Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சமயம் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
பொது
அப்பாவுக்கோர் இடம் வேண்டும்!
சம்பிரதாயக் கொண்டாட்டமா இது!
வெறுக்கத்தக்கதா ஜோதிடக்கலை?
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
கீதாபென்னெட் பக்கம்
பிளாஸ்டிக்
- மதுசூதனன் தெ.|ஜூன் 2002|
Share:
இன்று நமது அன்றாடப் பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக செல்வாக்குப் பெற்றுள்ளன. இன்னொருபுறம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மறுபயன்பாடற்ற பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பெருங்கேடு ஏற்பட்டு வருகிறதென சுற்றுச்சூழலியளாளர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையாக பிளாஸ்டிக் பொருட்களை விற்பதையும் பயன்படுத்துவதையும் தடை செய்யும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது.

பிளாஸ்டிக் பொருள்கள் தடைசட்டத்தை மீறுவோர் மீது ரூ.100 லிருந்து ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க இம்மசோதா வகை செய்கிறது. இச்சட்ட மசோதாவை சிலர் அறிமுக நிலையிலேயே எதிர்த்தனர். மாற்றுநடைமுறை எதுவும் உருவாக்காமல் பிளாஸ்டிக் தடை மசோதா கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதென எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கு பெருங்கேடு ஏற்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக்கால் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளதை பலரும் அறிவுபூர்வமாகவே சுட்டிக்காட்டுகின்றனர்.

இரும்பு, உலோகம் பயன்பாட்டை ஓரங்கட்டி பிளாஸ்டிக் பொருள்கள் எங்கும் எதிலும் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கிவிட்டது. கற்காலம், இரும்புக் காலம் என்பது போல் பிளாஸ்டிக் காலம் எனும் நிலை உருவாகிவிட்டது.

இன்று பிளாஸ்டிக் தொழில்நுட்பம் உலகளாவிய கவனத்தை ஈர்க்கத் தொடங்கிவிட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் இப்போக்கு மேலும் அதிகரித்தது. போரில் ஜப்பானின் நுழைவுடன் தூரகிழக்கு நாடுகளில் இருந்துகிடைத்து வந்த ரப்பரின் வரவு தடைபட்டுப் போக, மேற்குலக விஞ்ஞானிகளின் பார்வை பிளாஸ்டிக் மீது திரும்பியது. ரப்பருக்குப் பதிலாக பிளாஸ்டிக்கை ஆயுத உற்பத்தியில் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

பிளாஸ்டிக் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை. அதாவது பெரும்பாலான பிளாஸ்டிக் வகைகள் தவாரப் பொருட்களான ரெசின்களிலிருந்தும், பெட் ரோலியப் பொருட்களிலிருந்தும் தயாரிக்கப் படுகின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு மேலும் அதிகமாகத் தொடங்கியது. பிளாஸ்டிக் இலேசானது, தண்ணீரில் கரையாது, துருப் பிடிக்காது, மட்கிப் போகாது போன்ற காரணங் களால் பிளாஸ்டிக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. உலோகங்கள் மரச்சாமான்கள் என்று உபயோகத்தில் இருந்த எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு இப்போது முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டது.

இந்தியாவில் 1990இல் புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக பல்வேறு பொருட்கள் மீதான சுங்க வரிகள் தளர்த்தப்பட்டன. இதனால் புதிய தொழில்நிறுவனங்கள் பரவலாயின. மேலும் குறைந்த விலையில் பிளாஸ்டிக்கை உருவாக்கி மக்களிடையே அதிக நுகர்ச்சியை உண்டாக்கும் வாயப்புகள் அதிகரித்தன. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை விட அதிகம் ஊதியம் பெற்று வருகின்றன.

இதனால் பல சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனத்தை எதிர்த்து வணிகம் செய்ய முடியாமல் தனது நிறுவனங்களை மூடிவிட்டன. மறுபுறம் குறைந்த விலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு கிடைப்பதால் சணல், மூங்கில், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பொருட்கள் இன்று காணாமல் போய்விட்டன. அதாவது அவை வணிகத்தை இழந்துவிட்டன.

