்லாம் சேர்ந்து நவீனத்தை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேயனின் வருகைக்கு முன்பு நாமெல்லாம் குடுமிதான் வைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவனு டைய நடை உடை பாவனைகளை எடுத்துக் கொள்வோம். அதேசமயம் தமிழ்ப் பற்று என்றும் சொல்லிக் கொள்வோம். எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்துகிறேன் என்று சொல்லிக் கொண்டு தமிழைக் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். 'தமிழ் மெல்லச் சாகும்' என்று போலித்தனமாக மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் தமிழ் சாகாது. அது இன்னும் வாழ்ந்து கொண்டு தானிருக்கின்றது. வாழத்தான் செய்யும். இதுமாதிரி கோட்பாடுகளைச் சொல்லிக் கொண்டு இவர்கள் நவீனத்தை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஞ்ஞானத்தைத் தமிழில் நம் குழந்தைகள் படித்தால், இங்கு மட்டும்தான் வேலைக்குச் சேர முடியும். அதே சமயம் ஆங்கிலத்தில் படித்தால், வெளிநாடுகளிலும் வேலை செய்ய முடியும். இங்கு தன்னிறைவான பொருளாதாரம் இல்லாத சூழலில், அவனை தமிழ் மட்டும் படி என்று சொல்வது எப்படி நியாயம் ஆகும்?
வறட்டுத் தனமான கோட்பாடுகளுக்குள் நம்முடைய இளைய தலைமுறையினரைச் செலுத்தி அவர்களுடைய எதிர்காலத்தைக் கெடுத்து விடக் கூடாது. தமிழ் படியுங்கள். அதே சமயம் உங்களுக்குத் தேவையான எல்லா மொழிகளையும் படியுங்கள். அதுதான் என்னுடைய நிலைப்பாடு.
இன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலை குறித்து உங்களது பார்வை என்ன?
தமிழ்ச் சமூகம் இன்றைக்குச் சினிமா நடிகைகளின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறது. இவர்கள்தான் இப்படி வெளிநாட்டுத் தமிழர் களாவது உருப்படியாக இருப்பார்கள் என்று பார்த்தால், அவர்களின் நிலையும் அப்படித்தான் இருக் கிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களை அழைத்துப் போய்க் கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ச் சங்கங்கள் என்கிற பெயரில் சாதிச் சங்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லோரும் அப்படி என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு சிலர் நல்ல முறையில் தமிழுக்காகப் பாடுபட்டுக் கொண்டுதானிருக்கின்றனர். நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம், திறமையான ஆட்களை அழைத்துத் தமிழை வளர்க்கப் பாடுபடுங்கள் என்பதையே!
சந்திப்பு, படங்கள்:சரவணன் |
|
|
More
தமிழ் சினிமாவின் நடமாடும் நூலகம்!
|
|
|
|
|
|
|