Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | சமயம் | Events Calendar | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
சி.சு. செல்லப்பா (1912 - 1998)
- |ஏப்ரல் 2002|
Share:
Click Here Enlargeதமிழ் எழுத்துச் சூழலில் எண்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து, அதிகம் கவனிப்புக் குரியவராக இருந்தவர் சி.சு. செல்லப்பா (1912-1998). நவீன தமிழ் இலக்கியத்தின் ஜீவமூச்சே தனது ஆத்மத் தேடலாகக் கருதி வந்தவர். இதனால்தான் அவர், 'இருபதாம் நூற்றாண்டு முடியப் போகிறது என் காலமும் முடிந்துவிட்டது. இந்த நூற்றாண்டில் என்னால் முடிந்ததை நான் சாதித்துவிட்டேன்... இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழப்போகும் நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?' என்று தம்மைப் பார்க்க வருபவர்களிடம் கம்பீர மாகக் கேட்பார். தன்வாழ்நாளின் இறுதி மூச்சுவரை இந்தக் கம்பீரமும், இலக்கியம் பற்றிய சிந்தனையும் பேச்சும் அவர் கூடவே இருந்தது.

சின்னமனூர் சுப்பிரமணிய ஐயர் செல்லப்பா வான சி.சு. செல்லப்பா வத்தலகுண்டு கிராமத்தில் 29.9.1912 இல் பிறந்தவர். அவரது சொந்த ஊர் சின்னமனூர். மதுரை கல்லூரியில் (1927-32) பி.ஏ. படித்தார். படிக்கும் காலத்தில் சுதந்திரப் போராட்டத் தில் பெரும் நாட்டம் கொண்டார். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

இந்நிலையில் பரீட்சையில் தோல்வி அடைந்தார். இதனால் பட்டம் பெறமுடியால் போய்விட்டது.

சுதந்திர உணர்வும் காந்தியச் சிந்தனையும் இலக்கியத் தீவிரமும் இவரது வாழ்வில் புதிய பரிமாணங்களை உருவாக்கின. 1934ல் 'சுதந்திர சங்கு' வாரப்பத்திரிக்கையில் 'மார்கழி மலர்' என்ற சிறுகதையை எழுதினார். 1994இல் 'சுதந்திர தாகம்' என்ற நாவலை எழுதி முடித்தார்.

1940களில் நடைபெற்ற 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கு பெற்று சுமார் 160 நாட்கள் சிறையில் இருந்தார். 1941ல் இவர் சிறையில் பெற்ற அனுபவங்களே தொடர்ச்சியாக தாம் செயற்படுவதற்கு உதவியதாக குறிப்பிடுகிறார். ஆக எழுத்தையும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதையும் ஒரே நேரத்தில் இவர் சாத்தியப்படுத்தியுள்ளார்.

சந்திரோதயம், சூறாவளி, தினமணி ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக பணி புரிந்தார். இந்த அனுபவம் அவருக்குள் ஏற்பட்ட தீவிரத் தேடல் யாவும் சேர்ந்து 'எழுத்து' என்ற சொந்தப் பத்திரிகையை 1959ல் தொடங்க வைத்தது.

எழுத்து 'இலக்கிய விமரிசனக்குரல்' என்ற அறிவிப்புடன் வெளிவந்தாலும் 'புதுக்கவிதை' என்ற இலக்கிய வடிவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. தமிழில் நவீன கவிதை வளர்ச்சிக்கு எழுத்து புதுவளம் சேர்த்தது என்றால் மிகையாகாது. மேலும் நவீன விமரிசனச் சிந்தனைக்கான பயில்வுக் களமாகவும் எழுத்து வெளிவந்தது.

'எழுத்துப் பிரசுரம்' என்ற அமைப்பை தொடங்கி தனது புத்தகங்களை வெளியிட்டு வந்தார். அத்துடன் தான் மதிக்கும் எழுத்தாளர் களது நூல்களையும் அச்சிட்டு வெளியிட்டார். இந்த நூல்களை ஊர்ஊராக கொண்டு சென்று கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் தானே விற்று வந்தார்.

வாழ்க்கையில் எத்தனையோ துன்பங் களையும் இழப்புகளையும் சந்தித்து வந்தவர். பணத் தேவை அதிகமாகவே இருந்தது. ஆனால் அதற்காக எவருடனும் சமரசம் செய்யாதவர். நிறுவனங்கள், நல்மனம் கொண்டோர் விரும்பி அளித்த பரிசுகள் பணத்தைக்கூட வாங்க மறுத்தவர்.