சணல் தொழில்: 1970 இல் இந்தியாவின் அந்நிய செலாவணியில் குறைந்தது 30% வருவாயைச் சணல் தொழில் பெற்றுத் தந்தது. இன்றோ அது 1% ஆகக் குறைந்து விட்டது. சொல்லப்போனால் அத்தொழில் செத்தேவிட்டது. சணலுக்கு மாற்றாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் இந்த சரிவு எற்பட்டது.

தோல் தொழில்: நம் காலணிகளுக்கு மூலமான பொருளாக தோல் விளங்கியது. இன்று பி.வி.சி - இன் அறிமுகத்திற்கு அடுத்து தோல்களின் பயன்பாடும் இறங்குமுகமாக உள்ளது.

அதே போன்று மரப்பொருட்களை எடுத்துக் கொண்டாலும் அதிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு காரணமாக அத்தொழிலும் நசிந்து வருகிறது.

ஆக பிளாஸ்டிக்கின் இந்த ஏகபோக வளர்ச்சி சத்தமில்லாமலேயே பூமியை சாகடித்துக் கொண்டிருக்கிறது. இதன் கோரமுகத்தை உலகம் இன்று நன்கு உணரத் தொடங்கியுள்ளது.

மண்ணோடு மண்ணாக மட்கிப் போகாத, தன்மைதான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தனி மவுசைக் கொடுத்தது. ஆனால் அதே உறுதித் தன்மைதான் சுற்றுச்சுழலின் பிரதான எதிரியாகி விட்டது. மண்ணில் உள்ள பாக்டீரியா - பூஞ்சைக் காளான்கள் போன்ற நுண்ணுயிரிகளின் செயல் பாட்டினால் பொருட்கள் சிதைந்து அழிவதை விஞ்ஞானிகள் உயிர்மச்சிதைவு என்று பெயரிட் டிருக்கிறார்கள். வீட்டுக் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், மரச்சாமான்கள் எல்லாம் இப்படித்தான் மண்ணுடன் கரைந்து இயற்கைச் சூழற்சியில் பங்கேற்கின்றன.

உலோகப் பொருட்கள்கூட வேதிமாற்றங் களினால் துரு ஏறி காலப்போக்கில் அழிந்து போய்விடுகின்றன. ஆனால் பிளாஸ்டிக் மட்டும் மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாகக்கூட வாழும் வரத்தை மனிதர்களிடம் வாங்கி வைத்திருக்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம். அந்தப் பொருட்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசும் நுகர்வுக் கலாசாரத்தில் உள்ளோம். தண்ணீர், பால் அடைத்துவரும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தேனீர், குவளைகள் போன்றன மலைபோல் குவிகின்றன. இவை சுற்றுச்சுழலின் அழகை கெடுக்கின்றன என்பது ஒருபுறம். ஆனால் இவற்றுக்கு அப்பால் இந்தப் பிளாஸ்டிக் பொருட்கள் மட்கி சிதையாமல் மண்ணில் மேலும் கீழும் காலங்காலமாகக் கிடக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதிகம்.

பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீரை நிலத்தினுள் நுழைய அனுமதிப்பதேயில்லை. ஏற்கெனவே காடுகளை அழித்தல் பச்சைவீட்டு வளைவு போன்ற சீர்கேடு களால் நா வறண்டு போயிருக்கும் பூமியின் மிச்சசொச்ச நிலத்தடி நீரையும் மேலும் பற்றாக் குறையாக்குகிறது. தண்ணீரை மட்டுமல்ல; மண்ணுக்குள் காற்று புகுவதைக்கூட தடுக்கிறது.