சி.சு. செல்லப்பாவின் நவீன இலக்கியப் பிரக்ஞையும் தேடலும் வாசிப்பும் பன்முகப் பரிமாணம் துலங்கும் 'இயங்கு வெளியில்' அவரை இயக்கியது. சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு விமரிசனம், கட்டுரை, பத்திரிகைத்துறை, பதிப்புப்பணி என பன்முகக் களங்களில் தீவிர செயற் பாட்டாளராக்கியது.
காந்தியவாதிக்குரிய எளிமையும் சிந்தனைத் திறமும், சத்தியமும், நேர்மையும், துணிச்சலும் அபாரமாகவே செல்லப்பாவிடம் வெளிப்பட்டது. இதனால் அவர் வாழ்ந்த காலத்து எழுத்தாளர்களிடமிருந்து 'கம்பீரம்' மிக்க எழுத்தாளராக தனித்துவத்துடன் இருக்க முடிந்தது. எவருடனும் சமரசம் செய்து வாழத் தெரியாதவர்.

இவரது படைப்பில் மனிதம் பற்றிய பார்வை விசாலமாகவே இழையோடியது. இது வரலாற்று ஓட்டத்தில் மாறுதலுக்கு உள்ளா கும் மனித நிலைமையைச் சுட்டும் மனிதமாகவே வெளிப்பட்டது. மேலும் அது ஆத்ம தேடலாகவும் தத்துவ விசாரமாகவும்கூட நீட்சி பெற்றது.

''நான் என்னுடைய பெரும்பான்மையான இளம்பிராயத்தை கிராமத்திலேயே கழித் தவன், நகரத்தில் இருந்தாலும் என்னுடைய நினைவுகள் எல்லாம் கிராமத்தைச் சுற்றித் தான்'' என்று சி.சு. செல்லப்பா தெளிவாகக் கூறுவார். ஆகவே கிராமியச் சூழ்நிலையில் அமைந்த உரையாடல்களில் பழமொழிகளும் உவமைகளும் இயற்கையாகவே அவரிடம் கைவந்துள்ளன. இத்தன்மையை அவரது சிறுகதைகள் நன்கு வெளிப்படுத்தும்.

அவரது 75-85 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் சி.சு. செல்லப்பா அதிகமாகவே எழுதி குவித்துள்ளார். 'என் சிறுகதைப் பாணி', 'பிச்சமூர்த்தியின் கவித்துவம்', ஊதுவத்திப் புல் (ந.பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றி) எழுத்து களம் (எழுத்து பத்திரிகை அனுபவங்கள்) பி.எஸ். ராமையாவின் கதைக்களம் இப்படி அநேகம். ஒவ்வொன்றும் 800 பக்கங்கள். இவற்றை எல்லாம்விட மாபெரும் சாதனை, தனது விடுதலைப் போராட்டக்கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய 'சுதந்திர தாகம்'. இது இரண்டாயிரம் பக்க நாவல்.

தன் வாழ்நாளில் எவர் தந்தாலும் பரிசுகள் அன்பளிப்புகள் எவற்றையும் வாங்க மாட்டேன் என்ற கொள்கையில் வலுவாக இருந்தவர். அமெரிக்காவலிருந்து 'குத்துவிளக்கு அமைப்பின்' புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு முதன்முதலாக செல்லப்பாவுக்கு வழங்கப் பெற்ற போது அவர் அதை ஏற்க மறுத்தார். ஆனால் நண்பர்கள் அப்பணத்தைப் பெற்று அவரது நூல்களை வெளியிட திட்டமிட்டனர். இந்த ரீதியில் வெளிவந்ததுதான் 'என் சிறுகதைப்பாணி' எனும் நூல்.

தமிழ்ச் சூழலில் வித்தியாசமாகவே வாழ்ந்து சாதனைகள் செய்த எழுத்தாளர் சி.சு. செல்லப்பா.

தொடர்ந்து தீவிரமான படைப்பு உந்து தலுடன் இயங்கிய ஆளுமை மிக்க எழுத்தாளராக, கலைஞராக சி.சு. செல்லப்பா கடைசிவரை வாழ்ந்து 18.12.98ல் தமது இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

அவர் வாழ்நாளில் பரிசுகள் எதனையும் வாங்க மாட்டார் என்பதை உணர்ந்துதான் என்னவோ சாகித்ய அகாதெமி அவர் மறைவிற்கு பின் 2001 இல் சாகித்ய அகாதமி பரிசை வழங்கியது.
Share: 




© Copyright 2020 Tamilonline