காற்றில்லாத சூழல் மண்ணுக்குக் கீழே கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண் டிருக்கும் நுண்ணுயிர்களின் உலகத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இதனால் உயிர்மச் சிதைவின்றிப் பொருட்களின் சுழற்சி தடைப்பட்டுப் போய்விடுகிறது. இது தாவரங்களின் வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கிறது. இதைவிட பிளாஸ்டிக் கழிவுகளின் கீழ் சிக்கி முளை கொள்ள முடியாமல் தவிக்கும் விதைகளின் அவஸ்தை அது வேறு தனி. தரைக்குக் கீழே புதையுண்டு கிடக்கும் பிளாஸ்டிக், மண்ணின் பிடிமானத்தை தளர்த்தி மலைப்பகுதிகளில் அவ்வவ்போது பெரும்மண் சரிவையும் ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறு சுற்றுச்சூழலியலாளர்கள் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பிரச்சனைகளை பட்டியிலிடுகின்றனர்.

மருத்துவ விஞ்ஞானிகள்கூட பிளாஸ்டிக் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தம் பங்குக்கு எச்சரிக்கை செய்கின்றனர். சில வகையான பிளாஸ்டிக் தாளினால் உணவுப் பொருட்களை சுற்றும்போது பிளாஸ்டிக்கிலுள்ள நச்சுப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணவுடன் கலந்து விடுவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

பொதுவாக உணவில் பிளாஸ்டிக் நஞ்சு கலக்கும்போது தலைசுற்றல், வாந்தி பேதி, குடல்புண், நரம்புத் தளர்ச்சி தொடங்கி ஆண்மை இழப்பு, புற்றுநோய்கள், குழந்தைப் பிறப்பு பாதிப்புகள், தோல் நோய்கள், மூச்சுக் குழாயைத் தாக்கும் கடுமையான நோய், குடல்புண், செரியாமை, நரப்புத் தளர்ச்சி மற்றும் குருதி, சிறுநீரகம் உடலின் எதிர்ப்பு ஆற்றலைக் குறைத்தல் என இதன் பாதிப்புகள் நீளுகின்றன. பல்வேறு நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் இதை உறுதி செய்கின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து அகற்றுவது என்பதும் இலகுவான காரியமல்ல. பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் 'டையாக்சின்' என்ற நச்சுப்பொருள் காற்றுடன் கலக்கிறது. இதனைச் சுவாசிப் பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் ஏற்படுவதாக எச்சரிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளைக் கடலில் கொட்டி வந்த அமெரிக்காவில் ஆண்டுதோறும் 40,000 சீல் விலங்குகள் மடியத் தொடங்கின. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டுவதற்கு 1988 முதல் அமெரிக்கா தடைவிதித்தது.

இந்த மோசமான பின்விளைவுகளைக் கண்ட பின்னர் பிளாஸ்டிக்கை அதிக அளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தி வரும் மேற்குலக நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை மிகவும் நாசூக்காக மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்ட ஆரம்பித்துள்ளன. கணிசமான சலுகை விலையில் பிளாஸ்டிக் கழிவுகளை விற்கத் தொடங்கியிருப்பதுடன், கூடவே பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக்கை மறு உற்பத்தி செய்யும் நுட்பத்தையும் சேர்த்துத் தருவதால் மூன்றாம் உலக நாடுகளும் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கிக் குவித்து வருகின்றன.

ஆண்டுதோறும் அமெரிக்கா பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு கிட்டத்தட்ட 160 லட்சம் டன்கள். இவற்றில் 50 சதவீதம் இந்தியா, பங்காளதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மறு உற்பத்தி என்ற பெயரில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் மிகப் பெருமளவில் கொள்ளளவு செய்வது இந்தியாதான். பங்காளதேஷைவிட 115 சதவீதமும், பாகிஸ் தானைவிட 30 சதவீதமும் அதிகமாக இந்தியா பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கி வருகிறது.

இந்தியாவில் நச்சுக்கழிவுகளின் மறுசுழற்சியின் போது கழிவுகளைச் சூடுபடுத்தத் தேவைப்படும் ஆற்றலானது குறைந்தவிலை, இடவசதி சிக்கலின்மை, அதைச் செயல்படுத்த அரசின் சட்டதிட்டங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கும் அரசுக்கும் இல்லாமை ஆகியவற்றால் 'மறுசுழற்சி' என்ற தொழில் வளர மேலும் காரணமாகின்றன.

முறையாக தொழில்நுட்ப நடைமுறைகளைக் கையாண்டாலும் இதனால் உண்டாகும் மாசுக்கேடு, அழிவுகள் ஆகியவற்றிலிருந்து நாம்மீள முடியாது. இந்த அபாயமான வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் எந்தப் பயற்சியும் அற்றவர்கள்; எந்த எச்சரிக்கையுணர்வும் ஊட்டப்படாதவர்கள்; பாதுகாப்புக் கருவிகள் அணியாதவர்கள். இதனால் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளில் அமைப்பு சாராத அத்தொழிலாளர்களுக்கு மருத்துவச் செலவோ அல்லது இழப்பீடோ கூடக் கிடைப்பதில்லை.

இதனால் அபாயமான மட்டமான நிலை யில்லாத வேலைவாய்ப்புகள் உருவாவதற்கு வாய்ப்பு எற்பட்டுள்ளது.ஏறக்குறைய 3,50,000 பேர் இத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக ஓர் அறிக்கை கூறுகிறது. அடுத்து இக்கழிவுகள் எங்கு உருவாக்கப் பட்டதோ அந்நாட்டிலேயே மறுசுழற்சி நடந் திருந்தால் உண்டாகக் கூடிய ஆரோக்கியக்கேட்டை ஏற்படுத்தும் இரட்டை விளைவை ஒரே நேரத்தில் உண்டாக்குகிறது.

பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்து சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மேலும் சில கருத்துக்களை முன் வைக்கின்றனர். அதாவது, ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கியெறியக் கூடிய பொருட்கள் அதிகளவில் உருவாக்குதல் தேவையற்றது. மேலும் அவை அபாயமான தனிமங்களைக் கொண்டவையாக (பிளாஸ்டிக் பாசிசம்) உருவாக்குதல் தேவையற்றது. ஒரு அபாயமான பொருளை மறுசுழற்சிக்கு உட் படுத்துவதால் அது மற்றொரு அபாயமான பொருளை உருவாக்குகிறது. எனவே மறுசுழற்சி அபாயமான பொருட்களைத் திரும்பவும் சந்தைக்கும், சுற்றுப் புறத்துக்கும் அதன் நச்சுத்தன்மையில் எந்தக் குறையுமின்றித் திரும்ப அனுப்புகின்றது.

ஆக இந்தியா போன்ற நாடுகள் பிளாஸ்டிக் மறு சுழற்சி உற்பத்தியால் மிக மோசமான அபாயமான விளைவுகளை எதிர்கொண்டுள்ளன. சென்னையை அடுத்த கும்மிடிபூண்டியில் டூ பாண்ட் நிறுவனம் நைலான் ஆலையை அமைத்ததன் பின்னணியை இந்த ரீதியில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல அமெரிக்க மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குவளைகள், சீசாக்களைத் தயாரிக்க வென 'இந்திய ஆர்கானிக் கம்பெனி' மத்திய அரசின் அனுமதியுடன் எழுபத்தைந்து கோடி முதலீட்டில் தொழிற்சாலை நிறுவி வருகிறது.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா பிளாஸ்டிக் கழிவுகளால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து பிளாஸ்டிக்குக்கு எதிரான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தலையீட்டினால் சுற்றுலாத்தளங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்யும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

சபரிமலைப் பகுதிகளில் திரளும் ஐயப்ப பக்தர்கள் விட்டுச் செல்லும் பாலித்தீன் கழிவுகளைத் தின்று யானைகளும், மான்களும் பலியாவது இப்போது சாதாரணமாகிவிட்ட ஒன்று. ராஜஸ்தானில் இறந்த ஒரு பசுவின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்ததாகத் தெரிகிறது.

ஆண்டுக்கு எட்டரை லட்சம் மக்களுக்கும் அதிகமாக வந்து செல்லும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவிலும் கடந்த காலங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமான விலங்குகளுக்கு எமனாக அமைந்திருக்கின்றன. பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வீசப்படும் பாலித்தீன் பைகளைத் தின்று பரிதாபமாக உயிரைவிட்ட விலங்குகளின் பட்டியலில் காண்டா மிருகமும் ஆப்பிரிக்காவிலிருந்த மூன்றுலட்சம் ரூபாய் செலவில் தருவிக்கப்பட்ட லாமா என்னும் விலங்கும்கூட அடக்கம்.

தேசியப் பூங்காவிலும் ஒதுக்கப்பட்ட காடுகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதை இந்திய அரசு முற்றாகவே தடை செய்துள்ளது. இருந்தும் இது தொடர்பாக மக்களின் விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறதென்று சுற்றுச்சூழலியலாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிற்கு பிளாஸ்டிக் வந்தது சமீபத்திய ஆண்டுகளில்தான். ஆனால் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் வெகுவாக பரவிட்டன. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய விளைவுகள் அபாயங்கள் பற்றிய அக்கறைகைள உணர்ந்து வருகிறோம்.

பிளாஸ்டிக் பைகளின் தீயவிளைவுகளை உணர்ந்த இமாச்சல பிரதேச அரசு சிம்லாவில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க 1996 ஜூலையில் தடைவிதித்தது. இதனைத் தொடர்ந்து 1998 ஜனவரியில் கோவா மாநிலத்தில் தடை செய்யப் பட்டது. பின்பு 1998 நவம்பரில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கும் சட்டமசோதாவை தாக்கல் செய்தது.

இது இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது. திடீரென்று பிளாஸ்டிகிற்கு தடைவிதிக்கும் போது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அதிகம். ஓர் குறித்த காலப்பகுதியை எல்லையாகக் கொண்டு செயற்பட வேண்டும். மேலும் பிளாஸ்டிக்குக்கு மாற்றான பயன்பாட்டை விளக்கும் வகையிலான விழிப்புணர்வும் நம்பிக்கையும் வளர்க்கப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக்கின் ஊடாட்டம் நெருங்கிக் கலந்துவிட்ட நிலையில் பிளாஸ்டிக்கின் பிடியிலிருந்து முற்றாக விடுபடுவது என்பது முடியாத ஒன்றே. இந்நிலையில் அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அபாயத்தை எதிர்கொள்ள நம் முன்னால் உள்ள ஒரே வழி பிளாஸ்டிக் கழிவுகளை மேலாண்மை செய்வதுதான்.

தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது (Refuse),தேவைகளை இயன்றளவு குறைத்துக் கொள்வது (Reduce) முடிந்தவரை நீண்டகாலம் திரும்பத் திரும்ப பயன்படுத்தும் முறைகளைக் கடைப்பிடிப்பது (Reuse), எறிவதற்கு முன்னர் இன்னொரு முறை பயன்படுமா என்று சிந்திப்பது (Retain) எறியும் கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாத முறையில் மீளவும் பிளாஸ்டிக்கை பிரித்தெடுப்பது (Recycle) என்று இந்த ஐந்து செயல்பாடுகளையும் சரியான முறையில் ஒருங்கிணைக்கும் கழிவுமேலாண்மைதான் பிளாஸ்டிக் குக்கான மாற்று ஒன்றைக் கண்டறியும் வரைக்குமான குறைந்தபட்சத் தீர்வாக இருக்கமுடியும்.

தெ.மதுசூதனன்
More

அப்பாவுக்கோர் இடம் வேண்டும்!
சம்பிரதாயக் கொண்டாட்டமா இது!
வெறுக்கத்தக்கதா ஜோதிடக்கலை?
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
கீதாபென்னெட் பக்கம்
Share: 


© Copyright 2020 Tamilonline